ராமநகர், அக்.28 கருநாடக மாநிலம் ராமநகர் அருகே, தற்கொலை செய்து கொண்ட மடாதிபதி பசவலிங்க சுவாமியின் ஆபாசப் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு மாகடி காவல்துறை நிலையத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது.
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் அருகே உள்ள பண்டே மடத்தின் மடாதிபதியாக பணியாற்றி வந்தவர் பசவலிங்க சுவாமி. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தில் உள்ள தனது அறையில் மடாதிபதி பசவலிங்க சுவாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் மடாதிபதி அறையில் இருந்து 3 பக்க கடிதம் காவல்துறையிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் சிலர் தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும், சிலர் தன்னை மிரட்டி வருவதாகவும், மடத்தை கைப்பற்ற சிலர் முயற்சி செய்வதாகவும் கூறி இருந்தார்.
இந்த நிகழ்வு குறித்து குதூர் காவல்துறை தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மடாதிபதி அரை நிர்வாணமாக காணொலி பேச்சில் பேசிய காட்சிப் பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆபாசப் படத்தை சிலர் ஹனிடிராப் முறையில் பசவலிங்க சுவாமியை மிரட்டி இருக்கலாம் என்றும், இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறார்கள். இதற்கிடையே மடாதிபதி தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி இருந்த கடிதத்தில் மடத்தை சேர்ந்தவர்கள் சிலர் தன்னை மிரட்டி வருவதாக கூறியுள்ளார்.
இதனால் மடத்தை சேர்ந்தவர்களே மடாதிபதியின் ஆபாசப் படத்தை எடுத்து அதன்மூலம் மிரட்டி இருக்கலாம் என்றும் காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே மடாதிபதி தற்கொலை செய்துகொள்வதற்கு சில தினங்களுக்கு முன்பு அவருடன், இளம்பெண் ஒருவர் காணொலிபேச்சில் (வீடியோ காலில்) பேசியது காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இளம்பெண் பெங்களூருவை சேர்ந்தவர் என்று காவல்துறையினருக்கு தெரியவந்து உள்ள நிலையில், அவரது அலைபேசி எண்ணும் காவல்துறையினரிடம் சிக்கி உள்ளது.
இதனால் அந்த இளம்பெண்ணை பிடிக்க பெங்களூருவில் காவல்துறை முகாமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த இளம்பெண் மூலம் மடாதிபதியை சிலர் ஹனிடிராப் முறையில் மிரட்டி இருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறார்கள். இந்த நிலையில் சந்தேகத்தின்பேரில் 3 பெண்கள், மடாதிபதியின் கார் ஓட்டுநர், மடத்தின் அர்ச்சகர் ஆகியோரிடம் காவல்துறை விசாரணை நடத்தி அனுப்பி வைத்து உள்ளனர். மேலும் 5 பேரிடம் இருந்து செல்போன்களையும் காவல்துறை பறிமுதல் செய்து உள்ளனர். இதற்கிடையே மடாதிபதியின் தற்கொலை வழக்கு விசாரணையை குதூர் காவல்துறை நிலையத்தில் இருந்து மாகடி காவல்துறை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராமநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் பாபு நேற்று (27.10.2022) செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், மடாதிபதி உயிரிழந்த வழக்கில் ஹனிடிராப் முறையில் கூட மிரட்டல் நடந்து இருக்கலாம். தற்போது விசாரணை நடந்து வருகிறது. ஹனிடிராப் முறையில் மிரட்டியதால் மடாதிபதி தற்கொலை செய்து கொண்டாரா என்று உறுதியாக கூற முடியாது. இந்த வழக்கில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என்றார்.
தமிழ்நாட்டில் புதிதாக 179 பேருக்கு கரோனா பாதிப்பு
சென்னை, அக்.28 தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஆண்கள் 106, பெண்கள் 73 என மொத்தம் 179 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 91,405 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 35 லட்சத்து 51,029 பேர் குணமடைந் துள்ளனர். 384 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 2,328 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 183 ஆகவும், சென் னையில் 47 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 46 ஆயிரத்து 880- ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து கடந்த24 மணி நேரத்தில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,892- ஆக உள்ளது. அதேபோல், கரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 072- ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ள வர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 821- ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 14 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,28,987- ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் இதுவரை 219.57 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment