மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்' செந்தில்நாதன் உரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்' செந்தில்நாதன் உரை

ஜனவரி ஒன்றாம் தேதி - புத்தாண்டிற்காக திறக்கப்பட்ட அத்தனைக் கோவில்களும் ஆகமக் கோவில்கள் அல்ல!

பரம்பரை அர்ச்சகர்கள் உருவாவதற்கு வழிவகுக்கின்ற ஒரு தீர்ப்புதான் உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

உயர்நீதிமன்றத் தீர்ப்பை முறியடிப்பதற்கு  நாம் அனைவரும் ஒன்றிணைவோம்!

சென்னை, செப்.4  ஜனவரி ஒன்றாம் தேதி - புத்தாண்டிற் காக திறக்கப்பட்ட அத்தனைக் கோவில்களும் ஆகமக் கோவில்கள் அல்ல! பரம்பரை அர்ச்சகர்கள் உருவா வதற்கு வழிவகுக்கின்ற ஒரு தீர்ப்புதான் உயர்நீதிமன்றத் தீர்ப்பு! உயர்நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கவேண்டும்; முறியடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்றார் மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்‘ செந்தில்நாதன்  அவர்கள்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மைக்காலத் தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்

கடந்த 1..9.2022 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்ற ‘‘அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை: அண்மைக்காலத் தீர்ப்பு - ஓர் ஆய்வரங்கம்’’ சிறப்புக் கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்‘ செந்தில்நாதன்  அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

நீதிபதி சொக்கலிங்கம் கோவிலுக்குப் போகிறபொழுது இவற்றையெல்லாம் பார்க்கவேண்டும். உதாரணமாக, 

ஜனவரி ஒன்றாம் தேதி - ஆங்கிலப் புத்தாண்டு. அன்று கோவில்களையெல்லாம் திறந்து வைக்கிறார்கள் நள்ளிரவு 12 மணிக்கு.

ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டைக் கொண்டாட லாம் என்று எந்த ஆகமம் சொல்கிறது?

எந்த ஆகமும் அப்படி சொல்லவில்லை. ஆனால், இந்த ஆகம நிபுணர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்கள் தங்களுடைய வாக்குமூலத்தில் சொல்வதெல் லாம் - ஆகமம் மீறப்பட்டால், கோவிலிலே இருக்கின்ற சிலைகளின் ‘புனிதம்' போய்விடும் என்று சொல்லு கிறார்கள்.

சிலைக்கு எப்படி ‘புனிதம்‘ வருகிறது?

‘புனிதம்'தான் இப்போதைய பிரச்சினை. சிலைக்கு எப்படி ‘புனிதம்' வருகிறது.

சிலையை சிற்பி செய்கிறான்; சிற்பி பிராமணன் அல்ல; தமிழன்தான். அவன் சிலையை செய்யும்பொழுது எந்த தெய்வ சக்தியும் கிடையாது. அந்த சிலையை கோவிலில் வைத்து ‘குடியேற்றம்' நடக்கும் - அதைத்தான் ‘பிரதிஷ்டை' என்று சொல்வார்கள். அந்தக் கோவிலுக் குள் சிலையை வைத்து, சமஸ்கிருத மந்திரம் சொன் னால், அந்த சிலைக்கு தெய்வ சக்தி ஏறுமாம்.

ஜனவரி ஒன்றாம் தேதி - புத்தாண்டிற்காக திறக்கப்பட்ட அத்தனைக் கோவில்களும் ஆகமக் கோவில்கள் அல்ல!

கார் டயரில் காற்று அடிப்பது ஏறுவதுபோன்று, ‘விறுவிறு‘வென்று தெய்வ சக்தி அந்த சிலைக்கு ஏறுமாம். அந்த தெய்வ சக்தி எப்பொழுது காலியாகும் என்று சொன்னால், ஆகமம் மீறினால் காலியாகிவிடுமாம். அப்படியென்றால், ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்ட அத்தனைக் கோவில்களும் ஆக மகக் கோவில்கள் அல்ல. அப்படி நீங்கள் சொல்லவேண்டும்.

சில பேர் புதிய கார் வாங்கினால் என்ன செய்கிறார்கள்,  அந்த சாவியை கோவில் குருக்களிடம் கொடுத்து, சாமி முன் வைத்து, படைத்து அதை வாங்கிக் கொள்கிறார்கள். அப்பொழுதுதான் அந்தக் கார் ஆக்சிடண்ட் இல்லாமல் போகுமாம்.

இன்னொருவர், புதிய வீடு வாங்குகிறார். அந்த வீட்டின் பத்திரத்தைக் கொண்டுபோய், கோவில் குருக் களிடம் கொடுத்து, சாமி முன்பு வைத்து மந்திரம் சொல்லுகிறார்.

இதற்கெல்லாம் எப்படி மந்திரம் வரும்?

அந்த நாளில், ஆகமத்தில் இதெல்லாம் சொல்லப் பட்டு இருக்கிறதா? வீடு வாங்கியுடன், வீட்டுப் பத் திரத்தை கோவிலில் வைத்து சாமி கும்பிடலாம் என்று. அதற்கு ஏதாவது மந்திரம் இருக்க முடியுமா?

ஆக, இல்லாத மந்திரத்தையெல்லாம் சொன்னாலே, கோவிலின் ‘புனிதம்' போய்விடாதா?

எந்தெந்த கோவில்களில் வீடு வாங்கியதற்காக ஆவணங்களைக் கொண்டு வந்ததை, ஆண்டவனுடைய சன்னதியில் வைத்து, அய்யர் மந்திரம் சொன்னாரோ, அந்தக் கோவில்கள் எல்லாம் ஆகமக் கோவில்கள் அல்ல.

கார் சாவியை வைத்து மந்திரம் சொல்லியிருந்தாலும், அந்தக் கோவில்கள் ஆகமக் கோவில்கள் அல்ல.

திருமணம் என்றால், பட்டுப் புடவையைக் கொண்டு போய் கோவில் குருக்களிடம் கொடுத்து, சாமி முன்பு வைத்து மந்திரம் சொல்லியிருந்தாலும், அந்தக் கோவில் ஆகமக் கோவில் இல்லை.

எந்த ஆகமத்தில் இருக்கிறது?

நவக்கிரகம் உள்ள கோவில்கள் 

ஆகமக் கோவில்கள் அல்ல!

ஆக, நீங்களே ஆகமத்தை மீறுகிறீர்கள்.

அதுமட்டுமல்ல, நவக்கிரக வழிபாடு என்று சொல்கிறார்கள்.நவக்கிரக வழிபாடு என்பதே ஆகமத்தில் பேசப்படவில்லை.    நவக்கிரகம் உள்ள கோவில்கள் ஆகமக் கோவில்கள் அல்ல.

சிவன் கோவில் அல்லது பெருமாள் கோவில், விஷ்ணு கோவில்களில் எல்லாம், எந்தெந்த கோவில்களில், எந்தெந்தப் பரிவாரக் கடவுள்கள் - கடவுள் சும்மா இருப்பாரா? அவருக்குப் பரிவாரம் வேண்டாமா?

அந்தக் கடவுள்கள் என்னென்ன என்று சொல்லி, ஒரு பட்டியல் இருக்கிறது. அதை மீறி இப்பொழுது கோவில்களில் வைக்கிறார்கள்.

அய்யப்பனை கொண்டு வந்து வைக்கிறார்கள்; ஏன், பிள்ளையாரைக் கொண்டு வந்துகூட வைக் கிறார்கள். பிள்ளையாருக்கும், ஆகமத்திற்கும் என்ன சம்பந்தம்?

களிமண் சிலைக்கு மந்திர சக்தி ஏறுமா? 

தெய்வ சக்தி வருமா?

இப்பொழுது பிள்ளையார் சதுர்த்தி என்று சொல்லு கிறார்கள்; தெருவில்  விற்கும் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை வாங்கிக்கொண்டு வந்து, வீட்டில் வைக்கிறார்கள். அவன் சாமி கும்பிட்டால், அந்த களிமண் சிலைக்கு மந்திர சக்தி ஏறுமா? தெய்வ சக்தி வருமா?

அதற்காகத்தான் அய்யர் என்ன சொல்கிறார் என்றால், ‘நீ வீட்டிற்குக் கொண்டு போய் பிள்ளையாரை வைத்துக் கும்பிட்டால், அதை நீண்ட நாள்களுக்கு வைத்திருக்கக்கூடாது; ஏனென்றால், அதற்கு தெய்வ சக்தி இல்லை. அதனால், அந்த சிலையை கடலில் போட்டுவிடு'' என்கிறார்.

கடலில் போடப்படுகிற பிள்ளையார் சிலைக்கு ஆகமம் கிடையாது; தெய்வ சக்தியும் கிடையாது. அதனால்தான் தூக்கிப் போடுகிறாய்.

அப்படியென்றால், சிவன் கோவிலிலே, பெருமாள் கோவிலிலே பிள்ளையார் சிலையை வைத்து வணங் கினால், அந்தக் கோவிலும் ஆகமக் கோவில்கள் அல்ல.

மடப்பள்ளி என்று கோவில்களில் உண்டு. அங்கே தான், பிரசாதங்களையெல்லாம் தயார் செய்வார்கள்; அதைத்தான் சாமிக்குப் படைப்பார்கள். இப்பொழுது எத்தனை கோவில்களில் அதுபோன்று செய்கிறார்கள்? வீட்டிலோ, வெளியிலோ செய்துகொண்டு வந்ததை வைத்துத்தான் படைக்கிறான்.

ஆக, மடப்பள்ளியில் எந்தெந்தக் கோவில்களில் பிரசாதம் தயாரிக்கப்படவில்லையோ, அந்தக் கோவில் கள் எல்லாம் ஆகமக் கோவில்கள் அல்ல என்று சொல்லவேண்டும்.

நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கை

அதுமட்டுமல்ல, அங்கே தகுதியான அர்ச்சகர்கள் இருக்கிறார்களா? நீதிபதி ஏ.கே.ராஜன் அறிக்கையைப் பார்க்கவேண்டும்.

அவர் சைவக் கோவில்கள், வைணவக் கோவில்கள், அம்மன் கோவில்கள் மூன்றிற்கும் சென்று, அங்கு பணியாற்றுகின்ற அர்ச்சகர்களுடைய தகுதி நிலை என்ன என்பதைப்பற்றி சொல்லியிருக்கிறார்.

அவர்கள் ஓர் ஆண்டுகூட பயிற்சி இல்லாமல், கோவிலிலே பணியாற்றுகிறார்கள். நீ சொல்கிற கோவில் களில் இருக்கின்ற சிலையை எல்லோரும் தொட முடியாது.

‘புனிதம்‘ கெட்டால், 

அது எப்படி ஆகமக் கோவில் ஆகும்?

அதற்கென்று இருக்கக்கூடிய சிவாச்சாரியார்தான் தொடவேண்டும் என்று சொல்கிறீர்கள். தகுதியில்லாத வன், பயிற்சியே இல்லாதவன், அப்பா அர்ச்சகராக இருந்தார் என்பதற்காக, பின்னாலேயே சென்று, ஒரு நான்கு மந்திரத்தைத் தெரிந்துகொண்டு வந்தவன் எல்லாம் சாமி சிலையைத் தொட்டால், அதனுடைய ‘புனிதம்' கெட்டுவிடாதா? ‘புனிதம்' கெட்டால், அது எப்படி ஆகமக் கோவில் ஆகும்?

பாதிக் கோவில்களில், ஆகமங்கள் இருக்கின்றன அல்லவா, அதையே மாற்றுகிறார்கள்.

இராமானுஜரே சிறீரங்கம் கோவிலில் ஆகமத்தை மாற்றினார். வைணவ ஆகமத்தை மாற்றி, பாஞ்சாசரம் ஆகமத்தைக் கொண்டுவந்தார்.

ஆக, ஓர் ஆகமம் போய், இன்னொரு ஆகமம் வந்தாலே, அந்தக் கோவில் ஆகமக் கோவில் அல்ல.

கபாலீசுவரர் கோவிலில் இரண்டு ஆகமம் இருக்கிறதாம். காரண ஆகமும் இருக்கிறதாம்; காமிர ஆகமும் இருக்கிறதாம்.

ஏதாவது ஓர் ஆகமத்தில்தான் வழிபாடு நடத்த வேண்டும். இரண்டு ஆகமத்தை கபாலீசுவரர் கோவி லில் பயன்படுத்தினால், அந்தக் கோவில் ஆகமக் கோவில் அல்ல.

நீங்கள் இப்படி ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டே செல்லவேண்டும்.

மாற்றியிருக்கிறார்கள் அரசர்கள்.

கள்ளழகர் ஆற்றிலே இறங்குவதை 

மாற்றினார் திருமலை நாயக்கர்!

மதுரையில் சித்திரைப் பெருவிழா. கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார். இந்தக் கள்ளழகர் சித்திரை யில் ஆற்றில் இறங்க ஆரம்பித்தது எப்பொழுது?

திருமலை நாயக்கருடைய காலத்திற்கு முன்பு வரையில், மார்கழியில்தான் கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் என்று இருந்தது. மார்கழி என்பது குளிர்காலம். பொதுவாக மார்கழி மாதம் வைணவர்களுக்கு முக்கியமான மாதமாகும்.

அந்த மாதத்தில் கள்ளழகர் ஆற்றிலே இறங் கினால், குளிர் காலம் என்பதினால், கூட்டம் வர வில்லை. திருமலை நாயக்கர் பார்த்தார், கூட்டம் வரவில்லையே என்று, கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை சித்திரை மாதத்திற்கு மாற்றினார்.

அப்பொழுது ஆட்சியில் இருப்பவர் இதனை மாற்றினால், எப்படி மீனாட்சிக் கோவிலும், கள் ளழகர் கோவிலும் ஆகமக் கோவிலாகும்?

பழனி கோவிலில் பண்டாரங்களை 

மாற்றினார் ராமப்ப அய்யர்

பழனி கோவிலில் பண்டாரங்கள் எல்லாம் பூஜை செய்து கொண்டிருந்தபொழுது, ராமப்ப அய்யர் என்பவர் அந்தக் கோவிலுக்குச் சென்றார். அந்த ராமப்ப அய்யர், பண்டாரங்களின்  கைகளில் விபூதி வாங்கி நாம் பூசுவதா? என்று நினைத்து, உடனடியாக அரசரிடம் சொல்லி, பண்டாரங்களை மாற்றிவிட்டார்.

அப்படியென்றால், இது ஆகம மீறல் அல்லவா! ஆக, பழனி கோவிலும் ஆகமக் கோவில் அல்ல என்று சொல்.

ஆகமம் மீறப்பட்டு இருக்கிறதா? இல்லையா?

தமிழ்நாட்டில் எந்தக் கோவிலும் ஆகமக் கோவிலே இல்லை என்ற முடிவிற்கு நாம் வருவோம். ஆகமக் கோவிலே இல்லை என்றான பிறகு, எதற்காக ஒரு நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பட்டிய லைத் தயாரிக்கச் சொல்லக் கேட்பது?

ஒவ்வொரு கோவிலிலும் உண்மையிலேயே ஆகமம் மீறப்பட்டு இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கணக்கிடவேண்டும்.

அப்படி கணக்கிட்டு, தமிழ்நாட்டில் உள்ள கோவில் கள் எதுவும் ஆகமக் கோவில்கள் அல்ல என்று அரசிற்கு அறிக்கைத் தரவேண்டும்.

அப்படி ஓர் அறிக்கை தந்தால், இந்தத் தீர்ப்பு தானாகவே இயற்கை எய்திவிடும். இதை முறியடிக்க முடியும். அப்படியானால், நாம் என்ன செய்யவேண்டும்?

நீதிபதி சொக்கலிங்கம் தலைமையில் இருக்கின்ற குழுவிற்கு, நாமே அடையாளம் கண்டு, எந்தெந்த கோவில்களை  ஜனவரி ஒன்றாம் தேதி திறந்து வைத் தார்கள் என்ற பட்டியலை அவருக்குக் கொடுத்து, இவையெல்லாம் ஆகமக் கோவில்கள் அல்ல என்று வற்புறுத்தவேண்டும்.

நாம் கையிலெடுத்துக் கொண்டு 

போராடுவதற்குத் தயாராக வேண்டும்

நாம் சும்மா இருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியும்.

ஆகவே, இந்த விஷயத்தை நாம் கையிலெடுத்துக் கொண்டு போராடுவதற்குத் தயாராகவேண்டும்.

தமிழ்நாட்டில், ஆகமக் கோவில்கள் கிடையாது. இதனை அடித்துச் சொல்வதற்கு நாம் தயாராகவேண்டும். இதைச் செய்வதற்கு பக்தர்களாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமே கிடையாது. இது வெறும் பக்திப் பிரச்சினையல்ல. இது ஒரு மொழிப் பிரச்சினை; ஒரு இனப் பிரச்சினை.

ஆகவே, அதில் தலையிடுகிற உரிமை அனை வருக்கும் உண்டு.

லெனின் சொன்னார்!

ஏற்கெனவே, லெனினைக் கேட்டார்கள்; இதுபோன்ற பிரச்சினைகளில் எல்லாம் கம்யூனிஸ்டுகள் தலையிட முடியுமா? என்று.

‘‘எங்கு மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, எங்கு பார பட்சம் காட்டப்படுகிறதோ, அங்கெல்லாம் கம்யூனிஸ்டு கள் தலையிட வேண்டும்'' என்று சொன்னார்.

ஆகவே, கோவில் ஆகமப் பிரச்சினைகளில், நாத்தி கர்கள் தலையிடுவதற்கு உரிமை உண்டு. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு அதில் தலையிட முழு உரிமை உண்டு.

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தமிழ்நாட்டைப்பற்றி தெரியாது!

உச்சநீதிமன்ற நீதிபதிகளுடைய  தீர்ப்புகளைப் பார்த்தால், நமக்கு ஒரு செய்தி தெளிவாகும்.

இவர்கள் யாருக்கும் தமிழ்நாட்டைப்பற்றி தெரியாது. இதை நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை. தீர்ப்பு களை நான் பார்க்கிறேன். சமயம் பற்றிய தீர்ப்பு வருகிற பொழுது, இந்து மதம் என்றவுடன், சங்கரர், இராமானுஜர், மத்துவர் இவர்களைப் பற்றித்தான் பேசுகிறார்கள்.

இவர்களுக்கு முன்பே தமிழ்நாட்டில் ஆழ்வார்களும், நாயன்மார்களும் இருந்தார்கள். தொல்காப்பியத்திலே சைவமும், வைணவமும் இருந்ததற்கு ஆதாரங்கள் உண்டு.

ஆதிசங்கரர் தோன்றுவதற்கு சற்று முன்பே திருஞான சம்பந்தர் தோன்றிவிட்டார்.

இவர்கள் என்ன சொன்னார்கள்? இந்தத் தத்துவம் என்ன? என்று உச்சநீதிமன்றத்தில் இருக்கும் எந்த நீதிபதிக்கும் தெரியாது.

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டிலே ஒரு தனித்துவமான சமயம் இருந்தது என்பது விவேகானந்தருக்கே தெரி யாது.

விவேகானந்தர், விவேகானந்தர் என்று தூக்கி வைத்து ஆடுகிறார்கள்; விவேகானந்தர் தமிழ்நாட்டிற்கு வருகிறார்; அதன் பிறகு, திருவனந்தபுரம் செல்கிறார்; திருவனந்தபுரத்தில், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை ஓர் உயரதிகாரியாக இருந்தவர். அவரைப் பார்த்து, இந்து மதம்பற்றியெல்லாம் பேசுகிறார்.

நான் ஒரு இந்து அல்ல; 

நான் ஒரு திராவிடன்: மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை என்ன சொல்லுகிறார் என்றால், நான் ஒரு இந்து அல்ல; நான் ஒரு திராவிடன் என்று சொல்லுகிறார்.

அதற்குப் பிறகும் விவேகானந்தருக்குப் புரிய வில்லை. தமிழ்நாட்டிற்கு வருகிறார், பல பேர் அவரைப் பார்த்துப் பேசுகிறார்கள்.

தமிழ்நாட்டில் இருக்கின்ற தனித்துவமான வளர்ச்சிகள்பற்றியெல்லாம் தெரியாது

நல்லுசாமி பிள்ளை என்பவர், அமைச்சராகவும் இருந்திருக்கிறார்; அவர் விவேகானந்தரைப் பார்த்து, சைவ சித்தாந்தம்பற்றி பேசுகிறார். அது முப்பெரும் உண்மை பேசுகிறது; இதற்கும் நீங்கள் சொல்கிற வேதத்திற்கும் சம்பந்தமில்லை என்று சொல்லுகிறார்.

உடனே விவேகானந்தர் என்ன சொன்னார் என்றால், நீங்கள் முப்பெரும் தெய்வம் என்று சொன்னால் என்ன? என்றார்.

அப்பொழுது நல்லுசாமி பிள்ளை சொல்லுகிறார், அதுபோன்று எல்லாம் நீங்கள் சுலபமாக பார்க்க முடியாது. என்று கூறி, அதனுடைய தத்துவத்தை விளக்கிய பிறகுதான், விவேகானந்தர் தமிழ்நாட்டில் ஒரு மாற்று சிந்தனையும், மாற்று சமயமும் இருந்திருக்கிறது என்பதை ஓரளவு புரிந்துகொண்டார்.

ஆனால், வடநாட்டில் இருக்கின்ற யாருக்கும், தென் தமிழ்நாட்டில் இருக்கின்ற தனித்துவமான வளர்ச்சிகள் பற்றியெல்லாம் தெரியாது.

அதுமட்டுமல்ல, ஆதிசங்கரருடைய வழக்கிலே, நீதிபதி பல பேரைப்பற்றி குறிப்பிடுகிறார். 

விவேகானந்தர், இராமகிருஷ்ணர் வரை வருகிறார். ஆனால், அவருக்கு வள்ளலாரைத் தெரியவில்லை. ஒரு காலத்தில் வாழ்ந்த சீர்திருத்தவாதி வள்ளலாரைத் தெரியவில்லை. மற்ற எல்லோரையும்பற்றி அவருக்குத் தெரிகிறது.

முருகன் வணக்கமும், கொற்றவை வணக்கமும், மற்ற கடவுள் வணக்கத்திலிருந்து இப்பொழுது இல்லை - இப்பொழுதுதான் ஆரிய மயமாக்கப்பட்டது.

முருகன் என்று பெயர் வைக்கமாட்டார்கள் பார்ப்பனர்கள்!

முருகன் ஒரு குறிஞ்சி நிலக் கடவுள். ஒரு வேடன், என்ற முறையில், வள்ளியைத் திருமணம் செய்து கொள்கிறான். முருகனை வணங்குவதற்கு பார்ப்பனர்கள் தயாராக இல்லை. எப்பொழுதும் அவர்கள் முருகன் என்று பெயர் வைக்கமாட்டார்கள்; சுப்பிரமணியன் என்றுதான் பெயர் வைப்பார்கள்.

இந்தக் கடவுள் நிலை பெற்றுவிட்டாரே, தமிழ்நாட்டில் என்று பார்த்தார்கள்; உடனே ஒரு புராணம், சூரசம்ஹாரம் என்கிற ஒரு கதை. அதில் அவர் வெற்றி பெற்றதற்குப் பிறகு, அதற்குப் பரிசாக, இந்திரனுடைய மகள் தெய்வ யானையை மணந்துகொண்டாராம். 

இந்திரனுடைய மகள் தெய்வயானையை முரு கனுக்குக் கல்யாணம் செய்து வைத்துத்தான், அவனை சுப்பிரமணியமாக்கி வணங்குகிறார்கள் ‘பிராமணர்'கள்.

எல்லாவிதமான பித்தலாட்டங்களும் இதில் நடந்தி ருக்கிறது. ஆனால், உண்மையிலேயே முருகனுக்கு ஆகமம் கிடையாது.

முருகன் Free Historic God - இவையெல்லாம் வருவதற்கு முன்பே தோன்றிய கடவுள் - வேடன்.

முருகன் வணக்கத்திலே சொர்க்கம் - நரகம்கூட கிடையாது ஆரம்பத்தில்.

மக்கள்  அச்சத்தின் காரணமாக, முருகனை வணங் கினார்கள். எனக்குப் பாதுகாப்பு கொடு என்று கேட்டார் களே தவிர, எனக்கு சொர்க்கத்திலே டிக்கெட் கொடு என்று கேட்கவில்லை.

அந்த வணக்கத்திற்கு அர்த்தமே கிடையாது. அவர் களுடைய வணக்கம் என்பது மிகவும் எளிமையானது.

கடவுளை ஆரிய மயமாக்குவதுதான் தமிழ்நாட்டில் நடந்தது

அடுத்தது, காதல் திருமணம் என்று அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூகம், அதற்கு உதவுகிற கடவுள் முருகன். அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு அந்த முருகனை ஸ்கந்தனோடு சேர்த்து, ஸ்கந்த புராணத்தைக் கொண்டு வந்து, கட வுளை ஆரிய மயமாக்குவதுதான் தமிழ்நாட்டில் நடந்தது.

சிவனை, ருத்திரனோடு சேர்த்தார்கள்.

ஆரிய மயமாக்கப்பட்ட கடவுள்களிலிருந்தும், ஆரிய மயமாக்கப்பட்ட சைவ சித்தாந்தங்களிலிருந்தும் தமிழர்களை மீட்கவேண்டும் என்பதற்கு முயன்ற வர்தான் ஆன்மிகத் துறையில் மறைமலையடிகள்.

நீங்கள் தொடர்ந்து பார்த்தீர்களேயானால், முழுக்க முழுக்க ஆரியர்களுடைய பிடியில், தமிழர்களுடைய சமயமும், மரபும், தத்துவம் சேர்ந்துவிட்டன - பறித்துவிட்டார்கள்.

ஆகமம் அவர்களுடையது அல்ல.

வடநாட்டில் உள்ள காசி விசுவநாதர் கோவிலில் யார் வேண்டுமானாலும் தொட்டு வணங்கலாம். ஆனால், தென்னாட்டில் இருக்கிற எந்தக் கோவிலிலும் உள்ளே போக முடியாது.

உள்ளே இவர்கள் வந்ததே பின்னால்தான். ஆதி காலத்தில், கோவில்களில் தமிழர்கள்தான் பூசை செய்துகொண்டிருந்தார்கள். பூவினால் செய்வது பூசை. பூசையை பூஜையாக்கினார்கள்.

பூஜை என்று வந்தது, நான்தான் பூஜை செய்வேன் என்று உட்கார்ந்துகொண்டான். இவன் சாதாரணமாக வணங்கிக் கொண்டிருந்த நிலையில். 

என்ன சும்மா வணங்கிக் கொண்டிருக்கிறாய்; ஏதா வது சொல்லலாமே? என்றான். உடனே, அவன் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னான்.

பிறகு, ஏன் சும்மா சாமியைக் கும்பிட்டுக் கொண்டிருக் கிறாய்;  படைக்கவேண்டாமா?

உடனே, பொங்கல், வடை என்று படைக்க ஆரம்பித்தார்கள்.

அதற்குப் பிறகு ஒன்றும் செய்யத் தெரியவில்லை, தமிழனுக்கு.

உள்ளே போனவன்தான், இன்றுவரையில் அவன்தான் உள்ளே உட்கார்ந்திருக்கிறான்

சரியென்று, இவனை உள்ளே விட்டான்; உள்ளே போனவன்தான், இன்றுவரையில் அவன்தான் உள்ளே உட்கார்ந்திருக்கிறான்; நாம் வெளியில் நிற்கிறோம்.

இதெல்லாம் நாம் செய்ததுதான். ஆகமம் என்பது கோவில் கட்டுவது என்கின்ற கலை. தமிழர்களுடைய கலை.

கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்ததுபோல, ஆரியம் உள்ளே புகுந்தது. உள்ளே புகுந்த ஆரியத்தை விரட்டுவதற்கான ஒரு முயற்சியைத்தான் நாம் இன் றைக்குச் சட்டத் துறையிலே செய்துகொண்டிருக்கிறோம்.

பரம்பரை அர்ச்சகர்கள் உருவாவதற்கு வழிவகுக்கின்ற ஒரு தீர்ப்பு!

இன்றைக்கு வந்திருக்கின்ற தீர்ப்பு என்பது நமக்கு முற்றிலும் ஓர் எதிரான தீர்ப்பு.

மீண்டும் மீண்டும் பரம்பரை அர்ச்சகர்கள் உருவா வதற்கு வழிவகுக்கின்ற ஒரு தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பினை எதிர்த்து, எத்தகைய போராட் டத்தினை நாம் நடத்தவேண்டும்? மக்கள் மத்தியிலும், சட்ட ரீதியாகவும் என்ன செய்யவேண்டும் என்பதை யெல்லாம் தீர்மானிக்கக்கூடிய சக்தி, திறமை, வாய்ப்பு, இடம் அனைத்தும் ஆசிரியர் அய்யா அவர்களிடம்தான் இருக்கிறது.

அவர் ஆசிரியர்; ஆசிரியர் என்றால், அவர் சொல்லிக் கொடுக்கவேண்டும். அந்த இடத்திலே அவர் இருக்கிறார் என்று கூறி, நாம் பெற்ற வெற்றியை எல்லாம் எதிர்காலத்தில், இழக்கக் கூடிய ஒரு சூழ்நிலையை இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தி இருக்கிறது. 

உயர்நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கவேண்டும்; முறியடிப்பதற்கு நாம் அனைவரும் இணைவோம்!

இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை முறியடிக்கவேண்டும்; முறியடிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று கூறி, விடைபெறுகிறேன்.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு  மூத்த வழக்குரைஞர் ‘சிகரம்‘ செந்தில் நாதன்  அவர்கள் ஏறப்புரையாற்றினார். 

No comments:

Post a Comment