நவராத்திரி என்ற பெயரால் ஒன்பது நாட்களை விரயப்படுத்தும் நாடுகளில் - உலகிலேயே முதலில் இருப்பது இந்தியாவாகத் தான் இருக்கும்.
ஆயுதங்களை வைத்துப் பூஜை செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? ஆயுதங்கள் பயன்பாட்டுக்கு உரிய பொருள்களே தவிர, பூஜைக்கு உரியவையல்ல.
அப்படிப் பார்த்தால் நமக்கு அன்றாடம் பயன்படும் பொருள்களை எல்லாம் வைத்துப் படைத்துக் கொண்டு இருக்கிறோமா?
வீட்டைச் சுத்தப்படுத்தும் - கூட்டிப் பெருக்கும் பொருளிலிருந்து ஆரம்பித்தால் பட்டியல் பெருகுமே!
கடவுள் ஒருவர், அவர் அரூபி, அவர் புலன்களுக்குப் புலப்பட மாட்டார். ஆனால் அவர் எங்கும் இருப்பார் தூணிலும் இருப்பார் - துரும்பிலும் இருப்பார் என்று சொல்லிக் கொண்டு - அரூபியான கடவுளுக்கு உருவங்கள் வந்தது எப்படி? குடும்பம் வந்தது எப்படி? புருசன் - பெண்டாட்டி எப்படி? குழந்தைக் குட்டிகள் எப்படி? கடவுள்கள் சண்டை போட்டது எப்படி?
இவை எல்லாம் கடவுளையும், பக்தியையும், மதத்தையும் வைத்து சுரண்டிப் பிழைக்கும் சூழ்ச்சிதானே!
ஆயுதப் பூஜை கொண்டாடப்படும் நாட்டின் எல்லைப் பகுதியில் கடும் பனி உறையும் பகுதிகளில் நமது இராணுவ வீரர்கள் இரவும், பகலுமாக ஆயுதங்களை ஏந்தி எத்தகைய இடர்ப்பாடுகளோடு பணியாற்றுகின்றனர்!
ஆயுதப் பூஜை கொண்டாடப்படும் நாட்டின் சில பகுதிகள் இன்னும் சீன ஆக்கிரமிப்புக்குள் இல்லையா?
கைலயங்கிரி என்று சொல்லப்படும் அந்தப் பகுதி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது?
தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமல தாசன் வீழ்ந்தது எப்படி?
இதோ ஆதாரம்:
"தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமல தாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பிஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பவனை வேண்டினான்.
வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின்பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை எடுத்து வந்த சமயமானது ஆயுத பூஜை சமயமாகும். படை வீரர்களது படைக்கலன்கள் எல்லாம் ஆயுத பூஜைக்காகக் கொலுவில் வைக்கப்பட்டு இருந்தன.
மன்னன் செங்கமலதாசனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மனக்கலக்கம் அடைந்தவனாய் பார்ப்பன மந்திரிகளையும், பார்ப்பனக் குருமார்களையும் அழைத்து ஆலோசனை கேட்டான். அதற்கு அந்தப் பார்ப்பனர்கள், ‘‘மன்னர் மன்னா! கவலைப்படாதீர்கள். ஆயுத பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுத்தால் சாஸ்திர விரோதம். நம் நாட்டின்மீது படையெடுத்து வருபவன் முகமதியன் அல்லன். படையெடுத்து வருபவன் அவனது தளபதியான வெங்காஜியாவான். அவனோ இந்து. மேலும் பரம வைணவன். ஆகவே, திருமாலுக்கு மிகவும் உகந்த திருத்துழாய்களை (துளசி செடிகளை) நமது நகரின் எல்லையில் தூவி விட்டால், அவன் அதனைத் தாண்டி படைகளைச் செலுத்திக் கொண்டு வரமாட்டான்'' என்று சொன்னார்கள்.
மன்னனும் அவர்களின் கூற்றினை ஏற்று, துளசிச் செடிகளை நகரின் எல்லையில் ஏராளமாகக் குவிக்கச் செய்துவிட்டு, பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு ஹரிபஜனை செய்து கொண்டிருந்தான்.
வெங்காஜியின் படைகளின் குதிரைகளோ, குவித்திருந்த துளசிச் செடிகளைப் புல்லென எண்ணி - அதிவிரைவாகவும், அனாயசமாகவும் துளசிச் செடிகளை வாயில் கவ்விக் கொண்டு நகருக்குள் புகுந்தன.
இதனைக் கேள்வியுற்ற மன்னன் செங்கமலதாசன், ‘‘வெங்காஜி சத்தியம் கெட்டவன்; திருமாலின் திருத்துழாயங்களை மதிக்கவில்லை. ஆகவே அவனுடன் போர் செய்தல் கூடாது'' என்று கூறி யாரும் அறியாமல் எங்கோ ஓடி ஒளிந்து விட்டான்.
வெங்காஜியின் படைகள் செங்குருதி சிந்தாமலும், வாளை எடுக்காமலும், வேலைத் தூக்காமலும் எளிதில் தஞ்சையினைக் கைப்பற்றின.
இதனால் தானோ ‘‘பார்ப்புப் பெருத்தல்லோ நாயக்கர் துரைத்தனம் கெட்டது!'' என்ற பழமொழி ஏற்பட்டது போலும்!
ஆயுத பூஜையால் ஆட்சியும் அரண்மனையும் அழிந்த கொடுமையைப் பார்த்தீர்களா!"
இது ஏதோ புராணச் சரடு அல்ல; வரலாற்றில் நடந்த நிகழ்வு!
ஆயுதப் பூஜையால் நாடு பறி போனதுதான் மிச்சம்! படித்தவர்கள் சிந்திக்க வேண்டாமா? படிப்பு என்பது பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கா? பாழும் பக்திப் படுகுழியில் வீழ்ந்து இழப்பதற்கா?
சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!
No comments:
Post a Comment