உச்சநீதிமன்றத்திற்கு எதிரானது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!
தமிழ்நாடு அரசு உடனே பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்!
மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்' செந்தில்நாதன் உரை
சென்னை, செப்.3 ஆகமக் கோவில்களைக் கண்டறிந்து அந்தந்த ஆகமத்தின் அடிப்படையில் அர்ச்சகர் நியமனம் நடைபெறவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறுகிறது. உண்மையைச் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் ஆகமப்படி எந்தக் கோவிலும் கட்டப்பட வில்லை; இன்னும் சொல்லப்போனால், ஆகமங்களுக் கிடையே முரண்பாடுகள் உள்ளன என்றார் மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்' செந்தில்நாதன் அவர்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மைக்காலத் தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்
கடந்த 1..9.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மைக்காலத் தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்’’ சிறப்புக் கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்' செந்தில்நாதன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
60 ஆண்டுகால ஆசிரியருக்கு
என் வாழ்த்துகள்!
ஒரே நாளிதழில் 60 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆசிரி யராக இருக்கும் ஆசிரியர் அவர்களுக்கு முதலில் என் னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் அவர்கள் ஒரு தகைசால் தலைவர். அவர் எப்பொழுதெல்லாம் தமிழர்களின் தன்மானத்திற்குச் சவால் விடப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் அப்பிரச் சினையை முன்னெடுத்து, அதற்காக நிகழ்ச்சிகளை யெல்லாம் நடத்தக் கூடியவர்.
அதனாலேதான், சென்னை உயர்நீதிமன்றத்தின் அண்மைக்கால தீர்ப்பைப்பற்றி இப்படி ஒரு கருத்தரங் கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
எனக்கு அடுத்து உரையாற்றவிருக்கின்றவர் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள். ஓய்வுபெற்ற பிறகும், தமிழர் நலன்களுக்காக ஓய்வு பெறாமல் பாடுபட்டுக் கொண்டிருப்பவர்.
இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு விவாதத்திற்கு வந்திருக்கிறது.
உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை நேர்மையாக விமர்சனம் செய்யலாம்
ஓர் உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பை நேர்மையாக விமர்சனம் செய்யலாம். அதிலொன்றும் எந்தத் தவறும் கிடையாது.
தீர்ப்புக்கு உள்நோக்கம் மாத்திரம்தான் கற்பிக்கக் கூடாதே தவிர, அந்தத் தீர்ப்பைப்பற்றி ஒரு நேர்மையான கிரிட்டிசிசம் என்பது அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையிலேதான் இங்கே நான் உரையாற்ற வந்திருக்கின்றேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய தீர்ப்பில், குறிப்பாக ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட இரண்டு வழக்குகளைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள்.
ஒன்று, சேஷம்மாள் வழக்கு, இன்னொன்று ஆதி சிவாச்சாரியார்கள் வழக்கு.
இரண்டையும் சுருக்கமாக சில வரிகளில் சொல்ல வேண்டும் என்றால், சேஷம்மாள் வழக்கு என்பது, கலைஞருடைய காலத்தில், 1970 இல், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத் துறை சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வந்ததுபற்றியதாகும்.
அந்தத் திருத்தத்தின்படி, பரம்பரை அர்ச்சகர்கள் ஒழிக்கப்பட்டார்கள். பரம்பரை அர்ச்சகர்களை ஒழித்த அந்த சட்டத் திருத்தம் செல்லாது என்று சொல்லித்தான், வழக்குத் தொடர்ந்தார்கள் உச்சநீதிமன்றத்தில். அந்த வழக்குதான் சேஷம்மாள் வழக்கு என்று சொல்லப் படுவது.
சேஷம்மாள் வழக்கில், உச்சநீதிமன்றம் சட்டத் திருத்தம் செல்லும் என்று தீர்ப்பளித்தது.
கோவிலில் பணியாற்றுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்
‘‘கோவிலில் பணியாற்றுபவர்கள் எல்லாம் ஆன்மிகத் தலைவர்கள் அல்ல; அவர்கள் மடாதிபதிகள்கூட அல்ல. அவர்கள் ஊழியர்கள்தான். அவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
ஆகவே, அந்தப் பரம்பரை அர்ச்சகர்களை ஒழித்தது சரிதான்'' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்தோடு அந்தப் பிரச்சினை முடிந்திருந்தால், நன்றாக இருந்திருக்கும். ஆனால், வாதாடியவர்கள் கடைசி நேரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் ஒரு முறையீடு வைத்தார்கள்; ‘‘நீங்கள் பரம்பரை அர்ச்ச கர்களை ஒழித்தது சரிதான் என்று சொல்லிவிட்டீர்கள். நாளை, அரசு விதிகளைப் போட்டு, ஆகமத்திற்கு விரோதமாக அர்ச்சகர்களையெல்லாம் நியமனம் செய்துவிட்டால், என்ன செய்வது?'' என்று கேட்டார்கள். அதாவது தீர்ப்பு சொன்னதற்குப் பிறகு.
அப்பொழுது நீதிபதிகள் சொன்னார்கள், ‘‘உங்களு டைய அச்சம் ஆதாரமற்றது. அப்படி சொல்லிவிட்டு, அப்படி ஏதேனும் விதிகள் போடப்பட்டால், நீங்கள் நீதிமன்றத்தை அணுகலாம்'' என்று சொன்னார்கள்.
இந்தச் சின்ன ஓட்டைக் கிடைத்தது அல்லவா! இதை வைத்துக்கொண்டுதான், பல பேர் சனாதனவாதிகள் உள்ளே நுழைந்தார்கள்.
இது 1977 இல் நடந்த சட்டத் திருத்தம், அது முடிந்தது.
நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது
அதன் பிறகு, மீண்டும் கலைஞர் ஆட்சி வந்த பிறகு - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற முயற்சியின் அடிப்படையில், அரசு ஆணை போடப்பட்டது. பிறகு, நீதியரசர் ஏ.கே.ராஜன் தலை மையில் குழு அமைக்கப்பட்டது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குப் பயிற்சிகள் எல்லாம் கொடுக்கப்பட்டது. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது; அது பிறகு சட்டமானது.
இந்தச் சூழ்நிலையில்தான், மீண்டும் உச்சநீதிமன்றம் போனார்கள். அங்கே அவர்கள் சொன்னதெல்லாம், ''ஏற்கெனவே சேஷம்மாள் வழக்கில், பிரச்சினை முடிவு செய்யப்பட்டு விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்திருக் கிறீர்கள், அதாவது ஆகமத்திற்கு விரோதமாக விதிகள் போடப்பட்டால், நீதிமன்றத்தை அணுகலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் நாங்கள் வந்திருக்கின்றோம்'' என்று வந்தார்கள்.
உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகளின் தந்திரத்தையும் நாம் பார்க்கவேண்டும்
அந்த வழக்கிலும், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில், அரசு போட்ட ஆணை செல்லாது என்று சொல்ல வில்லை. அது சரிதான் என்று சொல்லிவிட்டு, இங்கே தான் உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகளின் தந்திரத் தையும் நாம் பார்க்கவேண்டும்.
அதிலே என்ன தந்திரம் என்று சொன்னால், அரசு போட்ட அரசாணை, சட்டத்தில் தலையிடவில்லை. ஆனால், சேஷம்மாள் வழக்கில் ஒன்று சொல்லப்பட்டது; அதாவது அர்ச்சகர் நியமனம் அனைத்தும், ஆகமப்படி தான் அமையவேண்டும்.
அதனால், ஆகமக் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டால், அந்தக் கோவிலில் எந்த ஆகமம் பின்பற்றப்படுகிறதோ, அதன்படிதான் அர்ச்சகர் நியமிக்கப்பட்டு இருக்கிறாரா என்று பார்த்து, அதன்படி அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றால், பாதிக்கப்பட்ட வர்கள் நீதிமன்றத்திற்கு வரலாம் என்று சொன்னார்கள்.
அதாவது, ஆகமம் என்பது ஒரு பாம்பு. அந்தப் பாம்பு இருக்கிறது அல்லவா - அதை இந்தத் தீர்ப்பு புற்றுக்குள்ளே அனுப்பிவிட்டது என்று நினைத்தோம்; அது ஒரு மாதிரி சமாதி ஆகிவிட்டது என்று நினைத்தோம். ஆனால், அது மீண்டும் புற்றிலிருந்து வெளியே வந்திருக்கிறது. அதுதான் உயர்நீதிமன்றத்தில் வந்த வழக்கு.
ஆகமக் கோவில்கள் மட்டும் என்று அவர்கள் சொல்லவில்லை
அந்தத் தீர்ப்பில் ஒரு விஷயம் சொல்லப்பட்டது. அந்தந்தக் கோவில்களில் நியமனம் நடக்கின்றபொழுது மட்டும்தான் பாதிக்கப்பட்டவர்கள் வரலாம் என்று சொன்னார்களே தவிர, அந்தத் தீர்ப்பில், ஆகமக் கோவில்கள் தனி, ஆகமம் அல்லாத கோவில்கள் தனி என்று பிரித்து சொல்லவில்லை. இந்த அரசு ஆணை போட்டிருக்கின்ற அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக லாம் என்று சொல்லப்பட்டிருப்பதும் அப்படித்தான். இன்று அவர்கள் தந்த தீர்ப்பின்படி, ஆகமக் கோவில்கள் மட்டும் என்று அவர்கள் சொல்லவில்லை.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் இப்பொழுது போடப்பட்ட வழக்கில், அதாவது அறநிலையத் துறை சில விதிகளை ஏற்படுத்தியது. அர்ச்சகர் நியமனம் சம்பந்தமாக. அந்த அர்ச்சகர்கள் நியமனம் சம்பந்தப் பட்ட விதிகளை எதிர்த்து வழக்குப் போட்டு - ஆதி சிவாச்சாரியார்கள் வழக்குக்கு எதிராக விதிகள் அமைந் திருக்கிறது என்று வழக்குப் போட்டார்கள்.
ஆகமம் அல்லாத கோவில்களுக்குத்தான் பொருந்தும்; ஆகமக் கோவில்களுக்குப் பொருந்தாது
இங்கே இருக்கக்கூடிய நீதிபதி என்ன சொல்கிறார் என்று சொன்னால், இந்த விதிகள் அனைத்தும் ஆகமம் அல்லாத கோவில்களுக்குத்தான் பொருந்தும்; ஆகமக் கோவில்களுக்குப் பொருந்தாது என்று சொல்கிறார்.
இதற்கு என்ன பொருள்?
ஆகமக் கோவில்களில் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியினரும் உள்ளே போக முடியாது.
ஒரு மாரியம்மன் கோவிலுக்குப் போகலாம்; அல்லது மன்னார்சாமி கோவிலுக்குப் போகலாமே தவிர, மீனாட்சி கோவிலுக்குப் போக முடியாது. அதுதான் அதற்கு அர்த்தம்.
ஆகம கோவில்களுக்கு நீ போக முடியாது; ஆகமம் இல்லாத கோவில்களுக்கு பூஜை செய்யலாம். இதற்கு எதற்குத் தீர்ப்பு?
ஏற்கெனவே ஆகமம் இல்லாத கோவில்களில் பூசாரிகள் இருக்கிறார்கள். இதற்கு நீதிமன்றம் எந்த அங்கீகாரமும் தரவேண்டிய அவசியமில்லை.
இதையும் செய்துவிட்டு, நீதியரசர் சொக்கலிங்கத் தினுடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்படுமாம். அந்தக் குழு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஆகமம் கோவில்கள் எத்தனை என்பதை அடையாளம் கண்டு, நமக்குப் பட்டியல் தரும். அந்தக் கோவில்களுக்குள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகப் போக முடியாது.
ஏனென்றால், அந்தந்தக் கோவில்களில், என்னென்ன ஆகமங்கள் இருக்கிறதோ அந்தந்த ஆகமத்தின் வழிவந்தவர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும்.
ஆதிசிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்புக்கு மாறாகவும், எதிராகவும் போகிறது
உண்மையிலேயே சென்னை உயர்நீதிமன்றத்தினு டைய தீர்ப்பு என்பது, ஏற்கெனவே இருக்கக்கூடிய ஆதிசிவாச்சாரியார்கள் வழக்கின் தீர்ப்பிற்கு உண்மை யிலேயே மாறாகவும், எதிராகவும் போகிறது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்று சொன்னால், இந்த வழக்கு நடக்கின்றபொழுது, தமிழ்நாடு அரசின் சார்பில், பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.
இதுவரை தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை!
ஏன் இப்படி நடந்தது என்பது இதுவரை விளங் காத புதிராக இருக்கிறது. இது ஒரு முக்கியமான வழக்கு. இந்த வழக்கில், அரசின் சார்பில், அழுத் தந்திருத்தமாக ஒரு பதில் மனு போடப்படவேண்டும்.
ஆனால், இதுவரை பதில் மனு போடப்பட வில்லை. ஆசிரியர் அய்யா அவர்கள்தான் இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு செய்ய வேண்டும்.
அதற்கடுத்து, தலைமை வழக்குரைஞர் அட்வ கேட் ஜெனரல் ஆஜரான போது, கிட்டத்தட்ட மறைமுகமாக, ஒரு நீதியரசரை நியமித்து, அவர் ஆகமக் கோவில்களை அடையாளம் காணலாம் என்பதற்கு, ஒப்புக்கொண்டதுபோல இருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் வழக்காடவும் முடியாது
அப்படி ஒப்புக் கொண்டிருந்தால், நீங்கள் உச்சநீதி மன்றத்திற்குப் போகிறபொழுதுகூட, அந்தப் பகுதி என்பது, மாநில அரசு ஒப்புக்கொண்டது என்பதாலே, அதை எதிர்த்து நீங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்காடவும் முடியாது.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில், ஆகமக் கோவில்கள் என்று கண்டறிவதற்கு - உண்மையிலேயே ஆகமக் கோவில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறதா? இது ஓர் அடிப்படையான கேள்வி.
நீதியரசர் சொக்கலிங்கத்தின் குழு, ஒவ்வொரு கோவிலாகச் சென்று, ஆகமப்படி நடக்கிறதா? என்று கேட்டால், அவன் காரண ஆகமம், காமிர ஆகமப்படி நடக்கிறது என்று சொல்வான்.
ஆனால், அதை நம்பக்கூடாது. உண்மையிலேயே ஆகமம் பின்பற்றப்படுகிறதா? என்பதைப் பார்க்க வேண்டும்.
இந்தத் தீர்ப்புகள் இருக்கின்றன அல்லவா - சேஷம் மாள் வழக்காகட்டும் - ஆதிசிவாச்சாரியார்கள் வழக் காகட்டும் - அவற்றில் எல்லாம் இந்த நீதிமன்றம் இரண்டு நிபுணர்களுடைய வாக்குமூலத்தை எடுத்துக்கொண் டுள்ளது.
டாக்டர் கானே என்பவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்த நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்கள் சேஷம் மாள் வழக்கிலும் சரி, ஆதிசிவாச்சாரியார் வழக்கிலும் சரி.
கி.மு.4 ஆம் நூற்றாண்டில்கோவில்களே கிடையாது!
அந்த மேற்கோளில், அவர் ஒன்றும் ஆகமம் பற்றி பெரிதாகச் சொல்லவேவில்லை. அவர் ஆகமத்தில் நிபுணரும் அல்ல. அவர் முழுக்க முழுக்க வேதங்களையும், புராணங்களையும்பற்றி சொல்லியிருக்கிறாரே தவிர, எப்படி கோவில்களில் வழிபாடு ஏற்பட்டது? கி.மு.4 ஆம் நூறற்றாண்டி லேயே கோவில்கள் வந்தன என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.
ஆனால், கி.மு.4 ஆம் நூற்றாண்டில் இது போன்ற கோவில்களே கிடையாது. அன்றைக்கு இருந்தவர்கள், மரத்தடியிலேதான் வணங்கி னார்கள். தமிழ்நாட்டில் இருந்த வணக்கம் என்பது முருகர் வணக்கமும், கொற்றவை வணக்கமும்தான்.
இவர்கள் சொல்லுகிற, வேதம் சொல்லுகிற எந்தக் கடவுளும் தமிழ்நாட்டில் கிடையாது.
அப்படி இருக்கும்பொழுது, ஆகமத்தைப்பற்றிச் சொன்ன அவர் ஒரு பெரிய நிபுணர் அல்ல.
இன்னமும் சொல்லப்போனால், ஆதிசிவாச்சாரியார் வழக்கிலே, சேஷம்மாள் வழக்கைப்பற்றி சொல்லுகிற பொழுது, நீதியரசர்கள் சொல்லுகிறார்கள்,
Seshammal case is not an authority in agama என்று சொல்கிறார்கள்.
ஆகமங்களுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கின்றன
இவர்களே ஒப்புக்கொள்ளவில்லை. ஏனென்று சொன்னால், அதுபற்றிய விவரங்கள் எதுவும் அதிலே கிடையாது. 28 ஆகமங்கள் இருக்கிறது என்று சொன்னால் போதுமா?
28 ஆகமம் ஏன் வந்தது?
நமக்கு அரசமைப்புச் சட்டம் என்று சொன் னால், ஒரே சட்டம்தான். அதில் நாம் திருத்தங்கள் கொண்டு வருவோம்.
எதற்காக சைவ ஆகமம் 28 தோன்றின.
எதற்காக உப ஆகமம் என்று 207 ஆகமம் தோன்ற வேண்டும்.
ஒரு நாலைந்து ஆகமத்தைத் தவிர, மற்றவை காணவில்லை. ஏனென்று சொன்னால், ஆகமங் களுக்கு இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. ஒரு ஆகமம் சொல்வதை, இன்னொரு ஆகமம் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆகமங்களையெல்லாம் அழித்துவிட்டவர்கள், ஆகமம்பற்றி பேசுகிறார்கள்
இதுதான் உண்மையாக இருக்கவேண்டும். அத னாலே, தங்களுக்குத் தேவையான ஆகமங்களை மட்டும் நிறுத்திக்கொண்டு, மற்ற ஆகமங்களையெல்லாம் அழித்துவிட்டவர்கள், ஆகமம்பற்றி பேசுகிறார்கள்.
சேஷம்மாள் வழக்கில் இன்னொருவரை சொல்கி றார்கள், யாரென்று சொன்னால், பார்த்தசாரதி பட்டாச் சாரியார். திருவல்லிக்கேணியில் தடுக்கி விழுந்தால், பார்த்தசாரதி இருப்பார்.
பார்த்தசாரதி பட்டாச்சாரியார்
நீங்கள் யாராவது பார்த்தசாரதி பட்டாச்சாரியாரைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
அப்படி ஒருவர் இருப்பதாகவே நமக்குத் தெரியாது. ஆனால், தீர்ப்புகளில், அவர் ஒரு எக்ஸ்பர்ட் - நிபுணர் என்று சொல்கிறார்கள்.
அவர் தன்னுடைய அபிடவிட்டிலே சொல்லியிருப் பதை ஏற்றக்கொள்கிறார்கள். அவர் முழுக்க முழுக்க வைணவம்பற்றித்தான் அதிகமாகச் சொல்லுகிறார்.
இந்த அடையாளம் தெரியாத பார்த்தசாரதியையும், வேதங்களையும், புராணங்களையும், இந்து தர்மம் என்று சொல்லி எழுதிய டாக்டர் கானேயையும்பற்றி குறிப்பிடும் நீதிபதிகள், தமிழ்நாட்டில் கோவில்களைப்பற்றி ஆய்ந்து ஆகமங்களைப்பற்றி ஆய்ந்து எழுதிய நீதிபதி ஏ.கே.ராஜனுடைய அறிக்கையையும், நீதிபதி மகாராஜன் அறிக்கையையும் ஏன் குறிப்பிட மறுக்கிறார்கள்?
தமிழ்நாட்டில் எந்தக் கோவிலுமே ஆகமக் கோவில் அல்ல!
ஏனென்றால், நீதிபதி மகாராஜன், ஆகமங்கள் தமிழிலே இருந்தது என்று சொல்கிறார்.
நீதிபதி ஏ.கே.ராஜன், ஆகமங்கள் மீறல் நடந்திருக் கிறது என்று சொல்லுகிறார்.
அந்த அடிப்படையில் பார்த்தால், தமிழ்நாட்டில் எந்தக் கோவிலுமே ஆகமக் கோவில் அல்ல என்று நான் சொல்வேன்.
(தொடரும்)
No comments:
Post a Comment