2024 ஆம் ஆண்டுக்கான நகர்வை இப்பொழுதே தொடங்கிவிட்டோம்!
சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் விரட்டியடிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது!
களத்தில் தளபதி தலைமையில் நாம் கைகோத்து நின்று - சனாதனத்தை வேரறுப்போம் - ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!
திருவாரூர் செப்.11 2024 ஆம் ஆண்டுக்கான நகர்வை இப்பொழுதே தொடங்கிவிட்டோம். சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் விரட்டியடிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தளபதி அவர்களின் தலைமையில் அந்தக் களத்தில் நாம் கைகோத்து நிற்போம்; சனாதனத்தை வேரறுப்போம் - ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்றார் விடு தலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.
திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு
கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடை பெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
ஆரிய மாடல் என்பது என்ன?
ஆரிய மாடல் என்பது வருணாசிரம மாடல்!
வருணாசிரம மாடல் என்பது என்ன?
பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்கிற வருணங்கள் இங்கே மனித குலங்களாகப் பிரிந்து கிடக்கிறார்கள்.
சத்திரியனும், வைசியனும்,
சூத்திரனும் கீழ்ஜாதிதான்!
இந்த நான்கு வருணத்தில் பிராமணர்களே உயர்ந்த வர்கள்; மற்ற அத்துணை பேரும் பிராமணர்களுக்குக் கீழானவர்கள்; பார்ப்பனர்களுக்குக் கீழானவர்கள்; பார்ப்பனர்கள் மட்டும்தான் கடவுளிடம் பேச முடியும்; பார்ப்பனர்கள் மட்டும்தான் உயர்ந்த ஜாதி. சத்திரியனும் கீழ்ஜாதிதான்; வைசியனும் கீழ்ஜாதிதான்; சூத்திரனும் கீழ்ஜாதிதான்.
பார்ப்பனன் உடல் உழைப்பு செய்யக்கூடாது. ஆடு மேய்க்க மாட்டான்; மாடு மேய்க்கமாட்டான்; ஏர் ஓட்ட மாட்டான்; நாற்று நடமாட்டான்; சேற்றைக் குழைக்க மாட்டான்; அறுப்பு அறுக்க மாட்டான்; தாளடிக்க மாட்டான்; மூட்டை கட்டமாட்டான்; முதுகில் சுமக்க மாட்டான்; தச்சு வேலை செய்யமாட்டான், கொல்லன் வேலை செய்யமாட்டான். எந்த உடலுழைப்பும் இல்லாம லேயே தலைமுறை தலைமுறையாக ஓர் இனம் வாழ்ந்து கொண்டிருக்கிறது; அதற்கு வாய்ப்புத் தருவதுதான் ஆரிய மாடல். அதற்குப் பாதுகாப்பு அரணாக இருப்பதுதான் ஆரிய மாடல்.
நீ நாளைக்குப் போய் குனிந்து நிமிரவில்லை என்றால் சாப்பிட முடியாது; நம்முடைய அப்பாவோ, சகோதரனோ போய் மூட்டைத் தூக்கவேண்டும்; ஏர் ஓட்டவேண்டும்; கடினமான உடலுழைப்பு செய்யவேண்டும். அப்படி செய்யவில்லையென்றால், நமக்கு அரிசி இல்லை, கஞ்சி இல்லை, சாப்பாடு இல்லை - பட்டினிதான் கிடக்கவேண் டும்.
ஆனால், இந்த வேலையில், எந்த வேலையையும் செய்யாமல் ஓர் இனம் பாலும், மோரும், தயிரும், வெண்ணையையும், நெய்யையும் சாப்பிட்டுக் கொண் டிருக்கக் கூடிய அளவிற்கு அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணை ஏற்படுத்தித் தந்திருக்கிற கருத்தியல்தான் பார்ப்பனிய கருத்தியல். அதுதான் பார்ப்பனிய மாடல் - அதுதான் ஆரிய மாடல்.
பட்டேல் அவர்களால் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ்.
அந்த வருணாசிரம தர்மத்தை பாதுகாப்பதற்கென்றே ஓர் இயக்கம் உருவாகியிருக்கிறதே, ஒரு பயங்கரவாத இயக்கம், பட்டேல் அவர்களால் தடை செய்யப்பட்ட இயக்கம் - காந்தியாரை சுட்டுக்கொன்ற இயக்கம் - காமராஜரை கொளுத்துவதற்கு முயன்ற இயக்கம் - இஸ்லாமியர்கள்மீது வெறுப்பை விதைத்து, பாகிஸ்தான் பிரிந்தபொழுது, மிகப்பெரிய அளவிலே வன்முறை களைக் கட்டவிழ்த்து விட்ட இயக்கம் - இன்றைக்கும் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கும், கிறித்துவர்களுக்கும் எதிரான வன்முறைகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்ற, கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்ற ரத்த வெறி பிடித்த இயக்கம் - பயங்கரவாத இயக்கம் - அதுதான் ஆர்.எஸ்.எஸ்.
ஆர்.எஸ்.எஸ். பெற்ற குழந்தைகள்தான் மோடியும், அமித்ஷாவும்!
அந்த ஆர்.எஸ்.எஸ். பெற்ற குழந்தைதான் மோடி; அந்த ஆர்.எஸ்.எஸ். பெற்ற குழந்தைதான் அமித்ஷா.
மோடியும், அமித்ஷாவும் நம்முடைய எதிரிகள் அல்ல. மோடி போன்றவர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கின்ற ஆர்.எஸ்.எஸ்.தான். - ஆர்.எஸ்.எஸ். மாடல்.
அரசமைப்புச் சட்டத்தைப் பேசுகிறான்; சனாதனத்தைக் கிழிகிழியென்று கிழிக்கிறான்!
அவர்களுடைய கவலை என்னவென்றால், இப்படியெல்லாம் மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு சமூகம் - இன்றைக்குத் திருமாவளவன் தலைமையில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் திரளுகிறார்களே, அரசியல் சக்தியாக மேடையில் வந்து அமர்கிறார்களே, திருமாவளவன் எங்கேயாவது மாடு, ஆடு மேய்க்க வேண்டியவன்; சாணி வார வேண்டியவன் - இன்றைக்கு மீசையை முறுக்கிவிட்டு, சட்டையை மடித்துவிட்டு, இடுப்பில் பெல்ட்டு கட்டி கம்பீரமாக நிற்கிறான்; தலைநிமிர்ந்து நிற்கிறான்; நெஞ்சுயர்த்தி நிற்கிறான்; அரசமைப்புச் சட்டத்தைப் பேசுகிறான்; சனாதனத்தைக் கிழிகிழியென்று கிழிக்கிறான்.
இதனால்தான் அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது; ‘கலி முத்திப் போச்சு' என்கிறான்.
கீழ்ஜாதி என்று கருதப்பட்டவர்கள் எல்லாம் இன் றைக்குத் தலைநிமிர்ந்து நடக்கிறார்களே - எல்லாம் தலைகீழாக மாறிவிட்டதே என்று அவனுக்குக் கவலை.
பார்ப்பனப் பெண்கள் எல்லாம் நாற்று நடப் போகவேண்டிய நிலைவரும் என்கிற அச்சம்தான்!
இப்படியே போனால், பார்ப்பன வீட்டில் இருக்கின்ற பெண்கள் எல்லாம் நாற்று நடப் போகவேண்டிய நிலை வருமே!
கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், பார்ப்பன வீட்டுப் பெண்கள் எல்லாம் சேற்றில் இறங்கி நின்றார்கள் என்றால், எப்படி இருக்கும்? என்று.
அவர்கள் எல்லாம் விறகு பொறுக்குவது மாதிரி கற்பனை செய்து பாருங்கள். விறகு பொறுக்கி தலையில் சுமந்த எந்தப் பெண்மணியையாவது அந்த சமூகத்தில் நீங்கள் பார்த்ததுண்டா?
பார்ப்பனப் பெண்கள் சாமியாடி,
அலகு குத்தி பார்த்ததுண்டா?
அதேபோன்று, அந்த சமூகத்தில் சாமியாடி எந்தப் பெண்மணியையாவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
வேறு ஜாதியில் இருக்கிற பெண்கள்தான் சாமி ஆடுவார்கள்; முடி வளர்ப்பார்கள்; அலகு குத்துவார்கள்.
இந்தியாவில் ஒரே ஒரு பார்ப்பனப் பெண்மணிகூட, நம்முடைய அம்மா நிர்மலா சீதாராமன் உள்பட, யாரும் அலகு குத்தி பார்த்ததுண்டா என்றால், கிடையவே கிடையாது.
மூன்று வேளையும் நெய்யும், பருப்புமாக சாப்பிடுவார்கள்
அவர்கள் விறகு சுமக்கவும் மாட்டார்கள்; அலகு குத்தவும் மாட்டார்கள்; ஆனால், மூன்று வேளையும் நெய்யும், பருப்புமாக சாப்பிடுவார்கள்.
இதுதான் ஆரிய மாடல்!
இதுதான் பாதிக்கப்படுகிறது என்கிற கவலை அவனுக்கு. இப்படி ஒரு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டு விடுமே என்கின்ற அச்சம் அவனுக்கு.
ஆகவே, மறுபடியும் இங்கே வருணாசிரம கட்ட மைப்பை நிலை நிறுத்தவேண்டும். அதற்குத் தடையாக இருப்பது எது?
அதைத்தான் அவன் பார்க்கிறான்.
பி.ஜே.பி.யின் உண்மையான எதிரி
இந்திய அரசமைப்புச் சட்டம்தான்
ஒரு உண்மையைச் சொல்லுகிறேன், தோழர்களே! அரசியல் ரீதியாக மேம்போக்காகப் பார்த்தால், பி.ஜே.பி. யின் எதிரி காங்கிரஸ் என்று தோன்றும். தேர்தல் அரசியலில் காங்கிரஸ்தான் எதிரி.
மேம்போக்காகப் பார்த்தால், பி.ஜே.பி.யின் எதிரி கம்யூனிஸ்ட்கள் என்றுதான் தோன்றும்; தேர்தல் களத் தில் கம்யூனிஸ்ட்கள்தான் எதிரி.
மேம்போக்காகப் பார்த்தால், பி.ஜே.பி.யின் எதிரி தமிழ்நாட்டில் தி.மு.க.தான் என்று தோன்றும். தேர்தல் களத்தில் தி.மு.க. அவர்களுக்கு எதிரி.
ஆனால், அவர்களின் உண்மையான எதிரி எது?
இந்திய அரசமைப்புச் சட்டம்தான். அதுதான் நமக்குச் சமூகநீதியைத் தருகிறது; அதுதான் சுதந்திரத் தைத் தருகிறது; அதுதான் சகோதரத்துவத்தைப் பேசு கிறது; அதுதான் சமத்துவத்தைப் பேசுகிறது.
3 ஆயிரம், 4 ஆயிரம் ஆண்டுகால சனாதன சமூகக் கட்டமைப்பை ஆயுதம் இல்லாமல், படை இல்லாமல், எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் சிதைத்துக் கொண்டிருக்கிறது; பார்ப்பனர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அதனால்தான் அவன் அரசமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும் என்று நினைக்கிறான்.
உத்தரப்பிரதேசத்தில் அரசமைப்பு வரைவு
ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் அரசமைப்பு வரைவு ஒன்றை போட்டிருக்கிறார்கள்.
30 பேர் கொண்டவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்; 700 பக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்.
நான் கேட்கிறேன், அரசமைப்புச் சட்டம் இருக்கும் பொழுது, இன்னொரு அரசமைப்புச் சட்டம் எழுதவேண்டிய தேவை என்ன?
சனாதன சமூகக் கட்டமைப்பை
மறுபடியும் நிறுவவேண்டும்!
அதுவே அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்களைக் கைது செய்ய முடியும்.
மோடி ஏன் வேடிக்கைப் பார்க்கிறார்?
மோடி கும்பலின் நோக்கம் அதுதான் தோழர்களே - ஆரிய மாடலை இங்கே நிறுவவேண்டும்; சனாதன சமூகக் கட்டமைப்பை மறுபடியும் நிறுவவேண்டும்.
பார்ப்பனர்களே உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் மறுபடியும் இந்த மண்ணில் நிலைக்கவேண்டும்.
இதை அடித்து நொறுக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு தேசமாகத்தான் தமிழ்த் தேசம் இருக்கிறது; தமிழ் மண் இருக்கிறது.
அவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பது திராவிட மாடல் -
திராவிட இயக்கக் கொள்கை!
அதற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, சிம்ம சொப்பனமாக இருப்பது, பெரும் அச்சுறுத்தலாக இருப்பது, பேரிடியாக இருப்பது - திராவிட அரசியல் - திராவிட மாடல் - திராவிட இயக்கக் கொள்கை.
அதனால்தான், நாம் திராவிட இயக்கத்தோடு, திராவிடர் கழகத்தோடு நிற்கிறோம்.
அம்பேத்கரின் விருப்பமும் சனாதனத்தை ஒழிப்பது தான்; பெரியாரின் போராட்டமும் சனாதனத்தை ஒழிப்பதுதான்.
கவுதம புத்தரின் நோக்கமும்
சனாதனத்தை வேரறுப்பதுதான்!
இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த கவுதம புத்தரின் நோக்கமும் சமத்துவத்தை நிலைநாட்டு வதுதான்; சனாதனத்தை வேரறுப்பதுதான்.
திராவிட மாடல் என்பது சனாதனத்தை வேரறுக்கும் மாடல்.
உத்தரப்பிரதேசத்தில் வரைவு அரசமைப்புச் சட்டத்தில், இந்த நாட்டின் பெயரை நாங்கள் இந்தியா என்று ஏற்றுக்கொள்ளமாட்டோம்; ஹிந்துராஷ்டிரம் என்றுதான் பெயர் சூட்டுவோம்.
சமூகநீதியும், ஜனநாயகமும் இல்லை என்றால், நீயும், நானும் என்ன நிலை?
இந்தியாவின் தலைநகரமாக புதுடில்லி இருக்காது; வாரணாசி என்கிற காசிதான் இருக்கும்.
இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் ஜனநாயக முறைப்படி இருக்காது; வருணாசிரம முறைப்படிதான் இருக்கும்.
இந்தியாவில் முஸ்லிம்களும், கிறித்தவர்களும் வாழலாம்; தொழில் செய்யலாம். ஆனால், ஓட்டுப் போட உரிமையில்லை.
ஆக, சமூகநீதி இருக்காது, ஜனநாயகம் இருக்காது, சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இருக்காது.
சமூகநீதியும், ஜனநாயகமும் இல்லை என்றால், நீயும், நானும் என்ன நிலை? என்பதை யோசித்துப் பாருங்கள்.
நாமெல்லாம் 10, 20 ஆண்டுகளில் மண்ணுக்குள் போய்விடுவோம்; ஆனால், நம்முடைய வாரிசுகளின் நிலை என்ன? மீண்டும் வருணாசிரம மாடல் வந்தால் என்னாகும்?
சனாதனத்தை 70 ஆண்டுகளுக்குமேலாக எதிர்த்துப் போராடக் கூடிய இயக்கங்கள்!
ஆகவேதான், அதை எதிர்த்துப் போராடக் கூடிய ஒரு பேரியக்கமாக - இந்தியாவிலேயே அதை எதிர்த்து நிற்கின்ற ஒரு பேரியக்கமாக திராவிடர் கழகமும், திரா விட முன்னேற்றக் கழகமும் 70 ஆண்டுகளுக்குமேலாக களத்தில் நின்று கொண்டிருக்கின்றன.
இது வரலாற்று உண்மை; மேடைக்காக பேசவில்லை.
கலைஞரை நாம் பாராட்டுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் உதாரணங்களைச் சொல்ல முடியும். நான் மிகவும் வியந்து வியந்து பாராட்டுவது, அவர் உருவாக்கிய சமத்துவபுரம்தான்.
கலைஞரின் உள்ளத்தில் ஊறி இருக்கும்,
ஊறிக் கிடக்கும் பெரியாரிய சிந்தனைகள்தான்!
அது வேறு எந்த முதலமைச்சருக்கும் தோன்றாத சிந்தனை; வேறு எந்த அரசியல் தலைவருக்கும் தோன் றாத சிந்தனை. கலைஞருக்கு எப்படித் தோன்றியது என்று எண்ணிப்பார்த்தால், கலைஞரின் உள்ளத்தில் ஊறி இருக்கும், ஊறிக் கிடக்கும் பெரியாரிய சிந்தனை கள்தான் காரணம். அதனால்தான் அவர் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்று பெயர் வைத்தார்.
ஏனென்றால், இந்தியா முழுவதும் அக்கிரகாரம் என்பது வேறு; அது பார்ப்பனர்கள் குடியிருப்பு. ஊர்த் தெரு வேறு; அது ஜாதி இந்துக்களின் குடியிருப்பு; சேரி வேறு; அது தலித் பழங்குடி மக்களின் குடியிருப்பு.
இந்தியா முழுவதும் இப்படி மூவகையான குடியிருப்புகள் இருக்கின்றன.
இவர்கள் சேர்ந்து வாழ்வதில்லை. அக்கிரகாரத்தில், பார்ப்பனர்கள் குடியிருப்பில் போய், ஒரு முக்குலத்தோர் வீடு கட்டிக் குடியிருக்க முடியாது; முதலியார் குடியிருக்க முடியாது; செட்டியார், ரெட்டியார் குடியிருக்க முடியாது. பிள்ளைமார் குடியிருக்க முடியாது. அது பார்ப்பனர் குடியிருப்பு.
மற்ற ஜாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு வாழிடம். அது தனித்தனியாக இருக்கிறது; இது கோனார் தெரு; இது செட்டியார் தெரு, இது படையாச்சி தெரு, இது கள்ளர் தெரு, இது மறவர் தெரு, இது நாடார் தெரு என்றுதான் இருக்கும். அதில்கூட ஒரு வீடு மாறி மாறி இருக்காது.
கள்ளர், செட்டியார், ரெட்டியார், முதலியார், பிள்ளை மார் என்று இருக்காது.
எவ்வளவு பெரிய ஒடுக்குமுறை இருந்திருந்தால், இப்படியொரு வாழிட அமைப்புமுறை உருவாகி இருக்கும்.
இதுதான் ஆரிய மாடல்.
இதுதான் பெரியாரின் தாக்கம்!
இந்த ஆரிய மாடலை இப்பொழுது தகர்க்க முடியாது என்பதால், பெரியாரின் பிள்ளை, அண்ணாவின் தம்பியான கலைஞர் சிந்தித்தார். இவர்களை ஒன்றாக இருங்கள் என்றால், ஒன்றாக இருக்கமாட்டார்கள் என்று நினைத்துத்தான், நான் ஒரு சமத்துவபுரத்தை உருவாக்கு கிறேன். அந்த சமத்துவபுரத்தில் எல்லா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து வாழட்டும்.
ஒரு தனிக் குடியிருப்பு - இது சாதாரணமான சிந்தனையல்ல. இதுதான் பெரியாரின் தாக்கம்.
கலைஞர் எப்படி திராவிட மாடலாக இருக்கிறார்; கலைஞர் எப்படி ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கிறார்; கலைஞர் எப்படி சனாதன எதிர்ப்புப் போராளியாக இருக்கிறார்; கலைஞர் எப்படி ஆரிய மாடலை அடித்து நொறுக்கக்கூடிய ஆற்றல் பெற்றவராக விளங்கினார் என்பதற்கு சமத்துவபுரம் ஒன்றே சான்று தோழர்களே!
‘‘என் நெஞ்சை உலுக்கிவிட்டீர்கள், திருமா’’ என்றார் கலைஞர்!
இதே மேடையில்தான் நான் பேசினேன், கலைஞரை வைத்துக்கொண்டு - அவர் ஆதிகாலத்தில் உருவாக்கிய திட்டங்களையெல்லாம் நினைவுபடுத்தினேன். எத்த னையோ மேடைகளில் என்னுடைய பேச்சைக் கேட்டி ருக்கிறார்; ஆனால், என்னை அவர் பாராட்டியதில்லை. அன்றைக்கு நான் பேசி முடித்துத் திரும்பியதும், அவர் லேசாக எழுந்து, என் கைகளைப் பிடித்துக் குலுக்கி, ‘‘என் நெஞ்சை உலுக்கிவிட்டீர்கள், திருமா'' என்று சொன்னார்.
இந்தத் திருவாரூர் தெற்கு வீதியில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், அவர் நெஞ்சை உலுக்கக் கூடிய அளவிற்கு நான் என்ன பேசினேன் என்று பார்த்தேன்; வேறொன்றுமில்லை, அவருடைய பெரி யாரிய சிந்தனைகளை நினைவுபடுத்தினேன்; அவரு டைய உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த பெரியாரிய சிந்தனைகளை நினைவுபடுத்தி, அவருடைய திட்டங்களை நினைவுப்படுத்தி பேசினேன்.
விடுதலை சிறுத்தைகளுக்கு சனாதனத்தின் அபாயம் தெரிகிறது; ஆபத்துத் தெரிகிறது!
தோழர்களே, ஏன் கலைஞரை ஆதரிக்கிறோம்,
ஏன் தி.மு.க.வை ஆதரிக்கிறோம்,
ஏன் திராவிடர் கழகத்தோடும், இடதுசாரிகளோடும் தோழமைக் கட்சிகளோடும் இந்தக் களத்தில் கைகோத்து நிற்கிறோம்? என்றால், விடுதலை சிறுத்தைகளுக்கு சனாதனத்தின் அபாயம் தெரிகிறது; ஆபத்துத் தெரிகிறது.
தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்யப் பார்க்கிறார்கள். உத்தரப்பிரதேசத்தில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்ட வரைவு என்பது தவறானது. ஆபத்தானது. அவர்கள் அதை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள்.
மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது
2024 இல் நடைபெறப் போகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவார்களேயானால், ஒரு நள்ளிரவு வேளையில், எப்படி மோடி திடீரென்று தொலைக்காட்சியில் தோன்றி, 500 ரூபாய் நோட்டு செல்லாது; ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தாரோ, அதேபோல, மோடியோ அல்லது மோடியால் நியமிக்கப்படும் வேறு யாரோ ஒரு கேடியோ பிரதமராக நாற்காலியில் அமர்ந்தால், ஒரு நள்ளிரவு வேளையில் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்த அரசமைப்புச் சட்டம் செல்லாது என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் என்று சொல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதை நாம் தடுத்து, நிறுத்தியாகவேண்டும்; காப்பாற்றியாக வேண்டும். அதற்குரிய ஆற்றல், தமிழ்நாட்டின் முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்களின் கைகளில் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகம்
பல நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது!
நான் அவரை, இளைஞரணி தலைவராக இருந்த காலத்திலிருந்து ஒரு மாணவனாக கவனித்து வந்தவன். ஒரு கட்சியின் தலைவராக கூட்டணி பேசத் தொடங்கிய நாளிலிருந்து, 2001 ஆம் ஆண்டிலிருந்து அவருடைய அரசியல் நகர்வுகளை நான் கவனிக்கக் கூடியவன்.
தி.மு.க.விற்கு வராத நெருக்கடிகள் அல்ல; எவ்வளவோ பல நெருக்கடிகளை சந்தித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வெளியேறிய போது ஏற்பட்ட நெருக்கடி மிகப்பெரிய நெருக்கடி. அண்ணன் வைகோ அவர்கள் வெளியேறியபோது ஏற்பட்ட நெருக்கடி கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி.
இவையெல்லாம் கடந்து தி.மு.க.வைக் கட்டிக் காப் பாற்றியவர் கலைஞர். எம்.ஜி.ஆர். சினிமா திரைப்படத் தின்மூலம் மக்கள் செல்வாக்கைப் பெற்ற மிகப்பெரிய நடிகர். அப்படிப்பட்ட மக்கள் திலகம் என்று அழைக்கப் பட்ட எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறிய போதும், அந்தக் கட்சியை சிதறவிடாமல் கட்டிக் காப் பாற்றிய பெருமை கலைஞருக்கு உண்டு.
அதேபோல, ஒரே நாளில் 16 மாவட்டச் செயலாளர்கள் தி.மு.க.விலிருந்து வெளியேறியபோது, அண்ணன் வைகோ அவர்கள் வெளியேறிய ஒரு நிகழ்வு நடந்தது. அப்போதும் அந்தக் கட்சியைக் காப்பாற்றிய பெருமை தலைவர் கலைஞரைச் சாரும்.
தி.மு.க. மறுபடியும் மீண்டு எழுந்து, தமிழ்நாட்டின் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியது
அதைவிட, 1991 ஆம் ஆண்டில் சிறீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டபொழுது - தி.மு.க.தான் அதற்குக் காரணம் என்று ஒரு அவதூறு பரப்பி, மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. அலுவலகங்கள் எல்லாம் சூறையாடப் பட்டன; கொடிக்கம்பங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. அந்தத் தேர்தலில் இரண்டே இரண்டு தொகுதிகளில்தான் தி.மு.க. வெற்றி பெற்றது. 232 தொகுதிகளில் தோல்வியைக் கண்டது. அப்படி ஒரு நெருக்கடியைச் சந்தித்த தி.மு.க. மறுபடியும் மீண்டு எழுந்து, ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல, தமிழ்நாட்டின் ஆட்சிப் பீடத்தைக் கைப்பற்றியது. அதற்குக் கலைஞருடைய ஆற்றல் அளப்பரியது.
அதன் பிறகு, 2001 இல் தி.மு.க.பின்னடைவைச் சந்திக்கிறது. இனிமேல் தி.மு.க. தேய்ந்து போகும் - காணாமல் போகும் என்று எண்ணிக் கொண்டிருந்த பொழுது, முளைத்து எழுந்தவர்தான் அண்ணன் தளபதி அவர்கள்.
நான் பார்க்கிறேன், 2001 இல் எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வை 2006 இல் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி, 2011 இல் மிகப்பெரிய கட்சியாகக் கொண்டுவந்து நிறுத்தியவர் அண்ணன் தளபதி அவர்கள், கலைஞர் இருந்தபொழுதே.
2016 சில சொற்ப வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததினால், ஆட்சியை இழந்தார், மிகப்பெரிய அளவிலே அந்தக் கட்சி வெற்றி பெற்றது.
ஒரு மெகா கூட்டணியை அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய பெருமை அண்ணன் தளபதிக்கு உண்டு!
2021 இல், சனாதன சக்திகள் வெட்கித் தலைகுனியக் கூடிய அளவிற்கு, எல்லாக் கட்சிகளையும் ஒன்று சேர்த்து, காங்கிரஸ் கட்சி இருக்கும் இடத்தில், இடது சாரிகள் இருக்கமாட்டார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ஓரிடத்தில், காங்கிரசையும் என்னால் உட்கார வைக்க முடியும்; இடதுசாரிகளையும் என்னால் பக்கத்தில் அமர வைக்க முடியும்; திருமாவளவனையும் உட்கார வைக்க முடியும்; இஸ்லாமிய கட்சிகளையும் உட்கார வைக்க முடியும் என்று ஒரே அணியில், இந்தியாவிலேயே ஒரு மெகா கூட்டணியை அமைத்து, ஆட்சியைக் கைப்பற்றிய பெருமை அண்ணன் தளபதி அவர்களைச் சாரும்.
சனாதன சக்திகளே, கலைஞரைப் போல, இவரால் எழுத முடியாது; கலைஞரைப் போல் இவரால் பேச முடியாது; கலைஞரைப்போல் இவரால், தமிழைக் கொண்டு ஆள முடியாது என்றெல்லாம் கணக்குப் போட்டு ஏமாந்து போனீர்கள்!
கலைஞரைப் போல, அண்ணாவைப் போல, பெரியாரைப் போல பன்மடங்கு ஆற்றல் பெற்றவர் தளபதி!
கலைஞரைப் போல பன்மடங்கு, கலைஞரைப் போல, அண்ணாவைப் போல, பெரியாரைப் போல பன் மடங்கு ஆற்றல் பெற்றவராக இன்றைக்கு ‘விஸ்வரூபம்' எடுத்திருப்பவர் அண்ணன் தளபதி அவர்கள் என்பதை, 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 ஆம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலும் நிரூ பித்துக் காட்டியுள்ளன.
சனாதனத்தை வீழ்த்தக் கூடிய
ஆற்றல் பெற்றவர்!
எனவே, நீங்கள் தப்புக் கணக்குப் போட்டு விட்டீர்கள்.
பெரியாரைவிடவும், அண்ணாவைவிடவும், கலை ஞரைவிடவும் வேகமாகப் பாயக்கூடிய ஆற்றல் பெற்றவர்; சனாதனத்தை வீழ்த்தக் கூடிய ஆற்றல் பெற்றவர்; அவர்களை வீழ்த்தி விரட்டியடிக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் அண்ணன் தளபதி அவர்கள் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் உணர்ந்து வைத்திருக்கிறது.
அவரது தலைமையில் நடைபெறுகிற ஆட்சி ‘திராவிட மாடல்' ஆட்சி என்று சொன்னால், அது அம்பேத்கரிய இயக்கங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல; இடதுசாரி இயக்கங்களுக்கு மாறுபட்டது அல்ல.
ஜனநாயக மாடல்தான் - ‘திராவிட மாடல்!’
பார்ப்பனிய கருத்தை, ஆர்.எஸ்.எஸ். அரசியலை, பி.ஜே.பி. அரசியலை, சனாதன கருத்தியலை எதிர்க்கக் கூடிய அத்துணை ஜனநாயக சக்திகளுக்குமான ஒரு ஜனநாயக மாடல்தான் - ‘திராவிட மாடல்.'
திராவிடியன் மாடல் - அது சமூகநீதியைத் தரும்
பெண் விடுதலையைத் தரும்
ஜாதியை ஒழிக்கும்
ஆரியத்தை விரட்டும்
ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைத் தடுக்கும்.
அதற்காக இன்றைக்கு ஓர் அரசு ஆட்சிப் பீடத்தில் அமர்ந்திருக்கிறது என்கிற நம்பிக்கையோடுதான் நாம் இந்தக் களத்தில் கைகோத்து நிற்கின்றோம்.
2024-க்கான நகர்வை இப்பொழுதே தொடங்கிவிட் டோம். சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் விரட்டியடிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
சனாதனத்தை வேரறுப்போம் -
ஜனநாயகத்தை வென்றெடுப்போம்!
தளபதி அவர்களின் தலைமையில் அந்தக் களத்தில் நாம் கைகோத்து நிற்போம் என்பதைச் சொல்லி,
சனாதனத்தை வேரறுப்போம் -
ஜனநாயகத்தை வென்றெடுப்போம் என்று கூறி, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர் கள் உரையாற்றினார்.
No comments:
Post a Comment