கவிஞர் கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர்
தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளை (செப்டம்பர் 17) சமூக நீதி நாளாக நாம் கொண்டாடுகிறோம். சமூக நீதியும் பகுத்தறிவும் கொண்ட ஓர் உலகத்தைப் பற்றிய நமது பார்வையை மறுமதிப்பீடு செய்வதற்கான அடிப்படையான நாளாக இந்த நாளை நான் பார்க்கிறேன். அந்த உலகம் பெரும்பான்மை மக்களுக்கான, உண்மையின் மிகச்சிறந்த பதிப்பாக இருக்கும். தந்தை பெரியாரும்கூட உலகத்தின் ஒவ்வொரு கருத்தியலையும், கட்டமைப்பையும், யாரோ சொன்னார்கள் என்பதற்காக நாம் அப்படியே ஏற்றுக் கொள் ளாமல், அதைக் கேள்வி கேட்க வேண்டும் என்றே விரும்பியிருப்பார். ஆர்வம் மிகுதியால் தந்தை பெரியாரின் கூட்டங்களுக்கு வந்த மக்கள், அவர் பேசியதைக் கூர்ந்து கவனிப்பவர்களானார்கள்; சிந்தனையாளர் களானார்கள்; கொள்கை தேர்ந்த அரசியல் வாதிகளாக ஆனார்கள். அரசியலில் பங்கு பெறாதவர்கள்கூட எந்தக் கருத்துக்காக அவர் போராடினார் என்பதைப் புரிந்து கொள்ள முயன்றார்கள்.
அவருடைய சிந்தனைகளில் நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் இருந்தன. இத னால் வெவ்வேறு நம்பிக்கைகளைப் பின் பற்றிய மக்களும்கூட, அவருடைய பகுத்தறிவு மற்றும் மதம் குறித்த கொள்கைகளை விவாதிக்கத் தலைப்பட்டனர். ”யாருக்கும் எந்தக் கருத்தையும் மறுக்கும் உரிமை உண்டு. ஆனால் அக்கருத்தை வெளிப்படுத்துவதற்குத் தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது” என்றார் பெரியார்.
அவருடைய புரட்சிகரமிக்க கொள்கை களுக்காகவும், வீரியமிக்க செயல்பாடுகளுக் காகவும் அவர் புனிதங்களைக் கட்டுடைப்பவர் என்று அழைக்கப்பட்டார். எதிர்காலம் குறித்த அவர் சிந்தனையே, அவரது செயல்களுக்குக் காரணமாக அமைந்தது. சமூகக் கொடுமைகள் ஒழிய வேண்டும் என்பதை மட்டும் இலக்காகக் கொண்டவர் அல்லர் அவர். சமூகத்தின் தரத்தை உயர்த்தாத எந்த ஒரு செயல்பாட் டிற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே நினைத்தார். அவருடைய தீவிரமான கொள்கைகள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன.
பெரியார் முன்னெடுத்த சில கொள் கைகளைப் பற்றி இங்கே விவாதிக்க விரும்பு கிறேன். பெரியாரைப் புனிதமாகக் கட்டமைக் காது, பெரியாரைப் ”புனிதங்களைக் கட்டுடைப் பவர்” என்று கருதுவதே சாலச் சிறந்தது. ஏனெனில் அவரை அவ்வாறு கட்டமைப்ப தையே அவர் கட்டுடைத்திருப்பார்.
இராஜகோபாலாச்சாரியார் முதலமைச்ச ராக இருந்தபோது அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தார் பெரியார். அது வெறும் அரசியல் முழக்கமன்று. இத் திட்டம் ஜாதி அடிப்படையிலான வேறுபாட் டினை வலுப்படுத்தி, சமூகக் கட்டமைப்பிற்குச் சரிசெய்ய முடியாத பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தார். குலக்கல்வித் திட்டமானது பள்ளிக் குழந்தைகள் அவர்களது குலத்தொழிலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதி யாகக் கற்றுக் கொள்ள வழிசெய்தது. அத் திட்டம் பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா அவர்களால் முன்னெடுக்கப்பட்ட மிகப் பெரும் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது. பின்னர் அத்திட்டம் திரும்பப்பெறப்பட்டது. ஜாதி ஒடுக்குமுறை தொடர்பான பிரச் சினைகளில் தமிழ்நாடு ஒன்றுபட்டு நிற்கும் என்ற செய்தியை அப்போராட்டம் உலகிற்கு உணர்த்தியது.
தந்தை பெரியாரின் குறிக்கோளானது அனைவருக்குமான உள்ளடக்கிய வளர்ச்சி யும், தனிமனித சுதந்திரமும். தெளிவான அரசியல் நிலைப்பாடு காரணமாக அவரது காலத்தின் தலைசிறந்த கொள்கையாளராகத் திகழ்ந்தவர் பெரியார். அரசியல் சிந்தனையின் பரிணாம வளர்ச்சியினை அவர் புரிந்து கொண்டதன் காரணமாக, காலத்தோடு ஒன்றிச் செயல்பட அவரால் முடிந்தது. பகுத்தறிவை அடித்தளமாகக் கொண்ட சிந்தனையை அவர் முன்வைத்தார். “அறிவு சிந்தனையில் இருக் கிறது. சிந்தனை பகுத்தறிவுடன் இருக்க வேண்டும்” என்றார் அவர்.
பெரியார் அவர் காலத்திற்கு மிகவும் பின்னால் வாழ்ந்திருக்க வேண்டியவர். மக்களுக்கான அவருடைய சீர்திருத்தங்கள் அவருடைய காலத்தில் நடைமுறைப்படுத்த இயலாதவை. அவருடைய கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட ஆண்டுபல ஆயின.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பது ஜாதிக் கட்டமைப்பை மாற்ற அவர் முன்வைத்த சீர்திருத்தங்களில் ஒன்று. அது போன்ற சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு குறைந்துள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் பெரியார் சொன்னது போல சமூக மாற்றத்திற்கான விவாதங்களை நாம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
சமூகக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரான போராட்டத்திற்குப் பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன. ஆனால் இந்த அர்த்தமுள்ள போராட்டத் திற்கான பெரியாரின் சிந்தனைகள், இதில் பங்கெடுக்க என்னை வழிநடத்துகிறது. அது பெரியாரை வாசிக்கும் ஒவ்வொரு மாண வருக்கும்கூட வழிநடத்தும் ஆற்றலாக இருக் கிறது. ”யாரை நான் விரும்பினாலும், வெறுத் தாலும் எனது கொள்கை எப்போதும் மாறாதது. அது என்னவென்றால், படித்தவர்கள், பணக் காரர்கள், அரசாங்க அதிகாரிகள் ஏழைகளின் குருதியை உறிஞ்சி அவர்களைச் சுரண்டக் கூடாது” என்று சொன்னவர் பெரியார்.
பகுத்தறிவையோ, அறிவியலையோ, அனு பவத்தையோ அடிப்படையாகக் கொண்டிராத எதிர்க்கருத்து என்பது சுயநலம் சார்ந்தது; சூழ்ச்சிகளையும், பொய்களையும், பித்தலாட் டங்களையும் கொண்டது என்கிறார் பெரியார். இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் தீவிர-வலதுசாரி நடவடிக்கைகளைக் கவனித் தால், பெரியாரின் கருத்து உண்மை எனப் புரியும்.
ஒரு பக்கம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைச் செயல்களால் வெகுசிலர் பலனடைந்து வருகின்றனர். இவர்கள் அலங் காரப் பேச்சால் தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றனர். இது போன்ற சமூகப் பின்னடைவுக்குப் பெரியார் தொடக்கி வைத்த விவாதங்கள் தீர்வாக அமையும். ஆதிக்கம் செலுத்துபவர்களுக்கு எதிரான ஒடுக்கப்பட்ட வர்களின் போராட்டங்களில் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்பேன் என்று பெரியார் பிரகடனம் செய்தார். ஆதிக் கமே எப்போதும் அவரது எதிரி.
கடந்த நூற்றாண்டில், தமிழ்நாட்டின் பல சீர்திருத்தவாதிகள் தங்களுடைய புரட்சி கரமான சிந்தனைகளை மக்களுக்கு வழங்கி யுள்ளனர். அதில் பெரியர் தனித்த இடத்தைப் பெறுகிறார். ஏனென்றால், பலதரப்பட்ட மக்கள் தங்களுக்குள் விவாதிப்பதை அவர் சாத்திய மாக்கினார். பெரியாரின் பேச்சுகளும், எழுத் துகளும் சமூக சீர்திருத்த இயக்கங்கள் மக்களோடு உறவாடுவதைச் சாத்தியமாக்கின. தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றியே சிந்தித்த பெரியார், அது ஒரு தொடர்ச்சியான பயணம் என்பதை உணர்ந்திருந்தார்.
உலகம் முழுவதும் விவாதம் செய்வ தற்கான தளங்கள் சுருங்கி வருகின்றன. பெரும் பான்மைவாதமும், கவர்ச்சிகரமான சொல் லாடல்களும் பொதுத் தளத்தில் பயனுள்ள விவாதங்களை விளைவிப்பதில்லை. இந்த நேரத்தில், மாற்றுக் கருத்து உடையவர்களையும் விவாதத்திற்கு அழைக்கும் மாண்பினைப் போற்றிய பெரியார் விடிவெள்ளியாகத் தெரி கிறார். சமூக நீதியை மய்யமாகக் கொண்ட சமுதாயத்தை உருவாக்க முனையும் நாம், மனந்திறந்த விவாதங்களுக்கான களங்களை அமைக்க உறுதியேற்போம். அது மட்டுமே, சித்தாந்தத் தளத்தில் நேர்மறையான மாற்றங் களைக் கொண்டு வர வழிகோலும்.
No comments:
Post a Comment