‘‘ஊசிமிளகாய்''
எல்லாம் வல்ல - எங்கும் நிறைந்த - கருணையே வடிவான ‘கடவுள்' படும்பாடு அதுவும் இந்த பக்த கோடிகளிடமும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்றவர்களிடமும், காவிச் சாமியார்களிடமும் மிகவும் பரிதாபத்திற்குரியது!
ஒரு கடவுள் பிறந்த இடம் என்று கூறி, மறு கடவுள் வழிபாட்டு இடத்தை அடித்து நொறுக்கி, கடப்பாரையைத் தூக்கியவர்கள் கடவுள் மறுப்பாளர்களான நாத்திகர்கள் அல்ல! கடவுளை நம்பி ஆறு வேளை பூஜை செய்வோர்தான்!
எதையாவது நியாயப்படுத்த முடியாவிட்டால், அதற்குச் சமாதானம் கூற ‘கடவுள்தான் சரியான பாதுகாப்பு ஆயுதம்' நமது மதவாதிகளுக்கும், ‘பக்த'கோடிகளுக்கும்!
மனிதர்களைப் பிரித்துப் பேதப்படுத்தி, ‘‘தீண்டாதவர்களாக்கி''. ‘‘நெருங்காதவர்களாக்கி'', ‘‘பார்க்கக் கூடாதவர்களாக்கி'' ஒதுக்கி வைத்த குற்றவாளியாக, கடவுள்மீதுதானே சாஸ்திரங்களானாலும்- வேதங்களானாலும் - மனுதர்மமானாலும் - பகவத் கீதையானாலும் - பழி போட்டு, ஜாதி - தீண்டாமையை இன்றளவும் பாதுகாத்து வருகின்றன, இல்லையா?
வடநாட்டில் காமவேள் நடன சாலையில் வன்கொடுமை புரிந்து சிறையில் கம்பி எண்ணும் காவிச் சாமியார்கள்கூட, ‘தான் கடவுள் அவதாரம்' என்று கூறித்தானே பாலியல் வன்கொடுமை நடத்தினார்கள் என்பது செய்தி அல்லவா?
இப்போது அரசியலுக்கும்கூட கடவுள் நன்கு பயன்பட்டு அரசியல்வாதிகளின் அநியாய அக்கிரமம், ஒழுக்கக்கேடுகளுக்கு நல்ல பாதுகாப்பு அரணாகப் பயன்பட்டு வருகிறார்!
என்னே விநோதம் பாரு! எவ்வளவு ஜோக் பாரு!
முன்பு அமெரிக்காவில் ஜூனியர் புஷ் (Bush) அதிபராக இருந்தபோது, திடீரென்று ஈராக் நாட்டின்மீது படையெடுத்தார். ஏன் என்று கேட்டபோது அந்த அமெரிக்க அதிபர் புஷ் சொன்ன பதில் என்ன தெரியுமா?
‘கடவுள் இவர் கனவில் வந்து ஈராக்
மீது படையெடுக்கச் சொன்னாராம்!'
எப்படிப்பட்ட கிளாசிகல் புருடா!
பார்த்தீர்களா? கடவுள் பக்தர்கள்
கண்டித்து வெகுண்டு எழவில்லையே!
கோவாவில் காங்கிரசு வேட்பாளர்கள் போட்டியிடும்பொழுதே சத்தியம் வாங்கினர்!
சத்தியம், கடவுள் சாட்சியம் எல்லாம் சர்க்கரைப் பொங்கல் தானே! விழுங்கி ஏப்பமும் வந்துவிட்டது!
மேனாள் முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் தலைவர் உள்பட எதிர்க்கட்சியினர் 8 பேர் கட்சித் தாவி, பி.ஜே.பி.யில் சேர்ந்தனர்.
செய்தியாளர்களிடம், ‘‘கடவுள்தான் கட்சி தாவச் சொன்னார்'' என்றார்!
அந்தக் கடவுளும் ஏன் இப்படி கட்சி மாறினார் என்பது புரியவில்லையா?
பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசிகள் மட்டும் உயரவில்லை; டில்லியில் எம்.எல்.ஏ.,க்களின் ‘‘விலை'' 70 கோடிக்கும்மேல் என்றார்கள் சிலர். அந்த சட்டசபை உறுப்பினர்களைக் காத்து வரும் அக்கட்சித் தலைவர்களும் இங்கே - 100 கோடி ரூபாய் என்றெல்லாம், சந்தைக் கடை பேச்சாகி வருகிறது!
அந்தோ ஜனநாயகம் படும்பாடு!
காசேதான் கடவுளடா?
‘இந்தக் காட்சிதான் நம் நாட்டில் காவியடா!' என்ற பாட்டு ஓசைகேட்கிறது!
No comments:
Post a Comment