சென்னை, அக்.1- பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின்மீது காவல்துறையில் புகார் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக 943 இடங்களில் 7 ஆயிரத்து 590 இருக்கை வசதிகள் கொண்ட பொதுக்கழிப்பிடங்கள் உள்ளன. இந்த கழிப்பிடங்கள் பொதுமக்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகின்றன. மேலும், சென்னையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.36 கோடி மதிப்பில் 366 இடங்களில் சிதலம் அடைந்த மற்றும் பயன்படுத்த உகந்த நிலையில் இல்லாத கழிப்பிடங்களை மறுசீரமைக்கவும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் புதிய பொதுக்கழிப்பிடங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இந்த திட்ட பணியின் கீழ் மேற்குறிப்பிட்ட 366 இடங்களில் 860 இருக்கைகள் கொண்ட கழிப்பிடங்களும், 620 இருக்கைகள் கொண்ட சிறுநீர் கழிப்பிடங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்படும் பொதுக்கழிப்பிடங்களில் பொது மக்களுக்கு எந்த கட்டணமும் இன்றி சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில இடங்களில் பொதுமக்களிடம் பணம் வசூலிப்பதாக புகார்கள் பெறப்பட்டன. இந்தநிலையில் மாநகராட்சி பொதுக் கழிப்பிடங்களில் கட்டணம் இல்லா பொதுக்கழிப்பிடம் என பெயர் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி பொதுமக்களிடம் கட்டணம் வசூலிப்ப வர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடந்த 28ஆம் தேதி, திரு.வி.க. நகர் மண்டலம் வார்டு-70-க்கு உட்பட்ட குளக்கரை இணைப்பு சாலை, மாதவரம் நெடுஞ்சாலை மற்றும் தேனாம்பேட்டை மண்டலம் வார்டு-125 காமராஜர் சாலையில் உள்ள பொதுக்கழிப்பிடங்களில் கட்டணம் வசூலித்த 3 பேர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. எனவே மாநகராட்சி பொதுக்கழிப்பிடங்களில் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட நபர்களின் மீது காவல்துறையினரால் புகார் பதியப்பட்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
-இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி தருக! காவல்துறையில் திருமாவளவன், கே. பாலகிருஷ்ணன் மனு
சென்னை, அக்.1 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அக்டோபர் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி இயக்கத்திற்கு அனுமதி அளிக்க வேண்டுமென வலியுறுத்தி சிபிஅய் (எம்) மாநிலச் செயலாளர்
கே. பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் நேற்று (30.09.2022) தமிழ்நாடு காவல்துறை இயக்குநரை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர்
அக்கடிதத்தில், காந்தியார் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் சிபிஅய் (எம்), சிபிஅய், விசிக மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி மற்றும் மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை யுள்ள அமைப்புகளின் சார்பில் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” நடத்திட திட்டமிட்டு ஆங்காங்கே உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் அனைத்து இடங்களிலும் இந்த மனிதச் சங்கிலிக்கு அனுமதி மறுக்கப்பட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மறு சீராய்வு மனுவில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வுத் துறையினர் ஆய்வு நடத்தியதையும், அதனைத் தொடர்ந்து உபா சட்டத்தை பயன்படுத்தி அந்த அமைப்பு தடை செய்யப்பட்டதையும் தொடர்ந்து ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும், மேலும் ஆர்எஸ்எஸ். அமைப்பு அக்டோபர் 2-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனுமதியளித்தால் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என சீராய்வு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த உத்தரவை திரும்பப் பெற வற்புறுத்தியதோடு, இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2-ஆம் தேதி அன்று சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடத்தவிருக்கும் மனித சங்கிலிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் மதச்சார்பற்ற கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட, மத நல்லிணக்கத்திற்கும், மக்கள் ஒற்றுமையைப் பாதுகாத்திடவும் அனுதினமும் போராடி வரும் அமைப்புகளாகும்.
எனவே, மதவாத அடிப்படையில் இயங்கும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளையும், மதச்சார் பின்மை, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகளையும் ஒரே நேர்கோட்டில் பார்ப்பது பொருத்தமற்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
எனவே, தாங்கள் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சிபிஅய் (எம்), சிபிஅய், விசிக மற்றும் மதச்சார்பற்ற, மதநல்லிணக்கத்தில் நம்பிக்கைக் கொண்ட அமைப்புகளின் சார்பில் அமைதியான முறையில் அக்டோபர் 2-ம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் மாலை 4.00 மணியளவில் திட்டமிடப்பட்டி ருக்கும் “சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி” இயக்கத்திற்கு அனுமதி அளித்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என்று சிபிஅய் (எம்), சிபிஅய், விசிக சார்பில் அளிக்கப் பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment