மாலன்கள்
‘குமுதம்' இதழில் (14.9.2022) திருவாளர் மாலன் அய்யர்வாள் திருக்குறளைப்பற்றி ஆய்வு நடத்துகிறார். அவர் யாருக்குப் பிறந்தார் - எந்த மதத்தைச் சார்ந்தவர் - திருக்குறள் பக்தி நூல் இல்லையா? என்பதான ஆராய்ச்சியில் மிக ‘அக்கறையோடு' இறங்கி இருக்கிறார்.
திருக்குறள் உலகம் தழுவிய அளவில் உயர்ந்து நிற்கும் அந்தப் பிம்பத்தின் காலை வெட்ட வேண்டும் - அதுவும் அவாளின் ஜெகத்குரு சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஆண்டாளின் ‘தீக்குறளைச் சென்றோதோம்' என்ற வரிக்கு ‘தீய திருக்குறளை ஓதமாட்டோம்' என்று பொருள் சொன்ன பிறகு, நாராயண அய்யங்கார்களின் நாடித் துடிப்பு எகிறித்தானே குதிக்கும்.
ஒரு கட்டத்தில் திருக்குறளின் சீலத்தைச் சிதைக்க முடியாது என்ற நிலை வந்த பிறகு - திருக்குறள் மனுதர்மத்தைத் தழுவி எழுதப்பட்டது (மூலம் பரிமேலழகர்) என்று ஜெயேந்திர சரஸ்வதி கூறிடவில்லையா?
அவாள் ஆத்து உ.வே.சு.அய்யரால் எழுதப்பட்ட The Kural of the Maxims of Thiruvalluvar (1916) நூலில் என்ன கூறுகிறார்?
‘‘திருவள்ளுவரின் தந்தையார் பகவன் என்ற பார்ப்பனர் ஆவார். இவர் தாயார் ஆதி என்ற பறைச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருவள்ளுவர் அறிவாளியாக இருப்பதற்குக் காரணம், அவரின் தந்தையார் ஒரு பார்ப்பனர் என்று சொல்ல வேண்டுமல்லவா!
இன்னொன்று: ‘‘திருவள்ளுவர் நான்காவதான வீடு பேற்றைப்பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்திற்கு ஆன்மிக உண்மைகளைப் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதீக விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை ஒப்படைத்துக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்'' என்று உ.வே.சு. அய்யர் எழுதியுள்ளார்.
திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு அவர்கள் ‘‘திருக்குறளும், திராவிட இயக்கமும்'' (‘சங்கொலி', 14.6.1996) என்ற கட்டுரையில் விரிவாக எழுதியுள்ளார்.
‘குமுத'த்தில் மாலன்கள் எழுதுவதை இவற்றோடு தொடர்புப்படுத்தினால்தான் அதன் அந்தரங்கம் பளிச்செனப் புரியும்.
தந்தை பெரியார் குறள்பற்றி சொன்னதையும், சொல்லாமல் விடுவார்களா? திருக்குறள் மட்டுமல்ல - யார் எதைச் சொன்னாலும், அதனைத் தன் பகுத்தறிவுப் பார்வையில் விமர்சிக்கக் கூடியவர்தான். அந்த வகையில் திருவள்ளுவர் கூறிய அனைத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தந்தை பெரியார் கூறுவார் என்று எதிர்பார்க்கலாமா?
அதேநேரத்தில் திருக்குறள் மாநாட்டை முதன்முதலாக நடத்தியவர் (1949, ஜனவரி 15, 16 சென்னையில்) தந்தை பெரியார்தானே! திருக்குறளை மலிவு விலையில் மக்கள் மத்தியில் கொண்டு சென்றவரும் அவர்தானே!
இவற்றையெல்லாம் பூணூல் திரை போட்டு மறைத்துவிட மாட்டார்களா? அதைத்தான் திரு.நாராயண அய்யங்காரும் செய்துள்ளார்.
- மயிலாடன்
No comments:
Post a Comment