பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் நூல் திறனாய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பில் நூல் திறனாய்வு

சிறந்த நூல்களை வாரம் தோறும் தேர்ந்து திறனாய்ந்து வரும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் பத்தாம் நிகழ்வு "கனவுலகு" என்னும் நூலாய்வாக 

2.9.2022 அன்று மாலை 6.30 மணியிலிருந்து 8 மணி வரை நடைபெற்றது.  

"கனவுலகு"- கதையன்று! ஒரு கருஞ்சட்டை 

வீரரின் வெற்றி வரலாறு!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலை வர் ம.கவிதா அனைவரையும் வரவேற்றார். பகுத்தறி வாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத் தறிவு ஊடகப் பிரிவின் தலைவர் மா. அழகிரிசாமி, பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி. மோகன், ப.க. துணைத் தலைவர் வேண்மாள் நன்னன், அவ்வை நன்னன், பாவலர் சீனி. பழனி, கவிக்கோ துரை. வசந்த ராசன், வேலூர் மண்டலத் தலைவர் சடகோபன்,  பழனியைச் சேர்ந்த தோழர் மாரிமுத்து, நொச்சியம் பாலு, கவித்திலகம் வெற்றிப்பேரொளி, புதுமை இலக் கியத் தென்றல் அமைப்பின் தலைவர் செல்வ.மீனாட்சி சுந்தரம், நாகர்கோவில் தோழர் மணிமேகலை, திரு வாரூர் சுந்தர், அறிவு வழி தாமோதரன், தங்கத்துரை அய்யாவின் பேத்திகள்  பூவிழி, பானுரேகா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் இணைந்து சிறப்பித்தனர்.

வாசிப்பினுடைய அருமைகளை...

இந்நிகழ்விற்குப் பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் தலைமை ஏற்றார். ‌ "கண்டதையும் கற்றவன் பண்டிதனாக மாட்டான், பைத்தியமாகத் தான் மாறுவான்; எது கற்கத்தக்கது எனக் கண்டு, அதைக் கற்றவனே பண்டிதன் ஆகி றான்!" என்றும் "பத்துப் பறவைகளோடு பழகினாலும் நீங்கள் பறவையாகி விட முடியாது... பத்து நதிகளோடு பழகினாலும் நதியாகி விட முடியாது...  ஆனால் பத்துப் புத்தகங்களோடு பழகிப் பாருங்கள் 11ஆவது புத்தகமாக மற்றவர்களால் நீங்கள் படிக்கப்படுவீர்கள்" என்றும் புத்தக வாசிப்பினுடைய அருமைகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார். 

பகுத்தறிவைப் பயிற்றுவிக்கும் பணி

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா.நேரு அவர்கள் தம் தொடக்க உரையில், 

நான் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவராக இருக்கும் பொழுது, தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இந்நூலாசிரியர் அய்யா சீ. தங்க துரை இருந்தார், அவரை 25 ஆண்டு காலமாக நான் அறிவேன். எப்போதும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்.   ஒரு பெரிய கிராமத்தையே மாற்றியது மட்டுமல்லாமல் ஜாதி மறுப்பு -மதமறுப்புத் திருமணங் களை நடத்துவதற்கு ஓர் ஆலமரமாக அந்தப் பகுதியில் இருக்கிறார். அவரும் அவருடைய தம்பி டேவிட் செல்லதுரையும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மாதக் கூட்டத்தை சனிக்கிழமைகளில் ஒரு விழா போல் நடத்தி பகுத்தறிவைப் பயிற்றுவிக்கும் பணி யைச் செய்து வருகின்றனர். தமிழர் தலைவர் அவர்கள் இரண்டு வாழ்வியல் கட்டுரைகளில் இந்நூலைப் பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும்  எழுதி இருக்கிறார் என்பது இந்நூலுக்கு மிகப்பெரிய சிறப்பாகும். பல பேருக்கு இது வழிகாட்டக் கூடிய நூல்.  நிறைய தன் வரலாற்று நூல்கள் எழுத வேண்டும். அய்யா இறை யனார் அவர்களும் அம்மா திருமகள் அவர்களும் எவ்வளவு பெரிய வாழ்க்கைப் போராட்டங்களைச் சந்தித்தார்கள் என்று நாம் அறிந்து கொள்ள உதவியது அம்மா திருமகள் எழுத்துகளால் தான். "ஜாதி கெடுத்த வள்" என்ற அந்தச் சிறு புத்தகத்தின் மூலமாகத்தான். ஆகவே இயக்கத் தோழர்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை பதிந்து வைப்பது மிகத் தேவையான ஒன்றாகும் என்றார்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவரும் பகுத்தறிவுப் பாவலருமான சுப. முருகானந்தம் நூலைத் திறனாய்வு செய்தார். தந்தை பெரியாரின் தொண்டர், ஆசிரியர்  மீது அபிமானம் உள்ள ஒருவர் ஒரு ஊரையே வழி நடத்தும் படியாக தன்னை ஆளாக்கிக் கொண்டு தன் வாழ்க்கை வரலாற்றை  அடுத்தவர் களுக்கும் எடுத்துக்காட்டும் படி பதிவு செய்தது தான் இந்நூல் என்றார்.

கனவுலகு பெயர்க் காரணம் என்ன...?

"எழுபது- எண்பது ஆண்டுகள் நாம் வாழ்ந்த பிறகு ,எப்படி வாழ்ந்தோம் என்பதை சிலமணித்துளிகள் கனவாக நினைத்து அதை எழுத்துகளில் பதிய வைப்ப தால் கனவுலகு எனலாம். அல்லது தந்தை பெரியார் கண்ட கனவு என் வாழ்க்கையில் நடந்து, அதனால் பெற்ற மகிழ்ச்சியும், அதனால் பெற்ற பயன்பாட்டையும் நான் அறிந்திருக்கிறேன்- புரிந்திருக்கிறேன்-  அதற் கான வாக்கு மூலமாகத்தான் இப்புத்தகத்தைத் தருகி றேன் என்பதாலும் ‘கனவுலகு' எனலாம்"  என நூலாசிரியர் தம் அணிந்துரையில் எழுதியதை குறிப் பிட்டுக் காட்டுகிறார்.

எங்கள் வாழ்வின் சொர்க்க புரி!

வறுமைக்கு எல்லையே இல்லாத வசதி வாய்ப்பே துளியும் இல்லாத நாகரிகம் அறியாத ஒரு கிராமத்தில் தான் பிறந்ததைப் பற்றி இலக்கியச்சுவையோடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

"குற்றாலச் சாரலின் குக்கிராமம், கதிரவன் கரை யேறும் நேரத்தில் தன் தாய் செல்லத்தாயம்மாளுக்கு ஏழாவது மகனாகப் பிறந்தேன். அந்தக் காட்டூர் பகுதியில், பொருளாதாரத்தை சுரண்ட வந்த ஆங்கி லேயர்கள் மதத்தையும் புகுத்த வந்தார்கள். ஒரு கோயிலைக் கட்டினார்கள். ஒரு பள்ளிக்கூடத்தைக் கட்டி னார்கள். மேலமெய்ஞானபுரம் என்று ஊர்ப்பெயரை மாற்றினார்கள். மேல் சட்டை கூட இல்லாத வறுமை யான சூழல்... தொழிலாகப் பார்க்காமல் தொண்டாக பார்க்கும் ஆசிரியர்கள் இருந்தார்கள்... அந்தப் பள்ளியில் படிக்கும் காலம்தான் நானும் என் தம்பியும் சொர்க்கபுரியை பார்த்த காலம்! பிறகு - பத்திரகாளி என்ற பாட்டியின் பெயரை சமாதானம் என்றும், குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயர்களையும் மாற்றி வைத்தோம்.

மதங்களை போதித்தவர்கள் கொடுத்த இலவசமான கல்வியைப் பள்ளியில் கற்கும் பொழுதே கடவுள் இருக்குமா? மதம் உண்மையா? இல்லையா? என்ற கேள்விகள்  எழுந்து பகுத்தறிவின் மீது எனக்கு தீராத நாட்டம் ஏற்பட்டுவிட்டது  கள்ளன் போலீஸ், சில்லாங்குச்சி, சடுகுடு போன்ற விளையாட்டுகளிலும் தனியாக ஆர்வம் இருந்தது. கிறிஸ்மஸ் விழாவின்போது கண்கள் திறந்தன என்ற நாடகத்தில் நடித்தேன்.

பள்ளியில் முதன் முதலில் 14 வயதில் "சிங்கப்பூர் சீமான்" என்ற நாடகத்தை நானே எழுதி நடித்தேன். படிப்பு முடிந்து இங்கே வேலை அங்கே வேலை என்று அலைந்து இறுதியாக கீழ்ப்பாவூரிலே தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தினக் கூலியாக ஒரு பணி திமுக ஆட்சிக்கு வந்த 1968 இல்  கிடைத்தது. அன்றைய ஊதியம் 3.25 ரூபாய்.

பின் உதவி வரைவாளராகப் பணி உயர்வு பெற்ற பின் வறுமை சற்று விலகத் தொடங்கியது. தென்காசி யில் இருந்த நூலகம் எனக்குப் பெரிதும் உதவியது. பதவி உயர்வு பெற்று  உதவி ஆய்வாளராக பெரியாறு கீழ் முகாமில் பணியேற்றேன்.  பெரியாறு கீழ்முகாமிற்கு திமுக காரனாக நான் சென்றேன்,  அங்கு பகுத்தறிவுக் கூட்டங்கள் நடத்துவார்கள். அங்கிருந்து வரும்போது நான் திராவிடர் கழகத்துக்காரனாகவே திரும்பி வந்தேன்.

 தூத்துக்குடியில் பணியாற்றிய போது பெரியார் பெருந்தொண்டர் சிவனணைந்தபெருமாள், காளி முத்து அய்யா ஆகியோரோடு இணைந்து கழகப் பணி செய்தேன்"  என்ற நூலாசிரியரின் பேச்சை வரி வரி யாக எடுத்துக்காட்டி அவர் பிறந்தது, படித்தது, வளர்ந்தது, வறுமையில் உழன்றது என அனைத்தையும் நமக்கு தொட்டுக் காட்டி தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத் தோழர்களோடு அணுக்க மான தொடர்பு கொண்டு இயக்கத்தை வளர்த்து 1987இல் உதகையில் மிகப்பெரிய திராவிடர் கழக மாநாட்டை நடத்திக் காட்டும் படி தன் நிலையை உயர்த்திக் கொண்டவர் தான் இந்த நூலாசிரியர் என்று அறிமுகம் செய்தார் திறனாய்வாளர்.

கடவுள் நம்பிக்கையும் முரண்பாடுகளும்!

உலகமெல்லாம் மதங்கள் இருக்கின்றன. ஆயிரக் கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களையும் கடவுள் தான் படைத்தார் என்று கூறுவார்கள். இது அடிப்படையில் முரணாக உள்ளது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு வகை மனநோய். நீண்ட ஆயுளுக்கு தடையாக இருப் பது. மனம் என்பது தனிப்பட்ட உடல் உறுப்பு கிடை யாது. அது மூளையின் செயல்பாடுகளின் தொகுப்பு.

எப்பொழுதும் குடும்பத்தில் சண்டைச் சச்சரவுகள் இருந்தாலும், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் குடும்பங்களாலும், தீய செயல்களாலும், தவறான பழக்கங்களாலும் மன நோய் வர அதிகம் வாய்ப்புண்டு. மனச்சிதைவு மனக் கிளர்ச்சி, மனப்பதற்றம் இம்மாதிரி யானவர்கள் நிச்சயமாக கடவுள் நம்பிக்கையாளர் களாகத்தான் இருப்பார்கள். ஏனெனில் கடவுளை நம்பிவிட இதனினும் வேறு தகுதி தேவையில்லை என ஈரோட்டுக் கண்ணாடி போட்டு மிகச் சிறப்பாக பகுத்தறிவை ஆய்ந்து எழுதுகிறார்.

பூமியின் தோற்றத்திற்கு பல கோடி ஆண்டுகளுக்கு பின்னே மனிதத் தோற்றம் ஏற்பட்டதையும் அதற்கான அறிவியல் காரணங்களையும் குறிப்பிட்டு, மதம் இத்தகைய அறிவியலை 150 ஆண்டுகளாக ஏற்காமல் இருந்தச் செய்திகளையும் தன் வரலாற்றுக்கு இடையில் இணைத்து எழுதுகிறார் நூலாசிரியர் என்றார்.

ஆண்கள் சமைக்க பெண்கள் நீராடி வந்தனர்...

ஒரு கிராமத்தையே பெரியார் கிராமமாக மாற்றி வைத்திருக்கிற தங்கதுரை அய்யா, பல குடும்பங்களை இணைத்து குற்றாலத்திற்குச் சுற்றுலா செல்கையில், ஆண்கள் எல்லாம் சமைக்கவும் பெண்கள் எல்லாம் நீராடி மகிழ்ந்துவிட்டு வந்து உணவு உண்ணவுமான ஏற்பாடுகளை புதுமையாக செய்கிறார்கள்.

அப்போது, பெரியார் என்றால் என்ன? பகுத்தறிவு என்றால் என்ன? இந்த நாடு எப்படி போய்க்கொண்டிருக் கிறது? என்று அவர்களிடம் பேசும் பொழுது அவர் களுக்கும் அது ஒரு மகிழ்ச்சியை தருகிறது. 

நாம் எங்கும் கோயிலுக்குச் செல்லத் தேவையில்லை - நாமே ஒரு திட்டத்தை ஏற்படுத்துவோம் என்று ஒரு பத்து குடும்பங்கள் இணைந்து அங்கேயே ஒரு திட்டத்தை தயாரிக்கிறார்கள்.

பகுத்தறிவாளர் கழகம் தொடக்கம்!

1988 இல் மேல் மெஞ்ஞானபுரத்தில் சொந்தமாக வீடு கட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைக் கொண்டு திறக்கவைத்தார். சர்ச்சிற்கு எதிர்ப்புறம் இவர் வீடு. சர்ச் சுவரில் கிறிஸ்தவ பரப்புரைப் செய்திகளும், இவரது வீட்டின் நீண்ட சுற்றுச்சுவரில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோருடைய கொள்கை முழக்கங்களும் சிறப்பாக எழுதப்பட்டு உள்ளன

1989 இல் பகுத்தறிவாளர் கழகத்தைத் தொடங்கி, தன் வீட்டிலேயே வாராவாரம் கூட்டம் போட்டு பகுத்தறிவைப் பேசுகிறார்கள்.

ஏற்கெனவே அந்த இடத்தில் மதம் வேரூன்றி விட்ட நிலையில் இவர்களுடைய இந்த முயற்சிக்கு கடும் எதிர்ப்பு தொடங்கியது.

எவ்வளவு சிரமம் கொடுக்க முடியுமோ அவ்வளவு சிரமம் கொடுத்தாலும் பகுத்தறிவுக் குடும்பங்கள் அதை அமைதியான முறையிலும் அறிவார்ந்த முறை யிலும் எதிர்கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

அடிக்கடி காவல் நிலையம் செல்லும்படி இருந்தது, ஜாடையாக பேசி எங்களை சண்டைக்கு  இழுப்பார்கள், கடைகளில் பொருள்கள் வாங்கக் கூடாது என்று தொந்தரவு கொடுத்தார்கள். அனைத்தையும் தாங்கிக் கொண்டு மக்கள் உறுதியோடு இருந்தார்கள் என்று தன் நூலிலே தங்கதுரை பதிவு செய்கிறார் என்பதைப் பார்க்கும் போது எத்தைகைய ஒரு எதிர்ப்புக்கஞ்சா தலைமைத்துவம்  அவர் பெற்றிருக்கிறார் என்பதையும் நாம் அறியலாம் என்கிறார்.

அனுமதிக்க மாட்டேன் என்ற மேலதிகாரி, விரும்பி அழைத்தார்!

எப்போதும் சிந்திக்கத் தலைமை - செயல்படத் தொண்டர்கள் என்பதில் இந்நூலாசிரியர் மிகச் சரியாக இருப்பார். பதவி உயர்வு பெற்று எண்ணூரில் பணி யாற்றுகிற சமயம் பெரியார் திடலுக்குச் சென்றாலும் ஆசிரியரை அவர் சந்திப்பதில்லை. அதைக் கேள்விப் பட்டு ஆசிரியரே அழைத்துப் பேசுகையில், "பெரிய அறிவியல் சார்ந்த இடமாக, தான் பணியாற்றும் இடம் இருந்தாலும் பெரியாரின் படம் அங்கு இல்லை" என்று சொல்லும் பொழுது "சரி நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள், நானே வந்து திறக்கிறேன்" என ஆசிரியர் சொல்கிறார். 

ஏற்பாடுகள் செய்யும்பொழுது "நானெல்லாம் கவுண்டர் ஜாதி, எனக்குச் சாமி உண்டு. பெரியார்  பிடிக்காது... நீங்கள் இங்கு அவர் படத்தை வைக்கக் கூடாது என்று மேலதிகாரி தடுக்கிறார். இங்கு யார் யார் படத்தை வைக்கலாம் என்று அரசு விதியில் சொல்லப் பட்டிருக்கிறது. அதில் பெரியார் படத்தையும் வைக் கலாம் என்று இருக்கிறது எனத் துணிச்சலாக  சொல்லி விட்டு அப்போது மின்சாரத் துறை அமைச்சராக இருந்த அதிமுகவைச் சார்ந்த நயினார் நாகேந்திரன் அவர்களையும் தமிழர் தலைவர் ஆசிரியரையும் பெரியார் படத்தை திறந்து வைக்க அழைத்தும் விட்டார். 

நிகழ்விற்கு முன்தினம் வரை அனுமதி வராத நிலையில்,  நீங்கள் ஏன் படத்தைத் திறந்து வைக்க ஆசிரியர் வீரமணியை அழைக்கிறீர்கள், யாராவது தொழிற்சங்கத்தில் இருப்பவர்களை அழைக்க வேண்டியது தானே என்று மீண்டும் முட்டுக்கட்டை போட்டார்கள். நாங்கள் வைக்கும் படத்தை திறப்பது யார் என்பதையும் நாங்களே முடிவு செய்து கொள்கி றோம் என்று அப்போதும் துணிச்சலாக காரியமாற்றி, பின்பு ஆசிரியரின்  ஒரு மணி நேரப்  பேச்சை கேட்ட பின்பு, யாரை வைத்து திறக்கக் கூடாது என்று சொன்னாரோ அந்த மேலதிகாரியே ஆசிரியரை விரும்பி அவருடைய அறைக்கு அழைத்து சிற்றுண்டி கொடுத்து மகிழ்ந்து உரையாடி வழி அனுப்பி வைத்து உள்ளார் என்பது தங்கதுரை அய்யாவின் மிகப்பெரிய சிறப்புக்கு எடுத்துக்காட்டு என்றார்.

அரசுப் பணி ஒரு தடையல்ல!

அரசுப் பணியை முடித்துவிட்டுத் தான் இங்கு வர வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை.

நம் மனசு தான் காரணம் - நாம் மனசார இந்த கொள்கைகளை நேசிப்பவர்களாக இருந்தால் எந்த நிலையிலும் செயல்படுத்தலாம்.அப்படி செயல்படுத்து வதற்கு அரசு விதிகளில் எந்த தடையும் இல்லை. அப்படி செயல்படுத்தியவர்கள் எல்லாம் இன்னும் புகழோடும் பெருமையோடும் தான் இருக்கிறார்கள் என்பதை தங்கதுரை அய்யாவின் வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது என்றார்.

தமிழர் தலைவரிடம் 100 மார்க் பெறும் திருமணங்கள்!

50, 100 குடும்பங்கள் இருக்கின்ற அந்த ஊருக்குப் பெண் கேட்கப் போனால், "நீங்கள் என்ன ஜாதி?" என்று கேட்கிறார்கள். ஜாதி என்ன என்று கேட்காமல் வருவோம் என்று நாங்கள் சென்றால், நம்மிடம் அவர்கள் வெட்ட வெளிச்சமாகக் கேட்கிறார்கள். அப்பா ஜாதியும் அம்மா ஜாதியும் இல்லாத வேறு ஜாதியாக இருந்தால் தான் நாங்கள் திருமணம் செய்து கொடுப்போம் என்று அவர்கள் வெளிப்படையாக சொல்லும் பொழுது அதைக் கேட்டு நாங்கள் வியந்து போனோம். தமிழர் தலைவர் இத்தகைய ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பார்.  மெய்ஞானபுரத்தில் நடைபெற்று வரும் திருமணங் களின் சிறப்புகளுக்கெல்லாம் மிகப்பெரிய  ஆணி வேராக அய்யா தங்கதுரை அவர்கள் இருக்கிறார்கள் என்று புகழாரம் சூட்டினார்.

இது ஒரு வழிகாட்டி நூல்! 

பெரியார், ஆசிரியர், சுயமரியாதை, விடுதலை என்ற பெயர்களோடு நான்கு மகளிர் குழுக்களை தன்னுடைய சொந்த ஊரில் தொடங்கி, அவர்களுக்குப் பல உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள்.

கொள்கை... பிரச்சாரம்... என்பதோடு நின்று விடாமல் பொருளாதார ரீதியாகவும் அவர்களை கை தூக்கி விட நிறைய ஆலோசனைகளையும் உதவி களையும் தொடர்ந்து செய்து, ஒரு இயக்கத்தை எப்படி வளர்ப்பது என்பதற்கு நம் தோழர்களுக்கு மிகச்சிறந்த ஒரு வழிகாட்டுதலை இந்த நூல் மூலம் அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்நூலை வாசிப்பவர்கள் தத்தம் பகுதிகளில் இவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று தம் திறனாய்வை முடித்தார். 

அப்பட்டமான உண்மைகளை மட்டுமே எழுதினோம்!

இறுதியாக நூலாசிரியர் சீ.தங்கதுரை ஏற்புரை ஆற்றினார்.

"இந்தப் புத்தகத்தை மிகத் தெளிவாக, அப்படியே முழுவதுமாக, வெளிக்கொண்டு வந்து ஒரு திற னாய்வை இன்றைக்கு சுப முருகானந்தம் செய்திருக் கிறார். சொல்ல வேண்டிய நிறைய நிகழ்வுகள் இன்னும் இருக்கின்றது என்றாலும்,  சிறிய புத்தகமாகப் போட வேண்டும் என்பதால் குறைத்தே பதிவு செய்தோம். இந்தச் செய்திகள் அத்தனையும் அணிந்துரையில் என் தம்பி டேவிட் செல்லதுரை சொன்னது போல  அப்பட்டமான உண்மைகள் மட்டுமே. ஆசிரியருக்கும் கவிஞருக்கும் இந்த நூலை நான் அனுப்பினேன். உடனடியாக கொஞ்சமும் எதிர்பார்க்காத சூழலில் இரண்டு நாள்கள் தொடர்ந்து வாழ்வியல் கட்டுரை களாக எழுதி அது விடுதலையில் வெளிவந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.  நான் இந்தப்பகுதியில் அனைவருக்கும் இந்த புத்தகத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டுதான் வருகிறேன். சிறப்பான இந்த ஏற்பாட்டுக்கு இந்த நேரத்திலே நன்றி கூறுகின்றேன்" என்றார்.

இறுதியாக "இது கனவுலகு அல்ல, கருத்துலகு! நாம் இந்தக் கனவுலகை விட்டு வெளியில் வராமல் தந்தை பெரியார் கண்ட இந்த கருத்துலகைப் படைப்போம்!" எனப் பகுத்தறிவு கலைத்துறை பிரிவுச் செயலாளர் மாரி‌ கருணாநிதி நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு வருக்கும் சிறப்பானதொரு நன்றியைத் தெரிவித்தார்.

தொகுப்பு: ம.கவிதா


No comments:

Post a Comment