‘‘பெரியார் பன்னாட்டு சமூகநீதி மாநாட்டுக்காக உழைத்தவர்களுக்கு நன்றி - பாராட்டு!'' தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலிமூலம் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

‘‘பெரியார் பன்னாட்டு சமூகநீதி மாநாட்டுக்காக உழைத்தவர்களுக்கு நன்றி - பாராட்டு!'' தமிழர் தலைவர் ஆசிரியர் காணொலிமூலம் உரை

 கனடாவில் நடைபெற்ற சமூகநீதிக்கான பன்னாட்டு பெரியார் மனிதநேய மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் பாராட்டு - நன்றி!

விஞ்ஞானத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது; சமுதாய விஞ்ஞானியின் கொள்கையும் உலகைச் சென்றடைந்தே தீரும்!

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் பொய்களை நிர்மூலமாக்க தனிக் குழுவை அமைத்துச் செயல்படுவீர்!

திருச்சி, அக்.7  விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்பதுபோல, சமுதாய விஞ்ஞானியான தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளும், கொள் கைகளும் உலகம் முழுவதும் பரவியே தீரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கனடா: பெரியார் பன்னாட்டமைப்பு மாநாட்டிற்காக உழைத்தவர்களுக்குப் பாராட்டு! 

நேற்று (6.10.2022) இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு  காணொலிமூலம் கனடா நாட்டில் நடந்து முடிந்த பெரியார் பன்னாட்டு சமூகநீதி மாநாடு சிறக்க உழைத்தவர்களுக்கு பாராட்டு - நன்றிக் கூட்டம் நடைபெற்றது. இக்காணொலி கூட்டத்தில், திருச்சியிலிருந்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது  உரை வருமாறு:

பன்னாட்டளவில் மாநாடுகளை 

நடத்துகின்றோம்!

பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் மருத்துவர் சோம.இளங்கோவன் மற்றும் பொறுப் பாளர்களின் ஒத்துழைப்பால் பன்னாட்டளவில் மாநாடுகளை நாம் நடத்துகின்றோம்.

சில நாள்களுக்கு முன்பு கனடா நாட்டில் நடை பெற்ற பெரியார் பன்னாட்டமைப்பின் சமூகநீதி மாநாட்டினை சிறப்புற நடத்தினோம்.

கேப்டன் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்

அதற்காக எல்லோரையும் ஒருங்கிணைத்தீர்கள். ஒரு ‘டீம்' என்பது இருக்கிறதே, அதனுடைய தத்துவம் என்னவென்றால், கேப்டன் மிகவும் கண்டிப்புடன் இருப்பார்.

அதேநேரத்தில், யாருக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது; யாருக்குக் குறைவாக வாய்ப்பு இருக்கிறது என்று அந்த ‘டீம்' பார்ப்பதில்லை.

ஒருவருடைய மைனஸ்; இன்னொருவருடைய ப்ளஸ்;  ‘டீம்' வெற்றி பெறவேண்டும் - அதுதான் மிகவும் முக்கியம்.

There is no Eye in the success என்று சொல் வதுபோன்று.

சிறு பிள்ளைகளிலிருந்து இடைவெளி இல்லாத அளவிற்கு   இளைஞர்களைத் தயார் செய்திருக்கிறீர்கள்

அய்யா காலத்தில், கும்மிடிப்பூண்டியைத் தாண்டியது இல்லை நம்முடைய இயக்கம் - பொன்னேரி வரைதான் சென்றிருக்கின்றோம்.

பெரியாருடைய முன்னோக்கும், கணிப்பும் எப்பொழுதும் தவறாக இருந்ததே இல்லை!

அப்படிப்பட்ட நிலையில், ‘‘சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?'' என்று சொல்லும்பொழுது அய்யா அவர்கள், 

‘‘இன்றைக்குப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை இந்த ஊரோடு இருக்கிறது. இதே போன்று என்றும் இருக்காது. நாளைக்கு அகில இந்தியாவையும் தாண்டி, அகில உலகத்திற்குப் போகும்'' என்று சொன்னார்.

பெரியாருடைய முன்னோக்கும், பெரியாரு டைய கணிப்பும் எப்பொழுதும் தப்பியதே இல்லை, தவறாக இருந்ததே இல்லை.

‘தொழு’ என்றால் 

‘பின்பற்றுதல்' என்று அர்த்தம்!

அதற்கு ஆதாரம்தான் ‘‘பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்'' என்று சொல்வது

‘தொழு' என்கிற வார்த்தை ‘வணங்குதல்' என்று அர்த்தம் கிடையாது. ‘பின்பற்றுதல்' என்று பேராசிரியர் இறையன் அவர்கள் அழகாகச் சொல்வார். 

அதனால், உலகம் இன்றைக்குப் பெரியாரின் கொள் கைகளைப் பின்பற்றக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.

எல்லாத் துறைகளிலும் பெரியாருடைய கருத்துகள் உள்வாங்கிச் சொல்லப்படுகின்றன.

எதிர்த்தவர்கள்கூட, அவர்களை அறியாமல் பெரியா ருடைய கருத்துகளை வரவேற்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது.

பன்னாட்டு மாநாடுகள்:

ஜெர்மன் - வாசிங்டன்- கனடா!

முதலில் ஜெர்மனில் மாநாடு நடைபெற்றபொழுது, ஜெர்மன் மொழியில் புத்தகங்கள் வெளிவந்தன. உல்ரிக் நிக்கோலஸ் அம்மையாரின் ஒத்துழைப்போடு, பெரியார் பன்னாட்டமைப்பு உருவானது. பெரியார் கருத்தியலுக்கு அங்கே வாய்ப்பு ஏற்பட்டது.

இரண்டாவது பன்னாட்டு மாநாடு வாசிங்டன், மேரிலாண்ட்டில் நடைபெற்றது. அம்மாநாட்டில், பெக் கார்டு போன்றவர்கள் எல்லாம் பங்கேற்றனர். அவர்கள் எல்லாம் பெரியாரைப்பற்றி புரிந்துகொள்வதற்கு வாய்ப் புகளை ஏற்படுத்தி, நல்ல அளவிற்கு இளைஞர்களை யெல்லாம் தட்டிக் கொடுத்து, ஆங்காங்கே தனித்தனியாக இருப்பவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து - ‘‘பூக்களை ஒரு மாலையாகத் தொடுப்பதுபோன்று''  பெரியாரிஸ்டுகள் ஒரு குடும்பம் என்ற அளவிற்கு வந்தது.

பங்கேற்றவர்கள் ஒரு சின்ன குறை கூட சொல்லவில்லை, பாராட்டினார்கள்!

அதற்கு அடுத்ததாக, மூன்றாவதாக கனடாவில் மாநாடு நடத்துவதற்கு கே.ஆர்.எஸ்., அரசு செல்லையா, இலக்குவன் தமிழ், டாக்டர் சரோஜா அம்மையார் எல்லோரும் முயற்சி எடுத்தீர்கள். தலைமுறை இடைவெளி இல்லாமல், மாநாட்டினை சிறப்பாக நடத்தி முடித்தீர்கள்.

அம்மாநாட்டிற்கு தமிழ்நாட்டிலிருந்து 16 பேர் வந்தார்கள். மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஒரு சின்ன குறை கூட சொல்லவில்லை, பாராட்டினார்கள்.

இதுவே அந்த மாநாட்டினுடைய வெற்றிக்கு அடையாளம். யாருக்கும் உடல்நலக் குறைவோ, உள்ள நலக் குறைவோ இல்லை.

ஏற்பாடுகள் அற்புதமாக இருந்தன. அதற்காக உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. அடுத்த மாநாடு எங்கே நடைபெறப் போகிறது என்று இன்றைக்குத் திட்டமிட்டுச் சொல்லவேண்டும்.

அடுத்த மாநாடு எங்கே நடத்தப்போகிறோம் என்கிற அந்தப் பணிகள் இருந்தாலும், நம்முடைய வேண்டு கோள் என்னவென்றால், கணிதத் துறை, தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றக் கூடிய நம்முடைய தோழர்கள், இளைஞர்கள் உள்பட, வயதானவர்கள் வரை இருக்கிறோம்.

பொய்களை நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை!

5ஜி வந்திருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், அந்த அலைக்கற்றை எவ்வளவு வேகமாகப் பரவுகிறதோ, அதைவிட பொய்களை அதிகமாகப் பரப்புகிறார்கள்.

அதை நாம் கவுண்டர் செய்யவேண்டும். அந்தப் பொய்களை நாம் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. எதுவாக இருந்தாலும், திரும்ப அடிக்கவேண்டும்.

உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்பு கிறார்கள். ஒருவர் பேசிய பேச்சிலிருந்து, அந்தப் பேச்சின் முன்னும், பின்னும் எடுத்து, ஒட்டி வெட்டிப் பரப்புகின்ற பணிகளை செய்கின்றனர்.

அவர்களுக்குரிய பதிலை உடனுக்குடன் தோழர்கள், இளைஞர்கள் கொடுக்கவேண்டும். அதற்காக பெரியார் பன்னாட்டமைப்பில், தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்று ஒரு பிரிவை தனியாக உருவாக்குங்கள். அந்தப் பிரிவுக்கு பொறுப் பாளர்களை நியமியுங்கள்!

தந்தை பெரியாரைப்பற்றியும், பெரியார் இயக் கத்தைப்பற்றியும், பெரியார் கருத்துகளைப்பற்றியும் தவறான தகவல்களைத் தருகிறார்கள்.

வெட்டி, ஒட்டி - படிப்பவர்களை 

அருவருப்படைய வைக்கிறார்கள்

பெரியாருடைய புரட்சிகரமான கருத்துகள் மிகப்பெரிய அளவில் இருக்கின்றன. ஆனால், அவற்றை வெட்டி, ஒட்டி - படிப்பவர்களை அருவருப்படைய வைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, திருக்குறளை, மலம் என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் என்று ஒரு பொய்யைச் சொல்கிறார்கள்.

எந்த இடத்தில் இப்படி சொல்லியிருக்கிறார்? என்று ஆதாரத்தைக் காட்டவில்லை அவர்கள்.

அதேபோன்று, ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் உரையாற்றும்பொழுது, மனுதர்மத்தில் உள்ளவற்றை எடுத்துப் பேசினார்.

ஆனால், சமஸ்கிருதமே தெரியாது இராசாவுக்கு,  இவர் எப்படி மனுதர்மத்தில் உள்ளவற்றைப் படித் திருப்பார்? அது வீரமணி போட்ட ‘மனுதர்ம புத்தகம்' என்று சொல்கிறார்கள்.

ஆகவே, இதற்குரிய பதிலை தகுந்த வகையில் நாம் சொல்லவேண்டும்.

மற்ற எல்லா காலத்தையும்விட, வெளிநாட்டில், குறிப்பாக அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில், அய்ரோப்பிய நாடுகளில் நிறைய ஆய்வாளர்கள், நம்முடைய கருத்தாளர்கள்,  பெரியாரிஸ்டுகள் ஏராளமாக வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

நம்மை திசை திருப்பி, கவனத்தைச் சிதறடிக்கிறார்கள் எதிரிகள்!

அதேநேரத்தில், எதிரிகள் அதிகமான அளவிற்கு, நம்மை திசை திருப்புகிறார்கள்; கவனத்தைச் சிதறடிக்கிறார்கள்.

ஆகவே, நாம் கவனச் சிதறல்களுக்கு இடந்தராமல், எதிரிகளை எப்படி சமாளிப்பது என்று பாருங்கள்.

அவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதற்குப் பதில் சொல்லுங்கள்.

வேண்டுமென்றே பொய்களைச் சொல்வார்கள். பெரியாருக்கு யுனெஸ்கோ விருதே கொடுக்கவில்லை என்றெல்லாம் புரட்டுகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.

அதற்குரிய ஆதாரம் நம்மிடம் இருக்கின்றது. தலைமைச் செயலாளர், அரசாங்கம், ஒன்றிய அரசு, மாநில அரசு சேர்ந்துதான் அந்த விருதை அளித்தன.

தேவை இருந்தால் மட்டும் 

பதில் சொல்லவேண்டும்!

ஆகவேதான், ஒரு பழமொழி உண்டு -

பொய் வேகமாகப் பரவும் - உண்மையை நிரூபிப் பதுதான் கஷ்டம். ஆனால், அதைப்பற்றி நாம் கவலைப் படவேண்டாம்.

இரண்டு வகையாக நாம் செயல்படவேண்டும்.

ஒன்று, தேவை இருந்தால் மட்டும் பதில் சொல்ல வேண்டும். அந்தப் பதிலும் ஆழமாக இருக்கவேண்டும்.

எல்லாவற்றிற்கும் பதில் சொல்லவேண்டிய அவசிய மில்லை. சில விஷயங்களைத் தவிர்த்துவிடலாம்.

அண்ணல் அம்பேத்கரின் கூற்று!

அம்பேத்கர் அவர்களுடைய மொழியில் சொல்ல வேண்டுமானால், எதிரிகள் அவரை எப்படி விளம்பரப் படுத்தாமல் இருந்தார்கள் என்பதுகுறித்து சொல்லும் பொழுது,

They killed with the conspiracy of silence என்று சொன்னார்.

மிக அற்புதமான வார்த்தை.

அதுபோன்று, நாம் தேவையற்ற விஷயங்களுக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. தேவை உள்ளவற்றிற்கு பதில் சொல்லாமல் இருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

இந்த இரண்டையும் எடை போட்டுப் பார்த்து, இதற்கு ஒருங்கிணைப்புக் குழுவினை ஏற்பாடு செய்யவேண்டும்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது- நீண்ட காலத்திற்கு முன்பு தோழர் சங்கரபாண்டியன் போன்ற நண்பர்கள் எல்லாம் அங்கே இருந்து - கொச்சைத் தனமாகப் பேசினார்கள்; அதே மொழியில் திருப்பி அடித்தவுடன், அவர்கள் பின்வாங்கினார்கள்.

கூறுகிறார் சர் பிட்டி தியாகராயர்

சர்.பிட்டி தியாகராயர் மிக அழகாக சொல்வார்,

If you Lick, he will Kick

If you Kick, he will Lick

இதற்குமேல் விளக்கவேண்டிய அவசியமில்லை.

ஆகவே, உங்களுடைய முயற்சி அருமையானது. கூட்டு முயற்சி எடுத்தால், நாம் அதில் வெற்றி பெறுவோம்.

அந்தக் கூட்டு முயற்சியில், யார் முன்னால், யார் பின்னால் - யார் அதிகம் செய்தார்கள்; யார் குறைவாகச் செய்தார்கள்; யார் சரியாகச் செய்யவில்லை; யார் சரியாகச் செய்தார்கள் என்று ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஒரு ‘டீம்' வெற்றி பெற்றதா? இல்லையா?

கோப்பையை யார் வாங்கியது?

அந்தப் பெருமை என்பது முழு ‘டீமு'க்குமே உண்டு. கேப்டன் அதற்கு ஒரு சிம்பல்.

உறுப்பினர்கள் இல்லையென்றால், 

கேப்டன் கிடையாது

டாக்டர் சோம.இளங்கோவனையும், சரோஜா இளங் கோவனையும் பாராட்டுகிறோம் என்றால், எல்லோரை யும் பாராட்டுவதாகத்தான் அதற்கு அர்த்தம். தனித் தனியாக ஒவ்வொருவரையும் பாராட்டவேண்டிய அவசியமில்லை. 

ஏனென்றால், அவர் ‘டீம் கேப்டன்'. முழுப் பொறுப்பு டீம் கேப்டனுக்கு உண்டு. உறுப்பினர்கள் இல்லையென்றால், கேப்டன் கிடையாது.

ஆகவேதான், எல்லோருக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட்!

செய்தியாளர் ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகப் போகிறது. அதற்குப் பிறகு பிறந்த இளைஞர்கள், பெரியாரைப் பெரிய அளவிற்குத் தூக்கிப் பிடிக்கிறார்கள். பெரியார் தான் இன்றைய மார்க்கெட்டிங் பொருளாக இருக்கிறாரே! அமேசானில் பெரியாருடைய புத்தகங்கள் விற்கப் படுகின்றன. பிளிப்காட்டில் பெரியாருடைய புத்தகங்கள் விற்கப்படுகின்றன. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் பெரியாரைப் பாராட்டுகிறார்கள். அவர்கள் எல்லாம் பெரியாரைப் பார்க்காதவர்கள். இன்னுங்கேட்டால்,  கடவுள் மறுப்பாளரான பெரியாரை, கடவுள் நம்பிக்கையாளர்களும் பாராட்டுகிறார்கள். பெரியார் ஹிந்தி மொழியை எதிர்த்தவர் என்றாலும், ஹிந்தி மொழி பேசுவர்களும் பெரியாரைப் பாராட்டு கிறார்களே, அதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்.

அதற்கு ஒரே வரியில் நான் பதில் சொன்னேன்.

‘பெரியார் ஒரு சூப்பர் மார்க்கெட்' என்று.

தரமான பொருள் - மலிவான விலை!

அந்த சூப்பர் மார்க்கெட்டில் எல்லா பொருள்களும் இருக்கின்றன. எல்லாப் பொருள்களையும், எல்லோரும் வாங்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது.

தரமான பொருள்கள் அங்கே இருக்கின்றன.  ஆனால், மலிவான விலைக்குக் கிடைக்கிறது. ஆகவே, அவரவர்களுடைய தேவைக்கு ஏற்ப,.  யார் யாருக்கு என்னென்ன பொருள்கள்  வேண்டுமோ எடுத்துச் செல்லுகிறார்கள்.

பெரியார் ஒரு பேரங்காடி என்றேன்.

பெரியார் என்பவர் சமூக விஞ்ஞானம்!

இரண்டாவது, பெரியாரை ஏன் இளைஞர்கள் விரும்புகிறார்கள்? ஏன் பெரியாரைப் போராயுத மாக, பேராயுதமாகக் கருதுகிறார்கள்?

நாம் முயற்சி எடுத்தாலும், எடுக்காவிட்டாலும் பெரியார் பரவுவார்; பெரியார் உறுதியாக வெற்றி பெறுவார்.

ஏனென்றால், பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி.

2ஜி அலைக்கற்றையைப்பற்றி பேசிக்கொண் டிருந்தோம் நாம்; இன்றைக்கு 5ஜி அலைக்கற்றை வரை வந்தாகிவிட்டது.  இது விஞ்ஞானத்தினுடைய வளர்ச்சி.

அதுபோன்று, பெரியார் என்பவர் சமூக விஞ்ஞானம்.

பெரியாருடைய தத்துவங்கள் சமூக விஞ்ஞானம்.

பெரியார் ஒரு சமூக விஞ்ஞானி.

ஆகவே, விஞ்ஞானத்தை யாராலும் வெல்ல முடியாது - யாராலும் தவிர்க்க முடியாது - யாராலும் திசை திருப்ப முடியாது.

விஞ்ஞானிகளைப்பற்றி தவறாகப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்; விஞ்ஞானிகளைத் தண்டித் திருக்கிறார்கள். ஆனால், கடைசியில், விஞ்ஞானம் வெற்றி பெற்று இருக்கிறது; அஞ்ஞானம் தோற்றி ருக்கிறது. 

மதம் விஞ்ஞானத்தின்முன் மண்டியிட்டு இருக்கிறது என்பதை எல்லோரும் அறிவீர்கள்.

பெரியார் என்பது காலத்தின் கண்டுபிடிப்பு!

ஆகவேதான்,

நம்முடைய பணி தேவையான பணி!

நம்முடைய பணி வெற்றியடைக்கூடிய பணி!

நம்முடைய பணி, உலகளாவிய நிலையில், 

கடைசி மூடநம்பிக்கைக்காரன், 

கடைசி அடிமைத்தனம்,

கடைசி மனித உரிமைப் பறிப்பு இருக்கின்ற வரையில், பெரியார் தேவைப்படுவார்.

பெரியார் என்பவர் தனிமனிதரல்ல!

பெரியார் என்பது ஒரு மாமருந்து!!

பெரியார் என்பது காலத்தின் கண்டுபிடிப்பு!

பெரியார் என்பது விஞ்ஞானத்தினுடைய வெடிப்பு!

ஆகவே, பெரியார் பெயரால் அமைந்திருக்கின்ற இந்தப் பெரியார் பன்னாட்டமைப்பு மேலும் மேலும் பல பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.

ஏனென்றால், நம்முடைய பணி என்பது இருக்கின்றதே, அதில் இது தொடர்ச்சி!

அடுத்த அடுத்த தலைமுறையை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கின்றது.

இளைய தலைமுறையினர் பெரியார் தந்த அறிவுச்சுடரை ஏந்துகிறார்கள்!

அந்த வகையில், மிக்க மகிழ்ச்சி என்னவென்றால், இளைய தலைமுறையினர் பெரியார் தந்த அறிவுச்சுடரை இன்று ஏந்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அதைக் கண்டு எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆகவே, இதையெல்லாம் பார்க்கின்றபொழுது, எங்களுக்கு வயதாகிவிட்டது என்று நாங்கள் நினைக்கவில்லை. வயது குறைந்துவிட்டது என்றே மகிழ்ச்சியடைகின்றோம்.

எங்களுடைய வயதைக் குறைத்த உங்களுக்கு நன்றி!

பெரியார் உலகமயம் - உலகம் பெரியார் மயம்!

இயக்கத்தை, பெரியாரைப் பெருக்கிய உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

பெரியார் வருவார் -

பெரியார் உலகமயம் - உலகம் பெரியார் மயம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.






No comments:

Post a Comment