மாஜி முதல் மந்திரியான டாக்டர் பி.சுப்பராயன் அவர்கள் லண்டனுக்குச் சென்றிருந்தவர், வந்து விட்டார். அவரது மனைவியார் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் இந்திய சட்டசபைத் தேர்தலுக்கு ஒரு அபேட்சகராய் நிற்கப் போகும் செய்தி மறுபடியும் கிளம்பி இருக்கிறது. இதன் பயனாய்த் தமிழ் நாட்டில் இந்திய சட்டசபைத் தேர்தல் விஷயத்தில் ஒரு மாற்றம் ஏற்படலாம்.
அதாவது கோவை ஜில்லாவிலும் சேலம் ஜில்லாவிலும் கொங்கு வேளாள சமுகம் அதிகமாக உண்டு. இந்த இரண்டு ஜில்லாவில் உள்ள வேளாள சமுகம் ஒரு வேளாள சமுக அபேட்சகரைத்தான் ஆதரிப்பார்கள். வேளாள சமுகத்தில் ஒரு அபேட்சகர் இல்லை என்கின்ற காரணத்தினாலேயே கோவை ஜில்லா போர்டு பிரசிடெண்டு, தோழர் வெள்ளியங் கிரிக் கவுண்டர் தனது ஜில்லா போர்டு ஸ்தாபனத்தின் பயனாய் உள்ள செல்வாக்கைத் தோழர் அவினாசிலிங்கத் துக்காகப் பயன்படுத்துவதாகவும், கோவை ஜில்லா போர்டு வைஸ் பிரசிடெண்டும் கொங்கு வேளாள குலத் தலைவரும், மடாதிபதியுமான பழையகோட்டைப்பட்டக்காரர் அவர்கள் தனது செல்வாக்கை டாக்டர் வரதராஜுலு அவர்களுக்குப் பயன்படுத்துவதாகவும் வாக்களித்து இருந்தார்கள். இதன் பயனாக கோவை, சேலம் ஜில்லா, வேளாள சமுக ஓட்டுகள் இவ்விருவருக்குமே சற்றேக்குறைய சரிசமமாகப் பிரிந்து போகக் கூடிய நிலையில் இருந்து வந்தது.
இப்போது டாக்டர் சுப்பராயன் அவர்கள் சீமையிலிருந்து வந்து தோழர் ராதாபாய் அம்மாளின் அபேட்சக ஸ்தானத்தை உறுதிப்படுத்தி மேல் கண்ட இரண்டு கனவான்களையும் சென்று பார்த்ததில் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண்டரும், பட்டக்காரர் அவர்களும் தோழர் ராதாபாய் அவர்களை ஆதரிப்பதைப் பற்றி டாக்டர் சுப்பராயனுக்குத் தைரியம் சொல்லிவிட்டதாகத் தெரிகின்றது.
இது மாத்திரமல்லாமல் தோழர் வெள்ளியங்கிரிக் கவுண் டர் அவர்கள், தோழர்கள் அவினாசிலிங்கம் செட்டியாருக் கும், ராஜகோபாலாச்சாரியாருக்கும் இது விஷயத்தைத் தெரிவிக்கப் போவதாகவும், பட்டக்காரரவர்களும் டாக்டர் நாயுடு அவர்களுக்கு எழுதி விடுவதாகவும் டாக்டர் சுப்ப ராயன் அவர்களிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது. இதன் பயனாய் தேர்தல் நிலைமை மாற்றமடைந்தே தீரும். இதன் பயனாகத் தோழர்கள் அவினாசிலிங்கமும், நாயுடுவும் தங்கள் அபேட்சகர் தானத்திலிருந்து விலகிக் கொள்ளு வார்களோ அல்லது நடந்தது நடக்கட்டும் என்று துணிந்து நிற்பார்களோ தெரியாது.
டாக்டர் சுப்பராயன் அவர்கள் இந்தத் தொகுதியை ஒரு பெண் அபேட்சகருக்காக எல்லாக் கட்சியார்களும் போட்டி இல்லாமல் விட்டுவிட வேண்டும் என்றும், இந்தியா முழுமைக்கும் ஒரே ஒரு பெண்தான் இந்திய சட்டசபைக்கு நிற்க சகல விதத்திலும் தகுதியோடு முன் வந்திருப்பதாகவும், இதன் பயனாய் காங்கிரஸ் பெண்கள் விஷயத்தில் கொண் டுள்ள கொள்கையைக் காட்ட ஒரு சந்தர்ப்ப மேற்பட்டிருக் கிறதென்றும், தோழர் ராஜகோபாலாச் சாரியாருக்கும், டாக்டர் வரதராஜுலுவுக்கும் தெரிவித்து இருப்பதாகவும் தெரிகிறது. இதனாலெல்லாம் தான் அபேட்சகர்கள் தன்மை மாறுபட்டாலும் மாறுபடக்கூடும் என்று எதிர்பார்ப்பு மேற்படு கின்றது.
மற்றும் ஒரு விஷயம். அதென்னவெனில் டாக்டர் நாயுடுவைத் திருச்சி பொதுக்கூட்டத்தில் டாக்டர் சுப்பராயன் மனைவியார் கோவைத் தொகுதிக்கு ஒரு அபேட்சகராய் நின்றால் அப்போது உங்கள் நிலை என்ன? என்று ஒருவர் கேட்டார்.
அதற்குப் பதிலளிக்கையில் தோழர் ராதாபாய் அம்மாள் அவர்கள் நிற்பதாய் இருந்தால், எனக்கும், அந்தம்மாளுக்கும் போட்டி இல்லாமல் இருக்கும்படியாக நடந்து கொள்ள முயற்சிப்பேன். எங்களுக்குள் போட்டிப் பிரச்சாரம் நடக்க இடம் வைத்துக்கொள்ள இஷ்டமில்லை என்று சொல்லி இருப்பதாகத் தெரிகிறது.
ஒரு சமயம் தோழர் ராதாபாயம்மாள் விஷயத்தில் நாயுடு ஒப்புக் கொண்டு காங்கிரஸ் விட்டுக் கொடுக்கவில்லையா னால், ராதாபாயம்மாள் வேறு தொகுதியில் நின்று கொண்டு கோவை, சேலம், ஜில்லா வேளாள சமுக ஓட்டுகளை டாக்டர் நாயுடுவுக்கு அனுகூலமாய்த் திருப்ப முயற்சி செய்யப் போவதாயும், தெரிய வருகின்றது.
தோழர் ராதாபாயம்மாளுடன் போட்டி போட விரும்ப வில்லை என்று எப்படி டாக்டர் நினைக்கிறாரோ, அது போலவே செங்கல்பட்டு தென்னாற்காடு ஜில்லா தொகுதியில் அபேட்சகராய் இருக்கும் திவான் பகதூர் எம்.கே. ரெட்டியாரும் ராதாபாயம்மாள் நிற்பதாயிருந்தால் போட்டி போட விரும்பவில்லை என்பதாய்த் தெரிகிறது. அப்படியா னால் ஜஸ்டிஸ் கட்சி அபேட்சகரும் அம்மாள் விஷயத்தில் போட்டி போட மாட்டார்கள். இவர்கள் இருவரும் போட்டி போட முன் வரவில்லையானால் மிஞ்சுவது தோழர் முத்து ரங்க முதலியாரே ஆவார்கள். அவர் நிற்பதும் ஒன்றுதான் உட்காருவதும் ஒன்றுதான். ஆதலால் அந்தத் தொகுதியிலும் ராதாபாயம்மாளுக்குச் சுலபமாக ஆகக் கூடும்.
இப்படியும் ஒரு உத்தேசம் இருப்பதாகவும் தெரிகிறது. எனவே ஏதோ ஒரு விதத்தில் அசம்பளி தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படக் கூடும் என்று தெரிகிறது.
- பகுத்தறிவு - கட்டுரை - 23.09.1934
No comments:
Post a Comment