எழுத்தாளர்
ஜெயகாந்தன்
"கல்பனா" மாத இதழின் ஆசியராக இருந்த ஜெயகாந்தன் அவர்கள் 1980 ஜனவரியில் அவ்விதழில் 'எனது பார் வையில் ஆர்.எஸ்.எஸ்' என்ற தலைப் பில் எழுதிய கட்டுரை.
1946-1947 கால கட்டத்தில் நடந்ததை நேரடியாகப் பார்த்தவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் தம் இளமைப் பருவத்தில் ஆர்.எஸ்.எஸ் என்ன செய்து கொண்டிருந்தது, சுதந்திரம் கிடைத்த நாளில் சுதந்திரத்தை அது கொண்டாடிய விதம், எதற்காக காந்தியை அவர்கள் தம் பரம எதிரியாகக் கொண்டு கொலை செய்தனர் போன்றவற்றுக்கான பதிலைத் தம் சொந்த அனுபவத்திலிருந்து பகிர்கிறார்.
கல்கத்தாவில் தோல்விகண்ட ஆர்.எஸ்.எஸ். மதவெறி, டில்லியில் அன்றே பேயாட்டம் தொடங்கியது. இந்த டெல்லிக் கலவரங்களை முன்னின்று நடத்தியவர்கள் அகாலி சீக்கியரும் ஆர்.எஸ்..எஸ். குண்டர்களுமே ஆவர். டெல்லி ரெயில்வே ஸ்டேஷனில் செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முற்பகல் நேரத்தில் கூலி வேலைக்கு காத்திருந்த 12 முஸ்லிம் போர்ட்டர்கள் அங்கேயே படுகொலை செய்யப்பட்டார்கள். இதைத் தொடர்ந்து டெல்லியின் கேந்திர மான பகுதி கனாட் சர்க்கஸில் உள்ள முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டு அங்கிருந்த முஸ்லிம் வியாபாரிகள் பலர் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியின்போது டில்லி போலீஸ் செயலற்று நின்றது. உள்துறை மந்திரியாக சர்தார் வல்லபாய் படேல் இருந்தார். போலீஸ்காரர்கள் வாளா விருந்த அந்த நேரத்தில் கனாட் சர்க் கிளில் அந்த பயங்கர கலவரத்தின் நடுவே கதர்க்குல்லா அணிந்த ஒரு மனிதர் தமது கைத்தடியைச் சுழற்றிக் கொண்டு அந்தக் கலகக்காரர்களின் மேல் பாய்ந்து, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரர்களைச் செயல்படத் தூண்டிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அவரே இளைய பார தத்தின் பிரதமராகப் பதவி ஏற்றிருந்த ஜவஹர்லால் நேரு. இந்த அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். அரசாங்க யந்திரத்தையே ஊடுருவி நின்றது.
பழைய டில்லி – ஆயிரக்கணக்கான முஸ்லிம் கடைகள் சூறையாடப்பட்டும், முஸ்லிம் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டும் ரத்தக் களமாகக் காட்சி தந்தது. நேருவின் வீட்டுத் தோட்டத்தில் அபயம் பெற்று ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பாதுகாப்புக்காக ஓடிவந்து தங்கியிருந்தார்கள். முஸ்லிம் களுக்கு, அவர்கள் பெண்களாயினும் குழந்தைகளாயினும் வயோதிகர் களாயினும் அடைக்கலம் தருகிறவர் களின் வீடுகள் தீயிட்டுப் பொசுக்கப்படும் என்று ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அறிவிப்புச் செய்திருந்தனர்.
பல ஹிந்துப் பணக்காரர்களின் வீடுகளில் வேலைக்காரர்களாகப் பணி புரிந்த ஏழை முஸ்லிம்களை அவர்களது எஜமானர்கள் வீட்டை விட்டுப் பயத்தால் வெளியேற்றிவிட்டனர். உடனே நடுத் தெருவில் அவர்கள் கொல்லப்பட்டனர். முஸ்லிம் பெண் களைப் பாதுகாக்க முயன்றதற்காக அந்த ஆர்.எஸ்.எஸ். படையினர் பிரதமர் நேருவின் வீட்டுக்கு முன்னாலேயே, பர்தா அணிந்திருந்த ஒரு முஸ்லிம் பெண்ணை இழுந்து வந்து பெட்ரோல் ஊற்றித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர். டில்லி நகரப் போலீஸாரில் பாதிப் பேர் முஸ்லிம்களாக இருந்த படியால் அவர்கள் அஞ்சி ஓடிவிட்டனர். டில்லி நகரின் போலீஸ் எண்ணிக்கையே 900 ஆகக் குறைந்து போயிற்று.
மகாத்மா காந்தி கல்கத்தாவிலிருந்து டில்லிக்கு ஓடினார். ஒரு பக்கம் மதவெறி என்ற ஆர்.எஸ்.எஸ். நெருப்பும், இன் னொரு பக்கம் அதன் நடுவே நடந்து அன்பு மழை பொழிந்து அதை அணைத்து அடக்கிய காந்தி எனும் கருணை முகிலும் நாட்டில் போட்டியிட்டுச் சமராடின. காந்தியின் வலிமை எத்தகையது; அவர் எவ்வளவு மகத்தானவர் என்றெல்லாம் அக்காலத்தில் நான் நேரிடப் பெற்ற அனுபவத்தால் அறிந்தேன். இன்றுள்ள நிலையில், அந்த அனுபவமில்லா திருப்பின் எனக்கே அவற்றை நம்புவது சிரமமாயிருக்கும். அன்று அது நாம் கண்ட பிரத்யட்சம். மதவெறியை காந்திஜி வியக்கத்தகுந்த முறையில் ஆத்ம பலத்தால் வென்று அடக்கிக் காட்டினார்.
“நான் உயிருடன் இருக்கும் வரை நாடு பிரியாது என்றாரே காந்தி; இன்று நாடு பிரிந்த பிறகு காந்தி உயிருடன் இருக்கிறாரே!‘’ என்று புனாவில் ஹிந்து ராஷ்டிரம் பத்திரிகை ஆபீசில் குமுறிக் கொண்டிருந்தான் கோட்ஸே! `காந்திஜி யைக் கொல்வது ஒன்றே வழி’ என்று அந்தத் தோற்றுப்போன மதவெறிக் கும்பல் கூடித் திட்டம் போட்டது. அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ்.அய்ச் சேர்ந்தவர்களே ஆவர்.
அவர்கள் 1. நாராயண் ஆப்தே (34 வயது), 2. வீர சவர்க்கார் (65 வயது), 3. நாதுராம் கோட்ஸே (37 வயது), 4. விஷ்ணு கர்க்காரே (34 வயது), 5. திகம்பர பாட்கே (37 வயது), 6. சங்கர் கிஸ்தயா, 7.கோபால் கோட்ஸே (29 வயது, வினாயக கோட்ஸேயின் தம்பி), 8. மதன்லால் பேஹவா (20 வயது) ஆகிய எட்டு பேர் சேர்ந்து திட்டமிட்டு, அகண்ட ஹிந்து ராஷ்டிர அமைப்புக்குக் குறுக்கே நிற்கிற காந்திஜியைக் கொலை செய்வது என்று தீர்மானித்தனர்.
உலகமே அதிர்ந்து நிலைகுலையத் தக்க அந்தக் கொடுமையை நிகழ்த்திக் காட்டினர். பாபுஜி என்று நாம் அனை வரும் அன்போடு துதித்த நமது தந்தையின் மிருதுவான, தெய்விகம் குடியிருந்த இதயத்தை கோட்ஸேயின் கைத்துப்பாக்கியிலிருந்து சீறிய மூன்று ரவைகள் துளைத்து வழிந்த குருதியில் ஆர்.எஸ்.எஸ். என்று எழுத்துகள் வரையப்பட்டிருந்ததை உலகமே கண்டது.
சுதந்திர இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில் அழிக்க முடியாத கறையாக அந்தக் கொலை இன்று வரை திகழ்கிறது! எந்த ஒரு தனி மனிதனின் கொலை யையும் விசாரிப்பது போலவே காந்திஜி கொலைக்கு விசாரணை நடத்தப்பட்டது. கோட்ஸேயும், ஆப்தேயும் இரண் டாண்டு முடிவதற்குள்ளாகவே 1949 நவம்பர் மாதம் 15ஆம் தேதி தூக்கிலிடப் பட்டார்கள். காமன்வெல்த் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள நேருஜி வெளிநாடு சென்றிருந்த சமயம் பார்த்து ஆர்.எஸ்.எஸ். மீதிருந்த தடையை சர்தார் படேல் நீக்கினார். வீர சவர்க்கார் விடுதலை செய்யப்பட்டார். 1966இல் தமது 83 வயது வரை வாழ்ந்துதான் செத்தார். இன்னும் சிலர் சிலகாலம் சிறை வாசத்துக்குப் பின் விடுதலை செய்யப் பட்டனர். காந்தியைக் கொன்ற கோட்ஸேயின் தம்பியும் அந்தக் கொலையில் சம்பந்தப்பட்டவனுமான கோபால் கோட்ஸே வரப் போகிற தேர்தலில் போட்டியிடப் போவதாகச் செய்திகள் வருகின்றன - இவ்வளவு காலத்துக்குப் பிறகு!
இவ்வளவு காலத்துக்கு இடையில் தடை விதிக்கப்பட்டு, பல கட்சிகளிலும் இயக்கங்களிலும் ஊடுருவிச் செயல் பட்டும் இந்த ஆர்.எஸ்.எஸ். மக்களின் மறதியின் மீது நம்பிக்கை வைத்து நாடெங்கிலும் கிளம்பி இருக்கிறது! இதன் மீது எமர்ஜென்சியின்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டது. ஜனதா ஆட்சியில் தடை நீக்கம் பெற்று, ஜனதா கட்சியில் ஊடுருவி நின்றது. இப்போது மீண்டும் ஹிந்து ராஷ்டிரத்தைப் பசப்பி, அரசியல் அரங்கில் சுயநலமிகளும் ஊழல் பேர்வழிகளும் பெருத்து விட்டார்கள் என்ற ஓலத்தோடு, இளை ஞர்களின் விரக்தி மனோநிலையை மூலதனமாக்கி `ஞான உபதேசம்’ புரிந்து உலாவ ஆரம்பித்திருக்கிறது.
அவர்கள் தாங்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், கோட்ஸே ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் அல்லவென்றும், மாற்று மதத்தினரைத் தாங்கள் நேசிப்பதாகவும், ஆயிரம் பொய்களைப் பேசி அழகாக முடிச்சவிழ்க்க முயல்கிற காரியங்கள் நிறையவே நடக்கத் தொடங்கி யிருக்கின்றன.
(முற்றும்)
No comments:
Post a Comment