மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்றார் புரட்சிக்கவிஞர் உலகம் முழுவதும் தந்தை பெரியாரைப்பற்றிப் பாராட்டு குவிகிறது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 20, 2022

மண்டைச் சுரப்பை உலகுதொழும் என்றார் புரட்சிக்கவிஞர் உலகம் முழுவதும் தந்தை பெரியாரைப்பற்றிப் பாராட்டு குவிகிறது!

பெரியாரைத் துணைகொள்வது காலத்தின் கட்டாயம்!

இவ்வாண்டு தந்தை பெரியார் 144 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. வட இந்தியாவில் பல மாநிலங்களிலும் பாராட்டு மழை - பெரியாரைத் துணைக் கொள்வது காலத்தின் கட்டாயம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

‘‘ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி யவள்

அணிந்திராத அணியாவார் அறிந்திராத அறிவாவார்

கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு

எதிர்பார்க்கும் தலைவராவர்

கழறவோ அவர் பெயர்தான் இராமசாமி''

அறிவாசான் தந்தை பெரியார்பற்றி சுமார் 85 ஆண்டுகளுக்குமுன் புரட்சிக்கவிஞர் எழுதி னார்.

புரட்சிக்கவிஞரின் தொலைநோக்கு!

பிறகு அவரே மேலும் தெளிவாக 1958 இல் அவர் நடத்திய ‘குயில்' கவிதை வார ஏட்டில் தந்தை பெரியாரை எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் அரிய பணியினை ஆழமாகச் செதுக்கிப் பாடினார்!

‘‘தொண்டுசெய்து பழுத்த பழம்

தூயதாடி மார்பில் விழும்

மண்டைச் சுரப்பை உலகு தொழும்

மனக் குகையில் சிறுத்தை எழும்

அவர்தாம் பெரியார் பார்!''

என்று கிராமத்து  வாழ்விணையர் உணர்ந்து கொண்டு கூறுவதாக கவிதை வரிகளைப் படைத்தார்!

அறிஞர் அண்ணாவின் கணிப்பு!

தந்தை பெரியாரைப் போலவே, புரட்சிக் கவிஞரின் அந்த வைர வரிகள் காலத்தை வென்ற கருவூலமாக இன்றும் காட்சியாகி வருகிறது!

ஆம், அவரது ‘‘மண்டைச் சுரப்பை'' - சிந் தனை புரட்சிக் கருத்துகளை வியந்து பாராட்டி, இளைஞர்களும்கூட நயந்து சுவாசிக்கின்றனர்!

இன்று ‘‘பெரியார் உலக மயம் - உலகம் பெரியார் மயம்''

என்று நாம் இடையறாது கூறிவருவது வெறும் அலங்காரச் சொற்கள் அல்ல; எவரும் அலட்சி யப்படுத்தப்பட முடியாத அனுபவக் களம்!

‘‘தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு சகாப்தம், காலகட்டம், திருப்பம்'' என்ற அறிஞர் அண்ணாவின் கூற்றுக் கேற்ப, அவர் தனி மனிதரல்ல; தத்துவம், ஒரு நிறுவனம், கொள்கைப் பாசறையும்கூட என்பதை  உலகம் உணர்ந்து அவரை சுவாசித்து சுவாசித்து பயனடைய முந்துகிறது!

எதிர்நீச்சலடித்து, எதிர்ப்பு நெருப்பில் புடம் போட்டு எடுக்கப்பட்ட பெரியாரின் தத்துவம் தகத்தகாய தங்கமாக  ஒளிருகிறது - தனி ஒளியை வீசிக்கொண்டே வீறுநடை போடுகிறது!

தந்தை பெரியாரின் 144 ஆம் ஆண்டு பிறந்த நாளில் -  ‘திராவிட மாடல்' ஆட்சியினை நடத் தும் நமது ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக - தமது அரசுமூலம் பிரகடனம் செய்து இரண்டாவது ஆண்டாக அனைவரையும் உறுதி யேற்கச் செய்யும் பெருமைமூலம், முன்பு அண் ணாவின் பிரகடனமாம் இந்த ஆட்சி ‘‘தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சி'' என்பதை இரண்டு தலைமுறைக்குப் பின்பும் உறுதி செய்து நடைமுறைப்படுத்துகின்றார்!

கிழக்கும் - மேற்கும் ஏந்திய தலைவர்!

கிழக்கும் மேற்கும் ஏற்கும் - உலகத் தலை வராக - அவர் வலம் வந்துகொண்டிருக்கிறார்; ஆம், அவரது ‘மண்டைச் சுரப்பு' ஒரு வற்றாத ஜீவநதி அல்லவா?

மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், அமெரிக் காவிலும், மத்திய வளைகுடா நாடுகளிலும், ஆஸ் திரேலியா, அய்ரோப்பிய நாடுகளிலும் அவரது பிறந்த நாள் விழாக்கள் மாட்சியுடன் நடைபெற்று வருகின்றன!

தந்தை பெரியார் தனது ஜீவிய காலத்தில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கும், அய்ரோப் பிய நாடுகளுக்கும் பயணித்தார் - பயன் பெற்றனர் அம்மக்கள். ஆனால், இன்றோ தத் துவங்களாக அப்போது செல்லாத அனைத்துலகப் பகுதிகளிலும் பயணிக்கிறார் - புதுமைப் புயலாக, புரட்சி பூபாளத்திற்காக!

பெரியார் பன்னாட்டு அமைப்பும், உலகப் பகுத்தறிவு, மனிதநேய அமைப்புகளும் இணைந்து வரும் 24, 25 ஆகிய இருநாள்களில் ஒரு மாபெரும் பன்னாட்டு மாநாட்டையே கனடா நாட்டின் பெருநகரமான டொரோண் டோவில் நடத்தி மகிழ ஆயத்தமாகிவிட்டன; பற்பல நாட்டிலிருந்தும் பேராளர்கள் திரண்டுள்ளனர்!

வடபுலத்தில் குவியும் பாராட்டுகள்!

அதைவிட ஓர் அதிசயம்!

வடபுலத்திலிருந்து பெரியாரை வாழ்த்து கின்றனர் - முக்கிய அரசியல் தலைவர்கள் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை!

ஒரு நாளில் வந்துள்ள வடபுலத்துச் செய்தி களும், ஏன் ஹிந்தி மொழி பேசும் பகுதி நண்பர் களின் உற்சாகமும்கூட வாழ்த்து மழையைப் பொழிகின்றன!

அதுதான் பெரியார் என்ற விசித்திரத்தின் விவேகம்!

பெரியாரைத் துணை கொள்வது 

காலத்தின் கட்டாயம்!

‘‘அவரை வெறும் பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பாளர் என்று சிறு சிமிழுக்குள் அடைக்கவிட மாட்டோம்; அவர் அகண்ட மானிட நேயத்தின் அளவீடு இல்லாத அறிவார்ந்த காவலர் - அவரிடமிருந்துதான் நாங்கள் இனியும் கற்க வேண்டியதைப் பெற்றுப் பயனடையச் செய்யும் எங்கள் விடியலுக்குத் தேவையான வித்துக்கள். 

எனவேதான் அவை எமது விலை மதிப்பற்ற சொத்து, காலத்தை வென்ற கருத்துப் போர் ஆயுதம்'' என்பதை உணர்ந்து வாழ்த்தி விழா எடுத்து மகிழ்கின்றனர்!

இன்று ‘‘பெரியார் அனைவருக்கும் உரியார்!'' என்றாலும், நரியாரின் ஊளைச் சத்தம் அடங்க வில்லை; எதிர்ப்பு, அவதூறு ஆகிய உரங்கள் மூலமே வளரும் பயிர் பெரியாரியம்!

எனவே, எதிர்ப்பையும் எந்நாளும் எதிர் கொண்டு வெற்றி பெறுபவையே அவரது தத்துவம் என்பது தனிப்பெருமை!

செயற்கரிய செய்த பெரியாரின் முயற்கரிய முயற்சிகள் வெற்றி பெற அனைவரும் அவரைத் துணை கொள்வது இனிக் காலத்தின் கட்டாயம்!

ஓலமிடுபவர்களே சற்றே ஒதுங்கிடுவீர்!

அப்போதுதான் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

20.9.2022


No comments:

Post a Comment