உத்தரப்பிரதேச மாநிலம் சகரன்பூரில் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடிவீராங்கனைகளுக்கு ஆண்களின் கழிப்பறையிலேயே சமைத்து உணவு பரிமாறப்பட்டுள்ளது; இது தொடர்பான காட்சிப் பதிவு வெளியானதும் மாவட்ட விளையாட்டுத்துறை ஆணையர் அனிமேஷ் சக்சேனாவை உத்தரப்பிரதேச அரசு உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
200க்கும் மேற்பட்ட மாணவிகள் கபடி விளையாட்டுப் பயிற்சிக்காக அந்த விளையாட்டு மைதானத்தில் தங்கி உள்ளனர்.
அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக ஆண்கள் சிறுநீர் கழிக்கும் இடத்தில் பேப்பர் விரித்து அதன் மீது பூரியைக் கொட்டி வைத்துள்ளனர். அதே போல் கழிப்பறை வாசலில் பெரிய தாம்பாளத்தட்டில் சோற்றைக் கொட்டி வைத்துள்ளனர். கழிப்பறைக்குப் பயன்படுத்தப்படும் வாளியில் பருப்பு குழம்பு ஊற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சிப் பதிவு வெளியாகியதால் மாவட்ட விளையாட்டுத்துறை ஆணையர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து இடை நீக்கம் செய்யப்பட்ட விளையாட்டுத்துறை ஆணையர் அனிமேஷ் சக்சேனா ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், 'சாப்பாடு மிகவும் தரமாக வழங்கப்பட்டுள்ளதா, அதில் ஏதேனும் குறை இருக்கிறதா, எந்த இடத்தில் இருந்து சாப்பிட்டால் என்ன? இதில் கூடவா அரசியல் செய்யவேண்டும்? நான் என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சரிடம் முறையீடு செய்யவுள்ளேன்' என்று ஆணவமாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒரு வீராங்கனை கூறும் போது, 'நாங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது சில பயிற்சியாளர்கள் கழிப்பறைக்குச் சென்றனர். மிகவும் நாற்றம் எடுத்தது, இருப்பினும் எங்களுக்கு வேறு வழியில்லை. விளையாடி விட்டு பசியோடு வரும் நாங்கள் சாப்பிடாவிட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவோம். ஆகையால் நாங்கள் சாப் பிட்டே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது' என்று கூறினார்.
இது மனித உரிமை ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு போகப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
இதே கபடி விளையாட்டுக்காரர்கள் ஆண்களாக இருந்தால் இப்படி நடந்திருக்குமா? பெண்களாக இருந்தாலும் - கபடி போன்ற கடுமையான விளையாட்டுப் போட்டிகளில் எந்த உயர் ஜாதி பெண்களும் பங்கு கொள்ள மாட்டார்கள். இதிலும் ஜாதி மனப்பான்மை உண்டு என்பதை மறுக்க முடியாது.
இடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி, முதல் அமைச்சரிடம் முறையிடுவேன் என்று கூறியது எந்தத் தைரியத்தில்?
உத்தரப்பிரதேசத்தில் நடப்பது சனாதன ஹிந்துத்துவக் கொள்கை உடைய சாமியார் ஆதித்யநாத் ஆட்சி ஆயிற்றே!
தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு முதல் அமைச்சர் சாமியார் ஆதித்யநாத் வருகிறார் என்றால், முதல் நாளே அரசு அதிகாரிகள் அந்தப் பகுதிகளில் சேரி வாழ் மக்களுக்குச் சோப்பும் வாசனைப் பவுடர்களும் அளித்து விடுவார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் என்றால் அப்படியொரு மனப்பான்மை , கண்ணோட்டம்! பிஜேபி ஆட்சியின் இலட்சணம் இதுதான். ஒடுக்கப்பட்டோரும், பிற் படுத்தப்பட்டோரும் சிறுபான்மையினரும் கை கோர்த்து ஒன்றாகத் திரண்டு எழுந்து ஒன்றிய பிஜேபி அரசை விரட்டும் நாள் முக்கியமானதே!
No comments:
Post a Comment