காதல் மணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

காதல் மணம்

பழங்காலக் காதல் மணம், இன்று மிருகப் பிராய மணம் என்றே சொல்ல வேண்டும். காதல் என்பது மிக மிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி தீர்ந்ததும் சலிப்படைந்து, அதன் பயனைப் பிறகு வேதனையுடன் பொறுத்துக் கொண்டி ருப்பதென்றால், அது இன்ப வாழ்க்கையாக இருக்க முடியாது! உண்மையைப் பேச வேண்டுமானால், யாரைப் பார்த்தால் யாருக்குக் காதல் இல்லாமல் இருக்கமுடியும்? சமுதாயக் கட்டுப்பாடுகள் பல இருப்பதால் காதல் கொண்டு, ஏமாற்றம் அடைவதுமாக வாழ்வு முடிகிறதே ஒழிய வேறில்லை. காதலை அவரவர்கள், உள்ளத்திற்கே விட்டுவிடுவோம்! 

ஆனால், வாழ்க்கைத் துணை விஷயத்தில், காதல் போதாது. அறிவு, அன்பு, பொருத்தம், அனுபவம் ஆகிய பல காரியங்களே முக்கியமானவையாகும். பழங்காலத்தில் காதலே போதுமானதாக இருக்கலாம். அப்போதைய அறிவுக்கு அவ்வளவுதான் தேவையாக இருக்கலாம் இப்போதைய அறிவுக்குத் திருமணம் வாழ் நாள் முழுவதும் பொருந்தும்படியாக இருக்க வேண்டும். மனித வாழ்வையும் பிறவிக் குணங் களையும் மேன்மைப் படுத்துவதாக இருக்க வேண்டும். 

ஒரு குறிப்பிட்ட இச்சையின் பெருக்கம்தான், பெரிதும், காதலின் முழு இடத்தையும் பெற்றுவிடுகிறது. மற்ற பல வாழ்க்கை வேறுபாடுகளுக்கு அந்த இச்சைப் பெருக்கம் இரு வருக்கும் போதவே போதாது. ஆகையால், அறிவையும், நிகழ்ச்சிப் பயனையும் அலட்சியப்படுத்தும் காதலை மனிதன் அடக்கி, வாழ்க்கைத் தன்மையைக் கொண்டு வாழ்க்கைத் துணையைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதே எனது கருத்தாகும். 

ஆதலாலேயும் பழைய தமிழர் மணமுறைக ளுக்கோ, ஆரியர் மணமுறைகளுக்கோ இங்கு வேலை கிடையாது. அறிவு, அனுபவம், ஆராய்ச்சி ஆகியவற்றின் மீது ஏற்பட்ட மணமுறைகளுக்கே  இங்கு வேலை உண்டு. அவை பழையவையானாலும், புதியவையானாலும், தமிழனுடையதானாலும், ஆரிய னுடையதானாலும், அய்ரோப்பியனுடைதானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்!

- ‘குடிஅரசு’ - 10.01.1948


No comments:

Post a Comment