பார்ப்பனீயம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

பார்ப்பனீயம் இருக்கும் வரை தீண்டாமையை ஒழிக்கவே முடியாது!

தந்தை பெரியார்

தோழர்களே, நமக்கு நம் சமுதாய இழிவு நீங்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர,  நம்மை யார் ஆள வேண்டும்,  ஆட்சி செலுத்த வேண்டும் என்பது முக்கிய மல்ல என்பது தான் சென்னையில், சென்ற 20-4-1969 இல் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மானங்களின் முக்கிய குறிக் கோளாகும்.

அந்நிய ஆட்சியானது எவ்வளவு நல்ல ஆட்சியாக இருந்தாலும், எவ் வளவு மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய ஆட்சியாக இருந்தாலும், இந்த ஆட்சியானது ஒழிக்கப்பட்டுத் தங்கள் ஆட்சியானது வரவேண்டும் என்பதுதான் பார்ப்பனர்களின் ஆசையாகும்.

வெள்ளைக்காரன் இந்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்த போது, வெள்ளைக்காரன் ஆட்சியானது ஒழிக்கப்பட வேண்டும், சுய ஆட்சி வரவேண்டும் என்று (காங்கிரஸ்காரர்கள்) பார்ப்பனர்கள் முயன்ற போது, சத்தியமூர்த்தி அவர்களிடம் வெள்ளைக்காரர் ஆட்சியின் சிறப்பையும், சுய ஆட்சி ஏற்படுவதால் ஏற்படும் கேடுகளையும் எடுத்து விளக்கிச் சொன்னபோது, சத்தியமூர்த்தி அவர்கள் சுய ஆட்சியால் எவ்வளவு கேடு ஏற்படும் என்பது எனக்கும் தெரியும்; என்றாலும் சுய ஆட்சிதான் இந்நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னாரே ஒழிய, அதனால் இன்ன நன்மை என்று அவரால் சொல்ல முடியவில்லை.

பல ஆயிரக்கணக்கான ஆண்டு காலமாக இருந்து வரும் தீண்டாமை, வெள்ளையன் ஆட்சி செய்த போதும் ஒழிக்கப்படவில்லை; ஜனநாயகம், சுதந்திரம் வந்து 22 ஆண்டு காலமாகியும் இந்தத் தீண்டாமை யானது ஒழிக்கப்படவில்லை என்றால், இந்த ஆட்சியில் நாம் எதற்காகத் தீண்டப் படாத மக்களாக இருந்து கொண்டிருக்க வேண்டும்? அதற்கென்ன அவசியம் என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

நம் ஜனநாயகம், சுதந்திர ஆட்சியின் மூலம் இந்தத் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இப்போதிருக்கின்ற இந்த அரசமைப்புச் சட்டத்தின் மூலமும் ஒழிக்க முடியாது என்பதால், அயல்நாட்டுக்காரன் ஆட்சி வந்தா வது இந்த இழிவை, தீண்டாமையை ஒழிக்க முன்வர மாட்டானா? அவனாலாவது நம் மக்களின் இழிவு தீண் டாமை ஒழிக்கப்படமாட்டாதா? என் பதால் அயல்நாட்டுக்காரன் அந்நியன் ஆட்சி அது எவனுடையதாக இருந்தாலும், நம் இழிவைப் போக்க முன் வருகின்றவனை ஆதரிப்பதோடு அவனை வரவேற்க வேண்டியது நம் கடமை என் கின்றோம்.

அந்நியன் ஆட்சி என்றதும் நம் மக்களுக்கு ஏதோ வேண்டாத உணவைத் தின்பது போல் இருக் கிறது.  நம் மக்கள் மீன், ஆடு, கோழி,  பன்றி இவற்றின் மாமிசங்களை உணவாக உட்கொள்ளுகின்றனர். ஆனால், மாட்டு மாமிசத்தை உட் கொள்ள மறுக் கின்றனர். மற்ற கோழி, பன்றி, மீன் ஆகிய இவற்றைப் போன்று அசிங்கமானவற்றை மாடு உண்ணவில்லை. என்றாலும், மதம் காரணமாக, மதத்திற்கு விரோதம், சாஸ்திரத்திற்கு விரோதம் என்று மாட்டு மாமிசத்தை உட்கொள்ள மறுக்கின்றார்களோ, அதுபோல இழிவு ஒழிய வேண்டும் என்று எல்லாவற்றிற்கும் ஒப்புக்கொள்கிற மக்கள்- தேசபக்தி என்கின்ற காரணத்தால், அயல் நாட்டுக்காரன் ஆட்சி என்றதும் பயப் படுகின்றனர். இத்தனை காலமாக நமக்கிருந்த தேசபக்தியால், தேசாபிமானத்தால் நம் இழிவு நீக்கப்படவில்லை; தீண்டாமை ஒழிக்கப்படவில்லை என்னும் போது, இந்த தேசபக்தியாலும், தேசாபிமானத்தாலும் நாமடைந்த பயன் மானமற்றவனாக, இழிமகனாக இருப்பது தானா? என்று சிந்திக்க வேண்டுகின்றேன்.

இந்தத் தீண்டாமையானது அறவே ஒழிய வேண்டுமானால், நமக் கிருக்கிற இந்தக் கடவுள் ஒழிக்கப்பட வேண்டும்; மதம் ஒழிக்கப்பட வேண் டும்; சாஸ்திர, சம்பிரதாயங்கள் ஒழிக் கப்பட வேண்டும்; இதிகாச, புராண தருமங்கள் ஒழிக்கப்பட வேண்டும். இவை இருக்கிற வரையிலும்,  இந்த டில்லி ஆட்சி இருக்கிற வரையிலும் தற்போதிருக்கிற இந்த அரசமைப்புச் சட்டம் இருக்கிற வரையிலும், இந்தப் பார்ப்பான் இருக்கிற வரை, பார்ப்பானின் சித்திரம் இருக்கிறவரை இந்தத் தீண்டாமையானது ஒழிக்கப் படவே முடியாது.

இன்று இங்கு இருக்கின்ற இந்த ஆட்சி நம் நாட்டு ஆட்சி; நம் தமிழர் களின் ஆட்சி. என்றாலும், இந்த ஆட்சியால் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதோடு, தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்று சட்டம் கூடச் செய்ய முடியாதே! அப்படிச் சட்டம் செய்வதற்கு இந்த மந்திரிகளுக்கு உரிமை இல்லையே? மீறிச் செய்தால் அரசமைப்புச் சட்டப்படி இந்த ஆட்சியை மாற்றக்கூடிய அதிகாரம் டில்லியிடம் இருக்கிறதே! எனவே இந்த ஆட்சியால் இதனைச் செய்ய முடியாது.

இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்கு ஒரு மகிழ்ச் சியான வெற்றிச் செய்தியைச் சொல்ல வேண்டும். சமீ பத்தில் நடைபெற்ற 73 நகரசபைத் தேர்தல்களில் 56 நகரசபைகளில் தி.மு. கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. மீதி 9 நகர சபைகள் அப்படியும், இப்படியுமாக இருக்கின்றன. பொதுவாகப் பார்த்தால் காங்கிரஸ் மிகக் கீழ்நிலைக்கு,  இழிதன்மைக்குப் போய் விட்டது; அது மாற்றமடைய வேண்டும்.

எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சி நகர சபையில் வருவது தான் நல்லது; ரகளை இல்லாமல் காரியம் நடக்கும்; அப்படியில்லாமல் வேறு கட்சி நகர சபையில் வந்தால், ரகளைக்குதான் நேரம் இருக்குமே தவிர, காரியம் ஒன்றும் நடைபெறாது; எனவே நடக்க வேண் டிய முறைப்படிதான் நடந்திருக் கிறது.  என்றாலும், நம் மக்கள் ஊர் தோறும் பாராட்டுக் கூட்டம் போட்டு ஓட்டுப்போட்ட மக்களைப் பாராட்டு வதோடு, தி.மு.க., ஆட்சியைப் பாராட்ட வேண்டும்.

அத்தோடு இந்த ஆட்சியிடம் நாம் எதிர்பார்ப்பது, செய்யச் சொல்ல வேண்டியது, நம் மக்களுக்குரிய ஜாதி, மத விகிதாச்சாரப்படிப் பதவிகள்,  உத்தியோ கங்கள், உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தானாகும்; இவற்றை வலியுறுத்த வேண்டும்.

இந்த மந்திரி லஞ்சம் வாங்கினான்;  அந்த மந்திரி குடித்தான்;  அவன் பொம்பளையோடு போனான் என்பதெல்லாம் சாதாரணமானது. ஜனநாய கத்தில் லஞ்சம் என்பது சாதாரணம்; இதுவரை இலஞ்சம் வாங்காமல் இருந்தவன் எவன்? பணமாக வாங்க வில்லை என்றால் ஓட்டாவது லஞ்சம் வாங்கித்தானே இருப்பான்? எனக்கு ஓட்டுப் போட்டால் இன்னது கொடுக்கின்றேன், இன்னது செய்கிறேன் என்று உத்தரவாதம் கொடுத் துத் தான் ஓட்டுப் பெற்றிருப்பான்.  பதவிக்கு வந்ததும் ஓட்டுப் போட்டவன் தயவு வேண்டும் என்பதால், அவனுக்கு ஏதாவது வசதி செய்து கொடுத்திருப்பான். இது ஜனநாயகத்தில் சாதாரணமாக நடக்கக் கூடியதேயாகும். இதை ஒரு பெரிய குற்றமாகவோ, குறையாகவோ கருத வேண் டிய அவசியமில்லை. இந்த ஆட்சியால் நன்மை என்ன என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

இந்த அரசாங்கம் மக்களுடைய ஆதரவு இருக்கிறது என்று மேலே பார்க்காமல், எந்த மக்களுடைய ஆதரவு அதிகமிருக்கிறதோ, அந்த மக்களுடைய உரிமையைக் கொடுக்க முன்வர வேண்டும்; எந்த மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டு வெற்றி பெறச் செய்தார்களோ,  அவர்களு டைய பங்கு விகிதாச்சாரம் கொடுக்க முன்வர வேண்டும்; சிறுபான்மையான சைவனும், பார்ப்பானும், கிறிஸ் தவனும் தனது விகிதாச்சாரத்திற்கு மேல் அனுப விக்கவும், ஆதரவு கொடுக்கிற பெரும்பான்மையான மக்கள் தங்கள் விகிதாச்சாரத்திற்குப் பல மடங்கு குறைவாக அனுபவிக் கவுமான நிலையை மாற்ற வேண்டும். அவரவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்பப் பதவி, உத்தியோகங்கள், உரிமைகள் வழங்க முன் வரவேண்டும். இது தான் யோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்.

நம் நாட்டிலிருக்கிற போலீஸ் வேலை அத்தனையையும் சப்-இன்ஸ்பெக்டர் வரை, ஆதிதிராவிடர் களுக்கே கொடுக்க வேண்டும். மற்ற எவனையும் அதில் உள்ளே நுழைய விடக் கூடாது. அப்படிச் செய்தால் தீண்டாமை இழிவு தானே நீக்கப் படும். உயர் சாதிக்காரன் என்பவன் தானாகவே மரியாதை கொடுக்க ஆரம்பித்து விடுவான்.

அரசாங்கம் வெற்றி பெற்றதற்கு நீதி செலுத்த வேண்டுமானால் ஓட் டளித்த மக்களுக்கு நீதி காட்ட வேண்டும். காங்கிரஸ் ஏன் தொலைந் தது? ஏன் சாகிற மாதிரி இழுத்துக் கொண்டு கிடக்கிறது என்றால், அது பதவியில் இருக்கும்போது மிக ஆண வத்தோடு, பதவி- உத்தியோகங்களை எல்லாம் தனக்கு ஓட்டளித்த பெரும்பான்மையான மக்களுக்குக் கொடுக்காமல், சிறுபான்மையான பார்ப்பான், சைவன், கிறிஸ்தவன் என்று தேடிப்பார்த்துக் கொடுத்ததா லேயே ஆகும். அத்தோடு ஓட்டுப் போட்ட பெரும்பான்மையான மக் களை மதிக்காததாலேயே ஆகும்.

இந்த ஆட்சியும்  அதுபோல் நடந்து கொள்ள முன்வந்தால்,  அதன் கதிதான் இதற்கும் ஏற்படும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

மற்றொரு  மகிழ்ச்சிக்குரிய சேதி என்ன வென்றால், நம் இன்றைய ஆட்சியானது சென்னை அய்க் கோர்ட்டுக்கு இப்போது ஒரு தமிழரை சீஃப் ஜட்ஜாக- பிரதம  நீதிபதியாகப் போட்டிருக்கின்றது. இது பாராட்டக் கூடியதாகும். அவர் எப்போதோ வந்திருக்க வேண்டியவர்; முன்னி ருந்த ஆட்சியினால் இவர் வேண்டு மென்றே புறக்கணிக்கப் பட்டவர் ஆவார். தமிழ்நாட்டில் அய்க்கோர்ட் ஏற்பட்டு 107 வருடங்கள் ஆகின்றன. அதற்கு இப்போதுதான் ஒரு தமிழர் சீஃப் ஜஸ்டிஸ் ஆக வரமுடிந்தது! இதுவரை இருந்தவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள். இல்லாவிட்டால் மலையாளி,  கிறிஸ்தவர், முஸ்லிம் , கன்னடக்காரர்,  ஆந்திராக்காரர் என்று இருந்தார்களே ஒழிய, தமிழர் எவரும் சீஃப் ஜஸ்டிஸாக இருந்தது கிடையாது.  நம் நாட்டிற்கு ஒரு தமிழர்-  தமிழ் நாட்டினர் அய்க் கோர்ட் தலைமை நீதிபதியானது பாராட்டுக்கு உரியதாகும்.

நம் கோர்ட்டுகளின் நீதி நிலை மிகமிக மானக்கேடானதும், கொடு மையானதுமாகும். ஒரு கேஸ் முடிய 10 வருடங்களுக்கு மேல் ஆகிறது. என்னுடைய கேஸே 4, 5, ஏழுட்டு வருஷங்களாக முடிவு பெறாமல் நடந்து கொண்டிருக்கிறது என்றால், மற்றச் சாதாரண ஏழை, எளிய,  பாமர மக்களுடைய நிலை எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும். இந்த நாட்டில் நீதி கெட்டதற்கும், புரட்டு, பித்தாலட்டம் அதிகமானதற்கும் மக்களிடையே நாணயம், ஒழுக்கம் கெட்டதற்கும் காரணம் இந்தக் கோர்ட்டுகளே ஆகும்.

நம் கோர்ட்டுகள் குச்சுக்காரி வீடுகளை விட,  சூதாடும் இடங்களை விட மகாமோசமானவை ஆகும். இந்தக் கோர்ட்டு களில் யோக்கியனுக்கு நீதிக்கு இடமில்லை; அவை அயோக்கியர்களுக்கே வெறும் புகலிடமாகி விட்டன.

மற்றும் இந்த நாடு 4 கோடி மக்களைக் கொண்ட, தென்மேற்கில் சுமார் 500 மைல் நீளமுள்ள நாடாகும். இப்படிப்பட்ட இந்த நாட்டிற்கு ஒரே இடத்தில் ஒரே அய்க்கோர்ட் இருப்பது, மக்களுக்குப் பெரிய அசவு கரியமாகும்; குறைந்தது இரண்டு அய்க் கோர்ட்டுகளாவது வைக்கவேண்டும். அதாவது மற்றொரு அய்க்கோர்ட் மதுரையிலாவது, திருச்சியிலாவது, கோவையிலாவது வைக்க வேண் டும்; ஒரே ஒரு அய்க்கோர்ட் சென்னையில் மட்டும் இருப்பதால், கன்னியாகுமரியிலே இருக்கிறவன் நீதிபெற வேண்டுமானால், 450 மைல் கடந்து போக்குவரத்துக்கு 75 ரூபாய் செலவு, செய்து 2 நாள்,  4 நாள் மெனக்கெட்டுக் கொண்டு வரவேண் டியிருக்கிறது. இது ஒரு தடவை, இரண்டு தடவை அல்ல 5, 6 தடவையாகும். இது ஏழை, எளிய, பாமர மக்களால் எப்படி இவ்வளவு தூரம் செலவு செய்து கொண்டு வர முடியும்?

வக்கீல்கள் இடித் தொல்லை,  பீசு தொல்லை, குமாஸ்தாக்கள்- அபிட விட்கள் தொல்லை வேறு; பணக்காரனுக்குக் கவலையில்லை அவனால் எவ்வளவு தூரமானாலும், செலவானாலும் முடியும். ஏழைகளால் எப்படி முடியும்?

நமக்கு இன்னொரு கேடு என்னவென்றால், சுப்ரீம்கோர்ட் டில்லியில் இருப்பதாகும். 2000 மைல்களுக்கு அப்பால் சென்று நீதிபெற வேண்டு மானால், அது பணக்காரன் ஒருவனால் தான் முடியும். அதுவும் பெரிதும் அயோக்கியர்களுக்குத் தான் வசதி அளிப்பதாகும். ஏழைகளால் முடியாது. எனவே பணக் காரனுக்கும், அயோக்கியனுக்கும் அனுகூலமானதாகத் தான் இருக் கிறதே ஒழிய, ஏழை, எளிய, பாமர மக்களுக்கு நீதி கிடைக்க வழியில்லை. இதை உணர்ந்து இந்த அய்க்கோர்ட் தலைமை நீதிபதி ஏதாவது செய்வார் என்று நினைக்கின்றேன்.

இன்னொரு காரியம் என்ன செய்ய வேண்டும் என்றால், செய் வார்களோ- செய்யமாட்டார்களோ, ஆனால் செய்ய வேண்டியது அவ சியமாகும் என்பது எனது கருத்து. அதாவது ஒரு ஊருக்கு ஒரு கோர்ட் தான் இருக்க வேண்டும்.  ஒரு கோர்ட்டுக்கு மேல் ஒரு ஊரில் இருக்கக்கூடாது. எதற்காக ஒரே ஊரில் 2, 3 சப்-கோர்ட்டுகள், 2, 3 முனுசீஃப் கோர்ட்டுகள்,  அடிஷனல் கோர்ட்டுகள், சப்-கோர்ட்டுகள் என்று ஒரே ஊரில் பல கோர்ட்டுகள் இருக்க வேண்டும்? வெளியூரில் இருப்பவன் இதற்காகச் செலவு செய்து கொண்டும் மற்ற ஊருக்கு வரவேண்டும்? இவை அந்தந்த தாலூக்காக்களில் மத்திய இடங்களில் கோர்ட்டு இருந்தால், குறைந்த செலவில், எளிதான போக்குவரத்தில் நீதி கிடைக்கும். ஏழை, எளிய, பாமர மக்களுக்கும் வசதியாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட ஊரில் இருப்பதால் பணக்காரன் செலவு செய்து கொண்டு வந்து விடுகின்றான்; ஏழையால் அவ்வளவு செலவு செய்து கொண்டு வரமுடியாமல் போவதோடு, அவர் களுக்கு நீதியும் கிடைப்பதில்லை. மற்றும் ஒரு கேடு  என்னவென்றால் வெளி ஊர்களில் இருக்கும் வக்கீல் களுக்குப் பீசு கொடுப்பதோடு, அப்பீல் கோர்ட்டில் உள்ள வக்கீல் களுக்கும் பீசு கொடுக்க வேண்டியி ருக்கிறது. வெளியூர் வக்கீலுக்கு, கிடைக்க வேண்டிய பீசு, அப்பீல் கோர்ட்டு உள்ள ஊர் வக்கீல்கள் அடைகிறார்கள். இது மொபசல் வக் கீல்களுக்கு அநியாய நட்டமாகும்.

உடனுக்குடன் வழக்கு முடிவ டையாததற்கும் இது ஒரு காரண மாகும். வக்கீல்களின் சூழ்ச்சி தான் வெளி இடங்களில் கோர்ட்டுகள் ஏற்படாததற்குக் காரண மாகும்.

குறைந்தது மூன்று மாதத்திற்குள் கேசு பைசல் செய்யப்பட வேண்டு மென்று சட்டம் போட வேண்டும். அதற்கு ஏற்றப்படி விசாரணை முறை அமைக்கப்பட வேண்டும். அப்படி இல்லாததால் ஒருவன் கேஸ் போட்டால், அதை எடுக்க 2 மாதமாகிறது. பிறகு ஸ்டேட்மென்ட் இஷூ கொடுக்க 3 மாதம்; அதில் வாய்தா வேறு; இப்படி இழுத்துக் கொண்டே போவதால், இந்த முறைகள் சில வக்கீல்கள் பிழைப்பதற்கு உதவியாக இருக்கிறதே ஒழிய,  நீதி கிடைக்க வழி இல்லாமல் போகிறது. நீதி கிடைக்க நாளாவதால் மக்களுக்குக் கோர்ட்டுகளின் மீது பயமில்லாமல் போய்விடுகிறது. நீதி சீக்கிரம் கிடைத்தால்,  மனிதனுக்குப் பயம் இருக்கும். நாளாவ தால் எந்தக் காரி யத்தையும் துணிந்து செய்துவிட்டு, கோர்ட்டுக்கு போ, ``கோர்ட்டில் போடு பார்த்துக் கொள்ளலாம் என் கின்றான். நீதி கிடைக்க நாளாவதால் மக்களிடையே ஒழுக்கம், நாணயம், நேர்மை என்பது இல்லாமல் போய் விடுகிறது. எந்த ஒழுக்கக்கேடான, நாணயக் கேடான, நேர்மைக் கேடான காரியத்தையும் செய்ய மனிதன் பயப்படுவது கிடையாது. இதை யெல்லாம் இப்போது வந்திருக்கிற புதிய ஜட்ஜ்- பார்ப்பனரல்லாத தமிழ் ஜட்ஜ் கவனிப்பார் என்று கருதுகின்றேன்.

1-5-1969  அன்று சென்னை - திருவல்லிக்கேணியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு


No comments:

Post a Comment