வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

ஜாதி, மதவெறி மாயட்டும்  

 வள்ளலாரின் கருணை மழை நாடெலாம் வெள்ளமெனப் பாயட்டும் 

 பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி முதல் வழங்கும் 'திராவிட மாடல்' அரசு கருணை பொழிந்த வள்ளலார் காண விரும்பிய அரசு போல செயல்பட்டு வருவது வள்ளலாரின் விழைவை வினையாக்கிய செயல் திட்டம். ஜாதி, மதவெறி மாயட்டும் ,வள்ளலாரின் கருணை மழை நாடெலாம்  வெள்ளமெனப் பாயட்டும்.  வள்ளலாரின் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

இன்று வடலூர் வள்ளலாரின் பிறந்த நாள் (5.10.1823).   இதனை நமது 'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிகச் சிறப்பாக "தனிப்பெரும் கருணை நாளாக" கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிவித்து, வரலாறு படைத்தார்!

'வடலூர் வள்ளல்' - 'அருட்பிரகாச வள்ளலார்' என்றெல்லாம் அழைக்கப்படும் கருணை வடிவான - அறிவார்ந்த இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டத்தினைச் சார்ந்தவர். அவரது அருட்பா திரட்டு ஆறு திருமுறைகளைக் கொண்டது.

இதில் ஆறாம் திருமுறைதான் தனிச் சிறப்பு மிக்க திருப்பத்தை ஏற்படுத்தி ஒரு புத்தொளியைப் பாய்ச்சிய புதியதோர் கலங்கரை வெளிச்சமாகும்!

ஆறாம் திருமுறை அறிவுக்கொத்து!

அய்ந்தாம் திருமுறை பாடிய வரை மதக் கருத்துகளில் தோய்ந்தவராக இருந்த வடலூர் வள்ளலார் ஆறாம் திருமுறை அறிவுக் கொத்துமூலம் அகண்ட தத்துவஞானியாக புதியதோர் ஒளிகாட்டினார்!

தனது பழைய மத முறைகளைச் சாடிடத் தயங்கவில்லை; உண்மைகள் உலகம் முழுவதும் உலா வர வேண்டும் என்ற உணர்வால் உந்தப்பட்டு உன்னதக் கருத்துக்கள் உதிர்த்தார்!

மதவாதத்திலிருந்து விடுபட்டு தத்துவஞானியானார்; தனிப் பெரும் கருணையராக, மானுட நேயராக, ஜாதி, மதங்கள், சடங்குகளை வெறுத்துப் பிரச்சார இயக்கம் துவக்கினார்!

தத்துவம் வேறு; மதம் வேறு

புது மாற்றங் காண - மக்களின் அறிவு கொளுத்திட தாம் உணர்ந்த உண்மைகளை ஒளிவு மறைவின்றிப் பாடினார்!

பெரிதும் அவரது 'வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்ற கருணை வழியும் கவிதைகளைத் தான் பலரும் கூறுகின்றனர் - அடிக்கடி!

அதைவிட ஜாதி, மதச் சண்டைகளில் சிக்கிச் சீரழிந்து, ஆரியத்தால் பாதிக்கப்பட்டு வாடிய வதங்கிய மனிதர்களின் விடுதலை பற்றியும் மிகுதியும் அவர் கவலை கொண்டார்.

புதிய வெளிச்சங்கள்

அதன் விளைவாக ஆறாம் திருமுறையில் அவர் பாய்ச்சிய புதிய வெளிச்சங்கள்.

"இருட் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை 

இருவாய்ப்புப் புன்செயில் எருவாக்கிப் போட்டு

மருட்சாதி சமயங்கள் மதங்களா ஆச்சிரம

வழக்கம்எலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போக"

"கொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக் 

கூட்டமும் அக்கூட்டத்தே கடவுகின்ற கலையும்

கள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியும்

காட்சிகளும், காட்சிதரும் கடவுளரும் எல்லாம் 

பிள்ளை விளையாட்டென நன்கு அறிவித்த னையே!

"நால்வருணம், ஆச்சிரம, ஆசாரம் முதலாம்

நவின்ற கலைச்சரிதம் எல்லாம்  பிள்ளை விளையாட்டே!"

மால் வருணங் கடந்தவரை மேல் வருணத்தேற்ற

வயங்கு நடத்தரசே என்மாலை யணிந்தருளே"

இப்படிப்பட்ட தத்துவஞானியை மறைத்தார்கள்! அவரது முடிவு இன்று வரை ஓர் அவிழ்க்கப்படாத முடிச்சு; புரியாத புதிர் என்பது வேதனையான ஒன்றுதான்!

ஆரியச் சனாதன தர்மத்தை எதிர்த்து....

வடக்கே உள்ள சனாதன மதக்கருத்துகள் தெற்கே பரப்பப்பட்ட நிலையில், நாட்டின் ஒருமைப்பாடு பேசும் 'தேச பக்தித் திலகங்கள் ஏனோ வள்ளலாரை வடக்கே - இராமகிருஷ்ணரைப் போல் பரப்பவில்லை - காரணம்  வள்ளலார் வடமொழிகளின் ஆதிக்கத்தை, வருணாசிரம தர்மம் என்ற ஜாதிமுறையை வற்புறுத்தும் ஆரியச் சனாதன தர்மத்தை எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினார். அவரைப் புகழ்ந்தே மறைத்து அவரது தத்துவங்கள் பரவாமல், திட்டமிட்டு வெற்றி பெற்றனர் 'இருட்சாதி'க் கூட்டத்தார்.

சங்கராச்சாரியார் தமிழ்பற்றி மட்டமாகப் பேசிடும் வகையில், சமஸ்கிருதம் மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி (மாத்ரு) என்றபோது, வடலூர் வள்ளலார்  தமிழ், மொழிகளுக்கெல்லாம் தந்தை மொழி (பித்ரு) என்று சங்கராச்சாரியாருக்கு தக்க பதிலடி கொடுத்தார்.

 'திராவிட மாடல்' அரசின் செயல் திட்டம்

மக்களுக்கான அடிப்படைத் தேவை 'பசி போக்கலே' என்று கண்டறிந்துப் பசிப்பிணிதனைபோக்க முனைந்த மானுடநேயர்!

பள்ளிக் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி முதல் வழங்கும் 'திராவிட மாடல்' அரசு கருணை பொழிந்த வள்ளலார் காண விரும்பிய அரசு போல செயல்பட்டு வருவது வள்ளலாரின் விழைவை வினையாக்கிய செயல் திட்டம்.

ஜாதி, மத, சாஸ்திரங்களை எதிர்த்து, மதமான பேய் பிடியாதிருக்க வேண்டுமென்ற கொள்கைகளை நடைமுறைப்படுத்த வள்ளலார் விழாவை மாந்தநேய மாண்புகளோடு கொண்டாடும் நேரத்தில் - ஜாதி, மூடநம்பிக்கை "பிள்ளை விளையாட்டுகளை"த் தவிர்ப்பதே - அவருக்கு உண்மையாக நாம் செய்யும் கைம்மாறு - வடலூரின் தத்துவஞான போதனைகளை கடைப்பிடித்தொழுகலே!

ஜாதி, மதவெறி மாயட்டும்!

அவரது கருணை மழை நாடெல்லாம் வெள்ளமெனப் பாயட்டும்

தத்துவங்கள் பரவட்டும்!

1930களிலேயே தந்தை பெரியார் 'குடிஅரசு' வார ஏட்டில் வள்ளலாரின் சமயப் புரட்சிகளை அச்சிட்டுப் பரப்பிய முன்னோடி என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து மகிழ்ந்து, புரிந்து வள்ளலார் பாதையும் - பெரியாரின் ஈரோட்டுப் பாதையும் ஓர் இலக்கினை நோக்கி இணையும் இரு வழிப்பாதைகளே என்பதைப் புரிந்துகொள்ளட்டும்!

வாழ்க வள்ளலாரின் அறிவுக் கொத்தும் - 

கருணை மழைப் பொழிவும்!


கி.வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

5.10.2022


No comments:

Post a Comment