வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - 4 நாட்கள் முகாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு - 4 நாட்கள் முகாம்

சென்னை,அக்.29- வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதையடுத்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அடுத்த மாதம் (நவம்பர்) 11ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது. இதையடுத்து நவம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 8ஆம் தேதி வரை 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதவர்கள் தங்கள் பெயரை சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

அதன்படி நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை சுமார் ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பரிசீலிக்கப்படும். இந்த பணிகள் டிசம்பர் 26ஆம் தேதிக்குள் நிறைவுபெறும். இதை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல் 2023 ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் கூறி இருப்பதாவது: தமிழ்நாட்டில் நவம்பர் 11ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க ஒரு மாதம் முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த நாட்களில் அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக சனி, ஞாயிறு சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 12-11-2022 (சனி), 13-11-2022 (ஞாயிறு) மற்றும் 26-11-2022 (சனி), 27-11-2022 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி அலுவலகங்களிலும் நடத்தப்படும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்து தயார் நிலை யில் இருக்க வேண்டும். அதேபோன்று, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம், முகவரி மாற்றம் செய்வ தற்கான விண்ணப்பங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment