கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் ப.திருமாவேலன் பேச்சு
சென்னை, செப். 1- ஆசிரியர் நம்மை பல நூற்றாண்டு களுக்கு வழிநடத்துவார், தமிழ்ச் சமுதாயத்தை எல்லா வகையிலும் மேன்மைப்படுத்தும் காலமாகவே அது அமையும் என்றார் கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் ப.திருமாவேலன்.
88 ஆண்டு விடுதலையின் 60 ஆண்டுகால ஆசிரியருக்குப் பாராட்டு விழா!
கடந்த 27.8.2022 மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் நடை பெற்ற ‘‘பத்திரிகையாளர்கள் - எழுத்தாளர்கள் பார்வை யில் 60 ஆண்டுகால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி; 88 ஆண்டு ‘விடுதலை'யின் 60 ஆண்டு ஆசிரியருக்குப் பாராட்டு விழா’’வில் ‘கலைஞர் தொலைக்காட்சியின் தலைமை செய்தியாசிரியர் ப.திருமாவேலன் வாழ்த்து ரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
53, 54 வயது இருக்கும் நிலைமை அன்று ஆசிரியரை எப்படி பார்த்தேனோ அதேபோல் இப்போதும் இருக் கிறார். ஓடினார் நடந்தார் என்று சொல்வதை விட, பறந்தார் என்று தான் சொல்ல முடியும். இந்த மேடைக்கு நாங்கள் வரும்போது எங்களுக்காக அவர் கொஞ்சம் தாமதமாக வந்தாரே தவிர அவரை தனியாக விட்டால் அவர்கள் யாராலும் பிடிக்க முடியாத தூரத்துக்கு வேகத்துக்கு நடக்கக்கூடிய ஆற்றலை அவர் பெற்று இருக்கின்றார்.
‘விடுதலை'யை தினமும் படியுங்கள் ஆசிரியர் இட்ட கட்டளை
அந்த 16 வயதில் நான் பார்க்கும்போது என்னுடைய நண்பர்கள் - பள்ளிக் காலத்தில் இருக்கின்ற நண்பர்கள் - எங்கள் கையில் இருந்த அய்ந்து ரூபாய் - பத்து ரூபாய் வைத்து. அப்போதெல்லாம் புத்தகங்கள் முப்பது பைசா, 50 பைசா, ஒரு ரூபாய் என்று இருக்கும். 30 ரூபாய்க்கு கிட்டத்தட்ட 15 ,20 புத்தகங்களை பெற்று ஆசிரியர் அவர்களிடம் நாங்கள் கொண்டு போய் கொடுத்ததும் பள்ளி மாணவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு இதற்கு இன்னொரு பத்து சதவீதம் கழிவு கொடுங்கள் என்று சொல்லி கடைசியாக அவர் ஒரு வார்த்தையை சொன்னார். விடுதலையை தினமும் படியுங்கள் - இதுதான் நான் உங்களுக்கு இடுகின்ற கட்டளை, என்று சொன்னார். நான் இந்த இடத்தில் நிற்பதற்குக் காரணம் அந்த ஒரு கட்டளை தான். அன்று அவர் எங்களுக்கெல்லாம் ஆசிரியராக இருந்து கட்டளையிட்டார். நீங்கள் ‘விடுதலை'யை படியுங்கள் என்று. அன்று ஒரு பள்ளி மாணவனாக பள்ளிப் பருவத்தில் விடுதலையை படிக்கத் தொடங்கிய நான். இன்று ஒரு நிறுவனத்தில் இத்தனை ஆண்டு காலம் - 35 ஆண்டுகாலம், அதில் 25 ஆண்டு காலம் பத்திரிகையாளனாக இருக் கின்றேன். இருந்திருக்கின்றேன், என்று சொன்னால் அதற்கு அவர் அன்று இட்ட கட்டளை தான் காரணம். அந்த நன்றியின் அடையாளமாக நான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்.
தந்தை பெரியார் தந்த பாராட்டு மொழிகள்
இன்றைக்கு 88 ஆண்டுகள் விடுதலை என்பதும் அதில் 60 ஆண்டுகள் ஆசிரியர் என்பதும் பத்திரிகையா ளராக இருப்பவர்களுக்கு அது பெரிய விஷயமாக தெரியாமல் இருக்கலாம்.
அவர் பணியாற்ற வந்த காலத்தில் இந்த ‘விடுதலை' அலுவலகமோ, இந்த பெரியார் திடலோ, இவ்வளவு பெரிய மணி மண்டபங்களோ, பங்களாக்களும் இல்லாத இடத்தில் ஒரு சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு தகரக் கொட்டகையில் ஒரு வெப்பம் சூழ்ந்த ஒரு பிரதேசத்தில் தந்தை பெரியார் அவர்களின் சீடராக உட்கார்ந்து பணியாற்றிய தொண்டின் அளவு என்பதை நாம் வியந்து பார்க்க வேண்டும்.
படிக்காதவர் அல்லது வறுமை சூழ்ந்த வாழ்க்கை அல்லது தனக்கு வேறு வழியில்லை என இப்படிப்பட்ட எந்த விதமான கட்டாயங்களும் இல்லாத , ஒரு படித்த, பட்டம் பெற்று, மிக உயரிய பதவி - மிக உயரிய வழக்குரைஞர் தொழிலில் சேர்ந்திருந்தால் பல்லாயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருந்த நேரத்தில் அதை விட்டுவிட்டு பெரியார் அழைத்தார் என்கின்ற ஒரே காரணத்துக்காக வந்த மனம் இருக்கின்றது அல்லவா அதுதான் வணங்கத்தக்கது. 60 ஆண்டுகள் கழித்து அவரை பாராட்டுவது என்பதை விட அவர் எப்போது அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தாரோ, அப்போதே அவரை பாராட்டி இருக்கிறார் தந்தை பெரியார். அதுதான் முக்கியமானது.
அப்போது ஆசிரியர் அவர்கள் 7133 என்கின்ற ஒரு பியட் கார் வைத்திருந்ததாக எழுதியிருக்கிறார். அந்த காருக்கு அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் என்பது ஒரு ரூபாய். 3 லிட்டர் செலவாகும் அதை கொடுத்து ஏன் அவ்வளவு வசதியாக நாம் பெரியார் திடலுக்கு விடுதலை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று நினைத்து. அதிலும் சிக்கனம் பிடித்து அடையாறில் இருந்து அலுவலகத்திற்கு - தன்னுடைய வீட்டிலிருந்து எழும்பூருக்கு பேருந்தில் பயணம். அடையாறுக்கு அதே பேருந்தில் திரும்பி இருக்கின்றார். அதுதான் பழக்கம். "சில நேரங்களில் நான் சைதாப்பேட்டையில் இருந்து ரயிலில் வந்து இங்கே நம்முடைய பெரியார் - அவர்களிடம் வருவேன்" என்று எழுதியிருக்கின்றார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
அதேபோல் பெரியார் பிறந்த நாள் விடுதலை மலர்களை வெளியிடும்போது ராயப்பேட்டை அச்சகத்தில் மிக அதிகமான நேரம் இரவு ஆகிவிட்டால் ராயப்பேட்டை யில் இருந்து அடையாறுக்கு நான் நடந்தே போவேன் என்று எழுதி இருக்கிறார். நாம் ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்பது இதுதான். ஒரு மனிதர் இயக்கத்திற்காக தன்னை ஒப்படைத்துக் கொள்வது என்பதற்கு பின்னால் இன்று அவர் திராவிடர் கழகத்தின் தலைவராக இருக்கலாம், பல்வேறு நிறுவனங் களின் நிறுவனராக இருக்கலாம், அறக்கட்டளையின் தலைவராக இருக்கலாம், ஆனால் தன் வாழ்க்கையை தொடங்கிய காலத்தில் எப்படி இருந்தார். எப்படி வாழ்ந்தார் எப்படி தன்னை அர்ப் பணித்துக் கொண்டார் என்பதில் தான் அவருடைய எல்லா பெருமைகளும் அடங்கி இருக்கின்றது.
பத்திரிகையாளர் என்கின்ற அடிப்படையில் விடுதலை நாளிதழை அதை ஒரு நவீனமாக்கியது ஆசிரியர்தான்.
நம்முடைய ஆசிரியர் அவர்கள் அந்தக் காலத்தில் விடுதலை என்பது அது விருப்பமான அளவுக்கு அல்லது விரும்பியவர்களின் பக்க வடிவமைப்பில் வந்த காலத்திலிருந்து விடுதலையை மிக அழகாக ஆங்கில பத்திரிகைகளுக்கு இணையான தரத்தோடு பக்க வடிவமைப்பை மாற்றியது அவருடைய முதல் வெற்றி.
தீப்பந்தமாக ஒளிரும் ‘விடுதலை' மலரை உருவாக்கியவர்
அதேபோல் பெரியார் பிறந்த நாள் மலர் 1962ஆம் ஆண்டிலிருந்து விடுதலை மலர் - இன்றைக்கும் செப்டம்பர் 17 காலை என்றால் விடுதலை மலர்.. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கைக்கு வந்து சேர்கிறது என்று சொன்னால் அதை ஆனந்த விகடனின் தீபாவளி மலர், கல்கியின் தீபாவளி மலர், வந்த காலத்தில் அதே போல திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய தீப்பந்தமாக 1962இல் அப்படி ஒரு மலர் என்கின்ற சிந்தனையை உருவாக்கி கொடுத்தது தான் ஆசிரியர் அவர்களின் மிகப்பெரிய வெற்றி
இன்றைக்கு வாட்ஸ் அப் காலம். எதையும் துணுக் காகப் படிப்பது தான் எல்லோருக்கும் பழகிவிட்டது. மூன்று பக்கங்களுக்கு மேல் படிப்பதற்குள்ளேயே பலருக்கு முதுகு வலி வந்து விடுகிறது. மூன்று வரி இருந்தால் அது சிறந்த கட்டுரையாகவே ஆகிவிடுகிறது. அப்படிப்பட்ட காலத்தில் பெரியாருடைய பொன்மொழி களை மிக மிகச் சுருக்கமாக எடுத்து போட்டு ‘விடுதலை' யிலும், விடுதலை மலரிலும் வெளியிட்ட மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை என்பது பத்திரிக்கையாளர் அனைவருக்கும் பின்பற்ற வேண்டும்.
இன்னொன்று தந்தை பெரியாரின் மிக அழகழகான புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த புகைப்படங்களை எல்லாம் யார் எடுத்தது? ஒவ்வொரு விடுதலை மலருக்கும் புதிய, புதிய புகைப்படங்கள் எடுப்பதற்காக ஒவ்வொரு ஸ்டூடியோவுக்கும், ஆண்டுதோறும் ஒரு ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று தந்தை பெரியார் அவர்களை விதவிதமாக படம் எடுக்க வைத்த காரணத்தால் தான் இன்றைக்கு பெரியார் அவர்களை இன்றும் நம் கண் முன்னால் வாழ்ந்து நாம் இன்றும் பெரியார் இருக்கின்றார் என்பதைப் போன்ற தோற்றத்தில் தினமும் புதிய புதிய படங்களை பார்க்கிறோம் என்று சொன்னால், இந்த விடுதலை மலருக்காக சென்னையில் இருக்கின்ற மிக முக்கியமான ஸ்டூடியோக்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று பெரியாரை படம் எடுத்தவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள். பெரியார் கேட்கிறபோது, அது போன மலருக்காக எடுத்தது என்று கூறி சமாளிப்பார்.
இவ்வளவு தனி ப்ரோபைல் என்பது தமிழ்நாட்டில் அவர் வாழ்ந்த காலத்தில், எந்த தலைவர்களுக்கும் இல்லை. இவை அனைத்துமே ஒரு பத்திரிகை தமிழ் பத்திரிகை உலகத்துக்கு என்னை பொறுத்தவரையில் ஆசிரியர் கொடுத்த கொடை என்பதுடன் பெரியார் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்பதற்கு உதாரணமானவர்.
நீதி கெட்டது யாரால்?
அதேபோல் போர்க்களங்களாக புத்தகங்கள் பெரியார் எழுதினார், பேசினார் அது அத்தோடு போய் விடக்கூடாது என்பதற்காக அந்த அவருடைய சிந்தனைகள் அனைத்தையும் சிறு, சிறு தொகுதிகளாக வெளியிட்டு. சிறு, சிறு புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்கின்ற ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது ஆசிரியர் அவர்களுக்கு வந்தது. மிக முக்கியமான புத்தகம் நீதி கெட்டது யாரால் என்கின்ற புத்தகம்.
இன்றைக்கும் நீதித்துறையின் வரலாற்றில் இந்தியா வின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு இப்படி ஒரு விமர்சன புத்தகம் வந்ததில்லை என்ற சொல்லக் கூடிய அளவுக்கு ஆன ஒரு புத்தகத்தை பெரியாருடைய உரைகளையும், தன்னுடைய கட்டுரை களையும் சேர்த்து வைத்து ஆசிரியர் அவர்கள் எழுதியுள்ளார். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கே பயப்படாமல் அன்று பேசிய பெரியார்.
இந்த புத்தகம் உன்னுடைய பெயரில் வரவேண்டாம் என்னுடைய பெயரில் வரட்டும் இதன் மீது வருகின்ற அனைத்து பழிகளையும், நானே தாங்கிக் கொள்கின்றேன் என்று சொல்லி தந்தை பெரியார் அவர்களுடைய பேரில் அந்த புத்தகம் வருகிறது.
"எழுதியது நானல்ல - வீரமணிதான்"
ஒரு தலைவரை நாம் எப்படி அடையாளம் காண வேண்டும் என்று சொன்னால் இந்த புத்தகம் மிகப் பெரிய பெருமையை பெரியாருக்கு கொடுக்கிறது.
பெரியாரிடம் வந்து அய்யா இப்படி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறீர்களே - உங்களை விட யாராலும் இதை எழுத முடியாது என்று திராவிடர் கழகத்தினு டைய தோழர்கள் வந்து சொன்னபோது இதை எழுதியது நான் அல்ல வீரமணி தான் என்று - தன்னை வந்து சந்திக்க வருகின்ற அனைவரிடமும் சொன்ன பெருந்தன்மையின் காரணமாகத்தான் நாம் பெரியாரையும் போற்றுகிறோம், ஆசிரியரையும் போற்றுகின்றோம்.
அவர் எடுத்த முடிவை மாற்றி பேட்டி கொடுத்தார்
பத்திரிகை என்பது தனது பத்திரிகை மட்டுமல்ல தனது பத்திரிகையாளன் தன்னுடைய பத்திரிகையாளர் மட்டுமல்ல, என்னைப் போன்ற எல்லா பத்திரிகையாளர் களுக்கும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் அவர் உண்மையில் ஆசிரியராகத் தான் இருந்தார்.
கோபால் அவர்கள் சொன்னார் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் என்று .2001 ஆம் ஆண்டு நான் ஆசிரியர் அவர்களிடம் வந்து ஆனந்த விகடன் பத்திரிகைக்காக பேட்டி கேட்டேன்.
ஒரு 15 ஆண்டுகளாக அவர் ஆனந்த விகடனுக்குப் பேட்டி கொடுப்பதில்லை. விடுதலை சம்பந்தம் அவர்கள் எழுதிய அவதூறு கட்டுரைகளின் காரணமாக மிக, வருத்தத்தில் இருந்த சூழ்நிலையில் அவர் அப்படி ஒரு முடிவு எடுத்திருந்தார்.
ஆனால் நான் வந்து கேட்டதும் உங்களுக்காக தருகிறேன் என்று சொல்லி அந்த பேட்டியை கொடுத்தார்
அப்போது ஆசிரியராக இருந்த மறைந்த பாலசுப்ர மணியன் அவர்கள், அதை நம்பவே இல்லை - உண்மை யில் வீரமணி தான் இந்த பேட்டியை கொடுத்தாரா, என்று திரும்பத் திரும்ப என்னிடம் கேட்டார்
ஆம் ஆசிரியர் அவர்கள் தான் கொடுத்தார்கள் என்று நான் சொன்னேன்.
அப்படியானால் நீங்கள் அதை அவரிடம் ஒப்புதல் வாங்கி விட்டு வந்து என்னிடம் கொடுத்தால் தான் நான் நம்புவேன் என்று பாலசுப்ரமணியன் அவர்கள் சொன்னார்கள்.
ஆசிரியர்களிடம் காட்டி நான் அதை அவரிடமே கையெழுத்து பெற்று, அவரிடம் கொடுத்தேன்.
ஒரு ஆறு மாதங்கள் கழித்து இருக்கும் ஆசிரியர் அவர்கள் சேலத்துக்கு போன இடத்தில் இன்றைக்கு சன் டி.வி.யில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற ராஜா திருவேங்கடம் அப்போது மாணவ நிருபராக சேலத்தில் பணியில் இருந்தார்.. அவர் அந்த இடத்தில் ஆசிரியர் அவர்களிடம் பேட்டி கேட்டார். பேட்டி கேட்டதும் நான் சேலத்தில் இருந்து தர்மபுரி செல்கிறேன்.
பெருந்தன்மை பொதிய தந்த பேட்டி
என்னுடைய காரிலேயே வாருங்கள் என்று சொல்லி அவரை - ராஜா திருவேங்கடத்தை ஏற்றிக்கொண்டு, அவரிடமும் பேட்டி கொடுத்து அனுப்பினார். அது ஜூனியர் விகடனுக்காக எடுக்கப்பட்ட பேட்டி - அப் போதும் பாலசுப்ரமணியம் என்னைத்தான் அழைத்தார்.
"நீங்கள் போனீர்கள், அது ஆனந்த விகடனுக்காக அவர் கொடுத்தது, ஆனால் விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு ஜூனியர் விகடன் மீது தான் அதிகமான கோபம்.
எனவே அவரிடம் நம்முடைய நிறுவனம் என்று வேறு சொல்லவில்லை. அவர் விகடன் நிறுவனம் என்று தான் கருதியிருப்பார். எனவே இது ஜூனியர் விகடனுக்கு கொடுத்த பேட்டி தானா, அதைப் போடலாமா என்று நீங்கள் மறுபடியும் அவரிடமே கேளுங்கள்" என்று சொன்னார்.
ஆசிரியர் அவர்களிடம் நான் மறுபடியும் வந்து கேட்டேன். அப்போது ஆசிரியர் சொன்னார் "ஒரு மிகச்சிறு வயது பத்திரிகையாளர் என்னிடம் வந்து நீங்கள் எங்கள் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று சொன்னபோது நான் இந்த பழைய சங்கதிகளை எல்லாம் மனதில் வைத்துக் கொண்டு அந்த நிருபரை நிராகரிக்க மனமில்லை. எனவே தான் நான் பேட்டி கொடுத்தேன்" என்று பெருந்தன்மையோடு ஆசிரியர் சொன்னார்.
திராவிட இயக்கம் என்பதும், தந்தை பெரியார் என்பதும் செழித்தோங்க வழித்தோன்றலாக இன்றைக்கு ஆசிரியர் இருக்கின்றார்.
கொள்கைக்காக ஒரு பக்கம் என்றால் இத்தகைய பண்புக்காக மறுபக்கம் இந்த இயக்கத்தை இந்த அளவுக்கு இந்த இடத்துக்கு இந்த உயரத்துக்கு யாராலும் வீழ்த்த முடியாத இடத்துக்கு - இந்த இயக்கம் வளர்ந்து இருப்பதற்கு காரணம் பெரியாரின் கொள்கையும், பெரியாரின் பண்பும், என்றால் அதே விதத்தை இன்றைய பெரியாராக, இன்றைய ஆசிரியராக, இன்றும் அதே வழித்தடத்தில் தாடி வைக்காத பெரியா ராக, தடியூன்றாத பெரியாராக, இன்றும் நம்மை வழி நடத்தி கொண்டிருக்கின்றார் ஆசிரியர் அவர்கள்.
இன்னும் பல நூற்றாண்டுகளும் நம்மை வழிநடத் துவார். அந்த வழி நடத்தக்கூடிய காலம் என்பது தமிழ் சமுதாயத்தை யாராலும் தடுக்க முடியாத அளவுக்கு எப்போதும் எல்லா வகையிலும் மேன்மைப்படுத்தக்கூடிய காலமாகவே அமையும், என்பதை மட்டும் சொல்லி நன்றி கூறி விடைபெறுகிறேன்...
வணக்கம்.....
இவ்வாறு அவர் வாழ்த்துரையில் கூறினார்.
No comments:
Post a Comment