ஆண்டுதோறும் விஜயதசமி நாளன்று இராவணனைக் கொளுத்தும் ராம்லீலா நிகழ்ச்சி டில்லியில் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டும் நடைபெற்றுள்ளது. மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்நாள் குடியரசு துணைத் தலைவர் உள்பட உயர் மட்ட அதிகாரிகள் பங்கேற்று இந்த எரிப்பு நிகழ்ச்சி - இராவண வதமாக நடந்தேறி இருக்கிறது.
இதனைக் கண்டித்துதான், எதிர்த்துதான் அன்னை மணியம்மையார் அவர்கள் தந்தை பெரியாரின் முதலாம் ஆண்டு நினைவையொட்டி 1974 டிசம்பர் 25ஆம் தேதி இராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை பல்லாயிரக் கணக்கான மக்களின் எழுச்சி முழக்கத்துடன் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
அன்னை மணியம்மையார், ஆசிரியர் வீரமணி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
"இராவண லீலா' நடத்தியதில் எந்தவிதத் தவறும் கிடையாது. 'ராமலீலா' நடத்த உரிமை உண்டு என்றால் 'இராவண லீலா' நடத்திடவும் உரிமை உண்டு" என்று மாவட்ட செஷன்ஸ் நீதிபதி தீர்ப்புரை வழங்கினார்.
மனம் புண்படுகிறது என்று ஓலமிட்டுப் பார்த்தார்கள். மனம் என்ன பார்ப்பனர்களுக்கும், பக்தர்களுக்கும் மட்டும்தான் உள்ளதா?
இன்னும் சொல்லப்போனால் இராவணனைக் குல தெய்வமாக வணங்குகிறவர்கள் வட நாட்டில் இருக்கிறார்களே.
இராவணனுக்குக் கோயில்கூட உ.பி.யில் இருக்கிறதே - இராவணன் உருவத்தை எரித்தால் அவர்களின் மனம் புண்படாதா? புண்படுவது என்பது என்ன ஒரு வழிப் பாதையா?
தந்தை பெரியார் உ.பி.க்குச் சென்று கான்பூரில் இராமா யணத்தைப்பற்றி எல்லாம் தோலுரித்தார். எதிர்ப்புக் கிளம்பியது என்றாலும், தந்தை பெரியார் அடைமழை போல் பேசிய பேச்சு அவர்களை அடங்கச் செய்தது.
தந்தை பெரியார் எழுதிய அரிய ஆராய்ச்சி நூலான 'இராமாயண பாத்திரங்கள்' என்ற நூலை ஹிந்தியில் 'சச்சி இராமாயண்' என்ற பெயரில் வெளியிட்டார்கள். உ.பி. அரசாங்கம் தடை செய்தது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோது, தடை செல்லும் என்று தீர்ப்பும் வழங்கப்பட்டது.
அதற்கு மேலும் உச்சநீதிமன்றத்திற்கு வழக்குச் சென்றபோது, நீதிபதி கிருஷ்ண அய்யர் அவர்கள் தடை செல்லாது என்று தீர்ப்பு வழங்கிய வரலாறு எல்லாம் உண்டு.
இராமாயணம் என்பது ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று ஜவகர்லால் நேரு முதல் பி.டி. சீனிவாசய்யங்கார், விவேகானந்தர் உள்பட எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
அந்த வகையில் பார்க்கப் போனால், ஆரியர்கள் திராவிடர்களை வீழ்த்திய கதைதான் இராமாயணம். இந்த நிலையில் ஒரு 'சுதந்திர' நாட்டில் குறிப்பிட்ட திராவிட இன மக்களை அவமதிக்கும் வகையில் வடநாட்டு ஆரியர்கள் விழா நடத்துவது ஏற்புடையதுதானா?
வரலாறு தெரிந்தவர்கள் இதனைக் கண்டிக்க முன் வர வேண்டாமா?
தொடர்ந்து ராம்லீலா நடத்தி இராவணன் உருவப் பொம்மையைக் கொளுத்தும் விபரீதப் போக்குத் தொடருமேயானால், மீண்டும் 'இராவண லீலா' நடத்துவது தவிர்க்கப்பட முடியாததாகி விடும் என்று எச்சரிக்கின்றோம்.
அப்படி நடத்திட திராவிட இனத்திற்கு உரிமையுண்டு; இன்னும் சொல்லப் போனால் நீதிமன்ற அனுமதியும் உண்டு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் ஒரு கால கட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில், 450 ஆண்டு வரலாறு படைத்த இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை இடித்த கூட்டம் - இடிக்கப்பட்ட இடத்தில் ராமன்கோயிலை அவசர அவசரமாகக் கட்டி வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இராமன் கோயிலைக் கட்டினால், - ராம பைத்தியங்கள் நிறைந்த - வடவர்களின் வாக்குகளை வாரி வாரி கொட்டிக் கொள்ளலாம் என்பதுதானே இதன் பின்னணி.
இது போன்ற வெட்கக்கேடான நிலை உலகில் வேறு எங்காவது கேள்விப்பட்டதுண்டா?
மக்களின் நலம் சார்ந்த, வளர்ச்சி அடிப்படையிலான திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பதுதான் மக்கள் நல அரசுக்கான முன்னோட்டமாகும்.
அதில் பெரும்பாலும் வீழ்ச்சியுற்ற ஒன்றிய பி.ஜே.பி. அரசு இராமனைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படுவது வெட்கக்கேடாகும்.
திராவிட இயக்கம் இவற்றை எல்லாம் எடுத்துக் கூறித்தான் தமிழ் மண்ணைப் பக்குவப்படுத்தி வேரூன்றி நிற்கிறது.
இத்தகைய இயக்கம் ஒன்று வடமாநிலங்களுக்கு அவசியம் தேவை! தேவை!!
No comments:
Post a Comment