சிரிப்பும் வரும், சிந்தனையும் தரும் "கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க" - ஆய்வுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

சிரிப்பும் வரும், சிந்தனையும் தரும் "கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க" - ஆய்வுரை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக வி.சி.வில்வம் அவர்கள் எழுதிய 'கிளம்பிட்டாங்கய்யா ,கிளம்பிட்டாங்க' என்னும் நூலின் ஆய்வுரைக்கூட்டம் 19.08.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை இணைய வழி நிகழ்வாக நடைபெற்றது.

அனைவரையும் வரவேற்று பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத்தலைவர் பாவலர் சுப.முருகானந்தம் உரையாற்றினார்.நிகழ்வுக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் தலைமையேற்றார்.

அவர் தமது உரையில் 

திருக்குறள் சங்க காலத்தைச் சேர்ந்தது என்று நாம் வரையறுத்துக் கொண்டாலும் அதற்குப் பின்னாலான இடைக்காலத்தில் ஆரியச் சார்பற்ற இலக்கியங்கள் ஏதுமே இல்லையே எனப் பெரியார் கேட்டார். சிலப் பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டல கேசி, கம்பராமாயணம், பெரியபுராணம், சீறாப்புராணம் எனச் சமயக் கருத்துகளே இலக்கியமாக நிறைந்திருந்த காலகட்டம் சற்று   மடை மாறியது பாரதியார் காலத்தில் தான். ஆனால் அவரின்  உரைநடையில்  கூட சமஸ்கிருதம் அதிகம் கலந்திருந்தது.  புரட்சிக் கவிஞர் காலகட்டத்தில் முற்றிலும் தமிழ் இலக்கியம் மாறுபட்டு அறிவுவயப்பட்டு பாரதிதாசன் பரம்பரை என்றே தோன்றி ஈரோடு தமிழன்பன் வரை அது நீண்டது. அந்த வரிசையில் இப்போது எழுத்தாளர் மன்றத்தின் பணி சிறப்பாக உள்ளது. பகுத்தறிவு கருத்துகளுக்கு மிகுந்த வரவேற்பு இப்பொழுது இருக்கிறது என்பதை நன்னன்குடி நடத்திய சிறுகதைப் போட்டி மூலம் நாங்கள் அறிந்தோம். இந்தச் சிறப்பான பணியை முன்னெடுக்கும் எழுத்தாளர் மன்ற நிகழ்ச்சிகளுக்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்றார்.

நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு ஊடகப் பிரிவின் தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவர் தமிழ்.பிரபாகரன்,ப.எ.ம.துணைத்தலைவர் கோ.ஒளிவண்ணன்,  ஆகியோர் முன்னிலை வகித்த னர். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், வழக்குரைஞர் அமர்சிங் , மதிமுக பொறுப்பாளர்  வந்தியத்தேவன், அவ்வை நன்னன்,  மதுரை கருப்பையா, மும்பை கணேசன், கனடாவில் இருந்து பெர்னாட்ஷா மற்றும் ஏராளமானோர் இந் நிகழ்வில் இணைந்திருந்தனர்.

முனைவர் வா.நேரு

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலை வர் முனைவர்.வா.நேரு தொடக்கவுரையாற்றினார். அவர் தமது உரையில், 

இந்நூலாசிரியர் வி.சி. வில்வம் ஜப்பானில் பணி யாற்றியவர்; மிக இயல்பாக- அமைதியாக பெரியாரியல் பணி செய்யக்கூடியவர்; நகைச்சுவை உணர்வு நிரம்ப இருப்பவர் என்று நூலாசிரியரை அறிமுகம் செய்தார். நகைச்சுவை என்பது நம் கருத்தை எடுத்துச் சொல்ல மிகப்பெரிய ஒரு வலிமையான கலன் என்றார்.  யாருக்கெல்லாம் கதை எழுதத் தெரியுமோ அவர்கள் கதை எழுதுங்கள்; யாருக்கெல்லாம் கட்டுரை எழுதத் தெரியுமோ அவர்கள் கட்டுரை எழுதுங்கள்; யாருக் கெல்லாம் கவிதை எழுதத் தெரியுமோ அவர்கள் கவிதை எழுதுங்கள். ஏனெனில் எழுத்துகள் தான் எல்லோரையும் சென்றடையும். எழுத்துகள் காலத் தால் அழியாதது. திராவிடம் வெல்லும் என்ற நூற் றாண்டு காலப்போராட்டத்திற்கான அடித்தளத்தை நாம் எழுத்துகள் வழியாக நிறைய கொண்டு சேர்க்க வேண்டும். 90 ஆம் அகவையில் இருக்கும் ஆசிரியர் தாம் தோளில் போட்ட துண்டு இயக்கத்திற்காக  பிச்சை எடுக்கத்தான் என்று சொல்லும்பொழுது நமக்கு நா தழுதழுக்கிறது. அப்படியானால் நாம் இன்னும் அதிக மாக பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது. நம் தோழர்களின் வாழ்வே எதிர் நீச்சலுடையது.  அதைப் பதிய வைப்பதன் மூலம் மற்ற வர்களுக்கும் அது எடுத்துக்காட்டாக ஆகும் என்ப தால் எழுதுங்கள், எழுதுங்கள் என்று ஓர் எழுச்சியுரை ஆற்றினார்.

முனைவர் வே.இராசவேலு

தொடர்ந்து நூல் ஆய்வுரையை முனைவர்  வே. இராசவேலு நிகழ்த்தினார். கொரோனா கால கட்டங்களில் தாம் பல்வேறு பரப்புரைகளை தொகுத்து விடுதலைக்கு அனுப்பும்போது தவறாமல் அழைத்துப் பாராட்டுபவர் இந்நூல் ஆசிரியர் வில்வம் அவர்கள் என்றார்.  அவரைப் பற்றி இந்த நூலின் அணிந்துரை யைப் படித்தாலே நாம் அறியலாம். ஜப்பானைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் "இந்த உலகில் மனிதர் களாக வாழ்வதற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி சக மனிதனை நேசிப்பது தான். வில்வம் ஒரு சிறந்த மனி தாபிமானி; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சக உயிரை நேசிக்கக் கூடியவர் "என்று சொல்லி இருக்கிறார்.

மனித மனங்களை நாம்....

அன்றாடம் நாம் பார்க்கும் மனிதர்களை, மனித மனங்களை நாம் பார்க்கும், கேட்கும் விஷயத்தை கழுகுப் பார்வையால் புதிய கோணத்தில் எளிமையாக சொல்லி இருக்கிறார்.  நாளிதழ்கள், வார இதழ்களில் வரும் உள்ளத்தை பாதிக்கும் செய்திகளை, தான் பெற்ற நுகர்வுகளை தான் சார்ந்த சமுதாயத்திற்கு திரும்பத் தருகிறார்.  வெவ்வேறு நிலைகளில் அவர் எழுதிய 30 தலைப்புகளான கட்டுரைகள் வெறும் உண்மை சம்பவங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டவை. மக்களிடம் கருத்துக் கேட்டு எதிர்க் கருத்தாக இருந்தாலும் கூட அதை நேர்மையாக எழுத்தில் பதிய வைத்தவர் என்று சொல்லி அவற்றுள் சிலவற்றை ஆய்வு செய்தார். ‌ 

தலைசிறந்த மனித நேயம்!

மனித நேயம் என்பது மனிதனுக்கு மனிதன் அன்பு செலுத்துவது தான்.

திருச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மிகக் கொடிய நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு பெண்ணை வெகு தொலைவில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தேவையான அனைத்து உதவி களையும் செய்தார்.

தானும் இளைஞன், அவரும் ஒரு இளம்பெண் என்பதால் அப்பெண் எதிர்கொண்ட மன ரீதியான சிக்கல்களுக்கு முடிவு கட்ட அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பினார். கடுமையான எதிர்ப்பு கள் எழுந்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல்  திருமணம் செய்து இருபது ஆண்டுகள் அப்பெண் மறையும் வரை அவரோடு வாழ்ந்தார். இதுதான் தலைசிறந்த மனித நேயம் என்று நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

பணத்தை பெரிதாக...

பணம் மனிதனுக்கு கவுரவத்தை வழங்குமா? என்ற கட்டுரையில் பணம் போதுமானதாக இருக்க வேண் டுமே தவிர பணத்தை பெரிதாகவும், பணம்தான் கவுர வத்தை உயர்த்தும் - நிலைநாட்டும் என்றும் நினைக்கக் கூடாது. பணம் பணம் என்று ஒவ்வொரு நொடியும் தூங்கும் போதும் விழிக்கும் பொழுதும் அலைந்து, ஆடம்பர வாழ்வைத் தேடி ஆலாய்ப் பறப்பது என்பது ஒருவித நோயே,  அவர்களெல்லாம் பணம் என்னும் "கவுரவ நோய்" பிடித்தவர்கள் என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். வாழ்வதற்குப் பணம் வேண் டுமே தவிர அதுதான் கவுரவம் என்று நினைக்கக் கூடாது என்கிறார்.

மனிதாபிமானமிக்க செயல்...

குழந்தையைத் தத்தெடுப்பது எப்படி? என்றொரு கட்டுரையில் சுனாமி வந்தபோது தன்னுடைய மூன்று குழந்தைகளை இழந்த பரமேஸ்வரன் பெற்றோரை இழந்த 18 குழந்தைகளைத் தத்தெடுத்த மனிதாபிமான மிக்க செயலை எழுதியிருக்கிறார். பாதிக்கப்பட்டவர் களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று இதை படிக்கும் பொழுது அடுத்து வருகிற தலைமுறையினருக்கும் அந்த எண்ணம் தோன்றும் படி பதிவு செய்து, எப்படி எல்லாம் தத்தெடுப்பது என்பதற்கான வரையறைகளையும் வழிமுறைகளையும்  அந்தக் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார் என்றார்.

"ஆசிரியர்களும் - மாணவர்களும் இங்கே இதழாளர்கள்!" என்ற கட்டுரையில்  தேவகோட்டை "தே - பிரித்தோ" மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரும் மாணவர்களுமே இதழாளர்களாக இருந்து "சமூகமே எந்திரி", "பேனா முனை" போன்ற இதழ்களை நடத்தி வருகிறார்கள் என்றார்.

சமுதாய மாற்றத்திற்கான குரல்!

நம் திரைத் துறையினர் மலேசிய நிகழ்ச்சிக்காக சென்றிருக்கையில் அவர்களைப் பார்த்து மலேசியத் தமிழர்கள் "நீங்கள் எப்படி இவ்வளவு அழகாய் இருக்கீங்க, உங்கள் ஹேர் ஸ்டைல் எப்படி இப்படி இருக்கிறது?" என்று கேட்ட வழக்கமான கேள்விகளை விடுத்து, சமுதாய மாற்றத்திற்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பது போன்ற  பல கேள்விகளை ஜப்பானியத் தமிழனாக இருந்து  நூலாசிரியர் கேட்டிருப்பதோடு அதைப் பதிவு செய்தும் இருக்கிறார் என்றார்.

"ஜப்பானில் ஒலிக்கும் தமிழ்க் குரல்!" 

ஜப்பானில் தமிழர்களை ஒன்றிணைத்து முற் போக்கு கருத்துகளை அவர்களிடம் விதைத்து தமிழ்ப் பணி ஆற்றுகிற செந்தில்குமார் என்ற இளைஞருக்கு அந்தச் சிந்தனை எப்படி ஏற்பட்டது என்றால் மன்னார் குடியில் அவரின் வீட்டுக்குப் பக்கத்தில் எப்போதும் தெருமுனைக் கூட்டம் நடக்கும். அப்போது  தானாக காதில் விழுந்த கருத்துகள் மூலமாகவே அவர் பெரியா ரிய உணர்வாளரானார்  என்ற சுவையான தகவலை இங்கு பதிவிடுகிறார். இதனால் தெருமுனைக் கூட்டங் களின் அவசியத்தை அறிய முடிகிறது என்றார் திறனாய்வாளர்.

“தண்ணீரின்றி சாகலாம் - எதிர்காலச் சமுதாயம்" என்னும் கட்டுரையில் உலகம் வெப்பமயமாதலின் கேடுகளை எடுத்துக்காட்டுகிறார்.

திருச்சியில் உள்ள பெல்  தமிழ் பயிற்று‌ மொழி பள்ளியை சிறப்பாக நடத்தி, தமிழ் ஆர்வத்தை பிள்ளைகளுக்கு பல்வேறு போட்டிகளின் மூலம் ஊட்டி வரும் செய்திகள் பற்றிய கட்டுரையில், பாரதி தாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்கள் எட்டு மொழி கற்றிருந் தாலும் என்னை வளர்த்தது தமிழ் தான் என்று சொன் னதையும், தமிழ் வழியில் படித்ததுத்தான் தனக்கு மிகுந்த அறிவையும் சிந்தனையையும் தந்தது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் சொன்னதையும் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

உணவில் நச்சு!

நாம் உண்ணும் உணவில் நச்சு சேர்ப்பது போல சுண்ணாம்பு, செங்கல்பொடி, குதிரைச் சாணம் கலக்கப் படுகிறது என்ற அதிர்ச்சி தரும் தகவல்களை எடுத்துக் காட்டி உணவில் கலப்படம் குறித்த கட்டுரையில், மனிதர்கள் செத்தாலும் பரவாயில்லை பணம்தான் முக்கியம் என்று இவ்வாறு செய்யக் கிளம்பிட்டாங்களே பலர் என்கிறார். நூலாசிரியர் பேலியோ விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருபவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க!

இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் இவ்வளவு வாகன வசதிகள் பெருகிய நிலையிலும் எண்ணற்ற மக்கள் தம் உடல் உபாதைகளை எல்லாம்  பொறுத்துக் கொண்டும் வலிகளைத் தாங்கிக் கொண்டும் நடந்தே வேளாங்கண்ணி கோயிலுக்கு செல்கிறார்கள். ஆனா லும் அதனால் எந்தப் பலனும் அவர்களுக்கு இல் லையே என்பதை நகைச்சுவையோடு எடுத்துக்காட்டி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.படிக்கும் போதே சிரிப்பு வெடிக்கும்

இந்தக் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்பாக மாறி இருக்கிறது என்றார்.

எந்த ஒரு பயனுள்ள கட்டுரையும் செய்தித்தாளில் மட்டும் இருந்தால் பல ஆண்டுகள் கழித்து  தேடிப் படிக்க முடியாது. அதைப் புத்தகமாகத் தொகுக்க வேண்டும். அதனால் தான் தமிழர் தலைவர் ஆசிரியர், ‘பெரியார் களஞ்சியம் - குடியரசுத் தொகுதிகள்‘  எனத் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.அப்படி நம் முடைய இளைஞர்களும் தானே எழுதித் தொகுக்க முடியாவிட்டாலும் கூட வில்வம்  அவர்கள் எழுதியது போன்ற பயனுள்ள கட்டுரைகளைக் படிக்கும் போது அதையும் புத்தகமாகத் தொகுத்து இனிவரும் தலை முறையினர் பயன்படும்படி செய்ய வேண்டும் என்ற  தனிப்பட்ட வேண்டுகோளுடன் திறனாய்வை நிறைவு செய்தார்.

நூல் ஆசிரியர் வி.சி.வில்வம் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார்.அவர் தமது உரையில்,நிறைவுறும் நேரத்தை அறிவித்து இந்த நிகழ்ச்சியை நடத்துவதும், நம்முடைய தோழர்களின் நூல்களை ஆய்வு செய்வதும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சிறப்பு என்று பாராட்டினார். 

சிறீரங்கம் கோயிலில் இணை ஆணையராக பணி புரிந்த கவிதா என்ற நேர்மையான அதிகாரி, அர்ச்சகர் களின் அய்ந்து கோடி ரூபாய் ஊழலை அதிகாரப்பூர்வமாக அம்பலப்படுத்தியதற்காக, அவர்களால் மிரட்டப்பட்டு ஒரே வாரத்தில் சென்னைக்கு மாற்றப்பட்ட பிரச்சி னையில், உண்மைத் தன்மை அறியும்  பொறுப்பு தனக்கு வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் அப்போ திருந்த மனநிலையில் விசாரணைக்கு ஒத்துழைப்பு நல்காத நிலையிலும், தாம் அந்த இடத்தில் பல்வேறு கடைகளில் விசாரித்து 7 பக்க அறிக்கையை சமர்ப் பித்ததாகவும் அது விடுதலை இதழில் ஒரு பக்கம் முழுவதும் வெளியிடப்பட்டு, அப்போது முதலமைச் சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் உடனடியாக அதைக் கண்டு, நடவடிக்கை எடுத்து அவருடைய பணியிட மாற்றம் விலக்கப்பட்டதையும் கூறினார்.

குழந்தைகளைத் தத்தெடுப்பது தொடர்பாக எழுதி யவை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை- குழந்தைகள் தத்தெடுப்பு மய்யத்தில்  நீண்ட காலம் ஒட்டி வைத்திருந்ததையும் நினைவு கூர்ந்தார். இப்படியான‌ பிரச்சினைகள் - அனுபவங்கள் - உண்மை சம்பவங்கள் அடிப்படையிலேயே தம் கட்டுரைகள் அமைந்தது என்றும் பல வரிகளில் எழுதக்கூடியதை சில வரிகளிலேயே எழுதி புரிய வைக்க முடியும் என்றால் அதுதான் சிறந்த எழுத்து என்றும் கூறி ஏற்புரையாற்றினார்.

முடிவில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்துணைத் தலைவர் ம.கவிதா,  "பேசப்பேச பேச்சு வரும்; எழுத எழுத எழுத்து வரும்" என்ற நூலாசிரியரின் கூற்றை எடுத்துக்காட்டி  நன்றியுரை ஆற்றினார்.

தொகுப்பு: ம.கவிதா


No comments:

Post a Comment