சென்னை, அக்.21 பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரியை அபராதம் இல்லாமல் செலுத்த வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
சென்னை மாநகராட்சி சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 நாள்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2022-2023ஆம் நிதியாண்டின் முதல் அரை யாண்டில், சொத்துவரி சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது 2-ஆம் அரையாண்டுக்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் கடந்த 1-ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது. 18-ஆம் தேதி வரை 5.17 லட்சம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் சொத்து வரியை செலுத்தி உள்ளனர். 2-ஆம் அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் அதாவது 15.10.2022-க்குள் சொத்துவரி செலுத்திய சொத்து உரிமை யாளர்களுக்கு ரூ.4.67 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப் பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி சட்ட விதிப்படி, தாமதமாக சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமை யாளர்கள் செலுத்த வேண்டிய தொகையுடன் கூடுதலாக 2 சதவீதம் தனிவட்டி, அதாவது அபராதத்துடன் சேர்த்து செலுத்த வேண்டும். எனினும், சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப் பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட சொத்துவரியை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கான கால அவகாசம் அடுத்த மாதம் (நவம்பர்) 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, சொத்துவரி சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியை இதுவரை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அடுத்த மாதம் (நவம்பர்) 15-ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்தி 2 சதவீத தனிவட்டியை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment