அனைவருக்குமான கல்வித் தடையை உடைத்து மக்களிடம் சேர்த்தது திராவிட இயக்கம் : கனிமொழி எம்.பி. பெருமிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

அனைவருக்குமான கல்வித் தடையை உடைத்து மக்களிடம் சேர்த்தது திராவிட இயக்கம் : கனிமொழி எம்.பி. பெருமிதம்

சென்னை,அக்.31- சென்னை தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் நவீனக் கல்வி கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன என்ற நூலை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட, அதன் முதல் பிரதியை மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து விழா மேடையில் பேசிய கனிமொழி, “மெக்காலே கல்விக் கொள்கையை பற்றி தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. இங்கே உயர்பதவியில் இருப்பவர்கள் கூட சில முக்கியமான கருத்தை சொல்கிறார்கள். அது என்னவென்றால், எந்த நாடும் ஒரு மதத்தை சாராமல் இருக்க முடியாது என்கிறார். எதற்காக இதனை சொல் கிறார்கள் என்பது தெரியவில்லை. எத்தனை நாடுகள் உள்ளது என்பது அவர்களுக்கு தெரியுமா? உலகில் நிறைய நாடுகள் மதச்சார்பற்ற நாடாகத் தான் உள்ளது. 

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று மெக்காலே கூறியதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். அதனால் அவர் கருத்தை இவர்கள் ஏற்பதில்லை. ஒரு காலத்தில் 'கிளர்க்' வேலை கூட கிடைக்க நமக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அதற்கு கூட அவர்கள் தான் போய்க் கொண்டு இருந்தார்கள்.

நான் உட்கார்ந்து இருக்கிற இடத் தின் பக்கத்தில் நீ வந்து உட்காருகிறாய் அல்லவா - அந்த இடத்திற்கு உன்னை கொண்டு வந்த கல்விக் கொள்கையை நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதுதான் இவர்கள் மெக் காலே மீது வந்து தொடர்ந்து வைக் கக்கூடிய குற்றச்சாட்டாக உள்ளது.

20 ஆயிரம், 30 ஆயிரம் புத்தகங்கள் படித்து உள்ளவர்களுக்கு கூட இந்த புத்தகத்தை அனுப்பி வைக்கலாம். நாம் எதை உடைத்து மேலே வந்தோமோ மீண்டும் அதே இடத்துக்கு செல்ல தான் அவர்கள் புதிய கல்வி கொள்கையை கொண்டு வருகிறார்கள். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அறிவியல் குறித்து எத்தனை புத்தகங்கள் உள்ளது? இது எல்லாம் இவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று நினைத்ததை திராவிட இயக்கம் உடைத்து கொண்டு வந்து மக்களுக்கு சேர்த்தது” என்றார்.

ஹிந்தி திணிப்பு நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது செய்தியாளர்களிடம் கனிமொழி

பின்னர் தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் கனிமொழி 

 “மெக்காலே கல்விக் கொள்கையை பற்றி தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிராக போகக்கூடிய ஒன்று. மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா என்பது மக்களால் உருவாக்கப்பட்டது. எல்லா மதங்களைச் சேர்ந்தவர்கள், மொழிகளை சார்ந்தவர்கள் உள்பட பல நம்பிக்கைகளால் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா. இதை சிதைக்க வேண்டும்  என நினைப்பது மிகப்பெரிய தவறு. கோவை சம்பவத்தில் என்.அய். ஏ. அண்ணாமலையை கூப்பிட்டு விசாரிக்கட்டும் - அதற்கு அவர் பதில் சொல்லட்டும்” எனக் கூறினார்.

No comments:

Post a Comment