கட்சியின் பெயரிலிருந்தும், கொடியிலிருந்தும் எப்போது அண்ணாவை எடுக்கப் போகிறீர்கள்?
மின்சாரம்
பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். - சங்பரிவார்களோடு சேர்ந்து மானமிகு ஆ. இராசாமீது சேற்றைவாரி இறைக்கிறார்கள்.
ஆ! ஹிந்து மதத்தை அவமதிப்பதா?
ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய ஆ. ராஜாவைக் குண்டர் சட்டத்தில் போட வேண்டுமாம்! ரொம்பதான் துள்ளிக் குதிக்கிறார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.
எடப்பாடிகளே, ஜெயக்குமார்களே! உங்கள் கட்சிக்குப் பெயர் அண்ணா திமுக! கட்சிக் கொடியில் இருக்கும் உருவம் அண்ணா!
ஹிந்து மதம்பற்றி அண்ணாவின் கருத்து என்ன என்ற பால பாடம் உங்களுக்குத் தெரியுமா?
'ஆரிய மாயை!' என்ற நூலை அண்ணா எழுதியதை அறிவீர்களா?
'ஏ, தாழ்ந்த தமிழகமே!' என்ற அண்ணாவின் நூலைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா?
'அண்ணாவின் இலட்சிய வரலாறு' என்ற நூல் இருப்பது தெரியுமா?
'புராண மதத்ததை'ப் பார்த்ததுண்டா? அண்ணாவின் 'மாஜி கடவுள்கள்' என்னும் நூலைப்பற்றி மாஜிகளே செவி வழியாகவாவது அறிந்ததுண்டா?
இதுவரை தெரிந்து கொள்ளாத பூஜ்ஜியமாக நீங்கள் இருந்தது போகட்டும்.
அண்ணாவின் 'ஆரிய மாயை'-யிலிருந்து மாதிரிக்காக ஒன்றிரண்டு இதோ:
"ஆப்பிரிக்க நாட்டிலே... ஒரு விதமான மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் கழுத்திலே மண்டை ஓடுகளை மணி ஆரமாகப் போட்டுக் கொண்டு இருப்பார்கள். மாடு கன்றுகளைக் கண்டால் மண்டியிட்டுத் தொழுவார்கள். கூடப் பிறந்தவர்களைக் கொன்று சாமிக்குப் படைப்பார்கள். கூத்தாடுவார்கள், குடிப்பார்கள் என்று கூறிவிட்டு, அந்த இனத்தைச் சேர்ந்தவர்தாம் நீங்கள் என்று நம்மிடமாகட்டும், உங்களிடமாகட்டும் ஓர் ஆப்பிரிக்க வாசியோ அல்லது இங்குள்ள வேறு எவனோ சொன்னால், சொல்பவரின் பற்கள் கீழே உதிர்ந்து விழுமா விழாதா?
நாலுதலைச் சாமிகள், மூன்றுகண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமிகள், ஆறுதலைச் சாமி, ஆனை முகச்சாமி, ஆளிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கைமீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷிபத்தினி களிடம் ரஸமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள் ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவர்களை நமது தெய் வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழ வேண்டுமே. இந்த சேதியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களை விடக் கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே! இந்தக் கண்ணறாவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்ள, நமக்கு எப்படி மனம் துணியும்? ஆகவே தான், நாம் இந்து அல்ல வென்று கூறுகிறோம்.
நமக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல், பாடல் அலங்காராதிகள், அப்பம், பாயாசம், அக்காரவடிசல் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் எனக் கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து “தியானத்தை” பெறட்டும். அருளைத் தரட்டும். நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்."
- என்று எழுதுகிறார் அண்ணா.
இன்னும் ஏராளம் உண்டு. எனினும் பகுத்தறிவு அறியா பாலகர்களுக்கு ஆரம்பப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கவே இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.
ஆ.இராசா பேசியது - அய்யா சொன்னதைத்தான்; அண்ணா சொன்னதைத்தான்.
இப்பொழுது சொல்லுங்கள், நீங்கள் தாக்குவது ஆ.இராசாவையா? அய்யாவையா? அண்ணாவையா?
அண்ணா தி.மு.க. என்று பெயர் வைத்துக் கொண்டு, அண்ணாவின் உருவத்தைக் கொடியில் பொறித்துக் கொண்டு அண்ணாவை அவமதிக்க லாமா? அவர் கொள்கைகளைக் காலில் போட்டு மிதிக்கலாமா?
அண்ணா உங்களுக்கெல்லாம் வெறும் 'லேபில்' தானா?
வியாபாரச் சரக்குதானா?
ஒன்று செய்யுங்கள், நீங்கள் நடத்தப் போகும். பொதுக் குழுவில் அவசர தீர்மானமாக ஒன்றை நிறைவேற்றங்கள்.
"இன்று முதல் கட்சியில் உள்ள அண்ணாவின் பெயர் நீக்கப்படும்"
"கட்சிக் கொடியில் உள்ள அண்ணாவின் உருவம் எடுக்கப்படும்!" என்று தீர்மானம் நிறைவேற்றுங்கள்.
அதற்குப் பிறகு 'ஹிந்து'வுக்கு வக்காலத்து வாங்குங்கள் - அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம்!
No comments:
Post a Comment