அசாம் கற்பிக்கும் பாடம் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 12, 2022

அசாம் கற்பிக்கும் பாடம் என்ன?

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியானதில் தேர்ச்சி சதவீதம் படுமோசமாக வீழ்ச்சியடைந் திருந்தது.

2018ஆம் ஆண்டிலிருந்து தேர்ச்சி சதவீதம்  தொடர்ந்து பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள 34 பள்ளிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என்பது மாநில அரசுக்கே பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

மேலும் 68 பள்ளிகளில் வெறும் 10 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் பூஜ்ஜியம் தேர்ச்சி சதவீதம் அடைந்த 34 பள்ளிகளை நிரந்தரமாக மூடும் முடிவிற்கு அசாம் மாநில அரசு வந்துள்ளது. இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர் ரனோஜ் பெங்கு கூறுகையில், பள்ளிகளின் முதன்மையான பணி என்பது போதிய கல்வியை அளிப்பது தான். அதைப் பள்ளிகள் உறுதி செய்யாவிடில் எப்படி மாணவர்கள் தேர்ச்சி பெறுவர்? இந்தச் சூழலில் பள்ளிகளை நடத்துவதில் அர்த்தமே இல்லை.

 பூஜ்ஜியம் தேர்ச்சி சதவீதத்துடன் மக்கள் வரிப்பணத்தை வீணாக்கிப் பள்ளிகளை நடத்த அரசு விரும்பவில்லை என்று கோபத்துடன் கூறியிருக்கிறார். எனவே 34 பள்ளிகளை மூடினால் அங்கு படிக்கும் மாணவர்களை எங்கு சேர்ப்பது? என்ற கேள்வி எழுகிறது. இதற்குப் பதிலளித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், பூஜ்ஜியம் தேர்ச்சி சதவீதம் கொண்ட பள்ளிகளை மூடுவது என முடிவெடுக்கப்பட்டு விட்டது. அங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, அருகிலுள்ள பள்ளிகளில் சேர்க்க வாய்ப்பளிக்கப்படும் என்று தெரிவித்தனர். அசாம் மாநிலத்தில் கல்விச் சூழல் இப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணம் அங்கு பள்ளிகள் தோறும் வளர்ந்த மதவாத சிந்தனைகள் தான்.  மூன்று முறை(2001-2016) காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த தருண் கோகாய் காலத்தில் அந்த மாநிலத்தின் கல்விவளர்ச்சி என்பது தென் மாநிலங்களிற்கு அடுத்த இடத்தில் அசாம் உள்பட வட கிழக்கு மாநிலங்கள் என்ற நிலையில் இருந்தது. 

ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு மதவாத அமைப்புகள் கிராமம் கிராமமாக புகுந்து, மக்களிடையே பிரிவினையை விதைக்கத் துவங்கின. ஏற்கெனவே எல்லை நாடான வங்கதேச மக்களால் தங்களின் வாழ்வாதாரம் சிதைந்துகொண்டு இருக்கிறது என்று நினைத்துக்கொண்டு இருந்த அசாம் மக்களிடையே  - வங்கதேச இஸ்லாமியர் களால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று மதவாத நஞ்சை ஹிந்துத்துவ அமைப்புகள் தூண்டிவிட்டன. அதற்கேற்றாற் போல் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றைக் கொண்டுவந்து இஸ்லாமியர்களை ஒடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று பரப்புரை செய்து பாஜகவெற்றி பெற்றது,  பாஜக விரித்த வலையில்  அசாம் மக்கள் வசமாக சிக்கிக் கொண்டனர். 

அசாம் மாநில முதலமைச்சரோ வாத்து அதிகம் வளர்த்தால் ஆக்ஸிஜன் பெறலாம், மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட்  மடிக்கணனி போன்றவை வந்து விட்டது. 

 கவுரவர்களின் தந்தை அரண்மனையில் இருந்தே போர் குறித்த செய்திகளை இண்டர்நெட் மூலம் அறிந்துகொண்டார் என்று பேசினார்.  ஒருமுதலமைச்சர் இப்படிப் பேசும் போது அதன் தாக்கம் மக்களிடையே எப்படி இருக்கும்? குறிப்பாக மாணவர்களிடையே எப்படி இருக்கும்? 

அதே போல் அங்குள்ள கல்வி அமைச்சர் கிராம சபையில் நடந்த ஒரு உரையாடலில், “படிக்காவிட்டால் கவலை வேண்டாம் - விவசாயவேலை, தோட்டவேலை உள்பட பலவேலைகள் நமக்கு இருக்கின்றன. 'படித்துவிட்டு பணம் ஈட்டி கடையில் கொடுத்து பொருட்கள் வாங்குவோம். ஆனால் விவசாயியோ, தோட்டவேலைக்காரர்களோ அனைத்தையும் தாங்களே உற்பத்தி செய்து கொள்வார்கள்" என்று அம்மாநில கல்வி அமைச்சரே பேசும் போது மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அதன் வெளிப்பாடுதான் அம்மாநிலத்தில் 10-ஆம் வகுப்பில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 34 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. 

 இப்போது தேர்ச்சி பெறாத பள்ளிகளை அரசு இழுத்து மூட உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்றால் ஆசிரியர்களுக்குச் சரியான பயிற்சியைக் கொடுத்து தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும்.  ஆனால் அசாம் பிஜேபி அரசோ  தலைகீழாகச் சிந்திக்கிறது - பள்ளிகளையே இழுத்து மூடச்சொல்லி விட்டது. 

அரசு மூட முடிவெடுத்துள்ள பள்ளிகள் அனைத்துமே கிராமப்பகுதியில் உள்ள பள்ளிகள் ஆகும். இதன் மூலம் பல கிராமங்களில் கல்வி என்பதே இல்லாமலே போய் அங்கே வெறும் அடிமைச் சேவகம் புரியும் எதிர்கால சந்ததிகள் மட்டுமே எஞ்சி நிற்பார்கள். இதைத்தானே ஆர்.எஸ்.எஸ் நாடுமுழுவதும் செய்ய முயற்சி செய்துவருகிறது. 

புதியக் கல்விக் கொள்கை என்பதே சூத்திரர்களுக்கு - 

பஞ்சமர்களுக்கு சென்று சேரும் கல்வியை தடுத்துவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே கொண்டதாகும். கரு நாடகாவிலும் கல்வி தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு மிகவும் மோசமான பின்னடைவை அடைந்துவிட்டது.  மதவாத அமைப்புகளின் பிடியில் நிர்வாகம் சென்றால் அம்மாநிலத்தின் எதிர்காலம் பாழாய்ப்போய்விடும் என்பதற்கு கல்வியில் சிறந்து விளங்கிய அசாமும் - கருநாடகமுமே எடுத்துக்காட்டாக இந்தியாவிற்கு திகழ்கின்றன.

இந்தத் துணைக் கண்டமே அசாம் ஆகாமல் தடுக்கப்பட வேண்டுமானால் சங்பரிவாரை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் வீழ்த்த வேண்டும்! 

எல்லா வகையிலும் காவி தத்துவத்துக்கு சமாதி எழுப்பப்பட வேண்டும்.

அசாம் சொல்லிக் கொடுக்கும் பாடம் இதுதான்!

No comments:

Post a Comment