தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்திருக்கிறார் - ஆசிரியர் அவர்களைப் பாராட்டுவதற்கு உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 22, 2022

தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்திருக்கிறார் - ஆசிரியர் அவர்களைப் பாராட்டுவதற்கு உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை!

திராவிட இயக்கத்தின் முதுகெலும்பாக இருக்கக்கூடியது ‘விடுதலை!’

‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  

மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புரை

சென்னை, செப்.22 ‘விடுதலை' பத்திரிகை என்பது வெறும் பத்திரிகை மட்டுமல்ல - திராவிட இயக்கம் அல்லது பகுத்தறிவு இயக்கம் தோன்றி ஏறக்குறைய நூறாண்டுகள் நிறைவடைந்திருக்கின்றது என்று சொன் னால், அந்த இயக்கத்தை, நூறாண்டுகள் நடத்துவதற்கான அதனுடைய முதுகெலும்பாக, அதனுடைய ஆர்கனை சராக செயல்படுவதற்கான அந்தப் பத்திரிகை பலம் ‘விடுதலை’தான் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் 

கே.பாலகிருஷ்ணன் அவர்கள்.

‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!

கடந்த 6.9.2022 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று இருக்கின்ற திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

வரவேற்புரை வழங்கியிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களே,

இந்த விழாவினுடைய கதாநாயகரும், இறுதியாக இங்கே ஏற்புரை வழங்கவிருக்கக்கூடிய எங்களுடைய மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய திராவிடர் கழகத் தலைவரும், ‘விடுதலை' ஆசிரியருமான அய்யா வீரமணி அவர்களே,

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இங்கே உரையாற்ற வருகை தந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான மரியாதைக்குரிய ஆ.இராசா எம்.பி., அவர்களே,

எனக்குப் பின் உரையாற்ற உள்ள விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் அன்பிற்குரிய தோழர் தொல்.திருமாவளவன் அவர்களே,

எனக்குமுன் உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எச்.எம்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அன்பிற்குரிய மு.வீரபாண்டியன் அவர்களே,

உரையாற்றி அமர்ந்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய மல்லை சத்யா அவர்களே,

மற்றும் இந்த நிகழ்வில் நன்றியுரையாற்றவிருக்கின்ற திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி அவர்களே,

திரளாகத் திரண்டிருக்கின்ற அன்பிற்குரிய நண்பர் களே, தோழர்களே, ஊடக நண்பர்களே உங்கள் அனை வருக்கும் என்னுடைய முதற்கண் பணிவான வணக்கம்.

இன்னும் பல பத்தாண்டுகள் 

நீடித்து வாழவேண்டும்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ‘விடுதலை' ஏட்டினுடைய ஆசிரியராக 60 ஆண்டு காலத்தை நிறைவு செய்து, இன்னும் பல பத்தாண்டுகள் நீடித்து வாழ்வதோடு, தன்னுடைய இறுதிமூச்சு வரையில் ‘விடுதலை’  ஆசிரியராகத் தொடர்ந்து பணியாற்றவிருக் கின்ற அன்பிற்கும், மரியாதைக்கும் உரிய திரு.ஆசிரியர் அவர்களுக்கு, எங்களுடைய நெஞ்சார்ந்த பாராட்டு களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 

திராவிட இயக்கத்தினுடைய மய்யமாகத்

திகழ்ந்த இடம்!

மரியாதைக்குரிய ஆசிரியர் வீரமணி அவர்கள், இன்னும் சொல்லப்போனால், எங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபொழுது, அன்றைக் கெல்லாம்  அண்ணாமலைப் பல்கலைக் கழகம் திராவிட இயக்கத்தினுடைய மய்யமாகத் திகழ்ந்த ஓர் இடம்.

அங்கே இருக்கின்ற சிவன் கோவிலுக்கு அருகில்தான், தந்தை பெரியாரின் கூட்டமும், ஆசிரியர் அவர்களின் கூட்டமும் அடிக்கடி நடைபெறும்.

நாங்கள் மாணவராக இருந்தபொழுதே அக்கூட்டங் களில் கலந்துகொள்கின்ற வாய்ப்பினைப் பெற்றவன் நான் என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு நினைவுகூர விரும்புகின்றேன்.

உண்மையிலேயே சொல்லவேண்டும் என்று சொன்னால், எங்களைப் போன்றவர்கள், இன்றைக்கு மேடையில் உரையாற்றும்பொழுது, மக்கள் புரிந்து கொள்கின்ற அளவிற்குப் பல விஷயங்களை எடுத்துச் சொல்கிறோம் என்று சொன்னால், என்னைப் பொறுத்த வரையில் அதற்கு ஒரு பங்களிப்பு ஆற்றியிருப்பவர் ஆசிரியர் வீரமணி என்பதை நான் பெருமையோடு இந்த நேரத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.

பொதுமக்களுக்குப் புரிகின்ற வகையில் 

எளிய முறையில் விளக்கக் கூடியவர்

ஏனென்று சொன்னால், எவ்வளவு கடினமான விஷயமாக இருந்தாலும், சாதாரணமாகப் பொதுக் கூட்டத்தில் பேசி, பொதுமக்களுக்குப் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களைக்கூட, மிக எளிய முறையில், எல்லோருக்கும் விளங்கக்கூடிய வகையில், அவ்வளவுத் தெள்ளத்தெளிவாகப் பேசுவது, விளக்கம் அளிப்பது என்பது  தனித்திறமை என்பதை இந்த நேரத்தில் நான் இங்கே நினைவு கூறி பாராட்ட விரும்புகிறேன்.

அது இட ஒதுக்கீடு பிரச்சினையாக இருக்கலாம்; அல்லது வருணாசிரம பிரச்சினையாக இருக்கலாம்; அல்லது ஹிந்து மத தர்மம் என்று சொல்லுகின்ற அப்படிப்பட்ட அநீதிகளாக இருக்கலாம்.

பொதுக்கூட்டத்தில் எல்லா விஷயங்களையும் பேசி, புரிய வைப்பது என்பது சாதாரணமானதல்ல. ஆனால், ஆசிரியர் அவர்களுக்கு இருக்கின்ற தனித் திறமை என்னவென்று சொன்னால், எவ்வளவு கடினமான விஷயங்களைக்கூட மிக எளிமையாகச் சொல்லி விளங்க வைப்பார். அவரது உரையைக் கேட்கின்ற, படிப்பறிவில்லாத ஒரு சாதாரணமானவர்கூட புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு, அதை எடுத்து இயம்புகிற அந்தப் பாங்கை அவரிடமிருந்துதான் நாம் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

உரிய தரவுகளோ, உரிய ஆதாரங்களோ இல்லாமல் உரையாற்றமாட்டார்!

அதேபோல, எந்த ஒரு கூட்டத்தில் பேசினாலும் சரி, அது அரங்கக் கூட்டமாக இருக்கலாம்; பொதுக்கூட்டமாக இருக்கலாம்; அல்லது தலைவர்கள் கூடி பேசுகிற ஆலோசனைக் கூட்டமாக இருக்கலாம்; எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும், உரிய தரவுகளோ, உரிய ஆதாரங்களோ இல்லாமல், போகிற போக்கில் எதை யாவது பேசிவிட்டுப் போகவேண்டும் என்று அப்படிப் பட்ட பண்பை அவரிடம் நாம் பார்க்க முடியாது.

எல்லா விஷயங்களுக்குமான தரவுகளையும், அவர் மேடைக்கு வருகிறபொழுதே, ஒரு பெரிய கட்டுப் புத்தகத்தோடோ அல்லது ஒரு பையுடனோதான் வருவார். 

அரசமைப்புச் சட்டத்தைப்பற்றி ஒரு விஷயத்தை விளக்கவேண்டும் என்று சொன்னால், அதில் இத்தனை யாவது சரத்திலே, இப்படித்தான் சொல்லியிருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லி விளக்குகின்ற அளவிற்கு, எல்லாவிதமான தரவுகளையும், ஆதாரங்களையும் சேர்த்து அப்படிப் பேசுகிற, அப்படி எழுதுகிற பண்புதான் - ஆசிரியரிடத்தில் இருக்கிற சிறந்த பண்பு என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

பொதுக்கூட்டங்களில் பேசுகிறவர்கள் அல்லது பத்திரிகைகளில் எழுதுகிறவர்கள் அந்தப் பண்பினைக் கடைப்பிடிப்பது மிகமிகச் சிறந்தது என்பதை நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன். 

ஆசிரியரிடமிருக்கும் சிறந்த பண்புகள்தான்!

‘விடுதலை' ஏட்டிற்கு 88 ஆண்டுகள் நிறைவடை கிறது; அதில் 60 ஆண்டுகள் ஆசிரியராக அவர் பணியாற்றி இருக்கிறார் என்று சொன்னால், எது அந்தப் பணியை அவருக்கு அளித்திருக்கிறது என்று சொன் னால், அவரிடமிருக்கின்ற மேற்சொன்ன பண்புகள்தான் 60 ஆண்டுகள் தொடர்ந்து அவர் ‘விடுதலை' ஏட்டில் விடாமல் தொடர்ச்சியாக எழுதுகிற அப்படிப்பட்ட திற னைக் கொடுத்திருக்கிறது என்று சொன்னால், அவரிட மிருக்கின்ற இந்த சிறந்த பண்புகள்தான் என்பதை நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

அதுமட்டுல்ல, இன்றைக்கு 88 ஆண்டுகள் ஒரு பத்திரிகையை நடத்துவது என்பது சிரமமான ஒன்றாகும். ஏனென்றால், பத்திரிகையை நடத்துவது என்பது சாதார ணமான விஷயமல்ல. எங்களுடைய கட்சியின் சார்பில் கூட ‘தீக்கதிர்' பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கின் றோம்.

ஒவ்வொரு நாளும் அந்தப் பத்திரிகை அச்சாகி வெளியே வருவது என்பது, ஒரு தாய், ஒரு குழந்தையைப் பிரசவிக்கிற அந்த வேதனையோடுதான் அது வெளியே வருகிற அப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது.

தொலைக்காட்சி நடத்துவதுகூட எளிதான விஷயம். அங்கே புரெடக்ஷனுக்கு மட்டும்தான் அதிகமான எனர்ஜி தேவைப்படும். விநியோகத்திற்கு பெரிய தேவை இருக்காது; அது தானாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும்.

ஆனால், ஒரு பத்திரிகையை அச்சடிப்பது மட்டு மல்ல, அதற்கான விஷயங்களைத் தயாரிப்பது  என்பது மட்டுமல்ல, விநியோகத்தில் அதற்குமேல் சிரமம் இருக்கும். பத்திரிகையை நாம் அனுப்பிவிடுவோம்; ஆனால், சேரவேண்டியவர்களுக்குப் போய்ச் சேராது.

சமூகநீதி என்கின்ற 

அந்தத் தத்துவப் பின்னணிதான்!

ஆகவே, இவ்வளவு பிரச்சினைகளையும் சந்தித்து, ஈடுகொடுத்து 88 ஆண்டுகளாக ஒரு பத்திரிகை நடை பெற்றுக் கொண்டு வருகிறது என்று சொன்னால், அதற்கு அடிப்படையான காரணம், ‘விடுதலை' ஏடு என்பதல்ல - ‘விடுதலை’ ஏடு ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்த சமூகநீதி என்கின்ற அந்தத் தத்துவப் பின்னணிதான், இந்த ஏடு இந்த அளவிற்கு விடாமல் நடத்துவதற்கு அடிப்படையாக இருக்கிறது என்பதை நான் இங்கே குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

பத்திரிகைகளைப்பற்றி லெனின் அவர்கள் சொல்லும் பொழுது, அதை ஓர் ஆர்கனைசர் என்று சொல்வார். 

திராவிட இயக்கத்தின் முதுகெலும்பாக 

இருக்கக்கூடிய ‘விடுதலை'

பத்திரிகை என்பது வெறும் பத்திரிகை மட்டுமல்ல - திராவிட இயக்கம் அல்லது பகுத்தறிவு இயக்கம் தோன்றி ஏறக்குறைய நூறாண்டுகள் நிறைவடைந்திருக் கின்றது என்று சொன்னால், அந்த இயக்கத்தை, நூறாண் டுகள் நடத்துவதற்கான அதனுடைய முதுகெலும்பாக, அதனுடைய ஆர்கனைசராக செயல்படுவதற்கான அந்தப் பத்திரிகை பலம் ‘விடுதலை’தான். இந்த அள விற்கு நீடித்த ஓர் இயக்கமாக செயல்படுத்திக் கொண்டி ருக்கிறது.

எனவே, ஓர் இயக்கத்தினுடைய கொள்கை எந்த அளவிற்கு முக்கியமோ, அந்தக் கொள்கையை மக்க ளோடு இணைத்து செல்லுகிற, மக்களுக்கு எடுத்துச் செல்லுகிற, அதனுடைய இதழ்கள் அதனுடைய ஆயுதங் களாகத் தேவைப்படுகின்ற காரணத்தினால்தான், அது ஒரு ஆர்கனைசர் என்று தோழர் லெனின் அவர்கள் மிக அழகாகச் சொல்வார்கள்.

பத்திரிகை ஆசிரியர்கள் நடத்திய 

பாராட்டு விழா!

எனவே, அப்படிப்பட்ட ஓர் ஏட்டினை 60 ஆண்டு காலம் - இங்கே காட்டப்பட்ட ஆவணப்படத்தில் காட்டி னார்கள். சில நாள்களுக்குமுன்பு பத்திரிகை ஆசிரியர் கள் எல்லாம் சேர்ந்து நம்முடைய ஆசிரியர் அவர் களுக்குப் பாராட்டு விழா நடத்திய செய்திகளையெல்லாம் ‘விடுதலை'யில் நான் படித்தேன். அதில்கூட பலர் சொன்னார்கள், ‘‘அநேகமாக உலகத்தில் ஒரு 60 ஆண்டுகாலம் ஒரு பத்திரிகையினுடைய ஆசிரியராகத் தொடர்ந்து நீடித்த முதல் ஆசிரியர், நம்முடைய ஆசிரியர் அவர்கள்தான் என்பதை அன்றைக்கு பல பத்திரிகை ஆசிரியர்கள் இங்கே எடுத்துச் சொன்ன செய்தியையெல்லாம் நாம் பார்க்க முடிந்தது.

‘விடுதலை’யில் என்பது வேறு; ஆசிரியர் என்பது வேறு என்று இல்லாமல், ‘‘ஆசிரியர் என்றால் ‘விடுதலை’ - ‘விடுதலை’ என்றால் ஆசிரியர்'' என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவர் அதில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்டிருக்கின்ற காரணத்தினால்தான், இன்றைக்குக் கூட வந்திருக்கின்ற பத்திரிகையில் போட்டிருக்கிறார்கள்; ஏற்கெனவே பல நூல்களில்கூட எழுதியிருக்கிறார்கள்.

தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்திருக்கிறார் அய்யா ஆசிரியர்!

‘‘இன்றுமுதல் நான் ‘விடுதலை’யை வீரமணியிடம் ஏகபோகமாக ஒப்படைத்துவிட்டேன்'' என்று பெரியார் எழுதியிருக்கிற செய்தியைக்கூட இன்றைய ‘விடுதலை’ யில் போட்டிருக்கிறார்கள்.

அந்த அளவிற்குத் தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்திருக்கிறார் என்று சொன்னால், அதுதான் அந்த நன்றிக்குத்தான் ‘விடுதலை’ பத்திரிகை தொடர்ந்து இன்றைக்கும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனுடைய ஆசிரியராக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஓர் அரசியல் கட்சி, பத்திரிகை நடத்துவது என்பது வேறு; ஆட்சியில் இருப்பவர்கள்கூட பத்திரிகை நடத் துவது என்பது வேறு. அந்தப் பத்திரிகைக்கு அரசியல் செல்வாக்கு இருக்கும்; அதற்கு விளம்பரங்கள் வரும்; அதற்கு வேறு பல பின்புலங்கள்கூட எல்லாம் இருக்கும்.

ஆசிரியர் அவர்களைப் பாராட்டுவதற்கு 

உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை!

ஆனால், அரசியலுக்கு வரவே மாட்டோம்; ஆட்சி என்பதில் எங்களுக்கு சம்பந்தமே இல்லை என்று பகிரங்கமாக அறிவித்திருக்கின்ற ஓர் இயக்கம். இன் றைக்கு அல்ல, இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், நாங்கள் நேரிடையாக ஆட்சியில் அமர முடியாது; நேரிடையாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக வரமாட்டோம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டி ருக்கின்ற ஒரு சமூக இயக்கம் இந்த அளவிற்கு ‘விடுதலை’யை நடத்துகின்றது என்று சொன்னால், அதற்கு ஆசிரியராக 60 ஆண்டுகளுக்குமேலாக பணி யாற்றுகிறார் என்று சொன்னால், அவரைப் பாராட்டு வதற்கு உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை என்பதைத்தான் நான் இந்த நேரத்திலே குறிப்பிட விரும்புகின்றேன்.

எனவே, அப்படிப்பட்ட ஒரு பெரும் பணியினை ஆசிரியர் அவர்கள் செய்துகொண்டிருக்கின்றார்கள். தமிழ்நாட்டில், இந்தியாவில் ஒரு சனாதன, பிற்போக்குத் தனமான - ஒரு வலதுசாரி பிற்போக்குத்தனமான ஒரு பாசிச குணம் கொண்டிருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். ஒன்றி யத்தில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, இந்திய நாட்டினுடைய அடிப்படை விழுமியங்களையெல்லாம் இன்றைக்குக் காலில் போட்டு மிதிக்கிறார்கள். ஜனநாயக உரிமைகளைப் பறிக்கிறார்கள்; எழுத்துரிமையைப் பறிக்கிறார்கள்; பேச்சுரிமையைப் பறிக்கிறார்கள். யாரை வேண்டுமானாலும் தாக்குகிறார்கள்; யாரை வேண்டு மானாலும் கைது செய்கிறார்கள்.

ஏதோ ஒரு காலத்தில் சொன்னார்களே, ‘ம்' என்றால் சிறை வாசம்; ‘ஏனென்றால்' வனவாசம் என்று சொல் கின்ற அளவிற்கு மோசமான நிலைமை இன்றைக்கு வளர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்நாட்டில் உருவாகியிருக்கின்ற 

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி

இப்படிப்பட்ட இந்த பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். என்கின்ற இந்தப் ‘பிசாசுக்' கூட்டத்திற்கு, இன்றைக்குத் தமிழ்நாட்டில் உருவாகியிருக்கின்ற மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணிதான் - அதற்கு எதிராக நின்று, சவால் விடுகிற ஒரு களமாக இன்றைக்குத் தமிழ்நாடு மாறி யிருக்கிறது.

89 வயதிலும்- 16 வயது இளைஞருக்கு இருக்கின்ற துடிப்போடு பணியாற்றுகிறார்

எனவே, அதற்கு முக்கியமான பங்கினை ஆற்றியிருக்கிற திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மரியாதைக்குரிய மு.க.ஸ்டாலின் என்பது ஒரு பக்கம் - ஸ்டாலினைப் பாராட்டுகிற அதேநேரத்தில், அப்படிப் பட்ட இந்த அணி உருவாகி, இந்த அணி ஒற்றுமையோடு செயல்பட்டு, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். சை ஆட்சியி லிருந்து அப்புறப்படுத்துகின்ற வரையில் நாம் ஓயமாட் டோம் என்கிற உறுதியோடு, இந்த 89 வயதிலும்கூட - 70 வயதில் நடமாடுவதே கஷ்டம் - ஆனாலும்கூட 89 வயதிலும்கூட ஒரு 16 வயது இளைஞருக்கு இருக்கின்ற துடிப்போடு அய்யா ஆசிரியர் அவர்கள் பணியாற்று கிறார் என்று சொன்னால், அதற்கு அடிப்படையான காரணம், நாம் கொண்டிருக்கின்ற அந்தத் தத்துவப் பிடிமானம்தான்.

இன்றைக்கு ஆசிரியரை நான் பாராட்டுவதைப் பெரிதாக நினைக்கவில்லை. ஏனென்றால், ஏறக்குறைய இரண்டு கொள்கைகளில், பெரும்பகுதியான விஷயங் களில் நமக்குள்ளே உடன்பாடு இருக்கிறது.

எல்லோருமே பாராட்டக்கூடிய ஒரு மய்யமாக இன்றைக்கு ஆசிரியர் மாறியிருக்கிறார்!

இங்கே நமது மரியாதைக்குரிய ஜவாஹிருல்லா பேசினார்; இறைவன் அவருக்கு எல்லா அருளையும் புரியவேண்டும் என்று சொன்னார்.

அவர் சொன்னது தவறல்ல. எதற்காக நான் இப்படி சொல்கிறேன் என்றால், இன்றைக்கு அய்யா ஆசிரியர் அவர்களை எல்லோரும் பாராட்டுகிறார்கள். இறை வனை ஏற்றுக்கொண்டவர்கள்; இறைவனை ஏற்காத வர்கள்; மறுக்கிறவர்கள் எல்லோருமே பாராட்டக்கூடிய ஒரு மய்யமாக இன்றைக்கு ஆசிரியர் மாறியிருக்கிறார் என்பதுதான் இந்த சமூகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற அடிப்படையான மாற்றம் என்பதை இங்கே நான் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகின்றேன்.

மனுநீதியை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தை நாம் நடத்தவேண்டியது அவசியம்!

ஆகவே, இன்றைக்கு நம் முன் மிகப்பெரிய சவால் இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக உழைக்கின்ற மக்களை அடிமைப்படுத்தி வைத்துக்கொண்டு, ஒரு வருணாசிரம தர்மம் - மனுநீதி என்ற பெயரில், அநீதியை இழைத்துக் கொண்டிருக்கின்ற அந்த மனுநீதியை ஒழித்துக் கட்டுவதற்கான போராட்டத்தை நாம் நடத்தவேண்டிய ஒரு மிகப்பெரிய தேவை இருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால், டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய இந்திய அரசமைப்புச் சட்டத்தையே அப்புறப்படுத்திவிட்டு, இன்றைக்கு மனுநீதியை அரசமைப்புச் சட்டமாக அறிவித்துவிடுவார்களோ என்கிற அச்சம் இன்றைக்கு ஏற்பட்டு இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தில் இப்பொழுது வழக்குத் தொடர்ந்திருக்கிறார்கள். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இருக்கின்ற மதச்சார்பின்மை, சோசலிசம் என்கிற வார்த்தைகளை எல்லாம் நீக்கிவிடவேண்டும் அந்த வழக்கில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இன்னும் வேறு பல வழக்குகளைத் தொடுக்கிறார்கள்.

இந்தியாவில் இருக்கின்ற கோவில்களின் சொத்துகளையெல்லாம் இந்து மத அமைப்புகளிடம் ஒப்படைத்துவிடவேண்டும்; அந்த சொத்துகள் எல்லாம் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்று மூன்று வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

அந்த வழக்கின் தீர்ப்புகள் எல்லாம் எப்படி வரும் என்பது குறித்து நாம் ஆச்சரியப்பட வேண்டிய அவசியமில்லை.

400 ஆண்டுகள் பழைமையான பாபர் மசூதியை இடித்தார்கள்; இடித்தது தவறுதான்; ஆனால், அந்த இடத்தில் அவர்களே கோவிலைக் கட்டிக் கொள்ளவேண்டும் என்று தீர்ப்பு எழுதியதுதான் நீதிமன்றம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, நாளைக்கு அதுபோன்ற தீர்ப்புகள்கூட வரலாம்.

அய்யா ஆசிரியர் அவர்களுடைய தலைமையில், எல்லோரும் ஒன்று திரண்டிருக்கின்றோம்

எனவே, இந்த சமூகம் மிகப்பெரிய சவால்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற நேரம் இது. இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்கள் நம்மிடையே இல்லை. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நம்மிடத்தில் இல்லை. ஆனாலும், இன்றைக்கு இடதுசாரிகள், திராவிட இயக்கத்தைச் சார்ந்திருக்கின்ற தலைவர்கள், அய்யா ஆசிரியர் அவர்களுடைய தலைமையில், எல்லோரும் ஒன்று திரண்டிருக்கின்றோம் என்பது நமக்கு ஒரு மகிழ்ச்சியளிக்கிறது என்பதைத்தான்  நான் இந்த நேரத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியிருக்கிற அந்தத் தத்துவம், ஜாதீய ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கவேண்டும் என்பதிலே இன்னும் நாம் நீண்ட தூரம் கடந்துபோக வேண்டிய அவசியம் இருக்கிறது.

எவ்வளவோ ஜாதி எதிர்ப்புப் பிரச்சாரங்களை நாம் செய்தாலும், இன்னும் ஜாதி ஒழிய மறுக்கிற கொடுமைதான் நடந்துகொண்டிருக்கின்றது.

ஓர் உயர்ஜாதியினர் வசிக்கும் தெருவில், பட்டியலின மனிதன் நடந்து போவதற்கு உரிமையில்லை. அவர்கள் அங்கே குடிநீர் எடுப்பதற்கு உரிமையில்லை என்கிற கொடுமை இன்றைக்கும் நடந்துகொண்டிருக்கின்றது.

எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் 

துணைத் தலைவரின் அறிவிப்பு

உண்மையோ, பொய்யோ நமக்குத் தெரியாது - இன்றைக்கு எஸ்.சி., எஸ்.டி., கமிஷன் துணைத் தலைவர் ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார்; இந்தியாவில் பட்டியலின மக்களின்மீது நடத்தப்படுகின்ற தாக்குதலில் முதல் இடத்தில் இருப்பது ராஜஸ்தான். இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு என்று சொல்லியிருக் கிறார்.

அது உண்மையா? பொய்யா? என்று நமக்குத் தெரியாது.

ஆனாலும், இதில் இரண்டாவது இடமா? நான்காவது இடமா? என்பதில்லை. இன்னும் அந்தக் கொடுமை நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சமூக விழிப்புணர்வை உருவாக்கவேண்டியது அவசியம்!

எனவே, தந்தை பெரியார் அவர்கள், எந்த ஜாதியை ஒழிக்க, உறுதி ஏற்று செயல்பட்டாரோ, அந்த தத்துவத்தை நடைமுறைப்படுத்தவேண்டிய மிகப்பெரிய தேவை நம் எல்லோரிடத்திலும் இருக்கிறது. இதற்காக ஒரு சமூக விழிப்புணர்வை உருவாக்கவேண்டிய தேவை இருக் கிறது.

இதற்கு அடிப்படையாக இருக்கிற வருணாசிரம தர்மம் என்கிற மனுநீதியை ஒழித்துக் கட்டுகிற ஒரு பெரிய இயக்கத்தை நாம் கட்டமைக்கவேண்டும்.

வருணாசிரம தர்மம் என்பது, வெறும் மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற ஜாதிய பாகுபாட்டை மட்டும் உருவாக் கியதாக நாம் புரிந்துகொண்டிருக்கின்றோம், அது உண்மைதான்.

நால்வருண முறை - மேல்ஜாதி

பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அதற்கு மேலே அய்ந்தாவது ஜாதியாக பஞ்சமர் என்று பாகுபடுத்தியிருக்கிற இந்த மோசமான தத்துவத்தை மட்டுமே - வருணாசிரம தர்மம், மனுநீதி உருவாக்க வில்லை. அங்கே ஒரு வர்க்கப் பிரிவினையையும் அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

சூத்திரனாக இருக்கிறவன் - நிலம் வைத்திருக்கக் கூடாது

சூத்திரனாக இருக்கிறவன் - சொந்தமாக வீடு வைத்திருக்கக் கூடாது.

சூத்திரனாக இருக்கிறவன் - சொந்த மண்ணிலே வீடு கட்டக் கூடாது.

சூத்திரனாக இருக்கிறவன் - ஆடு, மாடு வளர்க்கக் கூடாது.

அன்றைய காலகட்டத்தில் சொத்து என்றால், ஆடு, மாடுகள்தான் சொத்து. அந்த சொத்துகளை அவனிட மிருந்து பிடுங்கி, உடைமை வர்க்கம் ஒரு பக்கம் - உழைப்பாளி வர்க்கம் ஒரு பக்கமாக இருக்கிற, அந்த வர்க்கப் பிரிவினைக்குக்கூட அடிப்படையாக இருப்பது தான் வருணாசிரம தர்மம் என்பதையும் சேர்த்து நாம் பார்க்கவேண்டி இருக்கிறது.

எனவே, அப்படிப்பட்ட வருணாசிரம தர்மத்தை, மனுநீதியை எதிர்த்த ஒரு போராட்டம் - இன்றைக்குப் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்த்த ஒரு போராட்டத் தோடு இணையவேண்டிய அப்படிப்பட்ட காலகட்டத் தில்தான் நாம் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

தத்துவப் போராட்டத்தைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கின்ற ‘விடுதலை’ ஏடு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், ஆசிரியர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சொல்வதோடு மட்டுமல்ல, இன்னும் பல பத்தாண்டுகள் நீங்கள் நீடித்து வாழ்ந்து, எவ்வளவு சுறுசுறுப்போடு, துடிப்போடு பணியாற்றுகிறீர்களோ, அந்தத் துடிப்போடு நீண்ட காலம் வாழ்ந்து, கடைசி மூச்சு வரையில், இந்த தத்துவப் போராட்டத்தைத் தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கின்ற ‘விடுதலை' ஏட்டில் தொடர்ந்து ஆசிரியராக நீங்கள் இருந்து பணியாற்றவேண்டும் என என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து, என்னுரையை நிறைவ செய்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள் உரையாற்றினார்.


No comments:

Post a Comment