உலக நாத்திகர்கள் அனைவரும் ஒருவரே; ஓர் அணியினரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

உலக நாத்திகர்கள் அனைவரும் ஒருவரே; ஓர் அணியினரே!

- குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்

இன்றைய நாளில் உலகில் வாழ்ந்துவரும் மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் கொண்ட ஆத்திகப் பக்தர்கள் ஒரே கடவுளை வணங்குபவர்களாக ஒரே மதத்தில் உள்ளவர் களாக இல்லை. அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மதம். ஆளுக்கு ஒரு கடவுள் எனத் தனிப்பிரிந்தே வாழ்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மதக் கொள்கைகளால், கடவுள் கோட்பாடு களால் தங்களுக்குள் மாறுபட்டும் வேறு பட்டும் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது, அவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் எதிரிகளாகவும் வேறு வகையில் நேர்முக மாகச் சொன்னால் நாத்திகர்களாகவுமே வாழ்ந்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. தம் மதக் கொள்கைகளை தம் கடவுள் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பிறிதொருவர் அவர்கள் கணக்குத்திட்டப்படி நாத்திகர்களே ஆவார்கள். ஆக, ஆத்திகர் கள் என்பவர்கள் ஒரே அணியில் - ஒரே கொள்கையில் நிற்பவர்கள், இருப்பவர்கள் அல்லர். ஆம், ஆத்திகத்தில் பல மதங்கள்; ஆத்திகத்தில் பல கடவுள்கள்; ஆத்திகத்தில் கொள்கை கோட்பாடு விளக்கத் தலைவர்கள் பற்பலர்- இந்த முன்னறிவு நினைப்போடு இந்த முன்னறிவுப் பார்வையோடு நாத்திகம் பற்றிய ஓர்மை, சீர்மை, பெருமை பற்றி அறிவோம்; ஆய்வோம்.

அனைத்து மத நாத்திகர்களும் கடவுள் இல்லை என்பதிலும், மதம் இல்லை என்பதிலும் ஓர் அணியில் ஒன்று திரண்டு ஒருங்கே இருக்கிறார்கள்; நிற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒழுக்கத்தையும், நாணயத்தையும், நேர்மையையும், உழைப் பையும் நம்புபவர்கள், மதிப்பவர்கள், போற்று பவர்கள் ஆவார்கள். உலகம் உருண்டை என்பதை அனைத்து நாத்திக அறிஞர்களும் ஏற்றுக்கொள்கிறார்கள்- ஏன், உலகம் உருண்டை என்ற கருத்தை நாட்டிற்கு வெளிச்சம் போட்டு விவரப்படுத்திச் சொன்னவர் நாத்திக அறிவியல் அறிஞர் கலிலியோதானே. அதனால்தானே அவரைக் கிறித்துவமதப் பாதிரியார்கள் ஓடஓட விரட்டி யடித்துக் கொன்றொழித்தார்கள்.

நாத்திகர்கள் அனைவரும் ஒழுக்க நெறியை உயர்வாகப் போற்றி மகிழ்கிறார்கள். ஆனால், ஆத்திகர்கள் ஒழுக்கம் கெட்டும். நேர்மை தவிர்த்தும் கடவுளைக் காப்பாற்ற லாம் என்று கருதி, தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் ஆவார்கள். கடவுளின் பெயரில் மதத்தின் சார்பில் பிள்ளையை வெட்டி கறிசமைக்கலாம் என்பதும், எவர் ஒருவருக்கும் தம் மனை வியை, தங்கையை, தாயை, மகளைக் காட்டி யும், கூட்டியும் கொடுக்கலாம் என்பதும், கல்யாணம் ஆகாமலேயே கணவர் பெயர் தெரியாமலேயே கருத்தரிக்கலாம் என்பதும், குழந்தைப்பேறு அடையலாம் என்பதும் மதமும் கடவுளும் ஒத்துக்கொண்ட ஏற்றுக் கொண்ட அனுமதித்துக்கொண்ட கொள்கைகளாகும்.

இதனை ஏற்றுக்கொள்ள அனுமதிக்க மறுப்பவர்கள் அனைத்து நாத்திகர்களுமே ஆவார்கள்.

“மந்திரத்தில் மாங்காய் காய்க்கும்; மந்திரத்தில் தேங்காய் விழும்’’ என்பது ஆத்திக மதவாதிகளின் கொள்கை, நம்பிக் கையாகும். “மந்திரத்தால் மாங்காயும் காய்க்காது; அதே மந்திரத்தால் தேங்காயும் விழாது,’’ என்பது நாத்திகர்களின் அழுத்த மான கொள்கை நம்பிக்கையாகும்.

அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் சிந்தனைத் தடை போடுவதே முட்டுக்கொடுத்துத் தடுத்து நிறுத்துவதே மதமும், கடவுளும் ஆகும். ஆனால், சிந்தனையை, அறிவை, ஆய்வை, ஆராய்ச்சியை நம்புவதும் மதிப்பதும், போற்றுவதும், புகழ்வதுமே நாத்திகமாகும்.

உலகின் அனைத்துச் செயல் நடவடிக்கை களுக்கும் ஆத்திகம், மதம் என்பன கடவுளை முன்னிலைப்படுத்தி, மய்யப்படுத்தியே ஆதாரம் காட்டும். ஆனால், நாத்திகமோ உலகத்தின் அனைத்து  நடவடிக்கைச் செயல்பாடுகளுக்கும் தானே பொறுப் பேற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும்.

“பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம் 

கருமமே கட்டளைக்கல்” 

என்பதன்றோ வள்ளுவர் வாய்மொழி!

தன்னை நம்பாதது ஆத்திகமாகும்; தன்னையே முழுக்க முழுக்க நம்புவதே நாத்திகமாகும். எந்த ஒன்றிலும் வினா கேட்கக்கூடாது என்பதே ஆத்திகமாகும்; ஆனால் எந்த ஒன்றையும் வினா கேட்கவும், எந்த ஒன்றுக்கும் விடை சொல்லவும் தயார் நிலையில் உள்ளதே நாத்திகமாகும்.

இறந்தபின் மேலுலகத்தில் மோட்சம் அடையலாம் என்பது ஆத்திக நெறியாகும்; அந்த மோட்சமும் ஒன்றன்று. சைவர் கையி லாயம் என்பார். வைணவர் வைகுண்டம் என்பார். கிறித்தவர் பரலோகம் என்பார் - இசுலாமியர் வேறொன்றைச் சொல்வார். இவை அனைத்திற்கும் பெயர் மாற்றம் மட்டு மின்றி, பொருள் மாற்றமும் அர்த்தமாற்றமும் கொள்கை மாற்றமும் பலபல உள்ளன என்பதுதான் உண்மை. ஆனால் நாத்திகர் களோ, இவ்வுலகத்திலேயே மோட்ச வாழ்வை அதாவது புண்ணியப் புகழ் வாழ்வை அடைந்துவிடலாம் என்பர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தால் இவ்வுல கத்திலேயே மேன்மைப் புகழை அடைந்து விடலாம் என்பதுதான் எதார்த்த உண்மை. இதைத்தானே வள்ளுவர் பெருமான் தன் வாய்மொழிக் கருத்தாக விளக்குகிறார்.

No comments:

Post a Comment