திருவாரூர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 30, 2022

திருவாரூர் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்

 தமிழ்நாடு இந்தியாவில் அரசியலில் முதிர்ச்சி பெற்ற மாநிலம்

‘சனாதன எதிர்ப்பு மாநாட்டின்' பிரச்சார முழக்கம் என்பது தமிழ்நாடு முழுவதும் அல்ல - நாடு முழுவதும் ஒலிக்கவேண்டும் 

அதற்கான முயற்சியில், அனைவரும் இணைந்து செயல்படுவோம்

திருவாரூர் செப்.30  தமிழ்நாடு இந்தியாவில் அரசியலில் முதிர்ச்சி பெற்ற மாநிலம்.  இந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டின் பிரச்சார முழக்கம் என்பது தமிழ்நாடு முழுவதும் அல்ல - நாடு முழுவதும் ஒலிக்கவேண்டும். அதற்கான முயற்சியில், அனைவரும் இணைந்து செயல்படுவோம் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள்.

திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு

கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

பகற்கனவாகத்தான் முடியும்!

பகிரங்கமாகச் சொல்வதற்கு அச்சப்பட்டுக் கொண்டு, மறைமுகமாக, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, தங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைத்துவிட்டது என்கிற காரணத்தினால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்கிறது என்கிற திமிரின் காரணமாக, அவர்களது ஆர்.எஸ்.எஸ். கொள்கையை, மனுதர்மக் கொள்கையை இந்தியாவில் புகுத்திவிடலாம் என்று சொன்னால், அது பகற்கனவாகத்தான் முடியும்.

ஒருபோதும் அது நடைபெறாது. நீ அறிவித்திருக் கின்ற தேசியக் கல்விக் கொள்கை - யாருக்கான கல்விக் கொள்கை?

எந்த மக்களைக் காப்பாற்றுகிற தேசிய கல்விக் கொள்கை அது?

தேசிய கல்விக் கொள்கை 2020 - நீட் நுழைவுத் தேர்வு - இவற்றின் பொருள் என்ன?

மனுதர்மத்தை மறைமுகமாகப் பின்பற்றுகிறார்கள்.

கொல்லைப்புற வழியாக 

முதலமைச்சர் ஆனார் ராஜாஜி!

நம்முடைய தமிழ்நாட்டில், 1952 ஆம் ஆண்டு, கொல்லைப்புற வழியாக ராஜாஜி முதலமைச்சர் ஆனார். 

தந்தை பெரியாரின் பெரும் பிரச்சாரத்தால், தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பிரச்சாரம் செய்து, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்த அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்தார்.

அய்க்கிய முன்னணி ஆட்சி அமைக்க முடியவில்லை 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில்.

அய்க்கிய முன்னணி ஆட்சி அமைத்தால், அது நாட்டிற்கு ஆபத்து - சொன்னது கோயங்கா.

சொன்னது ‘தினமணி' பத்திரிகை சிவராமன்.

இரண்டு பேரும் சென்று, ராஜாஜி காலில் விழுந் தார்களாம். நாட்டிற்கு ஆபத்து என்றார்களாம்.

என்ன ஆபத்து? என்று ராஜாஜி கேட்டாராம்.

சென்னை மாகாணத்தில் கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வரப் போகிறார்கள்; அதைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று சொன்னார்களாம்.

ராஜாஜி, சட்டமன்ற உறுப்பினர் இல்லை; மேலவை உறுப்பினரும் இல்லை. எந்தப் பொறுப்பிலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால், காங்கிரசைப் பகைத்துக் கொண்டு,  ஓரமாக ஒதுங்கியிருந்த காலம்.

அவரது காலில் விழுந்து, நீங்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்க சம்மதித்தால், அய்க்கிய முன்னணியை ஆட்சி அமைக்கவிடாமல், உங்கள் தலைமையில் ஆட்சி அமைக்கலாம் என்று அவரை சம்மதிக்க வைத்து, அவரை ஆட்சி அமைக்கச் செய்தார்கள்.

ராஜாஜி ஆட்சி அமைத்து முதலமைச்சரானார். ஆறு மாதத்திற்குள் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார். அந்த ஆறு மாதத்திற்குள் அவர் ஒரு கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தார்.

அந்தக் கல்வி கொள்கையை திராவிட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் - இது குலக்கல்வி முறை - அனுமதிக்கமாட்டோம் என்று போராடினோம்.

அந்தப் போராட்டத்தை பெருந்தலைவர் காமராசர் ஆதரித்தார். ராஜாஜி, கொள்கையில் வேறுபட்டிருந் தாலும், ஒரு நேர்மையான மனிதர். எனது கட்சிக்காரரே மசோதாவை மறுக்கிறான்; ஆகையால், நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி, ராஜினாமா செய்துவிட்டுப் போனார்.

பழையக் குலக்கல்வித் திட்டத்தைத்தான் 

இன்று வேறுவிதமாக சொல்கிறார்கள்

இன்றைக்கு இருக்கிற பிரதமர், ராஜாஜி அன்று சொன்னதை, இன்றைக்கு வேறுவிதமாக சொல்கிறார்.

ராஜாஜி, அரை நேரம் பள்ளிக்கூடம் போகவேண்டும்; மீதி அரை நேரம் அவனவன் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்று சொன்னார்.

இப்பொழுது இருக்கிற பிரதமர் மோடி, ஓராண்டு காலத்திற்கு முன்பு என்ன சொன்னார் -

‘‘மாணவர்கள் தங்களுடைய விடுமுறை நாள்களில், பெற்றோருக்கு உதவி செய்யக்கூடிய வகையில், தந்தை செய்கிற தொழிலை செய்யவேண்டும்'' என்று சொன்னார்.

இதைக் கேட்கிற எந்தப் பெற்றோரும் ஆட்சேபிக்க வில்லை.

ராஜாஜி நேரிடையாகச் சொன்னார். பிரதமர் மோடியோ, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல் ஏற்றுகிறார்.

திராவிடர் கழகம் எப்பொழுதும் 

விழிப்பாக இருக்கும்

அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதைக் கண்டு கொண்டது திராவிடர் கழகம்; ஏனென்றால், எப்பொழுதும் விழிப்பாக இருப்பதினால்தான்.

நம்முடைய ஆசிரியர் இதுபோன்ற விஷயங்களில், எம்பொழுதும் விழிப்பாக இருப்பார். அவருடைய அறிக்கை வந்தது.

ஆக, இப்படி நாட்டில், இன்றைக்கு இருக்கின்ற ஆட்சியாளர்கள், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த வர்கள், தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்கிற காரணத்தினால், தங்களுடைய சொந்தக் கொள்கையான சனாதனக் கொள்கைகளை இந்த மண்ணில் அமல் படுத்த விரும்புகிறார்கள்.

இதற்கு எதிரான முறையில்தான் இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பொதுவுடைமைச் சமுதாயம் காணவேண்டும் என்று நாம் சொல்கிறோம்!

சனாதனம் என்பது மாற்றத்தை விரும்பாதது. இங்கே இருக்கின்ற நாம், பொதுவுடைமைச் சமுதாயம் காண வேண்டும் என்று சொல்கிறோம்.

பொதுவுடைமைச் சமுதாயம் என்றால், இந்த நிலை யில் இருந்து மாற்றம். அதைத்தான் ‘திராவிட மாடல்' என முதலமைச்சர் சொல்கிறார். அதை ஆதரித்துத்தான் இங்கே நாம்  பேசுகிறோம்.

எது மாறுதல்?

எது மாற்றம்?

பொதுவுடைமைதான் மாற்றம்.

முதலாளித்துவத்திற்கு மாற்றம் அதுதான்.

ஆகவே, அந்தக் கொள்கை வெற்றி பெறவேண்டும் என்பதற்காக, நாம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக் கின்றோம். இது எங்களுடைய சொந்தப் பிரச்சினையல்ல. இது அய்யா ஆசிரியர் அவர்களுடைய சொந்தப் பிரச்சினையல்ல.

வருகிற டிசம்பர் மாதம் வந்தால், ஆசிரியர் அய்யாவிற்கு 90 வயது. பிறந்த நாள் விழாவில் நாங்கள் எல்லாம் கலந்துகொண்டு வாழ்த்து சொல்வோம்.

அப்பொழுது சொல்வோம், ‘‘வயது ஆகிவிட்ட காரணத்தால், சுற்றுப்பயணங்களைக் குறைத்துக் கொள்ளவேண்டும்'' என்று.

அதைக் கேட்கமாட்டேன் என்று அவர் சொல்வார்.

அப்படி சொல்வது எங்களுடைய கடமை.

‘‘அப்படி சொல்லாதீர்கள். நான் சுற்றுப்பயணம் செய்துகொண்டுதான் இருப்பேன்'' என்று ஆசிரியர் அய்யா சொல்வார்.

அவர் சுற்றுப்பயணம் செய்வது மட்டுமல்லாமல், நம்மையும் அவரோடு சேர்த்துக் கொள்வார்.

எங்களுடைய வேலை திட்டத்தையும் ஆசிரியர்தான் தீர்மானிக்கிறார்!

இன்றைக்கு மாநாடு இங்கே. 6 ஆம் தேதி சென் னையில் ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா நடை பெறுகிறது அதற்கும் வரவேண்டும் என்று அழைப்பிதழ் வருகிறது.

நாங்கள் வேறு எந்தப் பணியையும் பார்க்கவேண் டாமா? அப்படியென்றால், எங்களுடைய வேலைத் திட்டத்தை வகுப்பது யார் என்றால், ஆசிரியர்தான்.

பாலகிருஷ்ணனுக்கு என்ன வேலை?

எனக்கு என்ன வேலை?

திருமாவளவனுக்கு என்ன வேலை? என்பதை யார் தீர்மானிக்கிறார் என்றால், ஆசிரியர்தான் தீர்மானிக்கிறார்.

ஆசிரியர் தீர்மானிக்கிறார் என்றால், அவருடைய சொந்தப் பிரச்சினையா? இது. அவருக்கு ஒரு பிரச்சினை யும் கிடையாது; சொந்தமாக எந்தப் பிரச்சினையும் கிடையாது; இங்கே யாருக்கும் எந்த சொந்தப் பிரச் சினையும் கிடையாது.

மக்களுடைய வாழ்க்கையில் 

மாற்றம் வேண்டும்

இந்த நாட்டு மக்களுடைய வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக் கின்ற கூட்டம்தான் இங்கே கூடியிருக்கின்ற கூட்டம்.

எந்த சுயநலமும் கிடையாது.

நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும்; சமூக மாற்றம் ஏற்படவேண்டும். பொதுவுடைமைச் சமுதாயம் இந்த மண்ணில் பூத்துக் குலுங்கவேண்டும் என்பதற்கான போராட்டத்தினுடைய இந்தப் பகுதிதான் இந்த மாநாடு என்கிற முறையில், நாம் மிகுந்த  விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.

இன்றைக்கு வன்முறை அரசியல் தமிழ்நாட்டில் தூண்டப்படுகிறது. நாம் மிகுந்த எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும் இருக்கவேண்டும்.

அரசியலில் முதிர்ச்சி பெற்ற 

மாநிலம் தமிழ்நாடு

நாம் மணலாக மாறுவோமா? நெருப்பாக மாறு வோமா? என்பது வேறு. தமிழ்நாடு இந்தியாவில் அரசியலில் முதிர்ச்சி பெற்ற மாநிலம்.

இங்கு அநாகரிக அரசியலுக்கு வேலையில்லை. அதைத்தான் மேற்கொள்வோம்; அப்படித்தான் நாங்கள் அரசியல் செய்வோம் என்று விரும்பினால், அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டுமோ - அவ்வாறு எதிர்கொள்ள எங்களுக்கும் தெரியும்.

அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. தமிழ் நாட்டில், பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு தலைவர் அல்ல; இரண்டு தலைவர்.  ஒருவர் மோடியால் நியமிக்கப்பட்ட அண்ணாமலையார்; அவரும் பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தைச் சேர்ந்தவர்தான். அவர் ஒன்றும் அய்யங்கார் கிடையாது. பிற்படுத்தப்பட்டவர்தான், அய்.பி.எஸ். படித் தார்; அங்கே என்ன கோளாறு செய்தார் என்று தெரிய வில்லை; இங்கே கொண்டு வந்து போட்டுவிட்டார்கள்.

கொள்ளைக்காரர்களை, கொலைகாரர்களைத்தான் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்!

கருநாடக மாநிலத்தில் அய்.பி.எஸ். அதிகாரியாக இருந்தவர். அப்பொழுது அவர் யாரைத் தேடியிருப்பார்? நாட்டில் யார் கிரிமினல்களோ அவர்களைத்தான் தேடியிருப்பார்.

அய்.பி.எஸ். அதிகாரியான காவல்துறை அதிகாரி என்ன செய்வார்? 

யார் கொள்ளைக்காரனோ, கொலைகாரனோ, யார் முடிச்சு அவிழ்ப்பவரோ அதுபோன்ற கிரிமினல்களைத் தானே தேடி அலைந்திருப்பார்.

அங்கே தேடினாரோ இல்லையோ,  தம் கட்சியில் இங்கே யாரை சேர்த்துக் கொண்டிருக்கின்றார் என்றால், நான் மேற்சொன்ன பட்டியலில் உள்ளவர்களைத்தான்.

அப்படியென்றால், அவர் அய்.பி.எஸ். அதிகாரியாக என்ன யோக்கியதையோடு பணியாற்றியிருப்பார் என்று தெரியவில்லை.

இவர் ஒருவர் இப்படி.

ஆளுநருக்குரிய தகுதியோடு இருந்தால், 

அவரை ஆளுநர் என்று சொல்லலாம்

இன்னொருவர் ரவி என்று ஒருவர் இருக்கிறார். அவரை ஆளுநர் என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆளுநருக்குரிய தகுதியோடு இருந்தால், அவரை ஆளுநர் என்று சொல்லலாம்.

அவர் என்ன, பாரதீய ஜனதா கட்சி பிரச்சாரகரா?

சனாதனம்தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்து கின்றதாம்.

எவன்டா சொன்னான்?

எவன்டா உனக்குக் கற்றுக்கொடுத்தது? 

எங்கே படித்தாய் நீ? 

எந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தாய்?

வேண்டும் என்றால், உன்னுடைய ஊரில் போய்ச் சொல்; அங்கே கேட்டுக்கொண்டிருப்பார்கள். ‘‘கேழ் வரகில் நெய் வடிகிறது'' என்றால், அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.  இங்கே இருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

தமிழ்நாட்டில் வந்து சொல்கிறாயே, சனாதனம்தான் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது என்று.

இங்கே இருக்கின்றவன் சும்மா இருக்கமாட்டான்; எதையாவது கழற்றி அடிப்பான் உன்னை.

சனாதனம் அனைத்து வகையிலும் 

பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறது!

எந்த சனாதனம் நாட்டை ஒற்றுமைப்படுத்துகிறது?

சனாதனம்தான் பிளவுபடுத்திக் கொண்டிருக்கிறது 

மக்களைப் பிளவுபடுத்துகிறது

ஜாதியால் பிளவுபடுத்துகிறது

மொழியால் பிளவுபடுத்துகிறது

அனைத்து வகையிலும் பிளவுபடுத்திக் கொண் டிருக்கிறது.

நீ என்ன ஆளுநர் வேலை பார்க்கிறாயா? 

வேறு வேலை பார்க்கிறாயா? தமிழ்நாட்டில்!

ஆளுநர் வேலை பார்ப்பதென்றால், ஒழுங்காக அந்த வேலையைப் பாரு - இல்லையென்றால், மரியாதையாக ராஜினாமா செய்துவிட்டு, பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து பிரச்சாரகராக மாறு. அதில் எங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

அண்ணாமலை, பாரதீய ஜனதா கட்சியினுடைய தமிழ்நாட்டுத் தலைவர். அவரை அரசியல் ரீதியாக எப்படி சந்திக்கவேண்டுமோ, அப்படி நாங்கள் சந்திப் போம், அது வேறு விஷயம்.

உனக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம்,  

மக்கள் வரிப் பணம்

ஆனால், நீ ஆளுநர். குடியரசுத் தலைவரால் நிய மிக்கப்பட்டவர். உனக்குக் கொடுக்கப்படுகின்ற சம்பளம், சர்க்கார் சம்பளம் - எங்கள் பணம் - மக்கள் வரிப் பணம்.

நீ இருக்கின்ற பிரமாண்டமான மாளிகையின் பராமரிப்பு செலவு எல்லாம் எங்கள் பணம் - தமிழ்நாட்டு மக்களுடைய வரிப் பணம். மோடியா கொடுக்கிறார்? உன்னை நியமித்ததோடு அவருடைய வேலை முடிந்துவிட்டது.

அதற்குப் பிறகு உனக்குக் கொடுக்கின்ற சம்பளம் - உனக்குக் கொடுக்கிற படி - வீட்டுப் பராமரிப்பு செலவு - உனக்குப் பாதுகாப்பு செலவுக்கு எல்லாம் - தமிழ்நாட்டு மக்களுடைய வரிப் பணத்திலிருந்து கொடுக்கப்படுகிறது.

ஆகவே, அடக்கத்தோடு இருக்கவேண்டும். ஒரு ஆளுநர் அவருக்குரிய வேலை என்னவோ, அந்த வேலையை மட்டும் செய்யவேண்டும். அந்த வேலையை அவர் செய்யாமல், வேறு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பாரதீய ஜனதா கட்சியினுடைய கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கிறார். 

நாங்கள் அவரைக் கேட்டுக்கொள்வது, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்; அந்தப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாரதீய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர்ந்து, அண்ணாமலைக்கு உதவி யாகவோ அல்லது அவருடைய தலைவர் பதவியை பிடுங்கி, நீ எடுத்துக்கொண்டு, பிரச்சாரம் செய்தால், எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை கிடையாது.

குடியரசுத் தலைவராக ஓர் அம்மையார் வந்திருக் கிறார். ரொம்ப நல்லவங்க; அவருக்கு வாழ்த்துகள். பழங் குடியினத்தைச் சேர்ந்த சமுதாயத்திலிருந்து வந்திருக் கிறார். எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி.

பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

ஆனால், அதேநேரத்தில், பாரதீய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கக் கூடிய ஒரு பெண்ணின் வீட்டில், பணிசெய்த பழங்குடியின பெண்ணை, அறை யில் பல ஆண்டுகளாக அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, ‘‘கக்கூசை நாக்கால் நக்கி சுத்தம் செய்'' என்று அந்தப் பழங்குடியின பெண்ணை கொடுமை செய் திருக்கிறார்.

இந்தக் கொடுமையை செய்தது யார்?

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகி.

குடியரசுத் தலைவர் யார்?

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்.

என்ன தர்மம் இது?

என்ன நியாயம் இது?

இதைத்தான் நாங்கள் பேசிக் கொண்டிருக்கின்றோம்.

பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், குடியரசுத் தலை வராக இருக்கலாம்; அதனால், பழங்குடியின சமுதாயப் பெண்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுவிடுமா?

உடல் முழுவதும் சூடு போட்டு, அந்தப் பெண்ணை கக்கூசை நாக்கால் சுத்தம் செய்யச் சொல்லும் அநியாய மும், கொடுமையும் நடந்துகொண்டிருக்கின்றன.

பழங்குடியின மக்களுக்கு எதிரான கொடுமை, தாழ்த் தப்பட்ட மக்களுக்கு எதிரான கொடுமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள், இளம்பெண்களுக்கு எதிரான கொடுமைகள் - இத்தனைக் கொடுமைகளையும் எதிர்த் துப் போராடுவதுதான் எங்களுடைய வேலை.

சனாதனத்தை வேரோடும், 

வேரடி மண்ணோடும் பிடுங்கி அழிக்கவேண்டும்!

இத்தனைக் கொடுமைகளுக்கும் காரணமாக இருப்பது சனாதனம் -

அந்த சனாதனத்தை வேரோடும், வேரடி மண் ணோடும் பிடுங்கி அழிப்பதற்குப் பொருத்தமான இடம் திருவாரூர்.

இங்கே சொன்னார்கள் - கலைஞர் அவர்கள் இங்கே இருந்துதான் உருவாகி, மாபெரும் தலைவராகி, தமிழ் நாட்டின் முதலமைச்சராகி, ஒரு கட்சியில் நீண்ட நெடுங் காலம் தலைவராக பொன்விழா கொண்டாடக்கூடிய  அளவில் நீடித்து, பணியாற்றியதோடு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்களை நன்கு அறிந்த தலைவர்.

இந்தியாவிற்கே ஒரு நல்ல சிறந்த தலைவராக விளங்கினார் கலைஞர்!

தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்களை நன்கு அறிந்த தலைவர் - இந்த மாவட்டத்தைப்பற்றியும் நன்கு அறிந்த தலைவர்.

இந்தத் திருவாரூர் மாவட்டம்தான் அவரை மாபெரும் தலைவராக உருவாக்கியது. அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே ஒரு நல்ல சிறந்த தலைவராக விளங்கினார்.

இப்பொழுது அவருடைய மகன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறார்; முதலமைச்சராகவும் இருக்கிறார்.

நேற்று கேரள மாநிலத்தில் தென்மண்டல மாநாட்டில் முதலமைச்சர்கள் எல்லாம் கலந்துகொண்ட மாநாடு அது - அம்மாநாட்டில் அமித்ஷா கலந்துகொண்டார். 

அமித்ஷா என்றால், அவர் ஒரு பெரிய ஆளு - 

மோடிக்கு பக்கத்தில் இருப்பவர். ஹிட்லர் பக்கத்தில் கோயபல்சு இருந்தான் அல்லவா - அதுபோன்று.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அவர் தலை மையில் நடைபெற்ற மாநாட்டில் ‘‘நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலைக் கொடு - நீ கொண்டு வரவிருக்கின்ற மின்சார திருத்த மசோதாவை கொண்டு வராதே!'' என்று சொன்னார் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

யார் இருக்கும் மாநாட்டில்?

அமித்ஷா பெரிய மனிதன் அல்லவா - அந்தப் பெரிய மனிதனுக்கு முன்னால், மாநிலங்கள் எப்படி பாதிக் கப்படுகிறது? மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி - 50 ஆண்டுகாலமாக சொல்கிறோம் என்று அமித் ஷாவை வைத்துக்கொண்டு சொன்னார்.

எவனுக்கும் பயப்படுகிற கூட்டம் அல்ல - நம்முடைய கூட்டம்!

ஆகவே, எவனுக்கும் பயப்படுகிற கூட்டம் அல்ல நம்முடைய கூட்டம். அதற்காகத்தான் இதைச் சொல் கிறேன்.

ஆகவே, சனாதன எதிர்ப்பு மாநாடு மிகப் பொருத்த மான முறையில் திருவாரூரில் நடைபெறுகிறது.

மாநாட்டின் முழக்கங்கள் தமிழ்நாடு முழுவதும் அல்ல - 

நாடு முழுவதும் ஒலிக்கவேண்டும்!

இந்த மாநாட்டின் பிரச்சார முழக்கம் என்பது தமிழ் நாடு முழுவதும் அல்ல - நாடு முழுவதும் ஒலிக்கவேண்டும். அதற்கான முயற்சியில், அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் சிறப்புரை யாற்றினார்.


No comments:

Post a Comment