மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து :வெள்ள அபாய எச்சரிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கனஅடி நீர்வரத்து :வெள்ள அபாய எச்சரிக்கை

 சேலம், அக்.21 காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை அதிகரித்துவரும் நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து டெல்டா மாவட் டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேட்டூர் அணைக்கு அதிகபட்சமாக விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கனஅடி நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கி யுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

19.10.2022 அன்று  விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர் வரத்து, நேற்று (20.10.2022) மாலை விநாடிக்கு 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 21 ஆயிரத்து 500 கனஅடி,16 கண் மதகுகள் வழியாக 83 ஆயிரத்து 500 கனஅடி என மொத்தம் 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 200 கனஅடியாக இருந்த நீர்திறப்பு, நேற்று காலை முதல்500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சி-யாகவும் உள்ளது.

கர்நாடக பகுதிகளில் மழை அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் வெள்ள தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திஉள்ளது. நீர்திறப்பு அதிகமாகஉள்ளதால் டெல்டா மாவட்டங்களுக்கு விடுக் கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment