ராஞ்சி, செப்.1- ஜார்க்கண்டின் ராஞ்சி நகரை சேர்ந்தவர் சீமா பத்ரா. மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியான மகேஷ்வர் பத்ராவின் மனைவி. பா.ஜ.க.வின் மூத்த தலைவராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சீமா மீது அவரது வீட்டு பெண் பணியாளர் சுனிதா என்பவர் காவல்துறையில் புகார் அளித்து உள்ளார். அதன்படி, ராஞ்சி நகரின் அர்கோரா காவல்துறையினர் பத்ராவை தேடி வந்தனர். காவல்துறையினர் தேடுவது பற்றி அறிந்ததும் சீமா தப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதில், ராஞ்சியில் இருந்து சாலை வழியே தப்ப முயன்ற சீமாவை காவல்துறையினர் கைது செய்துள் ளனர். பழங்குடியின பெண்ணான சுனிதா அளித்த புகாரில் பல கொடுமையான சம்பவங்கள் குறிப்பிடப்பட்டுஉள்ளன.
அந்த புகாரில், சீமா பத்ராவின் வீட்டில் பணியாளாக வேலை செய்து வருகிறேன். அவரது வீட்டில் உள்ள கழிப்பறையை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து கொடுமை செய்துள்ளார் என தெரிவித்து உள்ளார்.
சுனிதாவின் உடலில் பல இடங்களில் காயங்கள் உள்ளன. சூடான பொருட்களை கொண்டு அவரது உடலில் சீமா பத்ரா சூடு வைத்துள்ளார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுனிதாவின் வாக்குமூலம் பிரிவு 164இன் கீழ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வீட்டில் வேலைக்கு வந்த பெண் பணியாளை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து ஜார்க்கண்ட் பா.ஜ.க., சீமாவை இடைநீக்கம் செய்துள்ளது. ராஞ்சி காவல்துறையினர் சீமா பத்ராவை நீதிமன்றத்தில் நிறுத்தினர். சிறையில் அடைத்தனர்.
வீட்டுக்கு வேலைக்கு வந்த இடத்தில், பழங்குடியின பெண்ணை கொடுமையாக சித்ரவதை செய்த, மேனாள் அய்.ஏ.எஸ். அதிகாரியின் மனைவி மற்றும் மூத்த பா.ஜ.க. தலைவரான அவரது செயலால் அந்த பகுதி மக்கள் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment