நூல் அரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

நூல் அரங்கம்

நூல்: ஆலயப் பிரவேச உரிமை 

ஆசிரியர்: பி. சிதம்பரம் பிள்ளை 

வெளியீடு:

திராவிடர் கழக வெளியீடு 

 பக்கங்கள் 136  - நன்கொடை ரூ 90/-

திருவிதாங்கூரைச் சேர்ந்தவர் வழக் கறிஞர் பி. சிதம்பரம் பிள்ளை (1887 - 1951).

ஆலயப் பிரவேச உரிமை பற்றிய ஆங்கில நூலை ( Right of Temple Entry)  எழுதி அதற்கு முன்னுரை எழுதித்  தர பெரியாரை  வேண்டினார்!

 "கடல் போன்ற பெரிய விஷயங்களை அணு போன்ற சிறிய அதிகாரங்களில் சுருங்கச் சொல்லி விளங்க வைத்திருக்கும் ஆசிரியரது திறமை அளவிடற்கரியதாகும்." இந் நூலுக்கு இந்நூலே சமமாகும். ஆதலால் இதில் கிடைக்கும் மதிக்க முடியாத பொக்கிஷத்தை அவரவரே வாங்கிப் படித்தாலொழிய அதை முழுவதும் எடுத்துக் கூறிவிடுதல் முடியாத காரியமேயாகும்" என மிகச் சிறப்பான தொரு முன்னுரையை எழுதியுள்ளார். அப்படிப்பட்ட ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்த நூல்!

நூலாசிரியர் பி. சிதம்பரம் ஒரு வழக் கறிஞராகவும் இருந்ததால், இந்த நூலை சட்ட நிபுணராகவும், வரலாற்று ஆசிரிய ராகவும், சரித்திர ஆய்வாளரைப் போன்றும், சமதர்மத்தை நாடும் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் சிந்தித்து நமக்குத் தந்துள்ளார் !.

ஆலயப் பிரவேச உரிமை -  அதாவது கோயிலுக்குள் அனைத்து ஜாதியினரும் உள்ளே நுழைகின்ற உரிமை ஏன் மறுக்கப்பட்டது? எப்போது மறுக்கப் பட்டது? எவ்வாறு ஆலயங்கள் தோன்றின? ஏன் தோன்றின? இதில் அரசனுக்கு என்ன லாபம்? வேத சாஸ்திரங்கள் என்றால் என்ன? ஆகமங்கள் என்றால் என்ன?

கோயிலுக்குள் எந்தப் பிரிவு பார்ப்பனர் கள் அர்ச்சகர்களாக இருந்தார்கள்? கோயிலை யார் பராமரித்தார்கள்? இது சம்பந்தமாக நடைபெற்ற வழக்குகள், ஆங்கிலேயர்கள் எழுதிய நூல்கள் இப்படி அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு தகவல்களைத் தாங்கி நிற்கும் ஆவண நூல் இது! 

நூலில் நமக்கு கிடைக்கும் சில அரிய தகவல்கள் :

நாகர்கோவில் நகரத்துக்குப் பெயரளிக்கும் கோவிலானது, கடந்த இருநூற்றைம்பது வருஷங் களுக்கு முன்னால் வரையிலும் நாகராஜாவுக்கு கட்டுப்பட்ட, மிக முக்கியமான சமணக் கோவி லாகவே இருந்து வந்தது! ( பக் - 21 )

சாணக்கியரது அர்த்த சாஸ்திரத்தில் - ஆலய வழிபாட்டின் மூலம் மக்களிடமிருந்து பணம் பறிக்க சொல்லப்பட்ட சுலோகங்களைப் பட்டியலிட்டு, அரசனும் பார்ப்பனர் களும் எவ்வாறு மக்க ளைக் கொள்ளை அடித்தார்கள் என்பதை விளக்குகிறார் .

அர்த்த சாஸ்திரம் சொல்கிறது :

ஓரிரவு ஒரு தெய்வத்தையோ, பீடத் தையோ, மடத்தையோ ஏற்படுத்த வேண்டியது. அல்லது ஒரு கெட்ட சகுனத்தைக் காட்டி - தீமைகள் நேரிடாமல் தடுக்கும் பொருட்டு திருவிழாக்களும், கூட்டங்களும் நடத்துவதாகப் பாசாங்கு செய்து, பொது ஜனங்களிடமிருந்து அரசரது செலவுக்கான பணத்தை வசூலிக்கலாம் ! ( பக் - 31 )

பார்ப்பான் தன்னலத்தையும் ஆதாயத் தையும் கருதி, கோவிலில் வழிபடுபவர் களை ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்வித தந்திரத்தையும் உபயோகிப்பான் ! ( பக் - 32)  என்று பிரபல பிரெஞ்சு எழுத்தாளர் - ஆபீ டூபாய் அன்றே எழுதி வைத்ததை நூலாசிரியர் கண்டெடுத்துத் தந்துள்ளார்!

காந்தியார் கோவில்களைப் பற்றி தனது கருத்துகளை இவ்வாறு தெரிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார் - இந்நாட் டிலிருக்கும் பல கோவில்கள் வேசையர் விடுதிகளை விடச் சிறந்தவைகளல்ல, என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டது சரித்திரப் படியும் மிகையாகாது! (பக்-40 )

கோவில் உருவான வரலாற்றையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் இவ்வாறு விளக்குகின்றார் :

பண்டைக் காலத்தில் பொது ஜனங்களைத் திருப்திப்படுத்தவும் தங்களது வருமானத் தைக் கருதியுமே அரசர்கள் கோவில் களை ஸ்தாபித்தார்கள். பின்னர் கோவி லுக்குள் தாசிகளையும் சங்கீதத்தையும் கொண்டு வந்து, வருமானம் தரும் வினோத காட்சி சாலையாக்கினார்கள். 

இவற்றிற்கு சமூக மதிப்பு ஏற்படும் பொருட்டு சில பிராமணர்களையும் வணங்கும்படி செய்தார்கள். அவ் விதம் வணங்க முன்வந்த பிராமணர்கள் தங்கள் ஜாதியை இழக்க நேர்ந்தமையால், அவர் களுக்கு உணவுகளும் ஏற்பாடு செய்தார்கள்! ( பக் - 44 ) 

இப்படித்தான் கோவிலுக்குள் பார்ப்பனர்கள் நுழைந்ததும், கோவி லுக்கு வெளியே பார்ப்பனரல்லாதாரை நிறுத்தச் செய்ததும் !

தமிழகத்தில் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் கொண்டு வர டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி முனைப்போடு பணி யாற்றியதையும், சட்டமன்றத்தில்  வாதாடியதையும், அதற்கு தந்தை பெரியார் மிகப் பெரும் ஆதரவு தந்ததையும் வரலாறு தெளிவாகச் சொல்கிறது!

அந்தச் சட்டத்தை நிறைவேற்ற கடும் எதிர்ப்பு செய்தவர் அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்த்தி அய்யர். அதை யெல்லாம் மீறித்தான் சட்டம் நிறைவேறியது. தேவதாசி முறையை சத்தியமூர்த்தி அய்யர் எதிர்த்ததற்கான காரணம் இந்த நூலில் நமக்குக் கிடைக்கிறது!

முக்கியமாக பார்ப்பனரின் உபயோகத் திற்காகவே, ஆதியில் தேவதாசி களையும் பரத்தை களையும் கோவில் களில் ஏற்படுத்தினார்கள்! இவர்கள் அடிக்கடி "வேசிய தர்சனம் புண்ணியம் பாபநாசம்" என்ற சுலோகத்தைச் சொல்லிக் கொள் வதைக் கேட்கலாம் . வேசியைத் தரிசித் தால் பாவம் போய் புண்ணியம் ஏற்படும் என்பது இதன் பொருளாகும்! ( பக் - 45 ) ..சத்திய மூர்த்தி அய்யருக்குப் புண்ணியம் கிடைக்காமல் போய்விடுமே என்று தான் சட்டத்தை எதிர்த்தார் போலும்!

இதுமட்டுமல்லாமல், சிதம்பரம் தீட்சிதர்களின் புரட்டு, ஆகமங்கள் பற்றிய கட்டுக் கதை, வைதீக கிரியைக்கும் ஆகம விதிகளுக்குமுள்ள வேறுபாடு - இவைகள் பற்றிய விவரங்க ளுடனும் விளக்கங்களுடனும் எழுதப்பட்ட ஒரு சிறப்பான நூல். அனைவரும் இதைக் கற்றறிந்து பயன் பெற வேண்டும்! உண்மைகளை உணர வேண்டும்! 

- பொ. நாகராஜன், 

பெரியாரிய ஆய்வாளர், சென்னை 


No comments:

Post a Comment