தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர்ப்புற வார்டுகளில் பகுதி சபைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

தமிழ்நாட்டில் முதன்முறையாக நகர்ப்புற வார்டுகளில் பகுதி சபைக் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை,அக்.29- தமிழ்நாட்டில் தற்போது கிராம சபை கூட்டம் நடை பெறுவது போன்று, முதன்முறையாக   பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை கூட்டம் நடக்கிறது. நவம்பர் 1ஆம் தேதி சென்னை, பம்மல் அருகே நடை பெற இருக்கும். மாநகர சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்கிறார்.

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செய லாளர் சிவ்தாஸ் மீனா நேற்று (28.10.2022) வெளியிட்டுள்ள அரசாணையில்,

 “நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு கமிட்டி மற்றும் ஏரியா சபை அமைப்பதற்கான விதிகளை கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் வார்டு கமிட் டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநக ராட்சிகளில் 5 லட்சம் வரை மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 4 முதல் 5 ஏரியா சபைகளும், 5 முதல் 10 லட்சம் வரை உள்ள மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 6 முதல் 9 ஏரியா சபைகளும், 10 லட்சத்திற்கு மேல் மக்கள் தொகை உள்ள வார்டுகளில் 10 ஏரியா சபைகளும், நகராட்சிகளில் ஒரு வார்டில் 4 நகர சபை கூட்டமும், பேரூராட்சிகளில் ஒரு வார்டில் 3 சபை கூட்டமும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டம் நடைபெறுவது போன்று முதன்முறையாக பேரூராட்சி சபை, நகர சபை, மாநகர சபை  கூட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6ஆவது வார்டில் நடைபெறும் மாநகரசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க உள்ளார். இந்த இடத்தை  அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு சென்றுள்ளனர்.

தற்போது நகராட்சி மற்றும் மாநக ராட்சி சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட் டுள்ள நிலையில், அவர்களில் ஒருவர் நகராட்சி தலைவராக, மாநகராட்சி மேயராக இருந்து வருகிறார்கள். குறிப்பாக கிராம சபை கூட்டத்தை பொறுத்தவரை அங்கு, நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அரசுக்கு தீர்மானமாக அனுப்பி வைக்கப்படும்.

அதன் அடிப்படையில்தான் நகர பகுதியில் இருக்கும் மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுக்கான குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கிராம சபை கூட்டம் போன்று நகரசபை கூட்டமும் நடைபெற முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினமே நகர சபை, மாநகர சபை கூட்டமும் நடக்கிறது.

அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, பம்மல் பகுதியில் உள்ள வார்டுக்கு நேரடியாக சென்று மாநகர சபை கூட்டத்தில் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்க திட்டமிட்டுள்ளார். கிராம சபை கூட்டம் நடந்தபோதுகூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக அந்த கூட்டங்களில் பங்கேற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தது குறிப்பிடத் தக்கது. இந்த நிலையில் மாநகர சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் நவம்பர் 1ஆம் தேதி பங்கேற்கிறார்.

அரசின் இந்த அறிவிப்பின்படி, இனி ஆண்டுக்கு 6 முறை பேரூராட்சி, நகர சபை மற்றும் மாநகர சபை கூட்டம் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலை மையில் நடைபெறும். இந்த கூட்டத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும் பங்கேற்பார்கள்.

No comments:

Post a Comment