நம்முடைய பத்திரிகை ‘விடுதலை’ என்கின்ற எண்ணம் வேண்டும்;
ஒவ்வொருவரும் அதற்கு சந்தாதாரராக வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., சிறப்புரை
சென்னை, செப்.23 ‘விடுதலை’ என்பது தமிழர்களுடைய நலனை, சமூகநீதியை, மதச்சார்பின்மையை, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டக் கூடியது. நம்முடைய பத்திரிகை ‘விடுதலை’ என்கின்ற எண்ணம் வேண்டும். ஒவ்வொருவரும் அதற்கு சந்தாதாரராக வேண்டும் என்றார் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள்.
‘விடுதலை' சந்தா வழங்கும் விழா!
கடந்த 6.9.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற 60 ஆண்டுகால ‘விடுதலை' ஆசிரியருக்கு கழகத் தோழர்கள் திரட்டிய ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலை வரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
‘விடுதலை'யின் திறன்மிகு ஆசிரியர்
‘விடுதலை’ 88 ஆம் ஆண்டில், அதன் திறன்மிகு ஆசிரியராக 60 ஆண்டுகள் பணி செய்துகொண் டிருக்கின்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களுக்குப் பாராட்டு, ‘விடுதலை’ நாளேட்டிற்கு சந்தா வழங்கக்கூடிய இந்த நிகழ்வில், பங்குகொண்டு தலைமை தாங்கிக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகத் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
இந்நிகழ்வில் பங்குகொண்டு பாராட்டுரை வழங்க விருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சரு மான அன்பிற்கினிய சகோதரர் இராசா அவர்களே,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நெஞ் சம் நிறைந்த சகோதரர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செய லாளர் மரியாதைக்குரிய தோழர் பாலகிருஷ்ணன் அவர்களே,
எனக்கு முன்னர் இங்கே உரையாற்றி சென்றிருக்கின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே,
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் அன்பிற்கினிய சகோதரர் மல்லை சத்யா அவர்களே,
இறுதியாக நன்றியுரையாற்றவிருக்கின்ற பொறியாளர் இன்பக்கனி அவர்களே,
கண்ணியத்திற்குரிய தாய்மார்களே, பெரியோர்களே, அன்பிற்கினிய சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தினைத் தெரி வித்துக் கொள்கின்றேன்.
மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஊட்டக் கூடிய ஒன்று!
‘விடுதலை’ நாளேட்டினுடைய ஆசிரியராக நம்மு டைய மானமிகு ஆசிரியர் வீரமணி அய்யா அவர்கள் 60 ஆண்டுகள் செயல்பட்டிருப்பதைப்பற்றி எனக்கு முன்னர் இங்கே உரையாற்றிய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களும், அருமைச் சகோதரி அருள்மொழி அவர்களும், இதுபோன்ற ஒரு சிறப்பு உலகில் வேறு யாருக்கும் இல்லை என்று ஆதாரங்களோடு குறிப்பிட்டார்கள்.
ஒரு தமிழன் என்ற அடிப்படையில், ஒரு தமிழர்தான் அந்தச் சாதனையை செய்திருக்கின்றார் என்பது, நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத் தையும் ஊட்டக் கூடிய ஒன்றாக இருக்கிறது.
எழுத்தாளர் ஜெயகாந்தன்
ஆசிரியர் அவர்கள் 10 வயதிலேயே மேடை ஏறியவர்; 13 ஆம் வயதில், மாநாட்டிற்குத் தலைமை தாங்கி பேசியவர். அவர் பேசிய பேச்சை, அவர் ஊரான கடலூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன், 13 வயதில் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய அந்த உரையை சிலாகித்து எழுதியிருக்கிறார். அந்த அளவிற்கு அறிவுக் கூர்மையும், மக்களை ஈர்க்கக்கூடிய மிகச் சிறப்பான பண்பாடுகளும், ஆற்றலும் உடையவர்தான் நம்முடைய ஆசிரியர் அய்யா அவர்கள்.
எனக்கு முன் உரையாற்றிய வீரபாண்டியன் அவர் கள் கடைசியாக சொன்ன ஒரு செய்தியிலிருந்து தொடங் குகின்றேன்.
நூறாண்டு கடந்தும் ‘விடுதலை’யினுடைய ஆசிரியராக இருக்கவேண்டிய அவசியமும், தேவையும்!
இன்றைக்கு மிகுந்த ஒரு நெருக்கடியான காலகட்டம். ஜனநாயகத்திற்கு நெருக்கடி, சமூகநீதிக்கு நெருக்கடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே நெருக்கடி என்ற ஒரு காலகட்டத்தில், எங்களைப் போன்றவர்களுடைய விருப்பம் எல்லாம், ஆசிரியருக்கு 90 வயது வருகின்ற டிசம்பர் மாதம் வருகிறது என்று சொன்னார்கள்; 90 வயதல்ல, அவர் நூறாண்டு கடந்தும் ‘விடுதலை’ யினுடைய ஆசிரியராக இருக்கவேண்டிய அவசியமும், தேவையும் இந்தக் காலகட்டத்தில் இருக்கின்றது.
ஆசிரியர் அவர்களோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு இருக்கின்றேன்; பல்வேறு நிகழ்வுகளில், தனிப்பட்ட முறையிலும் இருந்திருக்கின்றேன்.
அண்மையில்கூட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு திருப்பூரில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பங் கேற்பதற்காக அங்கே வந்து அவர் தங்கியிருந்த ஓட்ட லில்தான் நானும் தங்கியிருந்தேன். எனக்கு முன்பாகவே அவர் வந்துவிட்டார். நான் வந்தபொழுது, என்னை வரவேற்ற குழுவினரில், திராவிடர் கழகத் தொண்டர் களும் இருந்தார்கள். கை நிறைய ஆங்கிலப் பத்திரிகை களை வைத்திருந்தார்கள்; மற்ற பத்திரிகைகளும் இருந்தன. அந்தப் பத்திரிகைகள் அனைத்தையும் அவர் - ‘கரைத்து குடித்தவர்' என்று நம்மூர் பக்கம் சொல்வார்கள் - அதைப் போன்று அப்பத்திரிகைகளில் உள்ளனவற்றை அப்படியே அவர் உள்வாங்கி, அதை சமூகத்திற்கு, நாட்டிற்கு நம்முடைய தமிழ் மக்களுடைய நலனுக்குப் பிழிந்து அவர் ‘விடுதலை’யில் அன்றாடம் தரக்கூடிய அந்த நிகழ்வு என்பது, உண்மையிலேயே நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டிய ஒரு செய்தியாக இருக்கின்றது.
சங் பரிவார்களுடைய நிகழ்வுகளையெல்லாம் அம்பலப்படுத்தி வருகின்றன
இன்றைய காலகட்டத்தில், ஒன்றிய ஆட்சியில் இருக்கின்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் அமைப் புகள் எல்லாம் பெரும்பாலான ஊடகங்களை வளைத்துப் போட்டுவிட்டிருக்கின்றன; அல்லது அவர் களை மிரட்டி தங்களுடைய கொள்கைகளைத் திணித்து வரக்கூடிய ஒரு சூழலில், இன்னும் ஒரு சில ஊடகங்கள் மட்டும்தான் தலைநிமிர்ந்து, மிகத் தெளிவாக சமூக நீதிக்கு எதிரான, மதச்சார்பின்மைக்கு எதிரான, ஜன நாயகத்திற்கு எதிரான, சங் பரிவார்களுடைய நிகழ்வுகளையெல்லாம் அம்பலப்படுத்தி வருகின்றன.
அதை ஒவ்வொரு நாளும் தொகுத்து, இந்திய அளவில் நடக்கக் கூடியவற்றை, நாம் தமிழில் படிப்பதற்கு, நாள்தோறும் செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற ஒரு நாளேடுதான் ‘விடுதலை’.
எனவே, ‘விடுதலை’ என்பது திராவிடர் கழகத்தி னுடைய ஒரு நாளேடு என்ற எண்ணம், முதலில் தமிழர்களுடைய உள்ளங்களிலிருந்து போகவேண்டும்.
நம்முடைய பத்திரிகை ‘விடுதலை’ என்கின்ற எண்ணம் வேண்டும்
‘விடுதலை’ என்பது தமிழர்களுடைய நலனை, சமூகநீதியை, மதச்சார்பின்மையை, சமூக நல் லிணக்கத்தை நிலைநாட்டக் கூடியது. நம்முடைய பத்திரிகை ‘விடுதலை’ என்கின்ற எண்ணம் வேண்டும். ஒவ்வொருவரும் அதற்கு சந்தாதாரராக வேண்டும். ஆசிரியருடைய தேவை, இன்னும் பல ஆண்டுகள் - இந்தப் பாசிச சங் பரிவாரை எதிர்த்து நின்று போராடி - நாட்டைக் காக்க, ஜனநாயகத்தைக் காக்க, சமூகநீதியைக் காக்க, மதச்சார்பின்மையைக் காப்பதற்கு அந்தப் போராட்டம் தேவைப்படுகிறது.
அதில் நாம் அனைவரும் ஆசிரியரோடு இணைவோம்!
மதச்சார்பின்மையைக்
காக்கக்கூடிய போரிலே...
ஆசிரியர் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட் டாலும், எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது - இறைவன் இன்னும் பல்லாண்டுகள் அவருக்குத் தரவேண்டும். இந்த சமூகநீதி, மதச்சார்பின்மையைக் காக்கக்கூடிய போரிலே, அவர் பெரும் படைகர்த்தராக தொடர்ந்து பணியாற்றவேண்டும் என்று பிரார்த்தித்து விடை பெறுகின்றேன்.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பேரா சிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் உரையாற் றினார்.
No comments:
Post a Comment