சூனியம் மற்றும் மாந்திரீகம் போன்ற மூடநம்பிக்கை பழக்கங்களைத் தடுக்க சட்டம் இயற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி கேரள யுக்தி வாடி சங்கம் கடந்த வாரம் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
"சூனியம் மற்றும் மாந்திரீகம் பற்றிய மூடநம்பிக்கைகள் தொடர்பாக நரபலிகள் மற்றும் பிற வகையான நாசகார செயல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 'கடவுளின்' அருளுக் காகவும், புதையலுக்காகவும் வேலை கிடைக்கவும், குடும்பப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், குழந்தை பிறப்புக்காகவும், இன்னும் பல ஆசைகளுக்காகவும் சிலர் சூனியம் மற்றும் மாந்திரீகம் செய்கிறார்கள். அதில் தாழ்த்தப்பட்ட சமூக மக்க ளின் குழந்தைகள் மற்றும் பெண்கள் பெரும்பாலும் பாதிக்கப் படுகிறார்கள்" என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மூடநம்பிக்கைகள் தொடர்பான குற்றங்கள் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில இடங்களில் மட்டுமே இந்த சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மனித நரபலி சம்பவத்தில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டு அவர்களின் உடல்கள் துண்டாக்கப்பட்ட சம்பவத்தின் வெளிப்பாடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
1955 முதல் 2022 வரை மாநிலத்தில் இதேபோன்ற சம்பவங்கள் பல தடவை நடந்ததாக பல்வேறு அறிக்கைகளை மனுதாரர் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
தொலைக்காட்சி, யூடியூப் மற்றும் ஓடிடி தளங்களில் பல திரைப்படங்கள், டெலிஃபிலிம்கள் மற்றும் விளம்பரங்களில் சூனியம், அமானுஷ்யம் போன்ற மூடநம்பிக்கை நடைமுறை களைக் கொண்ட உள்ளடக்கம் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது போன்ற காட்சிகள் மக்களை மூடநம்பிக்கைச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகின்றன" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இப்பிரச்சினையை சமாளிக்க மாநில சட்டப் பேரவையில் சில மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவை எதுவும் சட்டமாக்கப்படவில்லை" என மனுதாரர் தெரிவித் துள்ளார்.
"மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசுகளை பலமுறை அணுகி, வெகு மக்கள் மனுக்களுக்கு முன்னுரிமை அளித்தும், சட்டத்திற்கான மாதிரி மசோதாக்களை சமர்ப்பித்தும், இதுவரை எந்த அரசும் கவனம் செலுத்தவில்லை" என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சூனியம் மற்றும் அமானுஷ்யம் உள்ளிட்ட மூடநம்பிக் கைகளை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மற்றும் சீரியல் தயாரிப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமானமற்ற தீய பழக்கவழக்கங்கள், சூனியம் மற்றும் மாந்திரீகம் ஆகியவற்றை ஒழிப்பதற்கான கேரளத் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நீதிபதி கே.டி.தாமஸ் சமர்ப்பித்த 2019 ஆம் ஆண்டுக்கான சட்டச் சீர்திருத்த ஆணைய அறிக்கையின் பரிந்துரையை பரிசீலித்து முடி வெடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
முக்கியமாக, சூனியம் மற்றும் அமானுஷ்யம் உள்ளிட்ட மூடநம்பிக்கைகளை ஊக்குவிக்கும் பெரிய திரைகள், தொலைக் காட்சி மற்றும் இணைய தளங்களில் வெளியாகும் திரைப் படங்கள், சீரியல்கள் மற்றும் டெலிபிலிம்களின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
மேற்கூறியவற்றின்படி, சூனியம், மாந்திரீகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் தீய பழக்க வழக்கங்களைத் தடைசெய்யும் சட்டத்தை இயற்றுமாறு மாநில அரசாங்கத்திற்கு "நினைவூட்டல்" வடிவத்தில் வழிகாட்டுதல்களை மனு கோரியுள்ளது.
மேலும் இணைய தளங்களில் வெளியாகும் சூனியம் தொடர்பான புத்தகங்களின் விளம்பரங்களையும் சட்ட விரோதமாக அறிவிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது வரவேற்கத்தக்க வழக்கும், கோரிக்கையுமாகும். இந்தியாவிற்கே வழி காட்டக் கூடிய 'திராவிட மாடல்' தி.மு.க. அரசும் இந்த வகையில் சிந்தித்து சட்டம் இயற்றுமாறு வலியுறுத்துகிறோம்.
அண்மைக்காலமாக நரபலி போன்ற மூட நம்பிக்கைகள் தமிழ்நாட்டிலும் தலை தூக்குவதை உடனடியாகத் தடுப்பதற்கு, இதற்கென்று ஒரு சட்டம் அவசியமே.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51கி(லீ) மக்களிடத்தில் விஞ்ஞான மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறியிருப்பதையும் நினைவூட்டுகிறோம்.
No comments:
Post a Comment