பெங்களூரு,அக்.1- காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கருநாடகாவில் ஒற்றுமைக்கான நடைபயணத்தை நேற்று (30.9.2022) தொடங்கினார்.
காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் கடந்த 7ஆம் தேதி ஒற்றுமை நடைபயணத்தை தொடங்கினார். தமிழ்நாடு, கேரளாவை தொடர்ந்து கருநாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் நேற்று (30.9.2022) அவர் நடைபயணம் மேற்கொண்டார்.
அவரை கருநாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், மேனாள் முதலமைச்சர் சித்தராமையா, மேனாள் துணை முதலமைச்சர் பரமேஷ்வர் உள்ளிட் டோர் வரவேற்றனர். ராகுல் காந்தியை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான காங்கிரஸாரும் பொதுமக்களும் நடந்து சென்றனர். மைசூரு, மண்டியா, துமகூரு, சித்ரதுர்கா, பெல்லாரி, ரெய்ச்சூர் வழியாக தெலங்கா னாவுக்கு ராகுல் காந்தி செல்கிறார். கருநாடகாவில் 21 நாட்களில் 17 மாவட்டங்களில் 511 கிமீ தொலைவை கடக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த யாத்திரையின்போது மடாதிபதிகள், விவசாயிகள், மகளிர் அமைப்பினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன அமைப்பினர் ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனிடையே தசரா விழாவை யொட்டி 2 நாட்கள் பாதயாத்திரைக்கு விடுமுறை அளித்து, அவர் ஓய்வு எடுக்க இருக்கிறார். வரும் 19ஆம் தேதி பெல்லாரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். அதில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment