வாழைப்பழம் - ஓர் அருமையான மலிவான சத்துணவு!
வாழைப்பழம் - எளிய மக்களின் உணவு மட்டுமல்ல; சரியான சத்துணவும்கூட.
சத்துணவு நிபுணர்கள் இதுபற்றி விரிவாக விளக்கி பல கட்டுரைகளை - ஆய்வுகளை அவ்வப்போது பல ஏடுகளில் எழுதி வருகின்றனர்.
நேற்றைய ஆங்கில ஹிந்து (30.10.2022) ஞாயிறு இதழில் திரு. டி. பாலசுப்பிரமணியன் என்பவர், எழுதிய - அறிவியலைப் பற்றிப் பேசும் பகுதி என்பதில் - படித்த ஒரு சிறு கட்டுரையில் சில தகவல்களும் உள்ளன. நமது வாசக நேயர்களின் வாழ்வியலைச் செம்மைப்படுத்த இங்கே தருகிறோம். (கட்டுரையாளருக்கும், இதழுக்கும் நம் நன்றி)
இந்திய உணவுகளின் சத்துக்களின் மதிப்புபற்றி ஓர் ஆங்கில நூல் - இந்திய ஆராய்ச்சி மருத்துவக் கழகம் வெளியிட்டுள்ளது 'Nutritional value of Indian Foods' என்பதே அந்நூல் (ICMR). அதில் கூறப்பட்டுள் அரிய தகவல்கள்.
வாழைப்பழத்தில்
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) 10 முதல் 20 னீரீ
சோடியம் (உப்புச் சத்து) 35 (mg) மில்லி கிராம்
பாஸ்பரஸ் - 30 முதல் 50 mg
இவை 100 கிராம் எடையுள்ள வாழைப் பழத்தில் உள்ள சத்துகள்.
ஏழைகளுக்கு மலிவு விலையில் கிடைக்கும் பழம் - சத்துணவு - பசி போக்க 2 வாழைப்பழங்கள் உண்டாலே போதும்.
(நீங்கள் சர்க்கரை நோய் உள்ளவர்களானால் மருத்துவர் ஆலோசனைக் கேட்டு அதன்படி நடந்து கொள்க).
மலச்சிக்கல் தான் உடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினை - இதனால் ஏற்படும் உடற்சிக்கல் செரிமானக் கோளாறு, போதிய பசியின்மை, வாயுத் தொல்லை முதலியவை ஒருபுறம் என்றாலும் - மலம் போகவில்லையே என்ற மனச்சிக்கல் அதை விடப் பெரிய பிரச்சினை - பலருக்கு, குறிப்பாக முதியவர்களுக்கு - அதற்கு வாழைப்பழம் ஓர் அருமையான நிவாரணி.
பொதுவாக நார்ச்சத்து உணவுகள், பழங்கள் இதற்குரிய விடை என்றாலும் வாழைப்பழம் குறிப்பாக பூவம்பழம் - சில ஊர்களில் பங்களா பழம் என்பார்கள். ஊர் சூழல் புழக்கத்தில் பெயர்கள் பல இருக்கலாம்.
பச்சைப் பழம் என்பது ஒரு வகை நீள பழம், சுவைக்கும், பசிக்கும் கூட நல்ல உணவாக அமைந்து விடுகிறது!
அதன் தோலைக்கூட இப்போது தூக்கி எறியாமல் நல்ல உரப் பொருளாக ஆக்கிக் கொள்கின்றனர்!
வாழைப்பழங்களிலே உள்ள ரகங்கள் எண்ணற்றவை. பற்பல, சுவையும் வித்தியாசமான தனித்தன்மையானவை.
பேயன் பழத்தில் உள்ள சுவை, ரஸ்தாளியில் இருப்பதில்லை. மலைப்பழம் குறிப்பாக - திண்டுக்கல் சிறுமலைப்பழத்தின் சுவையோ தனித்த சுவை! இப்போது அதில் நிறைய க்ராஸ் பிரீட் (Cross Breed) வந்துவிட்டது!
கேரளத்தில் நேந்திரங்காய் வற்றல் ஒரு பெரிய வியாபாரப் பொருள் அல்லவா? விதம்விதமாக அதனைச் செய்து - 'சிப்ஸ்' வணிகம் பெரு வணிகமாக உள்ளதே!
'இந்திய உணவு; ஒரு வரலாற்று பூர்வ நண்பன்' என்ற தலைப்பில் ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் ஒரு நூலை (1994) டாக்டர் கே.டி. ஆச்சாரியா என்பவர் எழுதியதை வெளியிட்டுள்ளது.
அதில் நியூகினியா தீவிலிருந்து கடல் மார்க்கமாகத்தான் தென்னிந்தியாவிற்கு வாழைப்பழம் முதன் முதலில் வந்து சேர்ந்தது என்ற தகவல் உள்ளது. அதோடு, அந்தத் தீவினர்தான் இந்தப் பழங்களை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடும் பழமாக பழக்கியவர்கள் என்ற தகவலும் உள்ளது.
பவுத்த நூல்களில் பொ.ஆ.400 (BC 400) வாழைப்பழம் பற்றிய குறிப்பு உள்ளது.
இந்திய தீபகற்பத்தில் தெற்குக் கடற்கரை பகுதியில் உள்ள குஜராத், மகாராட்டிரா, கருநாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, வங்காளம், வடகிழக்கு அசாம், அருணாச்சல பிரதேசம் போன்றவற்றில் பயிரிடப்படும் விளை பொருள் - வியாபாரப் பொருளும்கூட!
உலகில் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 29 மில்லியன் டன் வாழைப்பழங்களை உற்பத்தி செய்கிறது!
அடுத்தது சீன நாடு - 11 மில்லியன் டன் - உலகில் 135 நாடுகளில் இது விளை பொருள் என்று கூறுகிறது. (F.A.O) உணவு, வேளாண் பொருள் அமைப்பு.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வாழைப் பழத்தைச் சாப்பிடத் துவங்கும் நீங்கள் தோலைக் குப்பைக் கூடையில் மட்டுமே போடுங்கள்; குறிப்பாக - நடு ரோட்டில், எறிந்து விபத்தை ஏற்படுத்திய குற்றவாளியாகாதீர்கள் - என்ன சரிதானே?
No comments:
Post a Comment