பெரியார் சிலை சந்தித்த வழக்கும் - பாராட்டுக்குரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 10, 2022

பெரியார் சிலை சந்தித்த வழக்கும் - பாராட்டுக்குரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பும்!

பெரியார் ஒரு சமூகப் புரட்சியாளர். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவியிருந்த, ஆழங்காண முடியாத ஜாதியத்தை, மூடப் பழக்கங்களை எதிர்த்துக் களம் அமைத்து வெற்றியையும் பெற்றவர். இந்த வெற்றி முழு வெற்றியா ? என்று சிலர் வினவக்கூடும். உலகில் எந்தச் சமூகப் புரட்சியாளரும் தன் வாழ்நாளில் முழு வெற்றியைப் பெறவில்லை. ஆனால், ஜாதியத்தின் ஆணிவேரை, சல்லி வேரை அசைத்து, வெட்டிய முதல் வெற்றி பெரியா ரின் வெற்றி, இதை முற்றிலும் உணர்ந்த அறிஞர் அண்ணா 1968 இல், தந்தை பெரியாருக்கு எழுதிய மடலில், "எந்தச் சமூகச் சீர்த்திருத்தவாதியும், தன் வாழ் நாளில், தங்களைப் போல் வெற்றி பெற்ற தில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார். பெரியா ரின் சாதனைகளை உள் உணர்ந்து, பெரியா ரின் பெருமையை, சிறப்பை உலகறியச் செய் தார் அறிஞர் அண்ணா.

இங்கிலாந்து நாட்டுப் புகழ்மிக்க அரசியல் அறிஞர் பேராசிரியர் ஹரால்டு லாஸ்கி “சமூகச் சிந்தனையின் வரலாற்றில் காரல் மார்க்சை விஞ்சிய தனிச்சிறப்பை யாரும் பெற்றிருக்கவில்லை. வரலாற்று ஆய்வு நோக்கோடு அவரின் பங்களிப் பைப் பார்க்காமல், மார்க்சைப் பாராட்ட இயலாது” (No name in the history of social ideas occupies plece more remarkable than that of Karl Marx. His position, indeed cannot be appreciated unless it is seen in its historical perspective......) என்று குறிப்பிட்டார்.

காரல் மார்க்சைப் போன்று உலகச் சிந்தனையார்கள் சிலர்தான் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கா கக் களம் அமைத்து இறுதி வரை போராடி னார்கள். இவ்வரிசையில் இந்தியத் துணைக் கண்டத்தில் பெரியாரின் பங்கு ஈடு இணையற்றது என்பதைப் பல ஆய் வாளர்கள் இன்று கசடறக் கற்று, உணர்ந்து தமது படைப்புகளில் பெரியாரின் அளப் பரிய தொண்டினை இணைத்து ஆய்வுத் தளங்களில் உயர்த்தி வருகின்றனர். இரா மச்சந்திர குகா படைத்துள்ள “புதுமை இந்தியாவின் சிற்பிகள்” (Makers of Modern India 2010) என்னும் நூலில் பெரியாரின் தொண்டு பாராட்டப் பெற்று உள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற பென் குயின் பதிப்பகம், பெரியாரின் படைப்பு களை ஆங்கில மொழியில் வெளியிட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே அறிஞர் அண்ணாவின் வாழ்வினையும், தொண்டினையும் நூலாக அப்பதிப்பகம் பதிப்பித்துள்ளது,

இவ்வாறாக, திராவிடர் இயக்க முதன் மையான தலைவர்களின் சிந்தனைகள் உலக அளவில் ஆய்வுக்கு எடுத்துக்கொள் ளப்பட்டு போற்றப்பட்டு வருகின்றன. பெரியாரின் பெரும் தொண்டினைப் போற் றிய புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “மண் டைச்சுரப்பை” என்று கூறி பெரியாரின் அறிவாண்மையை அழகுறப் பாவில் படம் பிடித்துள்ளார்.

பெரியார் எனும் அறிவுக் களஞ்சியத்தில் ஒளிரும் துகள்களில் ஒன்றினை எடுத்துக்காட்டுவது இங்கு சாலப் பொருத் தமாக அமைகிறது. “அறிவுத்தொண்டு செய்வது என்பது மற்ற காரியம் போல அல்ல, பகுத்தறிவுத் தொண்டு செய்கிறவ னுக்கு எந்த விதமான பற்றும் இருக்கக் கூடாது. அறிவுப்பற்று பிடித்து நீதிப்பற்றைத் தவிர பகுத்தறிவாதிக்கு மற்றைய கடவுள் பற்றோ, ஜாதிப் பற்றோ இருக்கக்கூடாது..... எப்படி ஜாதி என்பது செயற்கையோ அது போலப் பொருளாதாரத்தில் பெரியவனாக இருக்கின்றதும் செயற்கையே ஆகும். எவனும் பிறக்கும் போதே பூணூலுடன் பிறக்கவில்லை. அதுபோலப் பிறக்கும் போதே பணத்தைக் கொண்டு வரவில்லை” (6.7.1965 இல் செயங்கொண்டத்தில் நடை பெற்ற விழாவில் தந்தை பெரியார் ஆற்றிய உரை - விடுதலை 6.8.1965) 

இத்தகைய சிந்தனையை - உண்மை அறிவை வெளிப்படுத்திய பெரியாரைச் சில மண்டைச்சுருங்கிகள் அவ்வப்போது வம்புக்கு இழுக்கிறார்கள். அவற்றில் ஒன்று தான் பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை வைக்கக் கூடாது என்று அண்மையில் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்காகும். இவ்வழக்கில் நீதிநாயகம் சந்துரு அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். பெரியார் குறிப்பிட்டது போல (1965) “நீதியானவருக்கு நீதிப்பற்றைத் தவிர வேறு பற்று இருக்கக் கூடாது” என் பதற்கு இலக்கணமாக, நீதித் துறையில் தனித்தன்மையோடு எடுத்துக்காட்டான தீர்ப்புகளை வழங்கியவர் நீதிநாயகம் சந்துரு. எனவே, பெரியார் பற்றி பெரியார் சிலை வழக்கில் நீதிநாயகம் சந்துரு, அவ ருக்கே உரித்தான நீதிச்சான்றாண்மை யோடு வழங்கிய தீர்ப்பினை மொழி பெயர்த்து வழங்குவதில் பெருமிதம் பிறக்கிறது.

தலைமை நீதிபதி ஏ.பி. ஷா

தீர்ப்பு விவரம்:

1. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் சங்கத் தலைவர் சுந்தரேசன், பள்ளிக்கு அருகில் உள்ள பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று தொடுத்த வழக்கின் மீது நீதிநாயகம் சந்துரு 8.6.2012 அன்று அளித்த தீர்ப்பில் இடம் பெற்றுள்ள கருத்துகள்.

11.12.2009 இல் (தி.மு.க. ஆட்சியில், தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழு வினரால் அளிக்கப்பட்ட வேண்டுகோ ளுக்கு இணங்க, பள்ளிக் கல்வி இயக்கு நரகத்தால் அனுமதி அளிக்கப்பட்டது, பள்ளியின், தென்கிழக்குத் திசையில் 10 அடி நீள அகலத்தில் இச்சிலையை நிறுவு வதற்கு தந்தை பெரியார் சிலை அமைப்புக் குழுத் தலைவருக்கு அனுமதியும் பரா மரிப்புப் பணியை மேற்கொள்வதற்கு நீதிமன்றத் தீர்ப்பின் வழியாக ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

2. அரசு (பெரியார் சிலை) ஆணை யிடுவதற்கு முன்பு பள்ளிக் கல்வி இயக்கு நரிடம் கருத்துக் கேட்டது. இதற்கு அரசுக்கு பதில் அளித்த பள்ளிக் கல்வி இயக்குநர், இச்சிறிய பகுதி மாணவர்களின் விளை யாட்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சிலையை நிறுவுவதால் பள்ளிப் பணிக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. சிலை நிறுவப்படும் போது தேவையான அளவுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படும். சிலை அமைப்புக் குழுவின ரின் செலவிலேயே வெண்கலச் சிலை உருவாக்கப்படும். எதிர்காலத்தில் சிலை பராமரிப்புப் பணியை இக்குழு மேற் கொள்ளும். எதிர்காலத்தில் சிலைக்கு மாலையிடும் பணிக்காகத் தேசிய நெடுஞ்சாலையில் சிலைக்குச் செல்லும் வகையில் இரும்புக் கதவுடன் கூடிய வழி அமைக் கப்படும், இக்கருத்து பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் விவாதிக்கப்பட்டது. 10 அடி நீள, அகலத்தில் சிலை அமைப்பதற்கு பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் செயற் குழு 4.9.2008 அன்று தீர்மானத்தின் வழியாக சிலை அமைப்பதற்கு எந்த விதத் தடையும் இல்லை என்பதை உறுதி செய் தது. மேற்குறிப்பிட்ட விவரங்கள் அடிப் படையில் பள்ளிக்கல்வி இயக்குநர் பள்ளிக் கட்டடத்திற்குத் தென்கிழக்குப் பகுதியில் சிலை அமைப்பதற்கு அரசுக்குப் பரிந்து ரையை (அரசாணை பலவகை எண்.331, நாள் 11.2.2009) வழி அளித்தார்.


நீதிபதி சந்துரு
3. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்ற மேல்முறையீட்டு வழியாக இவ் விசாரணைக்குத் தடை கோரப்பட்டுள்ளது. அரசாணை வெளியிடப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு மனுதாரர் இந்த ஆணையை எப்படி எதிர்க்க முன்வந்தார் என்பது தெளிவற்ற நிலையில் உள்ளது. மனுதாரர் மனுவுடன் இணைக்கப்பட்ட எல்லாவித ஆவணங்களும் இந்த வழக் குக்கு உரித்தானதாகவோ, உகந்ததாகவோ இல்லை.

4. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது, மரியாதைக்குரிய அரசின் தலைமை வழக்குரைஞர் நவ நீதகிருஷ்ணன் அரசு சார்பில் இந்த வழக் குக்காக வாதிட்டது குறிப்பிடத்தக்கதாகும். மனுதாரருக்காக வாதிட்ட வழக்குரைஞர் எம்.ராமதாசு மற்றும் அரசு தலைமை வழக் குரைஞர் நவநீதகிருஷ்ணன் ஆகியோ ரின் வாதங்கள் கேட்டறியப்பட்டன.

5. மனுதாரர் காவேரிப்பட்டணத்தில் பால் பண்ணை நடத்தி வருகிறார். சமூகப் பணியையும், சமுதாயத் தொண்டினையும் ஆற்றி வருகிறார். 18.6.2010 இல் பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2011 ஆம் ஆண்டு பள்ளிச் சுற்றுச் சுவரின் தென் கிழக்கு முனை, சிலை அமைப்பதற்காக உடைக்கப்பட்டது என்று மனுதாரர் தெரி வித்துள்ளார். 

6. மேலும், அரசு 2.3.2010 அன்று வெளி யிட்ட அறிவிக்கை வழியாக சுற்றுச்சுவரை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுத்து, அதைத் தெரிவிக்கும்படி கேட் டுக்கொண்டது. காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த பா.ஜ.க. உறுப்பினர் ஒருவரால் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அரசால் இந்தக் கடிதம் வெளியிடப்பட்டது.

மேற்கூறிய கருத்து மாறுபாட்டால் பள்ளித் தலைமை ஆசிரியர் சிலை அமைப்புக் குழுத் தலைவருக்கு பெரியார் சிலை அமைக்கும் பணியைச் சிறிது காலத் திற்குத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டார். 15.6.2011 இல் பாஜகவின் உட் கிளையால் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நிறுவனர் (ஹெட்ஹேவரின்) சிலையை நிறுவ மடல் அனுப்பப்பட்டது. இதற்கிடை யில் பள்ளித் தலைமை ஆசிரியர் 22.7.2011 அன்று காவேரிப்பட்டணம் சட்டம் ஒழுங் குக் காவல்துறை ஆய்வாளருக்குத் தெரி வித்த தகவலில், சிலை அமைப்புக் குழு வினர் சிலையை அமைப்பதற்கான அடித் தளக் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்களின் பணி யினை நிறுத்த முடியாது என்று அறிவித்து, முன் அறிவிப்பின்றி எவ்வித நடவடிக் கையும் மேற்கொள்ளக் கூடாது என்று உள்ளூர் முன்சீப் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இக்காலக் கட்டத் தில் மனுதாரர் 24.4.2012 அன்று மாநில அர சுக்கு ஓர் அறிவிக்கையையும் நீதிமன்றத் தில் இந்த முறையீட்டு மனுவினையும் சமர்ப்பித்துள்ளார்.

7. இச்சூழலில் இந்த முறையீட்டு மனு எவ்வாறு ஏற்கத் தகுந்தது என்று தெளி வாக்கப்படவில்லை. இந்த மேல் முறை யீட்டு மனுவை நீதிமன்றத்தில் அளிப்பதற் குத் தனக்குரிய சட்டப்படியான தகுதி உரிமையைக் குறிப்பிடவில்லை. பள்ளிக் கூடத்தின் செயல்பாடுகளை எவ்விதத் திலும் இடையூறு விளைவிக்காத 10 அடி நீள அகலத்திற்குள் தந்தை பெரியாரின் சிலையைப் பள்ளியின் தென்கிழக்குப் பகு தியில் நிறுவுவதை எதிர்க்கிறார். பள்ளிக் கூடத்தின் உண்மையான நோக்கத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளார். பெரியார் தமிழ்ச் சமுதாயத்தின் மாற்றத்திற்குப் பல் வகையில் ஆற்றிய பணிகளை அறியாமல், பெரியாரின் கொள்கைகளை மனுதாரர் உருவகப்படுத்தியிருப்பது வழியாகத் தனது அறியாமையைத் தன்னையறியாமல் வெளிப்படுத்தியுள்ளார். நாத்திகக் கொள் கைகளைப் பரப்பியவர் என்ற முத் திரையை மட்டும் அளித்துவிட முடியாது. ஜாதிய ஒடுக்கு முறை, சமூக சமத்துவம், பெண்விடுதலை ஆகிய தளங்களில் பெரியாரின் கருத்துகள் அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர்களின் கருத்து களைவிட விஞ்சியிருக்கின்றன. பூலே, அம் பேத்கர் போன்று ஜோதிபாசும், பெரியாரும் தனிச் சிறப்புக்குரிய தொலைநோக்குப் பார்வையும், நிறைந்த இரக்க உணர்ச்சியும், இயற்கையிலேயே மிகப் பெரிய ஆற்றலும், தனித்த சிந்தனைத் திறனும், ஆளுமையும் உடைய மனிதர்கள் ஆவார்கள். தங்களது சமூகத்தில் ஊடுருவியிருந்த அநீதி, அறி யாமை, துன்பம் ஆகியவற்றை ஆழ்ந்து உணர்ந்து அவற்றைத் தங்களுடைய நேர்மைமிக்க திறனாய்வு மதிநுட்பத்தால் உணர்ந்து, உலகளாவிய புரிதலும், ஆய் வும், செயல்பாடுகளும் உருவாவதற்கு வழி வகுத்தவர்கள். ஜாதிய அமைப்பில் ஒடுக்கு முறை, அநீதி, கேடு புதைந்திருப்பதைத் தங்களுடைய அரிய படைப்பாற்றல் மிக்க செயல்பாடுகளால் அடையாளங் கண்டு அறைகூவல் விடுத்தனர். இந்து சமூக அமைப்பையும் அதனுடைய ஆணி வேரையும் இவ்வகையில் அவர்கள் அசைத்தனர். அதன் தலையின் மீது நிற்பதற்கு பெரியாரின் சிறப்பு மிக்க உரை கள் பயன்பட்டன. 

8. தலைமை நீதிபதிஏ.பி.ஷா (மேனாள்) அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு, பெரியார் திரைப்படம் தொடர் பான வழக்கில், பெரியார் ஆற்றிய பணி யைப் பாராட்டியுள்ளது. (வழக்கு டி.கண் ணன் எதிர் லிபார்ட்டி கிரியேட்டர், இயக்கு நர் ஞானசேகரன் (2, 1015), அத்தீர்ப் பின் 7 ஆம் பத்தியில் “பெரியார் ஈ.வெ.ராம சாமி சமூக நீதியின் ஏந்தலாக, பகுத்தறிவை, சுயமரியாதையை, சமூகப் புரட்சியைப் பரப்பியவராக, தனது வாழ் நாள் முழுவதும் தீண்டாமை ஒழிப்பு, ஜாதி முறை அழிப்பு, பெண்களின் உரிமைகளை உயர்த்திப் பிடித்தல் ஆகியவற்றுக்காகப் பணியாற் றினார். சமூகத்திற்குத் தீமை களை உரு வாக்கி, பயனற்ற தன்மைகளை உருவாக் கிய கண்மூடித்தனமான நம்பிக் கைகளை, மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் பகுத்தறி வுவாதியாக மக்களிடம் அறிவியல் உணர் வைத் தூண்டினார். 1926இல் சுயமரியாதை இயக்கத்தை நிறுவினார். அறியாமையில் மூழ்கி மக்களைக் கடவுள் பயத்தில் ஆழ்த்தும் பிராமண மேலாதிக்கத் தையும், புரோகித வகுப்பினரை நிலை நிறுத்தும் ஒரு வகையான கேடு விளைவிக் கிற முறையையும் மதம்தான் தொடர்ந்து நிலை நிறுத்துகிறது என்று பெரியார் நம் பினார். எனவே, கடவுள் மதத்தன்மைக்கு எதிராகப் போரிட்டார். வீ.கீதா-எஸ்.வி.ராஜ துரை எழுதிய “பிராமணரல்லாதவர்களின் புத்தாயிரத்தாண்டுப் பயணம்’ நூலில், சுய மரியாதைக்காரர்களின் மதத்தைப் பற்றிய விமர்சனம், (பக்கம் 307) பெரியாரைப் பற்றிய விளக்கம் பின்வருமாறு தரப்பட்டு உள்ளது:

“இந்துத்துவத்தைப் பற்றிக் கடந்த காலத்தில் பெரியார் செய்த விமர்சனத்தைத் தற்காலத்தில் ஒருவர் தனது வாழ்நாளில் செய்வாரெனில், அச்செயல் காலமெல் லாம் விமர்சிக்கப்படும்; எதிர்க்கப்படும். அச்செயலானது அவருடன் இருக்கும் இரு பார்ப்பனப் பிச்சைக்காரர்களுடன் அவருக்கு இருந்த உறவாகவும், நம்பிக் கையை நகைப்புக்குரியதாக்கிய நாடக மாகவும் காணக்கூடியதாக இருக்கும். அதிகாரமும் ஆதிக்கமும் உடைய சமூகப் பழக்க வழக்கங்களின் கட்டமைப்புக் குள்ளே அடுத்தடுத்து அழிவையும், அவ மதிப்பையும் ஏற்படுத்திப் பகுத்தறிவாளர் நிலையான மகிழ்ச்சியடைவர். மதம் பற்றிய பெரியாரின் வெளிப்படையான உருவ வழிபாட்டு எதிர்ப்பாலும், வழிகாட் டுதலாலும் பல சுயமரியாதைக்காரர்கள் நாத்திகத்தையும், கடவுள் வெறுப்புக் கோட்பாட்டையும், செயல்முறையையும் முன்னெடுத்துச் சென்றனர். இச்செயல் கடும் கோபத்தையும், வெறுப்பையும் எதி ரொலித்தது. இவர்கள் கடவுள், மதம், மூட நம்பிக்கைகளின் போலி மதிப்பை அழிக் கவும், கேலிக்குள்ளாக்கவும் வலியுறுத்தி பகுத்தறிவு நெறியின் உச்சத்தில் நின்றனர்.

மதம் பற்றிய சுயமரியாதைக்காரர்களின், பெரியாரின் கருத்துகள் அய்ந்து பெரிய நோக்கங்களைக் கொண்டதாகும். பிராம ணப் புரோகிதரையும் அவரின் முன்னு ரிமை, ஆட்சி, அதிகாரம் பற்றிய திறனாய்வு - சுருக்கமாக - பிராமணர்களையும், பிராம ணியத்தையும் பற்றிய திறனாய்வு ஆகும். வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களின் பொய்ப் புரட்டுகளை அதிரடியாக, பகுத் தறிவு நெறி சார்ந்து நிலைகுலையச் செய்த திறனாய்வு ஆகும். மூன்றாவதாக, மதத் தைப்பற்றிய திறனாய்வு என்பது உலகின் பார்வையில் - புனிதம், சமய நம்பிக்கை களை அவமதித்தல், சமயச்சார்பற்ற நிலை ஆகியவற்றின் மீதான நம்பிக்கையாளர் களின் எண்ண ஓட்டங்களைத் தீர்மானிக் கும் சமூகப் பண்பாகக் கருதப்படுகிறது. நான்காவதாக, நம்பிக்கைகளை நிலை நிறுத்தி, இயக்குகிற மதக் கோட்பாடுகளை, கொள்கைகளைத் திறனாய்ந்து விளக்க மளித்தல். கடைசியாக, பண்டிகைகள், சடங்குகள், நிகழ்வுகள் பற்றிய திறனாய்வு ஆகும்.”

9. உயர்நீதி மன்ற அமர்வில் (அமிர்த லிங்கம் எதிர் உள்துறை செயலர், தமிழ்நாடு அரசு மற்றும் பிறர் 2010 (2, 1022) பொது இடத்தில் ஒரு சிலையை நிறுவுவதைப் பற்றி ஒரு வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வழக்கில் அம்பேத்கரின் சிலை உரிய முன் அனுமதி இன்றிப் பொது இடத்தில் நிறுவப்பட்டாலும், அம்பேத்கரின் ஆளு மையைக் கருத்தில் கொண்டு சிலையை வேறு இடத்துக்கு மாற்றத் தேவையில்லை என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது. நீதிமன்றம் அம்பேத்கரின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவுவதற்கு ஆணை பிறப்பித்தது. நீதி மன்ற அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும் போது இதற்குரிய அரசாணைகளைப் பற்றி பத்தி 35, 36 இல் தனது இரண்டு வழி காட்டுதல் நெறிகளைப் பதிவு செய்துள்ளது.

“35. முதல் நெறி : நினைவுத்தூண்கள், நினைவகங்கள், வளைவுகள், சிலைகள் அமைப்பதற்கு முன்பு அரசினுடைய அனுமதியைப் பெற வேண்டும். தனி மனிதர்கள், சமூகம் அல்லது அமைப்புகள் சிலை அமைப்பதற்கு விரும்பினால் மனுவை அரசிடம் அளிக்க வேண்டும். அரசினுடைய முன் அனுமதியின்றிச் சிலை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளக் கூடாது.

36. இரண்டாம் நெறி : நினைவுத் தூண்கள், நினைவகங்கள், வளைவுகள், சிலைகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு பாதுகாக்க வேண்டும். இவ்வகை நினைவுச் சின்னங்களை நிறுவியவர்கள் தான் அவற்றைப் பாதுகாத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பை ஏற்க வேண்டும். அரசாணை எண் : 193, நாள் : 23.8.1990, மீண்டும் 20.11.1998 இல் வெளியிடப்பட்ட அரசாணை ஆகியன வெண்கலத்தால் சிலை வைக்க அனு மதியை அளிக்கும் போது, மேற்கூறிய விதியை அரசு கடைப்பிடிக்க வேண்டும்”.

இந்த வழக்கில், சிலை சிதைக்கப் பட் டதற்கு அதன் மீது ஒரு கம்பம் விழுந்ததே காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்கலச் சிலை இது போன்ற நிகழ்வு களைத் தவிர்க்கும்.

10. மேற்கூறிய நெறிகள் அரசாணையின் கருத்தை முழு அளவில் பின்பற்றுகின்றன. மேலும், இந்நிலம் அரசுக்குச் சொந்தமா னது. அரசு அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. சிலை அமைப்புக் குழுவினர் வெண்கலச் சிலையை நிறுவுவதற்கு ஒப்புக் கொண்டுள்ளனர்.

11. எனவே, மனுதாரர் வெளிப்படுத்தி யுள்ள பயஉணர்ச்சி மொத்தத்தில் அடிப் படையற்றது. பள்ளி வளாகத்தில் பெரியார் சிலை வைப்பதனால் பள்ளிக் குழந்தைகள் நாத்திக நோக்குடையவர்களாக மாற மாட்டார்கள். மேலும், பெரியாருடைய வாழ்க்கையையும், அவருடைய தத்துவத் தைப் புரிந்து கொள்வதனால் மாணவர்கள் அரசியல் சட்ட 51 (எ) (எச்) பிரிவில் குறிப் பிட்ட அறிவியல் உணர்வையும், மனிதத் தன்மையையும், ஆய்வு மனப்பான்மை யையும், சீர்திருத்த உணர்வையும் அறிந்து கொள்வதற்கு உதவும். 

மேற்கூறிய விளக்கங்களின்படி இம் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படு கிறது.

(பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் 'எழுதிய நீதியா? நியாயமா?' என்ற நூலிலிருந்து)


No comments:

Post a Comment