எங்களது சுயமரியாதைப் பிரச்சாரம் காரணமாகத்தான் ‘தாழ்ந்த ஜாதி என்று பார்ப்பனர்களால் இழித்துக் கூறப்பட்ட ஜாதியில் வந்த காமராசர் இந்த நாட்டின் முதலமைச்சராகவும், இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் வர முடிந்தது.
(‘விடுதலை’ 15.1.1965 உடுமலை உரை)
மனு தர்மத்தைத் தள்ளி மனித தர்மம் ஏற்கப்பட்டது காமராசரால்தான்.
மக்களுக்கோ புத்தி இல்லை; தற்குறி களாய் இருக்கும் இந்த நிலையில் எப்படி ஜனநாயகம் உருப்பட முடியும்? எனவே தான் நாட்டு மக்களின் கல்வியில் நாட்டம் செலுத்தலானார் காமராசர். (‘விடுதலை’ 23.1.1965)
திரு. காமராசர் போன்ற பற்றற்றவர்க ளுக்கு உதவி செய்தால் நமக்கு நன்மை ஏற்படும் என்று நினைக்கிறேன். ஏன்? ஆச்சாரியார் இருந்து நமக்குக் கொடுத்த தொல்லைகளை நீங்கள் அறிந்ததேயாகும் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து நம்மீது திணித்தார். உத்தியோகத்தில் நமக்குக் கிடைக்க வேண்டியதையெல்லாம் அவர் இனத்திற்குக் கொடுத்தார். திரு. காமராசர் வந்ததும் அதை அப்படியே மாற்றி, ஆச்சாரியார் தன் இனத்திற்குச் செய்ததுபோல இவர் நம் இனத்திற்குச் செய்கிறார் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு இந்தப் பார்ப்பனர்கள், அவரை எப்படியாவது ஒழித்துக் கூட்டத் திட்ட மிட்டு அவருக்கு எவ்வளவு தொல்லைகள் உண்டாக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்து வருகிறார்கள். ஆகவேதான் நாம் திரு. காமராசரை ஆதரிக்கும் நோக்கம் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் சிந்திக்க வேண்டும்; திரு. காமராசர் அவர்கள் தோல்வி அடைந்து மந்திரி பதவிக்கு வரமுடியவில்லையானால் அடுத்து வருபவர் யாராக இருக்க முடியும் என்பதையும், வந்தால் நமக்கும் நம் இனத் திற்கும் எவ்வளவு தீமைகள் உண்டாகு மென்பதையும் சிந்தித்துப் பாருங்கள். ஆகவே நம் இனம் முன்னேற வேண்டு மானால் நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து திரு. காமராசருடைய கையைப் பலப்படுத்த வேண்டும்.
(2.10.1956 அயன்புரத்தில் திரு.வி.க. நினைவு நாள்-_ தந்தை பெரியார் உரை ‘விடுதலை’ 9.10.1956)
ஆச்சாரியாரின் இனநலன் புத்தி
நமக்கும் வரவேண்டும்
ஆச்சாரியார் செய்தது என்ன? முதலில் காங்கிரஸ்தான் உயிர் மூச்சு என்று கூறினார். அதற்காக சேர்மன் பதவி, வக்கீல் வேலை இவைகளையெல்லாம் விட்டுவிட்டு காங் கிரசிற்குள் வந்தார். உழைத்தார். இதெல் லாம் எதற்காக? காங்கிரஸ் அவர்களுடைய இனத்திற்காக இருந்தது. பார்ப்பனர்கள் (அதாவது தன் இனம்) வாழ வேண்டுமானால் காங்கிரஸ் காப்பாற்றப்பட்டு உயிர் வாழ வேண்டும் என்று கருதி காங்கிரஸைக் காப்பாற்றப் பாடுபட்டார்.
அன்று அப்படிக் கூறிய ஆச்சாரியார் இன்று காங்கிரசை ஒழித்தே ஆக வேண் டும், அது தன்னால்தான் முடியும் என்று கூறிப் புதிய கட்சி துவக்கினார் என்றால் அது அவருக்கு புத்திக் கோளாறு ஏற் பட்டுவிட்டது என்று அர்த்தம் இல்லை. அதாவது காங்கிரஸ் இன்று பார்ப்பனர் களுடைய நலத்திற்காக இல்லை. அது தமிழர்களுடைய நலன் கருதும் கட்சியாக ஆகிவிட்டது. இனி அதனால் தன் இனத் திற்கு நன்மையில்லை என்ற நிலை ஏற் பட்டுவிட்டது என்று கருதித்தான் ஆச்சாரி யார் தன் இனத்திற்கு உதவாமல் ஆபத்தைத் தரும் காங்கிரசை ஒழிக்க, நம் இனத் துரோகிகளை கூட்டுச் சேர்க்க வலை போட்டுப் பண பேரம் பேசுகிறார். அந்த இன நலன் புத்தி நமக்கு வரவேண்டும். காமராசர் ஒழிந்தால் அந்த இடத்திற்குப் பார்ப்பான்தான் வருவான். காமராசர் ஒழியாது காப்பாற்றுவது மட்டும் அல்ல; காங்கிரசும் ஒழியாது பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி காமராசர் ஒழிந்து பார்ப்பான் வந்தால் காங்கிரஸ் ஒழிக என்று கூறணும்; அப்போதுதான் நம் கைக்கு காங்கிரஸ் வரும்.
இன்று காமராசரது நேர்மையான ஆட்சியே!
தமிழன் படிக்க வசதியும் வாய்ப்பும் வேண்டும். தமிழனுக்கு உத்தியோகம் வேண்டும் என்று கூறி ஜஸ்டீஸ் கட்சி பாடுபட்டது. இந்தக் கொள்கைக்காக நானும் 35 ஆண்டுகளாய்ப் பாடுபட்டு வந்தேன். இன்று காமராசர் ஆட்சியில் இந்த நன்மைகள் ஏராளமாய்க் கிடைக்கிறது. அன்று ஜஸ்டீஸ் கட்சி மந்திரி சபை ஒழுக்கம் நாணயத்துடன் இருந்தது. இன்றும் காம ராசர் மந்திரிசபையில் ஏதாவது கோளாறு, தகராறு என்றோ ஒழுக்கம் நாணயம் குறைவு என்றோ யாராவது கூற முடியுமா? அவ்வளவு நல்ல நிருவாகத்துடன் பாடு படும் மாநிலம் இந்தியாவிலேயே சென்னை ராஜ்யம் ஒன்றுதான். எல்லோருக்கும் இந்த உண்மை தெரியும்.
சுயமரியாதையை- ஜஸ்டீஸ் கொள்கையைக் காப்பாற்றுகிறோம்
தோழர்களே! நண்பர் ஆச்சாரியார் கூறுகிறார் - இன்று நடப்பது காந்தி காங் கிரஸ் அல்ல;தமிழன் சுயமரியாதை காங் கிரஸ் தான் நடக்கிறது என்று. காமராசரைக் காப்பாற்றுவது சுயமரியாதைக் கொள்கை யைக் காப்பதாகும். தமிழர்கள் நன்மையை, ஜஸ்டீஸ் கட்சியைக் காப்பாற்றுவது போன் றதாகும். இந்த எண்ணம் நம் ஒவ்வொரு வருக்கும் ஏற்பட வேண்டும். நமக்குள்ள சூத்திரத் தன்மையை ஒழிக்கப் பாடுபடுவது நாங்கள்தான். வேறு யாரும் இல்லை.
(20.6.1961 அரகண்டநல்லூரில் தந்தை பெரியார் உரை (‘விடுதலை’ 5.7.1961)
பார்ப்பான் கையில் மண் வெட்டி!
பாப்பாத்தி கையில்’ களைக் கொத்தி!
இன்றைய ஆட்சியானது ஏதோ தமி ழர்களின் நல்வாழ்வில் அக்கறையுள்ளதாக இருப்பதனால் நாங்கள் காங்கிரஸ்காரன் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் வலியச்சென்று ஆதரிக்கின்றோம். பெரும் பான்மையான காங்கிரஸ்காரர்களுக்கு எங்களைப் பிடிக்காது. எங்கள் நிகழ்ச்சி களில் காங்கிரஸ்காரர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்றே முடிவு பண்ணிக் கொண்டு உள்ளார்கள். எங்கள் பத்திரிகை அரசாங்க சம்பந்தமான வாசகசாலைக்கு வரக்கூடாது என்று தடுக்கப்பட்டுவிட்டது.
நன்றியோ பிரதிபலனோ இல்லா உழைப்பு!
காங்கிரஸ்காரர்கள் நன்றி செலுத்து வார்கள் என்ற எண்ணத்தில் நாங்கள் ஆதரிக்க முற்படவில்லை. சமுதாயத்தில் இன்றைய ஆட்சியின் காரணமாக ஏற்பட்டு உள்ள நன்மையினை உத்தேசித்தே ஆதரிக்கிறோம்.
நீங்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குக் காமராஜரையே பதவியில் இருக்கும்படி பார்த்துக்கொண்டால், பார்ப்பனர் கைக்கு மண் வெட்டியும் பாப்பாத்தி கைக்குக் களைக் கொத்தும் வந்துவிடும். இது உறுதியாகும்.
இதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் காங்கிரசை ஒழிக்கப் பாடுபடுகின்றார்கள். மற்றவர்களைவிடத் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் காமராசர் ஆட்சியினை ஒழித்து விடாமல் பாதுகாக்க வேண்டும். காமராசர் ஒழிந்தால் பழையபடியும் வீதிக்கு ஒதுக்குப் புறத்தில் அனுப்பிவிடுவார்கள். தோழர் களே, நாங்கள் தோன்றுகின்ற வரையிலும் ஜாதியினை ஒழிக்க எவனும் தோன்ற வில்லை.
புத்தருக்குப் பிறகு ஜாதி ஒழிப்புப்பற்றிப் பேசவும் அதற்காகப் பாடுபடவும் நாங்கள் தான் உள்ளோம்.
(25.4.1963) கொறுக்கையில் உரை)
காங்கிரஸ் 1885-இல் தோன்றி 1964 வரை 78 வருஷம் ஆகிறது. இதற்கிடையில் 68 மகாசபைக் கூட்டம் நடந்திருக்கிறது. இதில் நம்முடையவர்கள் மாமிசப் பிண்டங்களா கவே இருந்தனரே தவிர, மனிதத் தன்மை யோடு ஒருவரும் இல்லை. இன்றுதான் ஊசியில் ஒட்டகம் நுழைந்ததுபோல ஒரு தமிழர் நுழைந்திருக்கிறார். பத்திரிகைக் காரன் எல்லாம் மூன்று தமிழன் என்று சொல்லுவான். அது சுத்தப் பொய். 1920 இல் விஜயராகவ ஆச்சாரி என்ற பார்ப்பானும் 1927 இல் சீனிவாச அய்யங்கார் என்ற பார்ப் பானும்தான் தலைவர்களாக இருந்தார்கள். இப்பொழுதுதான் தமிழன் ஒருவர் வந் திருக்கிறார். அவரை இந்தியாவிலேயே எல்லோரும் பாராட்டுகிற மாதிரியான ஒரு மரியாதை வந்திருக்கிறது. அதுவும் நேரு வுக்கு அடுத்தபடியாக காமராசர் இருக் கிறார். இவருடைய முயற்சியால் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ‘சோஷ் யலிச பாலிசி” என்று சொன்னார்கள்.
இப்பொழுது நடைபெற்ற மாநாட்டில் ‘சோஷ்யலிச கொள்கை’ என்று சொல்லி விட்டார்கள். இதைச் செயலில் கொண்டு வந்துவிட்டால் பார்ப்பான் தொலைந்தான். நம் மக்கள் வாழ்வு நாளுக்கு நாள் முன் னேறும். இதை நீங்கள் மனதில் வைத்துக் கொண்டு வேலை செய்யவேண்டும்.
(10.1.1964 ஈரோட்டு உரை, ‘விடுதலை’ 17.1.1964)
No comments:
Post a Comment