அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகள் 97 சதவீதம் நிறைவு : அமைச்சர் துரைமுருகன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

அத்திக்கடவு- அவினாசி திட்டப்பணிகள் 97 சதவீதம் நிறைவு : அமைச்சர் துரைமுருகன்

சென்னை,அக்.29 அத்திக்கடவு- அவினாசி திட்டப் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்து உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னை, அத்திக்கடவு- அவினாசி திட்டம் என்பது பவானி ஆற்றில் இருந்து வெள்ள உபரி நீரை, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள அன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கேயம், ஊத்துக்குளி, நம்பியூர் மற்றும் புளியம்பட்டி பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள் மற்றும் ஏனைய 538 நீர்நிலைகளில் நிரப்புவதன் மூலம், நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம் ஆகும். இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், அந்த பகுதிகளில் வாழும் 35 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப் படும். மேலும் சுமார் 1.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் நிலத்தடி நீரின் மட்டம் உயரும்.அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  அத்திக்கடவு- அவினாசி திட்ட பணிகள் மற்றும் சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செய லகத்தில்   நடந்தது. இந்த கூட்டத் துக்கு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில், துரைமுருகன் பேசியதாவது:- அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் தற்சமயம் சுமார் 97 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இதில் குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 1,065 கிலோ மீட்டரில் சுமார் 1,033 கிலோ மீட்டர் தூரத்துக்கு பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகள் முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், வருகிற டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேலும், சேலம் மாவட்டம் சரபங்கா வடிநிலத்தில் உள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீத பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். கலந்துகொண்டோர் இந்த கூட்டத்தில், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நிதித்துறை கூடுதல் செயலாளர் பிரசாந்த் வடநரே, நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.ராமமூர்த்தி, கோவை மண்டல தலைமைப்பொறியாளர் பொ.முத்துச்சாமி, திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் எஸ்.ராம மூர்த்தி மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment