டுவிட்டரில் பணிபுரிந்த ஹிந்துத்துவ ஆதரவு தலைமை அதிகாரிகள் நீக்கம், எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து சொன்ன ராகுல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

டுவிட்டரில் பணிபுரிந்த ஹிந்துத்துவ ஆதரவு தலைமை அதிகாரிகள் நீக்கம், எலான் மஸ்க்கிற்கு வாழ்த்து சொன்ன ராகுல்

புதுடில்லி. அக்.30 சமூக ஊடகங்கள் தீவிர வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கருத்துகளைப் பரப்பும் இடமாக மாறி சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் ஏற்படுத்துவது பெரும் ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் மற்றும் தலைமை நிதி அதிகாரி நீல் செகல் உள்ளிட்ட அதிகாரிகளை நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க்  பணி நீக்கம் செய்தார்.எலான் மஸ்க்-கின் இந்த அதிரடி நடவடிக்கையால் சமூக ஊடகங்களை குறிப்பாக ட்விட்டரை தங்கள் வசதிக்காக போலி தகவல்களை பரிமாற பயன்படுத்தியவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும், ட்விட்டரை தான் வணிக நோக்கத்திற்காக வாங்கவில்லை என்றும் மக்களிடம் அன்பு மற்றும் சகோதரத்துவம் தழைப்பதையே விரும்புவதாகவும் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான ஊடகங்கள் ஒரு சார்பாக செயல்பட்டு பிரிவினையை தூண்டுவதன் மூலமே பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைக்கின்றன.

ஒரு பொதுவான டிஜிட்டல் தளம் மூலம் ஆரோகியமான முறையில் வன்முறையை நாடாமல் பலவிதமான நம்பிக்கைகளை ஆரோகியமாக விவாதிக்க கூடிய எதிர்கால நாகரீகத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நான் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினேன் என்று எலான் மஸ்க் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தந்த நாட்டின் சட்டத்திற்கு உள்பட்டு அனைவரையும் அரவணைத்து வரவேற்கக் கூடிய தளமாக ட்விட்டர் இருக்கும். எல்லா வயதினரும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்யும் தளமாக ட்விட்டர் இனி செயல்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ட்விட்டரில் தன்னை பின் தொடர்பவர்கள் கடந்த சில மாதங்களாக குறைத்துக் காட்டப்படுவதாக குற்றம் சாட்டி வரும் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் மக்களவை உறுப்பின ருமான ராகுல் காந்தி எலான் மஸ்க்-கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மேலும் “வெறுப்புணர்வு பதிவுகளுக்கு எதிராக இனி ட்விட்டர் நிறுவனம் செயல்படும்” என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment