உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலேசிய நாட்டில் உள்ள பினாங், பேரா, கெடா மாநிலங்களில் சிறப்பான கொண்டாட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 27, 2022

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா மலேசிய நாட்டில் உள்ள பினாங், பேரா, கெடா மாநிலங்களில் சிறப்பான கொண்டாட்டம்

சமூக மாற்றத்தை இந்தியாவில் ஏற்படுத்தியவர் பெரியார் - பினாங்கு மாநில மேனாள் முதலமைச்சர்  லிம் குவான் யெங் பெருமிதம்

மலேசிய திராவிடர் கழகம் பினாங் மாநில கழகத்தின் சார்பில் பட்டர் ஒர்த்தில்18.9.2022அன்று தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது .அவ்விழாவில் கலந்துகொண்டு மேனாள் மலேசிய நாட்டின் நிதி அமைச்சரும் ,பினாங்கு மாநில மேனாள் முதலமைச்சர், இந்நாள் பாஹான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் யெங் அவர்கள் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பெருமிதத்தோடு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். நாட்டில் அண்மையில் கட்சித் தாவல் தடை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்துள்ளோம். இதன் வழி இந்நாட்டிலும் சமூக நீதியை நிலைநாட்டி உள்ளோம். மக்கள் வாழ்வு மேம்பாடு அடைய பல முயற்சிகளை, திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். தந்தை பெரியாரின் சமுதாயம் சீர்திருத்த புரட்சி பெருமைபடத்தக்கது .சமூக மாற்றத்தை இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரியார் ஏற்படுத்தி உள்ளார் .ஜாதி ஒழிந்தசமத்துவ சமுதாயம் மலர பெரியார் பாடுபட்டுள்ளார் .சமூக நீதி தத்துவத்தை பறைசாற்றிய பெரியார் ஏற்படுத்திய மாற்றம் பெரிய அளவில் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது .தந்தை பெரியார் தமிழ் சமுதாயத்தை தன்மானத்தை கிளர்ந்தெழச் செய்த வித்தகர் .அவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என திராவிடர் தோழர்கள் கேட்டுக்கொண்ட போது நான் மறுக்காமல் ஒப்புக்கொண்டேன். விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனக் குறிப்பிட்டார்.

 


மலேசிய நாட்டின் பேரா மாநிலம் ஈப்போ நகரில் தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா 25.9.2022 அன்று ஞாயிறு காலை 10:30 மணி முதல் ஒரு மணி வரை பண்டார் ஈப்போ ராயா மேடான் இஸ்தானில் மாநிலத் தலைவர் இரா கங்கையா தலைமையில் தேசிய தலைவர் அண்ணாமலை முன்னிலையில் நடைபெற்றது. பேரா மாநில செயலாளர் கோபி வரவேற்பு உரையாற்றினார். தேசிய துணை தலைவர் பாரதி, பொருளாளர் கிருஷ்ணன், விந்தை குமரன், ஊடகவியலாளர் அலி கோவிந்தராஜ், மாநில செயலவை உறுப்பினர் அர்ஜுனன், கவிஞர் எலிஸ் பாலன் ஹெலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மனிதநேய காவலர் பெரியார் என்பதான விளக்க உரை ஆற்றினார். திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகம் பெரியாரின் போர்வாள் விடுதலை சந்தா சேர்க்கை பற்றியும் அவரின் உரையில் குறிப்பிட்டார். முடிவில் தேசிய துணைச் செயலாளர் நாகேந்திரன் நன்றி கூறினார்.

மலேசிய நாடு பேராக் மாநில திராவிடர் கழக 36 ஆம் ஆண்டு பேராளர் மாநாடு பி எஸ் எம் மாநில அலுவலகத்தில் 25.9.2022 அன்று பகல் 1:30 மணி அளவில் தொடங்கி மூன்று மணி வரை மாநில தலைவர் கங்கையா தலைமையில் நடைபெற்றது. தேசிய தலைவர் அண்ணாமலை மாநாட்டை தொடக்கி வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து பரப்புரைக்கு வந்திருக்கக் கூடிய பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் சிறப்பு அழைப்பாளராக மாநாட்டில் பங்கேற்றார். மாநில செயலாளர் கோபி ஆண்டறிக்கை வாசித்தார். மாநில துணைச் செயலாளர் நாகேந்திரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார் 2021 ஆம் ஆண்டின் செயல்பாட்டு அறிக்கை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்டது. தேசிய மற்றும் மாநில கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்

மலேசிய கெடா மாநிலம் தாமன் கிலாடியில் நடந்த பெரியார் விழா

கெடா மாநிலம் தாமன் கிலாடியில் 24.9.2022 சனி இரவு 5 மணி முதல் ஒன்பது முப்பது மணி வரை தந்தை பெரியார் 144ஆவது பிறந்தநாள் விழா மாநில தலைவர் பாலன் குமரன் தலைமையில் நடைபெற்றது. மலேசிய தி.க தேசிய தலைவர்  அண்ணாமலை முன்னிலை வகித்தார் மாநில செயலாளர் லலிதா குமாரி வரவேற்புரை ஆற்றினார். சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தேசிய துணை தலைவர் பாரதி தேசிய மத்திய செயற்குழு உறுப்பினர் குமரன் கம்பம் ராஜா கிளை தலைவர் கதிரவன் கூலிம்விக்டர் கிளைக் கழகத் தலைவர் செல்லையா ஆகியோர் பேசிய பின் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் மூடநம்பிக்கைகள் இனத்தின் முட்டுக்கட்டைகள் என்பதான தலைப்பில் விளக்கிப் பேசினார். மாணவர்களுக்கு வண்ணம் தீட்டும் போட்டியும் நடைபெற்றது. அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன எம்ஜிஆர் வேடமிட்ட செல்லையா நடனம் ஆடினார் முடிவில் செல்லையா நன்றி கூறினார்.


No comments:

Post a Comment