இராமாயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

இராமாயணம்

10.06.1934- புரட்சியிலிருந்து...

தோழர்களே! இந்தக் கொடுமைகளை உருவகப்படுத்திப் பார்க்கும் போது இராமாயணக் கதையின் தத்துவம் இதில் தாண்டவமாடுகின்றது. இராவணனையும் அவர் குடும்பத்தையும் ஆரியர்கள் இழித்துப் பழித்துக் கூறி அவன் அரசை நாசமாக்கியதாகக் காணப்படும் கதையை இப்போது நினைத்துப் பாருங்கள்.

இராமாயணக் கதைக்கு அஸ்திவாரமே இந்தச் சித்திரவதைக் கொலைபாதகச் செயல்களான யாகமேயாகும். தாடகை என்கின்ற ஒரு பெண் யாகத்தைக் கெடுத்ததற்காகத் தானே கொல்லப் பட்டிருக்கிறார். இந்த மாதிரி கொலை பாதக யாகத்தைக் கெடுக்க யார் தான் துணியமாட்டார்கள்?  யாகத்தைக் கண்டு மனம் வருந்தி பரிதாபப்பட்டு அதை நிறுத்த முயற்சித்ததல்லாமல் அந்த அம்மாள் செய்த கெடுதி என்ன?

நமக்குச் சக்தியில்லாததாலும், நம் உணர்ச்சிக்கு அனுகூலமான ஆட்சி இல்லாததாலும் நாம் எல்லோரும் இங்கு வந்து கத்துகிறோம். சக்தியும் ஆட்சி உரிமை யும் இருக்கு மானால் நாம் தாடகை யைப் போல் தானே நடந்து கொண்டு தீருவோம். யாகத்தை வெறுத்ததற்காக அந்த அம்மாளைக் கொன்றுவிட்டது மல்லாமல் அந்தம்மாளை இழித்துக் கூறும் முறையில் அந்த அம்மாள் மூத்திரம் பெய்து யாக நெருப்பை அணைத்து விட்டார் என்றும் மிருகங் களையும், பட்சி களையும் பச்சையாய் சாப்பிட்டார் என்றும், பொறுத்த மற்றதும் போக்கிரித் தனமானதுமான ஆபாசக் கதைகளையும் கட்டி விட்டார்கள்.

இதிலிருந்தே ராமாயணக் கதை ஜீவகாருண்ய காரணமாய் ஏற்பட்ட ஆரியர் - திராவிடர் கலகம் என்றும், ஆரியர் தங்களை உயர்த்தியும் திராவிடர் களைத் தாழ்த்தியும் திராவிடர்களுக்கு என்றும் பழி இருப்பதாக எழுதி வைத்துக் கொள்ளப்பட்டது என்றும், ராம -  லட்சுமணர்கள் ஆரியக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ராவணனாதியோர் திராவிட அதாவது ஜீவகாருண்யக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் விளங்கவில்லையா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அக்கதையில், மிருகங்களையும் ஜீவர் களையும் கொல்லும் விஷயங்களிலும், மது-மாமிசம் சாப்பிடும் விஷயங்களிலும், சூது வாது செய்த விஷயங்களிலும், பெண் களை இழிவாய் நடத்திக் கொடுமைப் படுத்தின விஷயங்களிலும் சிறிதும் தயங்காத ராம-லட்சுமண கூட்டங்களை இவ்வளவு தூரம் புகழ்ந்திருப்பதுமல் லாமல் அவர்களைக் கடவுளாகக் கருதச் செய்து திராவிட மக்களைக் கொண்டே பூஜிக்கவும் வணங்கவும் புகழவும் செய்து விட்டார்கள்.

அது போலவே ராவணாதியர்கள் இந்த யாகத்தை வெறுத்ததல்லாமல் வேறொரு கெடுதியும் ராம-லட்சுமணர்கள் செய்த அளவுகூட செய்யாதவர்களை திராவிட மக்களைக் கொண்டே இகழச் செய்து விட்டார்கள்.  திராவிட மக்களில் சிலரையே இவ்விதப் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் செய்து கொண்டு பிழைக்கவும் செய்து விட்டார்கள். ஒரு வயிற்றில் பிறந்த இருவரில் ஒருவன் (ராவணன்) ராட்சத னாம்; ஒருவன் (விபிஷ ணன்) தேவ கணத்தைச் சேர்ந்த (ஆழ்)வனாம். என்ன புரட்டு! யோசித்துப் பாருங்கள்.

ஒரு பெண்ணின் மூக்கையும் முலை யையும் அறுத்த பாவிகள் கடவுளின் அவதாரங்களாம். ஆயிரக்கணக்கான ஆடு, குதிரை, மாடு முதலியவைகளை மேற்கண்ட படி சித்திரவதை செய்து கொன்று தின்றவர்கள் தேவர்களாம். இதிலிருந்து கடவுள்கள், தேவர்கள், பிராமணர்கள் ஆகிய வர்களின் யோக்கிய தைகளை சற்று நினைத்துப் பாருங்கள். திராவிட மக்களின் யோக்கியதைகளையும் ஏமாளித்தனத்தையும் எண்ணிப் பாருங்கள்.

No comments:

Post a Comment