டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான பேராசிரியர்கள் பணி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இட ஒதுக்கீடு தொடர்பான வரைமுறையின் கீழ் இந்தப்பணியிட அறிவிப்பு வெளியானதால் நாடு முழுவதிலுமிருந்தும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கான பேராசிரி யர்கள் தகுதி பெற்றவர்கள் வேலைக்கு விண்ணப் பித்திருந்தனர்.
இதில் தவுலத் ராம் கல்லூரியில் அரசியல் குறித்த பாடத்துறைக்கு இதர பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி யானவர்கள் யாருமே இல்லை என்று பல்கலைக் கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அந்த இடத்தில் உயர்ஜாதியினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மக்கள் தொகையில் 60 விழுக்காடு இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கல்லூரிப்பேராசிரியர்கள் பணிக்கு அந்த விதிகளுக்கு ஏற்ப விண்ணப்பித்தவர்களில் ஒருவர் கூட தகுதியானவர்கள் இல்லை என்ற அறிவிப்பு - பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனக் குழுவில் உள்ளவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் என்று பல்கலைக்கழக பணியாளர்கள் கூறுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் போன்றோர் இதர பிற்படுத்தப் பட்டவர்கள் பட்டியலில் தானே வருகின்றனர். ஒருவேளை அவர்கள் தகுதியில்லாதவர்கள்தான் - இருப்பினும் அந்தப்பதவிகளில் உள்ளனர் என்று சொல்ல வருகிறார்களா?
சமூகநீதியை எந்த வகையிலாவது குழி தோண்டிப் புதைப்பதில்தான் மோடி தலைமையிலான பிஜேபி அரசு கண்ணும், கருத்துமாக இருந்து செயல்பட்டு வருகிறது.
மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு 27 விழுக்காடு என்பதை மிகப் பெரிய அளவில் போராடித் தான் பெற முடிந்திருக்கிறது.
மோடி - பிற்படுத்தப்பட்டவர்தானே என்பது மட்டுமே சமாதானமாகி விட முடியாது. அவர் சார்ந்த ஜாதியை உயர் ஜாதிப் பட்டியலிலிருந்து பிற்படுத்தப்பட்டோர் பட்டிய லுக்குக் கொண்டு வர, மோடி குஜராத்தில் முதல் அமைச்சராக இருந்தபோது என்ன ஏற்பாடு செய்தார் என்பது உலகத்துக்கே தெரிந்த உண்மை.
அப்படியே பிற்படுத்தப்பட்டோராக இருந்தாலும், அவருடைய மனப்பான்மை எத்தகையது? அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் சமூக அரசியல் பார்வை எத்தகையது என்பதுதான் முக்கியம்.
இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று சொன்னவர்தானே இவர்களின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்.
நாக்பூரின் அந்தத் தலைமையிலிருந்து என்ன கட்டளை வருகிறதோ, அதனை இம்மியளவு மீறினால்கூட அடுத்த நிமிடமே காதைப் பிடித்துத் திருகி வெளியில் அனுப்பி விடுவார்களே!
ஒன்றிய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட் டோருக்குப் பெயரளவில் 27 விழுக்காடு என்று சொல்லப்பட்டாலும், நடைமுறையில் 15 விழுக்காட்டைக் கூடத் தாண்ட வில்லையே.
ஒன்றிய அரசுத் துறைகளில் குரூப் 'கி'யில் பிற்படுத்தப்பட்டோர் 16 விழுக்காடே, குரூப் 'ஙி'யில் 17 விழுக்காடு, இந்தியா முழுவதும் 41 மத்திய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்களின் எண்ணிக்கை 1125. அசோசியேட் பேராசிரியர்கள் எண்ணிக்கை 2620. இந்த இரண்டிலுமே பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியமே.
ஒன்றிய அரசின் செயலாளர்கள் 89 - கூடுதல் செயலாளர்கள் 93 - இந்த இரண்டு வகையிலும் பிற்படுத்தப்பட்டோர் பூஜ்ஜியமே.
தூங்குவோன் தொடையில் கயிறு திரிப்பதுபோல் இருக்கிறது - பிற்படுத்தப்பட்டோர் நிலை.
தந்தை பெரியார் இந்தியாவுக்கே தேவைப்படுகிறார்.
No comments:
Post a Comment