தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள லாமா? என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ஆம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது.
உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக் கலாம் என்றும் பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும் மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்சேபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.
ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்ப தாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.
இதுபோலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக் கிறது. அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927இல் எழுந்தது. நான் ஆட்சேபித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர்கார், பாத்ரோ முதலிய வர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆட் சேபணைகூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தான், தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன் கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்பை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கட்சியார் எதிர்க்க நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக் கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக் கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்தத் தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்த தாகச் சொல்லுகிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம் நான் துவேஷமாய் இருந் தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களை யெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்த மாகும்.
நான் சென்ற வாரப்பத்திரிகையில் பார்ப்பனிய ஒழிப்புக் கொண்டாட்ட நாள் என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக் கின்றேன்.
இது நிற்க. பொதுவாக ஒரு விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.
பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற் படுத்திக் கொண்டிருக்கும் விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள் என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்.
எப்படியெனில் ஒரு வியாதியை சவுக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி சவுக்கியமாய் விடுகின்றது.
அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில் பார்ப்பனியம் ஒழிந்து விடுகின்றது. வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது.
இந்த நிலை ஏற்படும் வரையில்தான், நாம் பார்ப்பனர் களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகின் றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனிதன் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும் நாம் கருதி ஏற்படுத்தவில்லை.
இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர் களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசிய மானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என் னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.
பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலை வர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். சண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்கள் ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன் பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது. ஆதலால் நான் குறுக்கே நிற்ப தில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்குச் சந்தோஷமே.
இப்போது எனக்கும் எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சினை. இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல. பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்ட பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப் போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கியப் பிரச்சினை. இந்தப் பிரச் சினையால் தான் தாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம் இருந்து வரு கின்றது.
அதைத்தான் நாங்கள் அவசியமாய் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பி யிருக்கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும். பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத் துக்குத்தான் பயன் உண்டாகலாம்.
நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில் தான், இந்த தேசப் பொது மக்களின் தலையெழுத்து நிர்ண யிக்கப்படப் போகின்றது.
ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.
- பகுத்தறிவு - சொற்பொழிவு - 07.10.1934
No comments:
Post a Comment