திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கின்ற, தமிழர்களுக்குக் காலம் தந்திருக்கின்ற மிகப்பெரிய கொடை ஆசிரியர்
சென்னை செப்.12 தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கின்ற, தமிழர்களுக்குக் காலம் தந்திருக் கின்ற மிகப்பெரிய கொடை ஆசிரியர் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன் என்றார் திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி., அவர்கள்.
‘விடுதலை' சந்தா வழங்கு விழா!
கடந்த 6.9.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிவேகள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செய லாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி., அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
இந்த நிகழ்வில் ஏற்புரை நிகழ்த்தவிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,
பாராட்டுரையும், வாழ்த்துரையும் வழங்கியிருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், நாடாளு மன்ற உறுப்பினர் எழுச்சித் தமிழர் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே,
இந்தியக் கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பங்கேற்று இருக் கின்ற அருமைத் தோழர் வீரபாண்டியன் அவர்களே, பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே, அன்புச் சகோ தரர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர் சத்யா அவர்களே, நன்றியுரை நிகழ்த்தவிருக்கின்ற இன்பக்கனி அவர்களே,
வருகை தந்திருக்கின்ற பெரியோர்களே, தாய்மார் களே, பத்திரிகையாளர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தை முதலில் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
‘விடுதலை' 88 ஆண்டுகாலம் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற ஓர் ஏடு. அந்த ஏட்டிற்கு 60 ஆண்டு காலம் நம்முடைய ஆசிரியர் பெருந்தகை அவர்கள் ஆசிரியராக இருந்திருக்கிறார்; இருந்துகொண்டிருக்கிறார், இருப்பார், நீடிக்கிறார்.
ஆசிரியராக ‘விடுதலை’க்கு அவர் பொறுப்பேற்கின்ற பொழுது, நான் பிறக்கவேயில்லை
அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர் கள், அவருடைய வயதும், ‘விடுதலை’ ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஆண்டும் ஒன்று என்று 60 ஆண்டைக் குறிப்பிட்டுச் சொன்னார். ஆசிரியராக ‘விடுதலை’க்கு அவர் பொறுப்பேற்கின்ற பொழுது, நான் பிறக்கவேயில்லை.
நான் பிறக்காத காலத்தில், ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறார்.
ஆசிரியர்கூட இப்பொழுது என்னிடம் சொன்னார், நேரமாகிவிட்டது என்று உரையை சுருக்கிக் கொள்ள வேண்டாம் என்று சொன்னார். நான் சுருக்கமாகத்தான் உரையாற்றப் போகிறேன் அய்யா என்று சொன்னேன்.
இல்லை, இல்லை நீங்கள் விரிவாகவே உரை யாற்றுங்கள் என்று சொன்னார்.
இவர்கள் எல்லோரும் அருகிலிருந்து வாழ்த்துகிறார்கள்; அல்லது வெளித்தளத்திலிருந்து வாழ்த்துகிறார்கள்.
நான் உள்ளபடியே உங்கள் மாணவன்; உங்களை ஆசிரியர் என்று சொல்லுகின்றேன்
எல்லோரும் ஆசிரியர் என்று உங்களைச் சொல் கிறார்கள்; நீங்கள் ‘விடுதலை’ ஆசிரியர் என்பதால், உங்களை ஆசிரியர் என்று சொல்கிறார்கள். நான் உள்ளபடியே உங்கள் மாணவன் என்கிற காரணத்தினால், உங்களை ஆசிரியர் என்று சொல்லுகின்றேன்.
எனவே, அவர்கள் நீண்ட நேரம் பாராட்டலாம்; உங்கள் சொந்த மாணவனாகிய நான் நீண்ட நேரம் பாராட்டவேண்டிய அவசியமில்லை; இருக்காது என்று சொன்னேன், நேரம் கருதி.
எனவே, 60 ஆண்டுகாலம் ஓர் ஏட்டினுடைய ஆசிரியராக இருந்திருக்கிறார், இருக்கிறார்.
எல்லோரும் நிறைய சொன்னார்கள். நான் இதுவரை வெளிவராத, எனக்கும், தலைவர் கலைஞர் அவர் களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றை இந்த மன்றத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
குறைந்தபட்ச செயல் திட்டம்!
தேசிய முன்னணியில் நான் இணையமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலம். பாரதீய ஜனதா கட்சியோடு திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி கொண்டிருந்த காலம்.
குறைந்தபட்ச செயல் திட்டம் ஒன்றைப் போட்டி ருந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கூடாது; பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடாது உள்ளிட்ட மூன்று அடிப்படைக் கொள்கைகளைச் சொல்லி கூட்டணி வைத்துக் கொண்டோம்.
அது ஆசிரியர் அவர்களுக்கு ஒவ்வாத ஒன்று. திராவிடர் கழகத்திற்கு ஏற்புடைய ஒன்றல்ல.
என்னை விமர்சித்தால்தான் அவர் வீரமணி - இல்லையென்றால், அவர் ஈரமணி ஆகிவிடுவார்: கலைஞர்
‘விடுதலை’யில் விமர்சனங்கள் வரும். சில நேரங்களில் கடுமையாக ஆசிரியர் அவர்கள் எழுதுவார். அந்த ‘விடுதலை’யை நாங்கள் மறைக் கப் பார்ப்போம், தலைவர் படிக்கக் கூடாது என்று.
ஆனால், அவர் எல்லாவற்றையும் பார்த்து விட்டு, எங்கே ‘விடுதலை’ என்று கேட்பார்.
கொண்டு போய் கொடுப்போம்.
ஆசிரியர் அவர்கள் கடுமையாகச் சாடியிருக் கிறார்; அறிக்கை எழுதியிருக்கிறார் என்று சொல்வார்கள்.
நாம் பதில் எழுதலாமா என்று கேட்பார்கள், ‘முரசொலி'யில்.
கலைஞர் சொல்வார், ‘‘நம்முடைய கூட்ட ணியை விமர்சித்து வந்தால்தான் அதற்குப் பெயர் ‘விடுதலை’ - இந்தக் கூட்டணியைத் தாக்கி என்னை விமர்சித்தால்தான் அவர் வீரமணி - இல்லையென்றால், அவர் ஈரமணி ஆகிவிடுவார்'' என்றார்.
இரண்டு பேருக்கும் உள்ள ஆளுமைகள் - அதனை நான் எண்ணிப் பார்க்கிறேன். இங்கேகூட சொன்னார் கவிஞர், திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று.
திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
அநேகமாக 1980 ஆம் ஆண்டு என்று நினைக் கின்றேன், சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில், சகோதரி அருள்மொழி அவர்கள் பேசினார்கள் அப் பொழுது சிறு பெண்ணாக - அந்த நிகழ்வில் கலைஞர் சொன்னார், ‘‘இந்த மாநாட்டில் நான் குறிப்பிட விரும்புகிறேன். அண்ணா சொன்னார், திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று; நான் இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொல்கிறேன், திராவிடர் கழகமும் - திராவிட முன்னேற்றக் கழகமும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்'' என்று அந்தக் கூட்டத்தில்தான் சொன்னார்.
கலைஞரும், ஆசிரியரும் எப்படி இருந்தார்கள்; என்ன பேசுவார்கள்? என்ன அறிக்கை ‘விடுதலை’யில் வரவேண்டும் என்று முதலமைச்சர் விரும்புவார்; சொல்லியனுப்புவார்; இரட்டைக் குழல் துப்பாக்கியை நான் கேட்டிருக்கிறேன்; நாணயத்தின் இரண்டு பக்கங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறாரே, வணக்கத்திற்குரிய அண்ணன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற திராவிட மாடலின் அடையாளம். அவர் ஆசிரியரோடு எப்படி இருக்கிறார் என்பதைப் பார்க்கிறேன்.
இரட்டைக் குழல் துப்பாக்கி - ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இப்பொழுது தி.மு.க.வும், திராவிடர் கழகமும் எப்படி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், எனக்கு ஒரு கவிதை நினைவிற்கு வருகிறது.
ஒற்றுமையாக - ஒரே கருத்தில்
எப்படி இருக்கவேண்டும்?
கலீல் ஜிப்ரான் சொல்லுவான், எப்படி ஒற்றுமையாக இருக்கவேண்டும்; எப்படி ஒரே கருத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னால்,
வீணையின் நரம்புகளைப் போல
வெவ்வேறானவர்களாக இருங்கள் -
வீணையின் நரம்புகளைப் போல
வெவ்வேறானவர்களாக இருங்கள் -
ஆனால், விரல் மீட்டுகிறபொழுது -
காலம் மீட்டுகிறபொழுது - நீங்கள்
எழுப்புகின்ற இசை ஒன்றாக இருக்கட்டும்
என்று சொல்வார்.
ஒரே நாதம்,
பெரியார் - பகுத்தறிவு - சமூகநீதி
முதலமைச்சரும், ஆசிரியரும் இன்றைக்கு இயக்கு கின்ற இந்த இரண்டு இயக்கங்களும் - இரு வேறு இயக்கங்கள்; இரு வேறு தலைவர்கள் - ஆனால், பெரியார் என்கின்ற அந்தப் பகுத்தறிவு கொள்கை எப்பொழுதெல்லாம் விரலால் மீட்டப்படுகிறதோ, அப் பொழுது இந்த இரண்டு தலைவர்களும், இரண்டு இயக்கங்களும் எழுப்புகின்ற நாதம் ஒன்று; அந்த ஒரே நாதம், பெரியார் - பகுத்தறிவு - சமூகநீதி.
எனவே, அந்தத் தொடர் ஓட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஆசிரியரை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், அதனுடைய துணைப் பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் வாழ்த்துகின்றேன்.
எனக்கு அவர் ஆசிரியர். ஒன்றைச் சொல்லவேண்டும் - 1981 ஆம் ஆண்டு முசிறி கல்லூரியில் நான் இளங்கலை கணிதப் பட்டம் முதலாண்டு படித்தபொழுது, மண்டல் கமிஷனுக்கான பயிற்சி முகாமிற்குச் சென்றிருந்தேன். ஆசிரியரை நேரிடையாக சந்தித்தது அப்பொழுதுதான்.
தமிழர்களுக்குக் காலம் தந்திருக்கின்ற மிகப்பெரிய கொடை ஆசிரியர்
நிறைவு விழாவில் பேசினார் - பரம்சிவம் மண்டபத்தில்தான் அந்தக் கருத்தரங்கம் நடந்தது. இன்றைக்கு ஏறத்தாழ 40 ஆண்டுகள் ஆகி விட்டன; அன்றைக்குப் புத்தகத்தோடு பேசிய அதே குரல், அதே வேகம், அதே விவேகம், அதே வீச்சு, அதே சிந்தனைத் தெளிவு - இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், 1981 இல் ஆ.இராசா எந்த ஆசிரியரைப் பார்த்தேனோ, அதே ஆசிரியர், இன்றைக்கும் இந்த மேடையிலே, அதே வீரியத் தோடு, விவேகத்தோடு, சிந்தனைத் தெளிவோடு இருக்கிறார் என்றால், உள்ளபடியே தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழங்கியிருக்கின்ற, தமிழர்களுக்குக் காலம் தந்திருக்கின்ற மிகப்பெரிய கொடை ஆசிரியர் என்பதை நான் இந்த நேரத்தில் எண்ணி மகிழ்ச்சியடைகின்றேன்.
எல்லோரும் சொன்னார்கள், ஒரு சவாலான கால கட்டம் - இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே ஆபத்து. தனி மனிதன் கெட்டுப் போகலாம்; கேவலப்படலாம்; அதைத் திருத்திக் கொள்வதற்கு இன்னொரு மனிதன் வருவான்.
தகுதியும், ஆற்றலும் வாய்ந்த ஒரு தலைவர் நம்முடைய ஆசிரியர்!
ஆனால், இந்த ஒன்றிய ஆட்சியில்தான், எல்லா நிறுவனங்களும், அது உச்சநீதிமன்றமாக இருந்தாலும், தேர்தல் ஆணையமாக இருந்தாலும், நாடாளுமன்றமாக இருந்தாலும், சி.பி.அய்.யாக இருந்தாலும், அமலாக்கத் துறையாக இருந்தாலும், எல்லா நிறுவனங்களையும் தன் கையகப்படுத்தி, அவற்றை காவி மயமாக்கக் கூடிய அந்த முயற்சியில், இந்த அரசு ஏறத்தாழ வெற்றி பெற்று விடுமோ என்கின்ற அளவிற்குப் போய்க் கொண் டிருக்கின்றது என்பதை, இந்தியாவிற்குச் சொல்லக்கூடிய தகுதியும், ஆற்றலும் வாய்ந்த ஒரு தலைவர் நம்முடைய ஆசிரியர்; அதனை வெளிக்கொணரக் கூடிய ஓர் ஏடு, ‘விடுதலை' ஏடு.
‘விடுதலை'க்கு முன்னாலும் ‘முரசொலி' தேவை; விடுதலை அடைந்துவிட்டாலும் ‘முரசொலி' தேவை.
‘விடுதலை’யும், ‘முரசொலி’யும் இணைந்துதான்!
எனவே, திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், ‘விடுதலை'யும், ‘முரசொலி'யும் இணைந்துதான் இந்த மோடியை, அமித்ஷாவை, காவிக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும்.
இங்கே சொன்னார்கள், அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற மதச்சார்பின்மை (செக்குலர்), சமத்துவம் (சோசலிஸ்ட்) என்கின்ற இரண்டு வார்த்தையை எடுத்துவிடவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் என்று.
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens
இந்திய மக்களாகிய நாங்கள், இந்தியக் குடியரசை எவ்வாறு உருவாக்கியிருக்கின்றோம் என்றால், இதை ஒரு மதச்சார்பற்ற நாடாக, சமதர்ம நாடாக, இறை யாண்மை உள்ள குடியரசாக.
இதைக் கேள்விக் கேட்டு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றார்கள் -1972-1976 - கேசவானந்த பாரதி வழக்கு. 13 உச்சநீதிமன்ற நீதிபதிகள் - 68 நாள்கள் வழக்கை விசாரித்தார்கள். மிகப்பெரிய வழக்குரைஞர் பல்கிவாலா வாதாடினார்.
68 நாள்கள் தொடர்ந்து வழக்கின் விசாரணை நடந்து, 13 உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்ந்து தீர்ப்பு சொன் னார்கள்.
நாடாளுமன்றத்திற்கே உரிமை கிடையாது
அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப்புரை உள் ளிட்ட அடிப்படை பண்புகளை மாற்றுவதற்கு, நாடாளு மன்றத்திற்கே உரிமை கிடையாது.
எந்த அரசியல் சாசனம் எங்கே நிறைவேறியதோ - எந்த அரசியல் சாசனத்தைத் திருத்துவதற்குத் தகுதி உடையதோ, அந்த நாடாளுமன்றமே கை வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தினுடைய 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு சொன்னதற்குப் பிறகு, இப்பொழுது ஒரு வழக்கை மீண்டும் நீக்கவேண்டும் என்று கொண்டு வருகிறார்கள் என்றால், அதையும் வழக்காக நாங்கள் விசாரிப்போம் என்று சொல்லுகின்ற அளவிற்கு, இந்த நாட்டில் நிலைமை வந்துவிட்டது என்று சொன்னால், இதைவிடக் கொடுமை வேறு என்னவாக இருக்க முடியும்?
என்னை ஏன் இந்துவாக வைத்திருக்கிறாய்? என்று கேட்கின்ற உரிமை நமக்கு வரவேண்டும்
சனாதனம், இந்துத்துவா, நாம் இனிமேலும் சொல்லத் தயங்கக்கூடாது; ‘விடுதலை'யாகட்டும், ‘முரசொலி'யாகட்டும், ‘தீக்கதிர்' ஆகட்டும் எல்லா வற்றிலும் யார் இந்து? நான் இந்துவாக இருக்க விரும்பவில்லை? என்னை ஏன் இந்துவாக வைத் திருக்கிறாய்? என்று கேட்கின்ற உரிமை நமக்கு வரவேண்டும்.
இப்படி ஒரு மதத்தை நாம் பார்த்ததில்லை. லிங்காயத்துகள் உச்சநீதிமன்றத்தில் மனு போடு கிறார்கள்; எங்களுடைய வழிபாட்டு முறை வேறு; எங்களுடைய ஆன்மிகக் கொள்கை வேறு; எங் களை இந்துவாக ஆக்காதே என்று சொல்கிறார்கள்.
சூத்திரனாக இருக்கின்றவரை
நீ விபச்சாரியின் மகன்
ஆனால், உச்சநீதிமன்றம் சொல்லுகிறது, இல்லை,
நீ கிறித்துவனாக இல்லை என்றால்,
நீ இஸ்லாமியனாக இல்லை என்றால்,
நீ பார்சியாக இல்லையென்றால், நீ இந்துவாகத்தான் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது.
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா?
இந்துவாக இருக்கின்ற வரை நீ சூத்திரன்.
சூத்திரனாக இருக்கின்றவரை நீ விபச்சாரியின் மகன்.
இந்துவாக இருக்கின்ற வரை நீ பஞ்சமன்.
இந்துவாக இருக்கின்ற வரை நீ தீண்டத்தகாதவன்.
எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகின்றீர்கள்? என்கின்ற கேள்வியை உரக்கச் சொன்னால்தான், அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை, ‘விடுதலை'யும், ‘முரசொலி'யும், திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிடர் கழகமும் எடுக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.
எனவே, அந்தக் காலத்தின் தேவைக்காக ஆசிரியர் இன்னும் பல பணிகளை, பல்லாண்டு காலம் நீங்கள் வெற்றி பெறவேண்டும் பெரியாரை - நீங்கள் வெற்றி பெறவேண்டும் தலைவரை வாழ்நாட்களில்.
எங்கள் சுயநலத்திற்காக, தமிழர்களின் சுயநலத்திற்காக உங்கள் தியாகம் தொடரவேண்டும்
பெரியார் வாழ்ந்த காலத்தைவிட அதிகமாக, கலைஞர் வாழ்ந்த காலத்தை விட அதிகமாக அந்தக் கொள்கைகளைக் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை உங்கள் தோள்களில் இருக்கிறது. அந்தக் கடமையை உங்கள் தோளில் இருந்து நிறைவேற்றும்வரைதான் நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்.
எங்கள் சுயநலத்திற்காக, தமிழர்களின் சுயநலத்திற்காக உங்கள் தியாகம் தொடரவேண்டும் - வாழ்க பல்லாண்டு என்று சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.இராசா எம்.பி., அவர்கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment