நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சிகள் தினம்

சென்னை,அக்.21- நவம்பர் 1ஆம் தேதி உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக ஆணையர் தாரேஸ் அஹமது, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2022ஆம் ஆண்டு முதல் மீண்டும் நவம்பர் 1ஆம் நாள் உள்ளாட்சிகள் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார். அதற்கிணங்க நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சிகள் தினம் கொண்டாடப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் மாவட்ட அலுவலகத்தில் ஏதேனுமொரு இடத்தில் பல்வேறு துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பணிகள் குறித்த கண்காட்சிகள் நடத்த வேண்டும். மேலும் அங்கு அரசால் வெளியிடப்படும் திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்த குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கக் தொட்டி இயக்குபவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளைச் சார்ந்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கிராம சபையில் பாராட்டு தெரிவிக்கப்பட வேண்டும்.

உள்ளாட்சிகள் தினத்தினை கொண்டாடும் விதமாக சிறப்பாக செயலாற்றிய பூர்வாங்கப் பணிகளை மேற்கொண்ட, பசுமை மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாத்து அந்த ஊராட்சியின் வருவாயை அதிகரித்து அதன் பலனை ஊராட்சிக்கு சரியான வகையில் பயன்படுத்திய கிராம ஊராட்சி தலைவர்களை கொண்டு கருத்தரங்கு, கலந்துரையாடல்கள் மற்றும் கருத்து பட்டறை போன்றவற்றை நவம்பர் முதல் வாரத்தில் நடத்த வேண்டும்.  மேலும், இப்பணிகளை தொடர்புடைய மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பயிற்சி நிறுவனம் மண்டல பயிற்சி நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment