வாலாட்டாதீர் நரிகளே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

வாலாட்டாதீர் நரிகளே!

மின்சாரம்

“நான் ஒரு அரசியல் புரோக்கர்தான்!” என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்த சோ.ராமசாமியின் சீடர் எஸ்.குருமூர்த்தி அய்யரும் அட்சரம் பிறழாமல் அதே வேலையை த்தான் செய்கிறார்.

அ.இ.அ.தி.மு.க-வுக்குள் நுழைந்து அவர் செய்த வேலை யைக் கண்டு ஊரே சிரித்தது!

திருமதி சசிகலா முதல் அமைச்சர் ஆக இருந்த நிலையில், ஓ.பி.எஸ் குருமூர்த்தியைச் சந்தித்த போது, குருமூர்த்தி என்ன சொல்கிறார்? நீங்களெல்லாம் ஆம்பிளை தானா? என்று கேட்கிறார். 30 சதவிகித பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று வாங்கிக் கட்டிக் கொண்டவராயிற்றே!

பெண் ஒருவர் முதல் அமைச்சரானால் அவர்களின் புத்தி இப்படித்தான் மேயப் போகும். ஆனால், ஜெயலலிதா முதல் அமைச்சரானால், அது வேறு சங்கதி! சங்கராச்சாரி யாரைக் கைது செய்து ஜெயிலில் தள்ளிய போது கூட உப்புக்கண்டம் பறி கொடுத்த பழைய பாப்பாத்தி போல பதுங்கினார்கள். 

ஆயிரம் இருந்தாலும் ஜெயலலிதாவை விட்டால் நம்பளவா யார் முதல் அமைச்சராக வர முடியும் என்ற நினைப்பு உள்ளுக்குள் புகைந்தது.

எப்படியோ சங்கராச்சாரியார் விடுதலையானார்! நீதிபதி யிடமே சங்கராச்சாரியார் பேசியது எல்லாம் என்னாச்சு என்று தெரியவில்லை.

“திராவிட மாடல் ஆட்சி” என்ற தமிழ் நாடு முதல் அமைச்சர் சொன்னாலும் சொன்னார், உடம்பெல்லாம் கொப்பளமாகி விட்டது இந்த உஞ்சவிருத்திக் கூட்டத்துக்கு.

இதில் ஒரு வேடிக்கை வினோதம் என்ன தெரியுமா? பிஜேபிக்குள்ளேயே பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் சிண்டு முடித்தனம் நடந்தது.

‘துக்ளக்கில்’ (7.10.2020) ஒரு கேள்வி பதில்

கேள்வி:- திடீரென்று தமிழக பா.ஜ.க. பெரியாரைக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறதே?

பதில்: - ஈ.வெ.ரா வை ஏற்றுக்கொண்டால், கழகங்களின் வாக்கு பெருமளவிற்கு மாறி, 60 இடங்களைப் பெற்று விடுவோம் என்று பா.ஜ.க. நினைப்பது போலிருக்கிறது.

-என்று ‘லபோதிபோ’ என்று கொந்தளித்து எழுதியது துக்ளக்.

இதன் பொருள் என்ன? தமிழ்நாட்டில் பா.ஜ.க-வுக்குத் தலைவராக ஒரு பார்ப்பனர் அல்லாதார் வந்தபோது ஏற்பட்ட உள் குத்து இது!

உமாபாரதியும் கல்யாண்சிங்கும் பிஜேபி பார்ப்பனக் கட்சி என்று சொல்லவில்லையா?

டாக்டர் கிருபாநிதி என்ற தலித் சகோதரர் தமிழ்நாடு மாநில பிஜேபி தலைவராக வந்த போது, அவர் எப்படி எல்லாம் அவமதிக்கப்பட்டார்? தேசிய செயலாளராக இருந்த இல.கணேசன், “என் கையைப் பிடித்து முறுக்கினார்!” என்று சொல்லவில்லையா? பிஜேபி தலைமை யிடமான கமலாலயத்தில் பிஜேபி தலைவராக இருந்தும், ஒரு நகல் எடுப்பதற்குக் கூட (XEROX) நான் வெளியில் போய்தான் எடுக்க வேண்டியிருந்தது என்று சொல்ல வில்லையா?

பிறகு பிஜேபிக்கு முழுக்குப் போட்டு விட்டு தி.மு.க.வில் தன்னை அவர் பிணைத்துக் கொண்டது எதைக் காட்டுகிறது?

குடியரசுத் தலைவராக இருந்த மாண்பமை ராம்நாத் கோவிந்த் வடக்கே இரண்டு கோயில்களிலும் அவமதிக்கப் பட்டாரே -காரணம், குடியரசுத் தலைவர் தலித் என்பதால்! இதைப் பற்றி ஒரே ஒரு வரி கண்டித்து எழுதியிருக்குமா ‘துக்ளக்’ ‘தினமலர்’ குடுமிகள்?. 

ஒன்றிய பிஜேபி அரசு அதன் பிரதமர் குடியரசுத் தலைவர் அவமதிக்கப்பட்டதன் மீது எடுத்த நடவடிக்கை என்ன?

தி.மு.க. ஈரோடு மாநாடு நடந்து முடிந்ததும் இதே குருமூர்த்தி என்ன எழுதினார்?

மு.க.ஸ்டாலின் தி.க.விடமிருந்தும் வீரமணியிடமிருந்தும் விலகி இருக்க வேண்டும் என்று மூக்கால் அழுது எழுதவில்லையா?

ஆனால், செவுளில் அறைந்தது போல தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தது உண்டே!

“நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்”

(தஞ்சையில் தளபதி ஸ்டாலின் உரை 24.2.2019)

“தி.க.வினர்தான் நேற்றைக்கும் இன் றைக்கும் நாளைக்கும் எங்களுக்கு வழி காட்டுவர்” (முரசொலி 27.8.2019)

இவற்றையெல்லாம் புரிந்து கொண்ட நிலையில்தான் - அதுவும் “திராவிட மாடல் ஆட்சி” என்று முதல் அமைச்சர் சொன்ன நிலையில் - ஒவ்வொரு ‘துக்ளக்’ இதழிலும் சேற்றை வாரி இறைப்பதும், சாக்கடை மொழியில் எழுதுவதும் வாடிக்கையாகக் கொண்டு விட்டார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்.

ஈ.வெ.ரா.வின் கடவுள் எதிர்ப்புக் கொள்கை கலகலத்துப் போய்க் கொண்டு இருக்கிறது என்றார் குருமூர்த்தி (துக்ளக் - 26.10.2022 - 

பக்கம் 5 )

பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை கலகலத்துப் போயிருக்கிறதா இல்லையா என்பதை 1971 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், பார்ப்பனர்களின் மூக்கை உடைத்துப் பதில் சொல்லிவிட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

கடவுள் மறுப்பு என்பது ஹிந்து மதத்தில் அங்கீகரிக்கப் பட்டது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாமல் தத்துப் பித்து என்று தாவிக் குதிக்கிறது ‘துக்ளக்’.

காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோயிலில் தேவநாதனும், சீறிவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் பத்ரிநாத்தும், கடவுள்களின் முன்னிலையில் கர்ப்பக்கிரகத்திலேயே காம வேட்டை ஆடினார்களே! குத்துக்கல்லாட்டம் கடவுள்கள் கிடந்தனவே தவிர, தடுத்து நிறுத்தவில்லையே!

“நானே கடவுள்” என்கிற தத்துவத்தைக் கொண்ட சங்கராச்சாரியார் மடத்துக்கு வந்த பெண் எழுத்தாளர் திருமதி அனுராதா ரமணனின் கையைப் பிடித்து இழுத்தது பற்றி அந்த எழுத்தாளர் சங்கராச்சாரியாரின் யோக்கி யதையை நாற அடிக்கவில்லையா?

வெட்கம்கெட்ட இந்தக் குருமூர்த்தி சங்கராச்சாரி யாருக்காக வக்காலத்து வாங்கி அனுராதா ரமணனிடம் ‘மொத்தடி’ படவில்லையா?

கதை நாறிப் போய்விடும் எச்சரிக்கை!

வள்ளலாரும், பெரியாரும் ஒன்றே என்று வீரமணி பேசுவது எல்லாமே ஈ.வெ.ரா.வின் கடவுள் எதிர்ப்பு முற்றிலும் தோல்வி என்று ஒப்புக் கொள்வதையே காட்டுகிறது என்று எழுதுகிறார் குருமூர்த்தி குருக்கள் (துக்ளக் 26.10.2022 பக்கம் -9)

அய்ந்து திருமுறைகளைத் தாண்டி ஆறாவது திருமுறையில் வள்ளலார் ஆரியத்தின், ஆகமத்தின், சடங்குகளின், கோத்திரங்களின் முகத்திரைகளை நார் நாராகக் கிழித்தெறியவில்லையா?

“நால்வருணம் ஆச்சாரம் ஆசிரமம் முதலா 

நவின்றகலை சரிதம்எலாம் பிள்ளைவிளை யாட்டே 

மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவாரில்லை 

விழித்துயர் என்றெனக்கு விளம்பியசற் குருவே” 

என்று வள்ளலார் பாடி ஆரியத்தின் சங்கை அறுத்தாரே!

"இன்றைய நாத்திகம் என்பது பெரும்பாலோர் நலம், ஆத்திகம் என்பது சிறுபான்மையினர் நலம்" என்று மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் நெற்றியில் அடித்தது மாதிரி பட்டையை உரித்துப் பகர்ந்ததுண்டே!

தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரும் கா.சு. பிள்ளையும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், திருவிகவும் தந்தை பெரியாரை உச்சியில் வைத்துப் புகழ்ந்தது எந்த அடிப்படையில்?

ஆரிய அகங்கார எதிர்ப்பின் அடிப்படையில்தானே! ஆரிய கடவுள்களின் கழுத்தில் பூணூல் தொங்குவது எந்த அடிப்படையில்?

திருப்பதி ஏழுமலையானுக்கு 3 கிலோ எடையில் தங்கப் பூணூலும் 

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் தங்கப் பூணூலும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயந்திர சரஸ்வதி அணிவித்தாரே!

சீறிரங்கம் ரங்கநாதனுக்கும் ஜீயர் ரூ.52 லட்சத்தில் தங்கப்பூணூல் அணிவித்தது எந்த அடிப்படையில்?

கடவுள்களுக்கும் ஜாதி வர்ணம் தீட்டி, கடவுளும் நாங்களும் ஒரே ஜாதி என்று பார்ப்பனர்கள் சொல்லுவதை, பார்ப்பன அல்லாதவர்கள் ஏற்பார்களா?

இன்னும் சொல்லப் போனால் கடவுளுக்கு மேலே பிராமணர் என்று சொன்னவர்தானே ஜெயந்திர சரஸ்வதி? (9.10.2012 அன்று சென்னை நாரத கான சபாவில் நடைபெற்ற “அருந் தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்” நூல் வெளியீட்டு விழாவில்)

“நூறு விவேகானந்தர்களுக்கும் மேலே நான் போய் விட்டேன்” என்று சொன்னவரும் இவர்தானே?

இதுதான் மும்மலத்தையும் அறுத்தவர்கள் என்பதற்கு அடையாளமா?

கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார் அரசு நிகழ்ச்சிகளிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ கடவுள் வாழ்த்துப் பாடும்போது, இரு பக்கமும் உள்ள தொண்டர்களின் தோள்களைப் பற்றிக் கொண்டு கடவுள் வாழ்த்துப் பாடல் பாடி முடிகின்றவரை தள்ளாத வயதிலும் எழுந்து நின்று பண்பாட்டுச் சிகரத்தின் உச்சியில் நின்ற நாத்திகர் ஆயிற்றே!

உங்கள் சங்கராச்சாரிகளின் யோக்கியதை என்ன?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க! "குத்துக்கல்லாட்டம்" உட்காந்திருந்தாரே, காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திர சரஸ்வதி.

இவற்றையெல்லாம் பக்தர்களாக இருப்பவர்களும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்!

கடவுள் மறுப்பையும் கடந்து நாட்டு மக்களால் பின்பற்றத்தக்க தலைவராக தந்தை பெரியாரை வரித்துக் கொண்ட நாடு இது!

குருமூர்த்திகளே, உங்கள் பருப்பு பெரியார் மண்ணில் வேகாது!

ஆம், இது திராவிட மண்ணே! பெரியார் மண்ணே!

திராவிட இயக்கத்தையோ, தந்தை பெரியாரையோ இழித்துப் பழித்துப் பேசினால் மக்கள் வாலை ஒட்ட நறுக்குவார்கள்!

பலாத்காரத்தால் அல்ல - படிப்பினைகளால்!

No comments:

Post a Comment