சென்னை, செப்.10 நீட் தேர்வு விடைத்தாளில் குளறுபடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் உரிய அசல் விடைத்தாள் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தேசிய தேர்வு முகமை செயலாளருக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை பெருமாள்புரத்தை சேர்ந்த எவால்ட் டேவிட், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- மருத் துவராகி, ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியமும், ஆர்வமும் எனக்கு உண்டு. பிளஸ்-2 முடித்த பின்பு, மேற்படிப்பு படிப்பதை ஓராண்டு நிறுத்திவிட்டு, பெங்களூருவில் உள்ள பிரபல நீட் பயிற்சி மய்யத்தில் உதவித்தொகையுடன் இணையம் மூலம் படித்தேன். அதுதவிர, பல்வேறு பிரபல மய்யங்கள் நடத்திய நீட் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி பெற்றேன். கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினேன். இந்தநிலையில் கடந்த 31-ஆம் தேதி, நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத் தாள் இணையதளத்தில் பதிவேற்றம் செய் யப்பட்டது. அதை சரிபார்த்தபோது, எனது ஓ.எம்.ஆர். தாள்களில் ஒரு பக்கம் மட்டும் வேறொருவருடையதை இணைத்திருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த தாளின்படி எனக்கு 115 மதிப்பெண் தான் கிடைக் கும். ஆனால் நீட் தேர்வில் கிட்டத்தட்ட அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதிலை எழுதியிருந்தேன். 720-க்கு 670 மதிப்பெண் எதிபார்த்திருக்கிறேன்.
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள எனது ஓ.எம்.ஆர். தாளில் சில கேள்விகளுக்கு நான் பதில் அளித்தது குறிப்பிடப்படவில்லை. இதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே ஓ.எம்.ஆர். தாள் மற்றும் அதனுடன் இணைந்த கார்பன் நகல் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால்தான், அதில் குளறுபடி நடந்தது தெரியும். இதுசம்பந்தமாக நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுக்கு கடந்த 1-ஆம் தேதி புகார் மனுவை இ-மெயிலில் அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. இதனால் என்னுடைய மருத்துவர் கனவு சிதைந்து விடுமோ என மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே என்னுடைய நீட் தேர்வு ஓ.எம்.ஆர். தாள் மற்றும் அதன் கார்பன் நகல் ஆகியவற்றை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தாரர் சார்பில் வழக்குரைஞர் ஜெய மோகன் ஆஜராகி, கடந்த 7-ஆம் தேதி நீட் தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் மனுதாரர் 107 மதிப்பெண் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் 700-க்கு 670 மதிப்பெண்களை மனுதாரர் எதிர்பார்த்திருந்தார். எனவே அசல் விடைத்தாள், கார்பன் நகல் ஆகியவற்றை நேரில் சரிபார்த்தால் மட்டுமே உண்மை நிலவரம் தெரியும். அதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வாதாடினார். இதையடுத்து நீதிபதி, மனுதாரருடைய நீட் தேர்வு ஓ.எம்.ஆர். விடைத்தாள், கார்பன் நகல் ஆகியவற்றை தேசிய தேர்வு முகமை செயலாளர் இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு விசாரணையை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment