'விடுதலை' நாளிதழில் ஆகஸ்டு 31 அன்று வெளியான "அரட்டை அடிப்பது ஆளுநருக்கழகல்ல" தலையங்கம் வாசித்தேன், கடவுள், மதம், ஜாதி இவைகளுக்கு அப்பாற்பட்ட பணியில் திறம்பட செயலாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டு, மதப் பிரச்சாரத்தை கையில் எடுத்துக் கொண்டு வலம்வரும் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், திருக்குறள் பற்றி பேசியது கண்டு "தவளை தன் வாயால் கெடும்" என்ற சொற்றொடர்தான் நினைவுக்கு வருகிறது.
பிரதமர் முதல் ஆளுநர் வரை பா.ஜ.க. வகையறாக்கள் திருக்குறளை சொல்லிக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை எளிதில் ஏமாற்றி விடலாம் என நப்பாசை கொள்கிறார்கள்.
கடவுள், மதம் என்ற வகைக்குள் பிசைந்து மக்களை பாடாய் படுத்தும் பா.ஜ.க.வினர் தற்போது மொழியின் வழியாக புகுந்து விடலாம் என கனவு காண்கிறார்கள்.
திருக்குறள் என்பதில் பல்வேறு கருத்துகளை கோடிட்டு காட்ட இயலாமல் 'கடவுள்' வாழ்த்து என்பதை தேடிப்பிடித்து மக்களிடம் அறியாமையை போக்கி உண்மையை உணர்த்துவது போன்று ஒரு நினைப்பு பாஜகவின் சேவகரான ஆளுநருக்கு.
விடை தருவது மட்டும் அல்ல, வினாதொடுக்கச் செய்வதும் தமிழர்களின் நூல்கள் என்பதை, பாஜகவின் ஆளுநர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. கடவுள், மதம் என்ற சொற்கள் இடம்பெறாத திருக்குறள் பற்றி எதற்கு ஆளுநர் விளக்கம் தரவேண்டும்?
கடவுள் வாழ்த்து எனப்படும் முதல் அதிகாரமே திருவள்ளுவர் எழுதியது கிடையாது என்று வ. உ. சிதம்பரனார் ஆய்வு செய்துள்ளார் என்ற வரலாற்று உண்மை செய்திகளை வெளியிட்டு, ஆளுநருக்கு பதிலடி தந்த 'விடுதலை' யின் தலையங்கம் நன்று.
தமிழன் என்று சொன்னால் பார்ப்பான் அங்கே புகுந்து விடுவான், திராவிடன் என்று சொன்னால் பார்ப்பான் நுழைய முடியாது என்று தொலைநோக்கு சிந்தனையோடு பகுத்தறிவுப் பகலவன் பெரியார் சொன்னது உண்மை என விளங்குகிறது.
ஆளுநரால் திருக்குறள் நூலின் மூலம் மதச்சாயம் என்ற நூலை கோக்க முடியாமல் போய்விட்டது.
- மு.சு. அன்புமணி, மதுரை 625020
No comments:
Post a Comment